தூய ஆவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பரிசுத்த ஆவி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
புறா வடிவில் தூய ஆவி

தூய ஆவி என்பதற்கு கடவுளின் ஞானம், கடவுளின் ஆற்றல், கடவுளின் சாரம் என்று பல்வேறு பொருள்கள் உண்டு. திரித்துவக் கொள்கையுடைய கிறித்துவப் பிரிவுகளின் படி, தூய ஆவி என்பவர் கடவுளின் மூன்றாம் ஆள் (நபர்) ஆவார்.

கிறிஸ்தவ இறையியல்[தொகு]

தூய ஆவி என்பவர் அதிபுனித திரித்துவத்தின் மூன்றாம் ஆளாக இருக்கிறார். தந்தையாகிய கடவுளிடம் இருந்தும், மகனாகிய கடவுளிடம் இருந்தும் புறப்படும் நித்திய (முடிவில்லாத) அன்பாக இவர் இருக்கிறார். இறைத்தந்தையோடும் இறைமகனோடும் ஒன்றாக ஆராதனையும், மகிமையும் பெறும் இவர், ஆண்டவராகவும் உயிர் அளிப்பவராகவும் இருக்கின்றார். முற்காலத்தில் இறைவாக்கினர்கள் வழியாக பேசியவர் இவரே. இயேசுவின் வாழ்விலும் இவர் செயலாற்றி இருக்கிறார். இயேசு கிறிஸ்து உயிர்த்து விண்ணகம் சென்ற பிறகு, தூய ஆவியாரை இந்த உலகத்துக்கு அனுப்பி வைத்தார். இவர் திருத்தூதர்களில் செயலாற்றி, திருச்சபை தோன்றி வளரச் செய்தார். திருச்சபையில் இவர் தொடர்ந்து இருந்து, அதற்கு ஒளியும் உயிரும் தந்து, அதைப் புனிதப்படுத்தி பாதுகாத்து வழிநடத்தி வருகிறார்.[1] இறைவனில் நிறைவு பெற்றவர்களாய் வாழுமாறு, இவரது செயல் திருச்சபை உறுப்பினர்களின் ஆன்மாவை ஊடுருவிச் செல்கிறது. தமது அருளைப் புறக்கணியாமல் வாழ்பவர்களை, தூய ஆவியார் தூய்மையில் வழி நடத்துகிறார்.[2]

பழைய ஏற்பாட்டில்[தொகு]

"நீர்த்திரளின்மேல் கடவுளின் ஆவி அசைந்தாடிக் கொண்டிருந்தது"[3] என்று விவிலியத்தின் முதல் நூலே தூய ஆவியைப் பற்றி பேசுகிறது. மேலும் பழைய ஏற்பாட்டின் பல இடங்களில், கடவுளின் வல்லமையாக மட்டுமே நாம் தூய ஆவியைக் காண்கிறோம்.

ஆண்டவரால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆண்டவரின் ஆவியால் நிரப்பப்பட்டதை விடுதலைப் பயணம் பின்வருமாறு குறிப்பிடுகிறது: "ஊரியின் மகன் பெட்சலேல் என்பவனை நான் பெயர் சொல்லி அழைத்துள்ளேன். ஞானம், அறிவுக்கூர்மை, அனுபவம், தொழில்திறமை அனைத்தும் அவனுக்கு உண்டாகுமாறு நான் அவனை இறை ஆவியால் நிரப்பியுள்ளேன்."[4]

நீதித் தலைவர்கள் வாழ்வில் கடவுளின் ஆவி செயலாற்றியதை நீதித் தலைவர்கள் நூல் பின்வருமாறு விவரிக்கிறது: "ஒத்னியேல் மீது ஆண்டவரின் ஆவி இருந்தது. அவர் இஸ்ரயேலருக்கு நீதித்தீர்ப்பு வழங்கினார். அவர் போருக்குச் சென்றார். அவரிடம் மெசப்பொத்தாமியா மன்னன் கூசான் ரிசத்தாயிமை ஆண்டவர் ஒப்படைத்தார். அவர் கூசான் ரிசத்தாயிமின் மீது வெற்றி கொண்டார்."[5]

இஸ்ரயேலரின் அரசர்கள் மீது இறைவனின் ஆவி பொழியப்பட்டிருந்ததை தாவீதின் புகழ்ப்பா பின்வருமாறு எடுத்துரைக்கிறது: "உமது முன்னிலையிலிருந்து என்னைத் தள்ளிவிடாதேயும்; உமது தூய ஆவியை என்னிடமிருந்து எடுத்துவிடாதேயும்."[6]

இஸ்ரயேலின் இறைவாக்கினர்கள் வழியாக ஆண்டவரின் ஆவி செயல்பட்டதை இறைவாக்கினர் எசாயா பின்வருமாறு எடுத்துரைக்கிறார்: "ஆண்டவராகிய என் தலைவரின் ஆவி என்மேல் உளது; ஏனெனில், அவர் எனக்கு அருள் பொழிவு செய்துள்ளார்; ஒடுக்கப்பட்டோருக்கு நற்செய்தியை அறிவிக்கவும், உள்ளம் உடைந்தோரைக் குணப்படுத்தவும், சிறைப்பட்டோருக்கு விடுதலையைப் பறைசாற்றவும், கட்டுண்டோருக்கு விடிவைத் தெரிவிக்கவும் என்னை அனுப்பியுள்ளார்."[7]

புதிய ஏற்பாட்டில்[தொகு]

'வானதூதர் மரியாவிடம், "தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப் போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும்" என்றார்'[8] என்று இயேசுவின் மனித அவதாரத்தில் தூய ஆவியின் பங்கைப் பற்றி லூக்கா நற்செய்தி கூறுகிறது.

"இயேசு ஆற்றிலிருந்து கரையேறிய உடனே வானம் பிளவுபடுவதையும் தூய ஆவி புறாவைப் போல் தம்மீது இறங்கிவருவதையும் கண்டார்"[9] என்று இயேசுவின் பணி வாழ்வில் தூய ஆவியின் துணையைப் பற்றி மாற்கு நற்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

தூய ஆவியைப் பற்றிய இயேசுவின் வார்த்தைகள் யோவான் நற்செய்தியில் பின்வருமாறு காணப்படுகிறது: "உங்களோடு என்றும் இருக்கும் படி மற்றொரு துணையாளரை உங்களுக்கத் தருமாறு நான் தந்தையிடம் கேட்பேன். தந்தை அவரை உங்களுக்கு அருள்வார். அவரே உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார். உலகம் அவரை ஏற்றுக்கொள்ள இயலாது. ஏனெனில் அது அவரைக் காண்பதுமில்லை, அறிவதுமில்லை."[10]

"நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள்"[11] என்று உயிர்த்த இயேசு விண்ணகம் செல்லும் முன்பு தம் சீடர்களுக்கு இயேசு கட்டளையிட்டதாக மத்தேயு நற்செய்தியில் காணப்படுகிறது.

இயேசு இறுதியாக தம் சீடர்களிடம், "என் தந்தை தம் அதிகாரத்தால் குறித்து வைத்துள்ள நேரங்களையும் காலங்களையும் அறிவது உங்களுக்கு உரியது அல்ல; ஆனால் தூய ஆவி உங்களிடம் வரும்போது நீங்கள் கடவுளது வல்லமையைப் பெற்று எருசலேமிலும் யூதேயா, சமாரியா முழுவதிலும் உலகின் கடையெல்லைவரைக்கும் எனக்குச் சாட்சிகளாய் இருப்பீர்கள்"[12] என்று கூறியதாக திருத்தூதர் பணிகள் நூல் குறிப்பிடுகிறது.

திருத்தூதர்களின் வாழ்வில் தூய ஆவியின் செயல்பாட்டைப் பற்றி திருத்தூதர் பணிகள் நூல் பின்வருமாறு எடுத்துரைக்கிறது: "பெந்தக்கோஸ்து என்னும் நாள் வந்தபோது அவர்கள் எல்லாரும் ஒரே இடத்தில் கூடியிருந்தார்கள். திடீரென்று கொடுங்காற்று வீசுவது போன்று ஓர் இரைச்சல் வானத்திலிருந்து உண்டாகி, அவர்கள் அமர்திருந்த வீடு முழுவதும் ஒலித்தது. மேலும் நெருப்புப்போன்ற பிளவுற்ற நாவுகள் ஒவ்வொருவர் மேலும் வந்து அமர்ந்ததை அவர்கள் கண்டார்கள். அவர்கள் அனைவரும் தூய ஆவியால் ஆட்கொள்ளப்பட்டனர். தூய ஆவியின் தூண்டுதலால் அவர்கள் ஒவ்வொருவரும் வெவ்வேறான மொழிகளில் பேசத்தொடங்கினார்கள்."[13]

தூய ஆவி அருள்பவை[தொகு]

கொடைகள்[தொகு]

தூய ஆவியார் அருளும் கொடைகள் ஏழு. அவை:

  1. ஞானம்
  2. மெய்யுணர்வு
  3. அறிவுரைத்திறன்
  4. நுண்மதி
  5. ஆற்றல்
  6. இறைப்பற்று
  7. இறையச்சம் ஆகியவை ஆகும்.[14]

கனிகள்[தொகு]

தூய ஆவியார் அருளும் கனிகள் பன்னிரண்டு. அவை,

  1. அன்பு
  2. மகிழ்ச்சி
  3. அமைதி
  4. பொறுமை
  5. பரிவு
  6. நன்னயம்
  7. நம்பிக்கை
  8. கனிவு
  9. தன்னடக்கம்,[15]
  10. பணிவு நயம்
  11. தாராள குணம்
  12. நிறை கற்பு ஆகியவை ஆகும்.

வரங்கள்[தொகு]

தூய ஆவியார் அருளும் வரங்கள் ஒன்பது. அவை:

  1. ஞானம் நிறைந்த சொல்வளம்
  2. அறிவு செறிந்த சொல்வளம்
  3. இறை நம்பிக்கை
  4. பிணிதீர்க்கும் அருள் கொடை
  5. வல்ல செயல் செய்யும் ஆற்றல்
  6. இறைவாக்குரைக்கும் ஆற்றல்
  7. ஆவிக்குரியவற்றைப் பகுத்தறியும் ஆற்றல்
  8. பல்வகை பரவசப் பேச்சு பேசும் ஆற்றல்
  9. பரவசப் பேச்சை விளக்கும் ஆற்றல் ஆகியவை ஆகும்.[16]

தூய ஆவியின் அடையாளங்கள்[தொகு]

  • நீர்
  • நறுநெய்யாட்டு / அருட்பொழிவு
  • நெருப்பு
  • மேகம், நெருப்பு, மின்னல்
  • புறா
  • காற்று

ஆதாரங்கள்[தொகு]

  1. யோவான் 14:17 "நீங்கள் தூய ஆவியாரை அறிந்திருக்கிறீர்கள். ஏனெனில் அவர் உங்களோடு தங்கியிருக்கிறார்; உங்களுக்குள்ளும் இருக்கிறார்."
  2. தூய ஆவி, திருமறைச் சுவடி
  3. தொடக்க நூல் 1:2
  4. விடுதலைப் பயணம் 31:2-3
  5. நீதித் தலைவர்கள் 3:10
  6. திருப்பாடல்கள் 51:11
  7. எசாயா 61:1
  8. லூக்கா 1:35
  9. மாற்கு 1:10
  10. யோவான் 14:16-17
  11. மத்தேயு 28:19
  12. திருத்தூதர் பணிகள் 1:7-8
  13. திருத்தூதர் பணிகள் 2:1-4
  14. எசாயா 11:2 "ஆண்டவரின் ஆவி அவர்மேல் தங்கியிருக்கும்; ஞானம், மெய்யுணர்வு, அறிவுரைத்திறன், ஆற்றல், நுண்மதி, ஆண்டவரைப்பற்றிய அச்ச உணர்வு - இவற்றை அந்த ஆவி அவருக்கு அருளும்."
  15. கலாத்தியர் 5:22-23 "தூய ஆவியின் கனியோ, அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை, கனிவு, தன்னடக்கம் என்பவை ஆகும்."
  16. 1 கொரிந்தியர் 12:8-10 "தூய ஆவியார் ஒருவருக்கு ஞானம் நிறைந்த சொல்வளத்தை அருளுகிறார். இன்னொருவருக்கோ அதே ஆவியார் அறிவுசெறிந்த சொல்வளத்தை அளிக்கிறார். அதே ஆவியார் வேறொருவருக்கு நம்பிக்கை அருளுகிறார். அந்த ஒரே ஆவியார் மற்றொருவருக்குப் பிணிதீர்க்கும் அருள் கொடையையும் அளிக்கிறார். தூயஆவியார் ஒருவருக்கு வல்ல செயல் செய்யும் ஆற்றலையும் இன்னொருவருக்கு இறைவாக்குரைக்கும் ஆற்றலையும் வேறொருவருக்கு ஆவிக்குரியவற்றைப் பகுத்தறியும் ஆற்றலையும் மற்றொருவருக்குப் பல்வகை பரவசப் பேச்சு பேசும் ஆற்றலையும் பிறிதொருவருக்கு அப்பேச்சை விளக்கும் ஆற்றலையும் அருளுகிறார்."

கலையில் தூய ஆவி[தொகு]

பொதுவாக புறா வடிவிலும், நெருப்புப் பிழம்பு வடிவிலுமே தூய ஆவி கலைகளில் சித்தரிக்கப்படுகிறார்.

இவற்றையும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தூய_ஆவி&oldid=3216722" இலிருந்து மீள்விக்கப்பட்டது