உள்ளடக்கத்துக்குச் செல்

பரணி பரணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திர நாளில் வீடுகளில் ஒளிவிளக்கு ஏற்றி கார்த்திகை விழா கொண்டாடப்படும். அந்த நாளுக்கு முதல்நாள் பரணி நாள். இந்தப் பரணி நாளில் பெரியவர்களில் சிலர் புலி-வேடம் போட்டுக்கொண்டு ஆடுவர்.

புலி ஆட்டைப் பிடிப்பது போல் அந்த ஆட்டம் இருக்கும். ஆட்டுக்கும் புலிக்கும் இடையில் இரண்டு பேர் நீண்ட கயிறு ஒன்றைப் பிடித்துக்கொண்டு நிற்பர். புலி கயிற்றைத் தாண்டி ஆட்டைப் பிடிக்கலாம். கயிற்றை மேலும் கீழும் தூக்கிப் பிடித்துப் புலியை தாண்டவோ, கீழே நுழைந்து செல்லவோ விடமாட்டார்கள். புலி கயிற்றைப் பிடிக்காமல் தாண்ட வேண்டும்.

இது ஒரு வேடிக்கை விளையாட்டு. இந்த விளையாட்டின்போது பாட்டு பாடப்படுவது உண்டு. அந்தப் பாடல்

பரணி பரணி பப்பரணி
பரணி என்று பாடவேண்டும்
பதக்கு நெல்லுப் போடவேண்டும்
பிள்ளையார் கோவிலிலே
பிள்ளை சத்தம் கேட்குதம்மா
சங்கரனார் கோவிலிலே
சங்குச் சத்தம் கேட்குதம்மா
நாழி நெல்லு போட்டவங்க
நல்ல பிள்ளை பெறுவாங்க
குறுணி நெல்லைப் போட்டவங்க
குந்தாணிப் பிள்ளை [1] பெறுவாங்க
முக்காதே முணங்காதே
மூலை வீட்டிலே இருக்காதே
சட்டுப்புட்டுன்னு எழுந்திருச்சி
சட்டிப்பானையிலே கையை வை
பரணி என்று பாடவேண்டும்
பதக்கு நெல்லுப் போடவேண்டும்.

ஊர்மக்கள் போட்ட நெல்லைக் குற்றிப் பொங்கல் வைத்து ஊருக்கு விருந்தளிக்கப்படும்.

இவற்றையும் பார்க்க

[தொகு]

அடிக்குறிப்பு

[தொகு]
  1. குந்தாணி போல் கொழுகொழுவென்று பிள்ளை

கருவிநூல்

[தொகு]
  • இரா.பாலசுப்பிரமணியம், தமிழர் நாட்டு விளையாட்டுகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு, 1980
"https://ta.wikipedia.org/w/index.php?title=பரணி_பரணி&oldid=1014080" இலிருந்து மீள்விக்கப்பட்டது