பறவைத் தூக்கம்
பறவைகளின், தூக்கம் (Avian sleep) என்பது "கண்களை மூடி, குறுகிய காலத்தில் திறக்கும் நேரம்" ஆகும். கண் மூடித் திறக்கும் குறுகிய காலகட்டத்தில் செய்யப்பட்ட, மூளைமின்னலை வரவு (EEG) ஆய்வுகள் பறவைகள் இன்னும் தூங்கிக் கொண்டிருப்பதாகக் காட்டுகின்றன; மூளையில் மின்னழுத்த அளவு ஒரே மாதிரியாக இருக்கும்.[1] பறவைகள் தூக்கத்தின் போது விரைவில் விழிப்பவையாக உள்ளன. தூங்கும் பறவைகள், கண்களைத் திறக்கும் குறுகிய நேரத்தில், வேட்டையாடி விலங்குகளால் அச்சுறுத்தல் நேருவதாக அறிந்தால் உடனடியாக நகரும் தன்மை கொண்டவை. வேட்டையாடிகளிடம் இருந்து எச்சரிக்கையாக இருப்பதற்கு பறவை இனங்கள் தங்கள் கூட்டங்களின் அளவு மற்றும் உயரத்தை நம்பியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.[1] குழுவாக தூங்கும்போது, கண் திறப்பிற்கு இடையிலான நேரத்தை அதிகமாக்கி, பாதுகாப்பானதாகவும் ஆக்குகின்றன.
புறா, காகம், சிட்டுக்குருவி போன்ற பறவைகள் மரக்கிளைகள் அல்லது கட்டடங்களில் அமர்ந்து கொண்டு ஓய்வெடுக்கின்றன. அவற்றின் கால்களில் உள்ள சிறப்புவாய்ந்த தசைநார்கள் அவற்றை கீழே விழாமல் காக்கின்றன. சில பறவைகள் தங்கள் கூடுகளில் தூங்குகின்றன. குறிப்பாக தங்கள் குஞ்சுகளைப் பாதுகாக்கும் தூக்கணாங்குருவி, உழவாரன் போன்றவை இவ்வாறு உறங்குகின்றன. கடற் பறவைகளும், வாத்து போன்ற பறவைகளும் தண்ணீரில் மிதந்துகொண்டே தூங்குகின்றன. ஆந்தை, கிளி போன்ற பறவைகள் கட்டடங்களின் இடுக்குகளில் அல்லது மரப் பொந்துகள் போன்ற இடங்களில் ஓய்வெடுக்கின்றன. பெரும்பாலான பறவைகள் தூங்கும்போது தலையைத் திருப்பி இறகுகளுக்கு அடியில் வைத்து தூங்குகின்றன. இதனால் அவற்றின் கழுத்துக்கு ஓய்வு கிடைக்கின்றன. அதனால் வெப்ப இழப்பு கணிசமாகக் குறைகிறது.[2] வலசை போகும் பறவைகள் குறைவான நேரமே தூங்குகின்றன. சில பறவைகள் ஐந்து முதல் எட்டு நாட்கள் வரை தொடர்ந்து பறப்பவையாக உள்ளன. அவை பறக்கும் போதே சிறிது நேரம் தூங்குகின்றன.[3]
சுறுசுறுப்பாக செயல்படத் தேவையான தூக்கத்தின் அளவு பறவை இனங்களைப் பொறுத்து மாறுபடும். பெக்டோரல் சாண்ட்பைப்பர் பறவைகள் தெற்கு அரைக்கோளத்திலிருந்து ஆர்க்டிக் வட்டத்திற்கு இடம்பெயர்கின்றன. அதுவே அவற்றின் இனச்சேர்க்கை இடமாகும் (அங்கு அவை பகல் நேரத்தில் இனச்சேர்கையில் ஈடுபடுகின்றன. ஆண் சாண்ட்பைப்பர்கள் பல துணைகளைக் கொண்டவை என்பதால், அவை பகல் நேரத்தில் இனச்சேர்க்கையில் ஈடுபடுகின்றன (அல்லது ஒரு இணையைத் தேடுகின்றன). இந்த நேரத்தில் ஆண் பறவைகளுக்கு அதிக தூக்கம் தேவையில்லை; பத்தொன்பது இனச்சேர்க்கை நாட்களில் தங்கள் தூக்க நேரத்தில் 95 சதவீதத்தை தூங்காமல் கழிப்பது கவனிக்கதக்கது.[4] பெரும்பாலான பறவைகளுக்கு தூக்கமின்மை ஏற்படும் போது மனிதர்களைப் போலவே செயல்படுகின்றன, அவை உயிருக்கு ஆபத்தான சூழ்நிலைகளுக்கு ஆளாகின்றன அல்லது அவற்றின் இடம்பெயர்வு வேகம் குறைகின்றது.
பல பறவை இனங்கள் தங்கள் மூளையின் ஒரு பாதியை மட்டும் தூங்கவைத்து, மற்ற பகுதியை விழித்திருக்க வைத்திருப்பது போல் தெரிகிறது. இந்த வகையான தூக்கம் டால்பின்கள், திமிங்கலங்கள் போன்றவற்றிலும் காணப்படுகிறன்றன. இப்படித் தூங்கும்போது பொதுவாக இவை ஒரு கண்ணைத் திறந்து வைத்து சுற்றுப்புறத்தைக் கவனிக்க முடியும். இது வேட்டையாடிகளிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள மிக உதவியாக இருக்கும். [5] பறவைகள் மற்றும் நீர்வாழ் பாலூட்டிகளில் இந்தப் பண்பின் பரிணாமம் ஆய்வாளர்களுக்கு ஆர்வத்தைத் தூண்டுவதாக உள்ளது. நீர்வாழ் பாலூட்டிகள் ஆக்சிசனுக்காக நீரின் மேற்பரப்புக்கு வரவேண்டும்; இதுவே பறவைகளுக்கு வேட்டையாடிகளிடமிருந்து தங்களைப் பாதுகாக்க உதவுகிறது. இது இரண்டு குழுக்களிலிடையேயான ஓர்மைக் கட்டமையை நிரூபிக்கிறது.
புறா பரிசோதனை
[தொகு]பார்பரி புறாவின் தூக்க முறைகள் அந்தப் புறாக் கூட்டத்தின் அளவால் எவ்வாறு பாதிக்கப்படுகின்றது என்பது குறித்த ஆய்வில், பெரிய பறவைக் கூட்டமானது ஒட்டுமொத்தமாக விழிப்புணர்வைக் குறைக்கின்றன என்பதையும், சிறியக் கூட்டமாக இருப்பது வேட்டையாடப்படும் அபாயம் கூடுதலாக இருப்பதால் அந்தப் புறாக்களின் தூக்க சுழற்சிக்கு தீங்கு விளைவிக்கும் என்பதை நிரூபிக்க டி.டபிள்யூ லென்ட்ரம் முயன்றார். ஆய்வின் தொடக்கத்தில், புறாக்கள் தனியாகவோ அல்லது இரண்டு, மூன்று அல்லது ஆறு கொண்ட ஜோடிகளாகவோ கூண்டுகளில் அடைக்கப்பட்டன. பின்னர் அவை இரண்டு சூழல்களில் மாறிமாறி வைக்கப்பட்டன. அமைதியான சூழலில், காலை 10 மணி முதல் நண்பகல் வரை வைக்கப்பட்டன. பின்னர் அதே நேரத்தில் ஆக்ரோஷமான சூழலில் வைக்கபட்டன. அமைதியான சூழலில் உள்ள பறவைகள், ஆக்ரோஷமான சூழலில் உள்ள பறவைகளை விட, கண்களை மூடிக்கொண்டு கணிசமாக அதிக நேரம் செலவிடுகின்றன என்பதை லென்ட்ரம் கண்டுபிடித்தார். [4]
புறாக்கள் கண்மூடித் திறக்கும் தூக்கம் குறித்த தரவுகளை லென்ட்ரம் சேகரித்தார்; கூட்டமாகச் செல்வது பறவையின் கண் மூடும் நேரத்தை ஒட்டுமொத்தமாக அதிகரிப்பதுடன், அதன் கண் திறக்கும் நேரத்தைக் குறைக்கிறது. வேட்டையாடி விலங்கின் முன்னிலையில், புறாக்கள் அதிக விழிப்புணர்வுடனும், தூங்கும்போது கண்களைத் திறந்திருக்கும் நேரம் கூடுதலாக இருப்பதையும் லென்ட்ரம் கண்டறிந்தார்; இது அவற்றின் மொத்த தூக்க நேரத்தில் செயலில்-தூக்கக் கூறுகளைக் குறைத்தது. [4]
ஒளி மாசு
[தொகு]இரவில் செயற்கை ஒளியால் மனிதர்களால் ஏற்படுத்தப்படும் ஒளி மாசானது பறவைகளுக்கான போதுமான தூக்கத்திற்கு பொதுவான ஒரு அச்சுறுத்தலாக உள்ளது. ஒளிமாசானது ஓய்வெடுக்கத் தேவைப்படும் இருளை இல்லாமல் ஆக்குகிறது. இது பறவைகளின் தூக்க முறைகளை சீர்குலைத்து தூக்க நடத்தையை பாதிக்கிறது. [6] ஒளியானது பொதுவாக பறவைகளுக்கு ஒரு பகல் நேரம் கடந்து செல்வதைக் குறிப்பதாகும். ஆனால் அவை ஒளி மாசினால் பாதிக்கப்படும்போது ஒரு பகல் நேரத்தின் நீளத்தை அளவிடும் தங்கள் திறனில் சீர்குலைவுக்கு உள்ளாகின்றன. அடர்த்தியான மக்கள்தொகை கொண்ட பகுதிகளுக்கு வெளியே வாழும், பொதுவாக நீல பட்டாணிப் பெண் குருவிகள் கூடு கட்டும் காலத்தில் தங்கள் தூக்க நேரத்தில் சுமார் ஐந்து சதவீதம் குறைக்கின்றன. ஆனால் நகர்ப்புறங்களில் இந்தக் காலகட்டத்தில் பெண் குருவிகளின் தூக்க நேரம் 50 சதவீதம் குறைவதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். இதற்கு காரணம் ஒளி மாசே என்று கண்டறிந்தனர். [6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Lesku, J. & Rattenborg, N. (2014). "Avian sleep". Current Biology. 24 (1): R12–R14.
- ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;இந்து
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை - ↑ மருதன் (14 மே 2025). "பறவை எவ்வாறு தூங்கும்?". கட்டுரை. இந்து தமிழ். Retrieved 21 மே 2025.
- ↑ 4.0 4.1 4.2 Lendrem, D. W. (June 3, 2006). "Sleeping and vigilance in birds, II. An experimental study of the Barbary dove (Streptopelia risoria)".
- ↑ Rattenborg, Niels C.; Lima, Steven L. & Amlaner, Charles J. (1999). "Facultative control of avian unihemispheric sleep under the risk of predation". Behavioural Brain Research. 105 (2): 163-172. எஆசு:10.1016/S0166-4328(99)00070-4
- ↑ 6.0 6.1 Raap, T.; Sun, J.; Pinxten, R. & Eens, M. (2017). "Disruptive effects of light pollution on sleep in free-living birds: Season and/or light intensity-dependent?". Behavioural Processes: 144. எஆசு:10.1016/j.beproc.2017.08.011