பரணி (இலக்கியம்)
பரணி என்பது தமிழில் வழங்கப்பெறும் தொண்ணூற்றாறு பிரபந்த வகைகளுள் ஒன்றாகும். போரிலே ஆயிரம் யானைகளைக் கொன்று வெற்றிபெறும் வீரர்கள் மேல் பாடப்படுவது பரணி இலக்கியம் ஆகும்.
இதை, "ஆனை ஆயிரம் அமரிடை வென்ற மானவனுக்கு வகுப்பது பரணி" எனப் இலக்கண விளக்க பட்டியல் விளக்குகிறது. பெரும்போர் புரிந்து வெற்றி பெற்ற வீரனைச் சிறப்பித்துப் பாடுவதையும் பரணி என்று வழங்குவதுண்டு. போரிற் தோற்றவன் நாட்டின் பெயரால் நூலை வழங்குவது மரபு. போர்க்கள வெற்றியே அல்லாமல் அஞ்ஞானம் போன்றவற்றை வென்றதைப் பாடலும் பரணி எனக் கூறப்படுவதையும் பட்டியலில் காணலாம்.
பரணி என்னும் சொல்லானது, காடுகிழவோன், பூதம், அடுப்பு, தாழி, பெருஞ்சோறு, தருமன் நாள், போதம் என்னும் பல பொருள்களைத் தரும். இதனைக்
- " காடு கிழவோன் பூதமடுப்பே, தாழி பெருஞ்சோறு தருமனாள் போதமெனப் பாகு பட்டது பரணி நாட்பெயரே " என்று (திவாகர நிகண்டு) கூறுவதிலிருந்து அறியலாம்.
இது தாழிசை யாப்பால் பாடப்படும். இது ஈரடிப் பாடல். இதனை இக்காலத்தில் கண்ணி என்பர்.
| 0 | நூல் | ஆசிரியர் | காலம் | பாடுபொருள் | குறிப்பு | தற்போது பாடல் |
|---|---|---|---|---|---|---|
| 1 | கொப்பத்துப் பரணி - | - | 1054 | கொப்பம் என்னுமிடத்து நடந்த போரில் சோழன் இரண்டாம் இராசேந்திரன் மேலைச்சாளுக்கிய ஆகவமல்லனை வென்றது | உண்மையான போர் | இல்லை |
| 2 | கூடல் சங்கமத்துப் பரணி | - | 1064 | கூடல் சங்கமம் என்னுமிடத்தில் நடந்த போரில் சோழன் வீரராசேந்திரன் மேலைச்சாளுக்கிய மன்னன் அதே ஆகவமல்லனை வென்றது | உண்மையான போர் | இல்லை |
| 3 | கலிங்கத்துப்பரணி | செயங்கொண்டார் | 1112 | சோழன் முதலாம் குலோத்துங்கன் வடகலிங்கம் போரில் அனந்த பன்மனை வென்றது | உண்மையான போர் | 599 பாடல் |
| 4 | கலிங்கத்துப் பரணி | ஒட்டக்கூத்தர் | 1096 | விக்கிரம சோழன் இளவரசனாக இருந்தபோது தென்கலிங்கரை வென்ற போரைப் பாடியது | உண்மையான போர் | இல்லை |
| 5 | தக்கயாகப் பரணி | ஒட்டக்கூத்தர் | 1155 | வீரபத்திரர் தோன்றி தக்கன் யாகத்தை அழித்தது | புராணம் | 814 பாடல் |
| 6 | இரணியவதைப் பரணி | - | 1210 | பிரகலாதனுக்காக நரசிம்ம மூர்த்தி தோன்றி இரணியனை வதைத்தது | புராணம் | 693 பாடல் |
| 7 | அஞ்ஞானவதைப் பரணி | தத்துவராயர் | 1450 | ஞானம் அஞ்ஞானத்தை வதைத்தது | தத்துவம் | 493 பாடல் |
| 8 | மோகவதைப் பரணி | தத்துவராயர் | 1450 | ஞானவேந்தன் தோன்றி அஞ்ஞானத்தை வதைத்தது | தத்துவம் | 349 பாடல் |
| 9 | பாசவதைப் பரணி | வைத்தியநாத தேசிகர் | 1640 | பாசத்தை ஞானவினோதன் வென்றது | தத்துவம் | 737 பாடல் |
| 10 | திருச்செந்தூர்ப் பரணி | சீனிப்புலவர் | 18ஆம் நூற்றாண்டு | சூரபன்மனை முருகன் வென்றது | புராணம் | 174 பாடல் (சிதைவில்) |
| 11 | கஞ்சவதைப் பரணி | உ. வே. சா. குறிப்பு | - | கம்சனைக் கண்ணன் வதைத்தது | புராணம் | - |
| - | கலைசைச் சிதம்பரேசர் பரணி | சுப்பிரமணிய முனிவர் | 1800 | இது பரணி இலக்கியம் அன்று |
பகுதிகள்
[தொகு]பொதுவாகப் பரணிகள் பின்வரும் பகுதிகளைக் கொண்டிருக்கும்.
- கடவுள் வாழ்த்து
- கடை திறப்பு
- காடு பாடியது
- கோயில் பாடியது
- தேவியைப் பாடியது
- பேய்ப்பாடியது
- இந்திரசாலம்
- இராச பாரம்பரியம்
- பேய் முறைப்பாடு
- அவதாரம்
- காளிக்குக் கூளி கூறியது
- போர் பாடியது
- களம் பாடியது
- கூழ் அடுதல்
இவற்றையும் பார்க்கவும்
[தொகு]கருவிநூல்
[தொகு]- ↑ மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 12 ஆம் நூற்றாண்டு, பாகம் 1, தி பார்க்கர் தமிழியல் ஆய்வு நிறுவனம் (சென்னை 14) வெளியீடு, 1971, பக்கம் 56-57