உள்ளடக்கத்துக்குச் செல்

பரிசோதனை வகைப்பாட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தாவரவியல் வகைப்பாட்டியல் என்பது, பல்வேறு தாவரங்களின் ஒத்த மற்றும் வேறுபட்ட புறத்தோற்றப் பண்புகளை அடிப்படையாக கொண்டது, ஆனால், புறத்தோற்றப் பண்புகளின் அடிப்படையில் மட்டுமே ஒரு தாவரத்தை, பிறத் தாவரங்களிருந்து வேறுபடுத்தி வகைப்படுத்தக் கூடாது என்ற கருத்தை, பொதுவாக அனைத்துவகை தாவரவியல் வகைப்பாட்டியல் அறிஞர்களும் ஏற்றுக் கொண்டனர்.

செல்லியல்,மரபியல், தாவரச் செயலியல், சூழியல், தாவரப்புவியியல், தாவரவேதியியல், எண்ணியல் வகைப்பாடு, மூலக்கூற்று உயிரியல், இனப்பெருக்க முறைகள் மற்றும் பல்வேறு அறிவியல் சார்ந்த மூலங்களிருந்து கிடைக்கப்பெறும் பொதுவான பண்புகள், வேறுபாடுகள் ஆகிய அனைத்துக் காரணிகளையும் கருத்தில் கொண்டு, இவ்வகைப்பாடு செய்யப்படுகிறது. இதனையே பரிசோதனை வகைப்பாட்டியல் என்றும், உயிருள்ள தாவரத்தொகையின் முறைபாட்டியல் எனவும் அழைக்கின்றனர். கேம்ப் என்பவரும், கில் என்பவரும் 1943 ஆம் ஆண்டு, இதனைக் கொண்டு வந்தனர்.

பரிணாம வகைப்பாடு[தொகு]

இத்தாவர வகைப்பாட்டு முறைகளின்படி. சிற்றினம் வகைப்பாட்டின் அடிப்படை அலகு ஆகும். மேலும் இது ஓரிடத்தின் தாவரத்தொகைக்கு அடிப்படை காரணியாகும். ஒரு சிற்றினத்தில் காணப்படும் வேறுபாடுகள். மரபியல், சூழியல், தாவரத்தொகை மாற்றம், மேலும் மேற்கூறப்பட்ட பலதரப்பட்ட காரணிகளை அடிப்டையாகக் கொண்டுள்ளன. பரிசோதனை வகைப்பாட்டினரால் வழங்கப்பட்ட அனைத்து சான்றுகளையும், வழக்கமான வகைப்பாட்டியலார்கள் ஏற்றுக் கொண்டு, ஒரு சிற்றினத்தின் பரிணாம வழியை ஆராய்கின்றனர். இது ஒரு சிற்றினத்தின் பரிணாம வகைப்பாட்டிற்கு வழி காட்டுகிறது.

தாவரக் குழுமம்[தொகு]

பல்வேறு அறிவியல் தடயங்களிருந்து ஒரு சிற்றினத்தின் அல்லது தாவரத்தின் எண்ணற்றப் பண்புகள், அவற்றின் பலதரப்பட்ட விவரங்கள் கிடைக்கின்றன. ஒரு சிற்றினத்தின் அல்லது தாவரத்தின் இவ்விவரங்கள், அதனை பிற தாவரங்களின் உறவுமுறை, வகைப்பாட்டு நிலை, மரபுவழி தொடர்பு போன்ற சிக்கல்களை களைய உதவுகின்றன. மரபுவழியின் அடிப்படையில். போதுமான மரபியல் வேறுபாடுகளைக் கொண்டு, ஒரு சான்றாகக் குறிப்பிட்ட தாவரம் தனிமைப்படுத்தப்பட்டு, இது தனித்துவமான தாவரக் குழுமம் (Taxon) என வகைப்பாட்டியலில், தனி இடத்துடன் அடையாளப்படுத்தப்படுகிறது. இங்கு இத்தாவரக்குழும அலகு, இனம் அல்லது சிற்றினம் என அழைக்கப்படுகிறது.

இவ்வகைபாட்டின் நோக்கங்கள்[தொகு]

 • இயற்கை உயிர் அலகுகளின் வரையரைகளை நிர்ணயித்தல்.
 • பலதரப்பட்ட சோதனை வகைப்பாட்டுக் குழுமங்களான
  • சூழ்நிலை வகை
  • சூழ்நிலைச் சிற்றினம்
  • கூட்டுச்சிற்றினம்
  • கம்பேரியம் முதலானவைகளை அறிதல்.

சூழ்நிலைவகை[தொகு]

பரிசோதனை வகைப்பாட்டின் அடிப்படைஅலகு ஆகும். இது சூழ்நிலை தகவமைப்புக் கொண்டது. மேலும், அதே சூழ்நிலைச் சிற்றினத்தைச் சார்ந்த சூழ்நிலை வகைகளுடன், வளமான கலப்பினங்களை உண்டாக்குபவையாகும். இது வழக்கமான வகைப்பாட்டு முறையிலுள்ள, துணைச் சிற்றினத்திற்கு நிகரானது.

சூழ்நிலைச் சிற்றினம்[தொகு]

கூட்டுச் சிற்றினத்திலுள்ள ஒருதாவரக் குழுவாகும். இவை ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சூழ்நிலை வகைகளைக் கொண்டவை. சூழ்நிலைச் சிற்றினங்கள், ஒன்றுக் கொன்று, மரபணு (gene) பரிமாற்றம் செய்யக் கூடியவை ஆகும். இது வழக்கமான வகைப்பாட்டு முறையிலுள்ள சிற்றினத்திற்கு நிகரானது.

கூட்டுச் சிற்றினம்[தொகு]

ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட, சூழ்நிலைச் சிற்றினங்களைக் கொண்ட பொதுவான மரபுவழி மூலத்தையுடைய தாவரக் குழுவாகும். இது வழக்கமான வகைப்பாட்டு முறையில், துணைப்பேரினத்திற்கு நிகரானது. ஒரு கம்பேரியத்திலுள்ள, அனைத்துக் கூட்டுச் சிற்றினங்களும், இதர கூட்டுச்சிற்றினங்களிடமிருந்து, மரபணு (gene) தடைகளால் பிரித்து வைக்கப்படுகின்றன. இவற்றின் இடையே தோன்றும் கலப்பினங்கள் வளமற்றவையாக இருக்கின்றன.

கம்பேரியம்[தொகு]

ஒன்று அல்லது பல கூட்டுச்சிற்றினங்களைக் கொண்ட. கலப்பினக் கலவி செய்யாத தாவரக் குழுவாகும். வேறுபட்ட கம்பேரியங்களுக்கிடையே, முழுமையான மரபணு (gene) தடை நிலவுகிறது.

இவ்வகைப்பாட்டின் வழிமுறைகள்[தொகு]

 • ஆய்விற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வகைப்பாட்டு சிற்றினத்தை, பலதரப்பட்ட ஆராய்ச்சிகளுக்கு உட்படுத்துதல். அதன் இனத்தொகை, வளர்க்கும் முறை, புவிச்சூழல், செல்லியல், உள்ளமைப்பியல், மகரந்தவியல், தாவரவேதியியல், குரோமோசோம்களின் எண்ணிக்கை மற்றும் அதன் செயல்பாடுகள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டு, வேறுபட்ட தாவரக்குழுமத்திடையே காணப்படுகின்ற, மரபியல் வேறுபாடுகள் கண்டறியப்படுகின்றன.
 • இவ்வாறு செய்வதன் மூலமாக, பலதரப்பட்ட தாவரக்குழுமங்களுக்கு(Taxon) இடையே, இனப்பெருக்கம் செய்யும் தடை உள்ளதா அல்லது இல்லையா என்பதை தெளிவாக அறியலாம்.
 • ஒடுக்கற்பிரிவு செல்பிரிதலின்(meosis) போது, கலப்புயிரிகளின் குரோமோசோம்களின் பண்புகளை அறிதல்.