பரிந்திர குமார் கோசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பரிந்திர குமார் கோசு
பரிந்திர குமார் கோசு
பிறப்பு(1880-01-05)5 சனவரி 1880
இறப்பு18 ஏப்ரல் 1959(1959-04-18) (அகவை 79)
கொல்கத்தா, இந்தியா
தேசியம்இந்தியா
பணிபுரட்சியாளர், பத்திரிகையாளர்
பெற்றோர்மருத்துவர் கிருட்டிணாதன் கோசு, சுவர்ணலதா தெபி

பரிந்திர குமார் கோசு அல்லது பரிந்திர கோசு, அல்லது, பிரபலமாக, பரின் கோசு (1880 சனவரி 5 - 1959 ஏப்ரல் 18) இவர் ஓர் இந்திய புரட்சியாளரும் மற்றும் பத்திரிகையாளரும் ஆவார். வங்காளத்தில் ஒரு புரட்சிகர அமைப்பான ஜுகந்தரின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவராகவும் இருந்தார். மேலும் பரிந்திர கோசு அரவிந்தரின் தம்பியாவார்.

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

பரிந்திர கோசு 1880 சனவரி 5 அன்று லண்டனுக்கு அருகிலுள்ள குரோய்டோனில் பிறந்தார். இவரது தந்தை மருத்துவர் கிருட்டிணாதன் கோசு மாவட்ட அறுவை சிகிச்சை நிபுணராக இருந்தார். இவரது தாயார் சுவர்ணலதா பிரம்ம மதம் மற்றும் சமூக சீர்திருத்தவாதியான அறிஞர் ராஜ்நாராயண் பாசுவின் மகளாவார். புரட்சிகர மற்றும் ஆன்மீகவாதியுமான அரவிந்தர் பரிந்திரநாத்தின் மூன்றாவது மூத்த சகோதரர் ஆவார். இவரது இரண்டாவது மூத்த சகோதரர் மன்மோகன் கோசு, ஆங்கில இலக்கிய அறிஞர், கவிஞர் மற்றும் கொல்கத்தாவின் மாநிலக் கல்லூரி மற்றும் தாக்கா பல்கலைக்கழகத்தில் ஆங்கில பேராசிரியராக இருந்தார். இவருக்கு சரோஜினி கோசு என்ற மூத்த சகோதரியும் இருந்தார்.

பரிந்திரநாத் தேவ்கரில் உள்ள பள்ளியில் பயின்றார். 1901இல் பாட்னா கல்லூரியில் சேர்ந்தார். பின்னர், இவர் பரோடாவில் இராணுவப் பயிற்சி பெற்றார். இந்த காலத்தில், (19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் - 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில்) பரிந்திரநாத் அரவிந்தரால் ஈர்க்கப்பட்டு புரட்சிகர இயக்கத்தில் சேர்ந்தார்.

புரட்சிகர நடவடிக்கைகள்[தொகு]

பரிந்திரநாத் 1902இல் மீண்டும் கொல்கத்தாவுக்கு வந்து ஜதிந்திரநாத் முகர்ஜியின் உதவியுடன் வங்காளத்தில் பல புரட்சிகர குழுக்களை ஏற்பாடு செய்யத் தொடங்கினார். 1906ஆம் ஆண்டில், ஜுகந்தர் என்ற பெங்காலி வார இதழையும், ஜுகந்தர் என்ற புரட்சிகர அமைப்பையும் ஆர்ம்பித்தார். அனுசீலன் சமிதியின் உள் வட்டத்திலிருந்து ஜுகந்தர் உருவாக்கப்பட்டது. மேலும் இது இந்திய மண்ணிலிருந்து பிரிட்டிசாரை வெளியேற்ற ஆயுதமேந்திய போர்க்குணமிக்க நடவடிக்கைகளுக்கான தயாரிப்புகளைத் தொடங்கியது.

பரிந்திரநாத் மற்றும் ஜதிந்திரநாத் முகர்ஜி அல்லது பாகா ஜதின் ஆகியோர் வங்காளம் முழுவதிலுமிருந்து பல இளம் புரட்சியாளர்களை சேர்ப்பதில் முக்கிய பங்கு வகித்தனர். புரட்சியாளர்கள் கொல்கத்தாவின் மாணிக்தலாவில் மாணிக்தலா என்ற குழுவை உருவாக்கினர். அவர்கள் வெடிகுண்டுகளைத் தயாரிக்கத் தொடங்கி ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை சேகரித்த ஒரு ரகசிய இடமாகும்.

1908ஆம் ஆண்டு ஏப்ரல் 30 ஆம் தேதி குதிராம் மற்றும் பிரபுல்லா என்ற இரண்டு புரட்சியாளர்கள் கிங்ஸ்போர்டைக் கொல்ல முயற்சித்ததைத் தொடர்ந்து, காவல்துறையினர் அதன் விசாரணையை தீவிரப்படுத்தினர். இது 1908 மே 2 அன்று பரிந்திரநாத் மற்றும் அரவிந்தர் ஆகியோரை கைது செய்ய வழிவகுத்தது. மேலும் இவரது பல தோழர்களும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு ( அலிபூர் வெடிகுண்டு வழக்கு என அழைக்கப்படுகிறது ) ஆரம்பத்தில் பரிந்திரநாத் கோசு மற்றும் உல்லாசுகர் தத்தா ஆகியோருக்கு மரண தண்டனை விதித்தது. எனினும், தேசபந்துவை சித்தரஞ்சன் தாஸ் மற்றும் பரிந்திரநாத் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு, அந்தமான் சிற்றறைச் சிறைக்கு மற்ற குற்றவாளிகளுடன் இணைந்து 1909 ஆம் ஆண்டில் அடைக்கப் பட்டனர்.

சிறையிலிருந்து வெளிவருதல் மற்றும் பிந்தைய நடவடிக்கைகள்[தொகு]

1920 இல் பொது மன்னிப்பின் போது பரிந்திரநாத் விடுவிக்கப்பட்டார். பின்னர், பத்திரிகையைத் தொடங்க கொல்கத்தா திரும்பினார். பின்னர், இவர் பத்திரிகையை விட்டுவிட்டு கொல்கத்தாவில் ஒரு ஆசிரமத்தை உருவாக்கினார். இவர் தனது நினைவுக் குறிப்புகளை "என் நாடுகடத்தலின் கதை - அந்தமானில் பன்னிரண்டு ஆண்டுகள்" என்றப் பெயரில் வெளியிட்டார் [1] . 1923 ஆம் ஆண்டில், இவர் புதுச்சேரிக்கு புறப்பட்டார். அங்கு இவரது மூத்த சகோதரர் அரவிந்தர் சிறி அரவிந்தர் ஆசிரமத்தை நடத்தி வந்தார். அரவிந்தர் ஆன்மீகப் பயிற்சியை நோக்கி இவரைச் செலுத்தினார். பரிந்திரநாத் 1929இல் கொல்கத்தா திரும்பி, மீண்டும் பத்திரிகையை நடத்த ஆரம்பித்தார். பின்னர், 1933 ஆம் ஆண்டில் தி டான் ஆஃப் இந்தியா என்ற ஆங்கில வார இதழைத் தொடங்கினார். தி ஸ்டேட்ஸ்மேன் செய்தித்தாளுடனும் இவர் தொடர்பு கொண்டிருந்தார். 1950இல், பெங்காலி நாளேடான தைனிக் பாசுமதியின் ஆசிரியரானார். இந்த முறை இவர் திருமணம் செய்து கொண்டார். இவர் 1959 ஏப்ரல் 18, அன்று இறந்தார்.

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பரிந்திர_குமார்_கோசு&oldid=2987798" இலிருந்து மீள்விக்கப்பட்டது