பரிசில் விடை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புறநானூற்றுப் பாடல்களுக்குத் தரப்பட்டுள்ள துறைகளில் பரிசில் விடை என்பது பாடாண் திணையில் வரும் துறையாகும். புறநானூற்றில் இத்துறைப் பாடல்கள் ஆறு உள்ளன.

இலக்கண நூல் விளக்கம்[தொகு]

 • தொல்காப்பியம் இதனைக் ‘கொடுபோர் ஏத்திக் கோடார்ப் பழித்தல்’ என்று குறிப்பிடுகிறது. [1]
 • புறப்பொருள் வெண்பாமாலை பாடாண் படலத்தில் வரும் 48 துறைகளில் இது ஒன்று. வேந்தன் தன்னைப் புகழ்ந்த புலவர் இன்புறும் வண்ணம் பரிசளித்து விடுத்து வைப்பது இத் துறை.[2]
 • புறநானூற்றுத் திணை, துறை பகுப்புக்களுக்கு மூலமான, மறைந்துபோன பன்னிரு படலம் நூலிலிருந்து இந்தப் பகுப்புப் பெயர் தரப்பட்டுள்ளது.

இலக்கியம்[தொகு]

 • ஔவையாருடன் சென்ற விறலியர் காட்டுக் கீரை வைத்திருந்தனர். அதனுடன் சேர்த்துச் சமைத்து உண்பதற்காக நாஞ்சில் வள்ளுவனிடம் கொஞ்சம் அரிசி கேட்டனர். அவனோ ஒரு யானையை அவர்களுக்குப் பரிசாக வழங்கினானாம். – இதனை ஔவையார் ‘தேற்றா ஈகை’ (தெளிவில்லாத கொடை) எனக் குறிப்பிடுகிறார்.[3]
 • வன்பரணர் வல்வில் ஓரியைக் அவன் வேட்டையாடும் காட்டில் கண்டு பாடினார். பாடலின் முடிவில் புலவருடன் சென்ற பாணர் வழக்கம்போல் ‘கோ’ என ஒரு கூட்டிசை எழுப்பினர். அது கேட்ட ஓரி கோ என்பது தன்னைக் குறிக்கும் சொல் என உணர்ந்து நாணினானாம். தான் யார் என்பதை அவர்களுக்குச் சொல்லாமலேயே சென்றுவிட்டானாம்.[4]
 • பெருஞ்சித்திரனார் குமணன் தம்பி இளங்குமணனைக் கண்டு பாடினார். அவன் சிறிதளவே பரிசில் வழங்கினான். அதனை ஏற்காமல் சென்ற புலவர் வேறொரு அரசன் நல்கிய களிற்றை இளங்குமணன் காவல் மரத்தில் கட்டி வைத்துவிட்டு அவனை மதிக்காத தன் பெருமை தோன்ற ஒரு பாடலைப் பாடினார்.[5]
 • குமணன் தன் தலையைக் கொய்து கொண்டு போய்த் தன் தம்பியிடம் கொடுத்து அதன் விலையைப் பரிசாகப் பெற்றுக்கொள்ளும்படி புலவர் பெருந்தலைச் சாத்தனாரிடம் தன் வாளைக் கொடுத்தான். புலவர் வாளைக் கொண்டுபோய் இளங்குமணனிடம் காட்டி இருவரையும் ஒன்று சேரும்படி செய்தார்.[6]
 • சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் ஆட்சிக் குடை நிழலில் வாழும் எனக்குக் கடல் வற்றினாலும், கதிரவன் தென்திசையில் தோன்றினாலும் கவலையில்லை – என்று எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார் பாடுகிறார்.[7]
 • ஐயூர் முடவனார் தன் பசியைப் போக்குமாறு தாமான் தோன்றிக்கோனிடம் வேண்டினார். அவனோ வானத்தில் மீன் பூத்த்து போல ஆனிரைகள் பலவற்றை ஊர்தியோடு நல்கினான்.[8]

அடிக்குறிப்பு[தொகு]

 1. தொல்காப்பியம் புறத்திணையியல் 17
 2. வேந்தன் உள் மகிழ வெல்புகழ் அறைந்தோர்க்கு
  ஈந்து பரிசில் இன்புற விடுத்தன்று - புறப்பொருள் வெண்பாமாலை 214

 3. புறநானூறு 140
 4. புறநானூறு 152
 5. அதில், ‘இரவலர் புரவலை நீயும் அல்லை, இரவலர் புரவலர்க்கு இன்மையும் அல்லர், இரவலர் உண்மையும் காண், இனி இரவலர்க்கு ஈவோர் உண்மையும் காண்’ என்று பாடியுள்ளார். - புறநானூறு 162
 6. புறநானூறு 165
 7. புறநானூறு 397
 8. புறநானூறு 399
"https://ta.wikipedia.org/w/index.php?title=பரிசில்_விடை&oldid=1891084" இருந்து மீள்விக்கப்பட்டது