பரமேஸ்வரி கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

பரமேஸ்வரி கோவில்[தொகு]

பல நூறு ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் அது. ஒரு ஓலைக்குடிசையில் அன்னை அமர்ந்திருக்க அருகே பெரிய சூலத்தில் ஒரு மஞ்சள் துணி சாத்தப்பட்டுள்ளது. அருகே ஒரு மரப்பெட்டி. ஆலயத்தைச் சுற்றிலும் நான்கு புறமும் ஏராளமான குடிசை வீடுகள்.

ஒரு நாள் திடீரென்று ஒரு குடிசையில் தீப்பற்றிக் கொள்ள அந்தத் தீ மளமளவென அனைத்து குடிசைகளுக்கும் பரவுகிறது. தீயை அணைக்க போதுமான வசதி இல்லாததால் அனைத்து குடிசைகளும் தீயில் எரிந்து சாம்பலாகின்றன.

ஆனால் அந்த குடிசைகளுக்கு நடுவே இருந்த குடிசை கோவிலான அன்னை பரமேஸ்வரியின் ஆலயத்தை மட்டும் தீ அரக்கன் தீண்டவில்லை.

ஓரிடத்தில் கூட அந்த ஓலைக் குடிசையின் மீது அந்த அரக்கனின் விரல்கள் படவில்லை. சூலத்தின் மீது இருந்த மஞ்சள் துணிக்கோ, அருகே இருந்த மரப்பெட்டிக்கோ எவ்வித சேதாரமும் ஏற்படவில்லை.

மக்களின் பார்வை அன்னையின் ஆலயத்தின் மீது திரும்புகிறது. அவர்கள் இந்த அதிசயத்தைக் கண்டு வியந்து நிற்கின்றனர்.

அவர்கள் அன்னையின் அதீத சக்தியை உணரத் தொடங்குகின்றனர். சில நூறு ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் இது. அதன் பின்- ஓலைக் குடிசை ஓட்டு கட்டிடமாக மாறியது.

பின்னர் அதுவும் மாறி அன்னையின் ஆலயம் புதிய கட்டிடமாக உருவெடுத்தது.

அன்னையின் கருவறையில் ஒரு மரப்பெட்டி உள்ளது. மார்கழி மாதம் முதல் நாள் இந்தப் பெட்டி திறக்கப்படும். பெட்டியில் இருக்கும் பவழ காளி, பச்சைக் காளி என்ற இரண்டு திருமேனிகளும் வெளியே எடுக்கப்பட்டு அலங்காரம் செய்யப்படும்.

இந்த இரண்டு திருமேனிகளும் அத்தி மரத்தால் ஆனவை. பெட்டி திறக்கப்பட்ட நாள் முதல் 48 நாட்கள் இரண்டு காளி திருமேனிகளும் அலங்கார தேவதைகளாக மகா மண்டபத்தில் பக்தர்களின் தரிசனத்திற்காக வைக்கப்பட்டிருக்கும்.

பின்னர் தை மாதம் குறிப்பிட்ட செவ்வாய்க்கிழமை காப்பு கட்டும் வைபவம் நடைபெறும்.

மறுவாரம் செவ்வாய் அன்று காலை 10 மணிக்கு அன்னையர் புறப்பட்டு காவிரி நதிக்கரை சென்று விட்டு இரவு 10 மணிக்கு காவிரி நதிக்கரையிலிருந்து அக்னி, ஸ்ரீ சக்தி கரம், அக்னி கொப்பறை, தீப்பந்தம் ஆகியவைகள் சூழ நடனமாடியபடி வீதி வலம் வந்து பின்னர் ஆலயம் வந்து சேருவர்.

இந்தத் திருவிழாவைக் காண நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் சுற்றிலும் உள்ள கிராமங்களில் இருந்து வருகை தந்து விழாவை கண்குளிரக் கண்டு மகிழ்வர்.

48 நாட்கள் நிறைவு பெற்றதும் பச்சைக் காளி, பவழ காளி திருமேனிகள் இரண்டும் பெட்டியில் வைத்து பூட்டப்பட்டு அன்னையின் கருவறையில் வைக்கப்படும்.

பின்னர் மறு ஆண்டுதான் அந்தப் பெட்டி திறக்கப்படும். அன்னை பரமேஸ்வரி தனது கருவறையின் படியை தாண்டாது அன்னையின் சார்பாக பச்சைக் காளி, பவழ காளி என இருவரும் திருவிழா நாயகிகளாய் இருந்து வீதி உலா வருவதால் அன்னைக்கு ‘படிதாண்டா பரமேஸ்வரி’ என்ற பெயர் வந்திருக்கலாம் என்பது செவி வழி தகவல்.

பூஜை முடிந்து ஆலயம் பூட்டப்பட்ட பின் உள்ளேயிருந்து சன்னமான சலங்கை ஒலி இன்றும் கேட்பதாக ஆலயம் அருகே விளையாடும் சிறுவர்களும் அருகே குடியிருக்கும் மக்களும் கூறுகின்றனர்.

தினசரி இரண்டு கால பூஜை நடக்கும் இந்த ஆலயம் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

ஆடி அமாவாசை, மாத பவுர்ணமி நாட்களில் அன்னைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. திருவிழாவின் போது மணமாலை வேண்டும் கன்னியருக்கும், மகப்பேறு வேண்டும் மகளிருக்கும், அன்னைக்கு சாத்தப்படும் வளையல்களை பிரசாதமாக தருகின்றனர்.

ஓராண்டுக்குள் அந்தக் கன்னியர் மற்றும் மகளிர்களின் வேண்டுதல்கள் பலிப்பது கண்கூடான நிஜம் என்கின்றனர் பக்தர்கள். கந்த சஷ்டி அன்று முருகபெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.

அன்று நடை பெறும் அன்னதானத்தில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பயன் பெறுகின்றனர்.

தேய்பிறை அஷ்டமியில் அன்னையின் முன் மகா மண்டபத்தில் அருள் பாலிக்கும் பைரவருக்கு தனிச் சிறப்புடன் அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகிறது.

அன்னை படிதாண்டா பரமேஸ்வரி, தங்களது துயரைக் கூறும் பக்தர்களின் குறையை உடனுக்குடன் களைந்து அவர்களை மகிழ்வோடு வாழ வைப்பதில் அன்னைக்கு நிகரில்லை என்று பக்தர்கள் நம்புவது நிஜமே.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பரமேஸ்வரி_கோவில்&oldid=2380318" இருந்து மீள்விக்கப்பட்டது