பயனர் பேச்சு:Natkeeran/அறிமுகக் கட்டுரை வரைவு 1

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தமிழில் பல்லூடக ஆவணப்படுத்தல்

தமிழின், தமிழரின், பிறரின் வரலாற்றை, கலைகளை, நுட்பங்களை, அறிவியலை எண்மிய பல்லூடக முறையில் தமிழில் ஆவணப்படுத்திப் பகிர்வது தமிழ்ச் சமூக வளர்ச்சிக்குத் தேவையான முக்கிய செயற்பாடுகளில் ஒன்று. சங்க காலம், சோழ-பாண்டிய பேரசுக் காலங்களை நோக்குகையில் தமிழர்கள் பல் துறைகளில் உயர்ந்த அறிவைப் பெற்றிருந்ததை அறிய முடிகிறது. உலக நாகரிகங்களில் ஒரு முக்கிய ஊற்று தமிழர்களுடையது. ஆனால் தமிழர்கள் வெல்லப்பட்டு அடக்கி வைக்கப்பட்டபோது நாம் எமது அறிவை இழந்தோம். எமது ஆவணப்படுத்தலின், பாதுகாத்தலின் போதாமைகளும் எமது அறிவை நாம் இழக்கக் காரணமாயின. இதனால் நாம் கல்வி, பண்பாட்டு, அரசியல், பொருளாதார முனைகளில் பல பாதிப்புக்களைச் சந்தித்தோம்.

அறிவுத் தேவை[தொகு]

எனினும் பிற பல மொழிகள் போல் அல்லாமல் தமிழுக்கு தொன்று தொட்டே எழுதப்பட்ட இலக்கியங்கள் உண்டு. கல்வெட்டுக்கள், சிலைகள், கட்டிடங்கள், கருவிகள், தொல்பொருட்கள் ஆகியவை தமிழர் அறிவியலைச் அறிய உதவும் சான்றுகளாக உள்ளன. இன்றும் எம்மிடம் நூற்றுக்கணக்கான ஆடற்கலைகள், விளையாட்டுக்கள், கதைகள், கூத்துக்கள், தொழில்கள் உள்ளன. ஆனால் வேகமாக நாம் இவற்றை மறந்து வருகிறோம், இழந்து வருகிறோம். இவை தமிழர் அறிவின் வாழும் ஆதாரங்கள். இன்று இந்த அறிவு எண்மிய பல்லூடக முறையில் ஆவணப் படுத்தப்படுவது ஒரு முக்கிய தேவையாக உள்ளது.

19 ம் நூற்றாண்டில் ஏட்டில் இருந்தல் தமிழ் இலக்கியங்கள் அச்சுப் பதிக்கப் பட்டமை தமிழரின் மறுமலர்ச்சிக்கு வளங்களாக அமைந்தன. 20 ம் நூற்றாண்டில் பலர் மேற்கொண்ட நாட்டாரியல் ஆய்வுகள் எமது பழமொழிகளை, பாடல்களை, கதைகளை, வழக்கங்களை, இன்னும் பல கூறுகளைப் பதிவு செய்து தமிழ்ச் சமூகத்தின் உயிர்நாடி ஒன்றைப் பாதுக்காத்தன. ஆனால் இதே போன்ற செயற்பாடுகள் தமிழர் தொழில்நுட்பங்கள், அறிவியல் நோக்கிச் செயற்படுத்தப்படவில்லை. இன்று எமது சூழல், அது சார்ந்த உற்பத்திகள் பற்றி நாம் கொண்டிருந்த இயல்பான அறிவை இழந்து நிற்கிறோம். மீண்டும் மேற்குநாடுகள் வழியே இயற்கை வேளாண்மை, பேண்தகு மீன்பிடிப்பு, மர வேலை, கட்டிடக்கலை போன்ற அறிவுக்கூறுகளை அறிய தள்ளப்பட்டிருக்கிறோம். இனியும் காலம் தாழ்த்தாமல் நாம் எமது அறிவை ஆவணப் படுத்தல் அவசியமாகும்.

எமது அறிவு மட்டும் அல்லாமல் விரைவாக மாறும் உலகின் பல்துறை அறிவும் தமிழில் உருவாக்கப்பட வேண்டும். உலகில் பரந்து வாழும் தமிழர்கள் அந்த அந்த நாட்டுப் புவியியல், பண்பாடு, கலைகள், இலக்கியங்கள் பற்றி மட்டும் அல்லாமல், அங்கு உள்ள சமூக அமைப்புகள், சட்டங்கள், தொழில்நுட்பங்கள் பற்றிய அறிவையும் பகிர வேண்டும். பிறரதும், எமதும் சிறந்த எடுத்துக்காட்டுக்களை, மாதிரிகளை, முறைமைகளைத் தொகுத்து ஆராய எமக்கு இன்று ஒரு அரிய வாய்ப்பு உள்ளது.

தற்போது பல இலக்கிய, கல்வி, அரசியற் கூட்டங்கள் தமிழில் நடைபெறுகின்றன. இதில் பல சிந்தனை ஆழம் மிக்க உரைகள் வழங்கப்படுகின்றன. ஆனால் பெரும்பாலான உரைகள் ஆவணப்படுத்தப்பட்டு பகிரப்படுவதில்லை. அந்த தமிழ்க் குரல்கள் சுவர்களுக்குள்ளே, அங்கு நின்ற மனிதர்களோடு அடங்கிப் போகிறது. இதற்கு எதிர் மாற்றான ஒரு நிலையை நாம் ஆங்கில உலகில் பார்க்கலாம். சிறந்த சிந்தனையாளர்களின் உரைகளை ரெட் ரோக்சு (http://www.ted.com/talks), ஃபோரா டி.வி (http://fora.tv/), ஆர்.எசு.ஏ வீடியோசு (http://www.thersa.org/events/vision) போன்ற தளங்களில் நாம் காணலாம். தமிழ் மொழியில் நடைபெறும் உரைகள் மட்டும் இன்றி பாடங்கள், பாடத் திட்டங்கள், விவாதங்கள், நிகழ்ச்சிகள், போராட்டங்கள் திறந்த முறையில் இணையத்தில் பகிரப்பட்டால், அதனால் தமிழ்ச் சமூகத்துக்கு அறிவு வளங்கள் சேரும்.

வழிமுறை[தொகு]

இந்த அறிவுகளை நாம் இணையம் மூலம், பல்லூடக வழிகளில் ஆவணப் படுத்திப் பகிர முடியும். இன்று காட்சி ஊடகமே முக்கியம் பெற்று வருகிறது. பல பத்திகளில் சொல்வதை, ஒரு காட்சியில் காட்டி விட முடியும். ஒலிக் கோப்பு (audio), நிகழ்படம் (video), இயங்குபடம் (animation), நிகழ்த்தல் (ppt), ஒளிப்படம் (photograph), தரவுகள் (data), எழுத்து (text), வலைத்தளங்கள் (websites) என எண்மிய பல்லூடக முறையில் நாம் ஆவணப் படுத்தி, எளிய முறையில் பகிர வேண்டும்.

பல்லூடக ஆவணப்படுத்தல் பணி நான்கு முக்கிய கூறுகளைக் கொண்டது. பல்லூடக மூலங்களைச் சேகரித்தல், ஒழுங்குபடுத்தல், எண்மியப்படுத்தல், பகிர்ந்தல் ஆகியனவாகும். இதைச் செயற்படுத்தும் தளமாக இணையம், குறிப்பாக வலை 2.0 உள்ளது. நான்கு நிலைகளிலும் இணையம் எமக்கு உதவக் கூடியது. எனினும் ஆக்கர்களை ஆக்கங்களைக் கண்டடைவது, அறிமுகப்படுத்தல், வருடி எண்மியப்படுத்தல் (scanning and digitalization), ஒருங்கிணைப்பு, நிதிச் சேகரிப்பு போன்ற இணையத்துக்கு அப்பாலான பல பணிகளும் உள்ளன.

இந்த கூட்டறிவு ஆவணப் படுத்தலை, உற்பத்தியை நாம் கூட்டாக, பரவலான முறையில், சேர்ந்தியங்க உதவும் நுட்பங்களைப் பயன்படுத்திச் செய்யலாம். எமது விளைச்சல்களை கூட்டாக உரிமைப் படுத்தி அனைவரும் பயன் பெறலாம்.

திட்டங்கள்[தொகு]

தமிழில் பல்லூடக ஆவணப்படுத்தலில் தன்னார்வலர் திட்டங்களே முதன்மை பெறுகின்றன. இதில் தமிழ் விக்கியூடகங்கள், நூலக அறக்கட்டளைத் திட்டங்கள், தமிழம், மதுரைத் திட்டம், தமிழ் மரபு அறக்கட்டளை, தமிழ்த் தேசிய ஆவணச் சுவடிகள் ஆகியவை முக்கியமானவை. இவற்றோடு தமிழ்நாடு அரசு திட்டங்களான தமிழ் இணையப் கல்விக்கழகம் (www.tamilvu.org), தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் (www.agritech.tnau.ac.in/ta/index.html) ஆகியவை குறிப்பிடத்தக்க பணிகளைச் செய்கின்றன.

தமிழ் விக்கியூடகங்கள் பொது விக்கியூடக திட்டத்தின் ஒர் அங்கமாகும். விக்கியூடகத் திட்டம் எல்லோரும் இணையம் ஊடாகப் அவர்களுக்கு ஈடுபாடு உள்ள வகையில் பங்களிக்கக் கூடிய விக்கிக் கட்டமைப்பைக் கொண்டது. கட்டற்ற உரிமம் கொண்ட படைப்புகள் இதில் கூட்டாக உருவாக்கப்படுகின்றன. இதில் முதன்மையானது கலைக்களஞ்சியத் திட்டமான தமிழ் விக்கிப்பீடியா (www.ta.wikipedia.org) ஆகும். இதில் தற்போது 25 000 குறு, நெடுங் கட்டுரைகள் உள்ளன. நாளாந்தம் பல நாடுகளில் இருந்து பங்களுக்கும் தமிழர்களின் கூட்டு முயற்சியால் வளர்ந்து வருகிறது. இன்னுமொரு விக்கியூடகத் திட்டமான தமிழ் விக்சனரி (www.ta.wiktionary.org) ஒரு பன்மொழி இணைய அகராதி. இதில் 121 000 சொற்களுக்கு தமிழில் விளக்கம் காணலாம். தமிழ்நாடு அரசு மேலும் இரண்டு இலசம் சொற்களை இங்கு பதிவேற்ற தந்துள்ளது. தமிழ் விக்கி செய்திகள் (www.ta.wikinews.org) உலகளாவிய விக்கி செய்திகளைத் தொகுத்து தருகின்றது. தமிழ் விக்கி மூலத்தில் (www.ta.wikisource.org) மூல ஆவணங்கள் பதிவேற்றிப் பகிரப்படுகின்றன. இவற்றோடு விக்கி நூல்கள் (www.ta.wikibooks.org), விக்கி மேற்கோள்கள் (www.ta.wikiquote.org) ஆகிய திட்டங்களும் உள்ளன. இணையத்தில் தமிழில் பல்துறை உள்ளடக்க உருவாக்கத்தில் தமிழ் விக்கியூடகங்களின் பங்கு முக்கியமானது.

இலங்கைத் தமிழர் படைப்புகளை, அடையாளங்களை, அறிவைப் பேணுவதையும் வளர்ப்பதையும் நோக்கமாக் கொண்டு நூலக அறக்கட்டளைத் திட்டங்கள் செயற்படுத்தப்படுகின்றன. நூலகத் திட்டம் (www.noolaham.org) ஊடாக 7000 மேற்பட்ட எழுத்து ஆக்கங்களைக் கொண்ட எண்ணிம நூலகம் ஒன்று இயங்குகிறது. எழுத்தாவண வரையறையைத் தாண்டி ஆக்கங்களைக் சேக்கவும் தற்போது செயற்திட்டங்கள் உள்ளன. நூலகத் திட்டத்தின் இன்னுமொரு முக்கிய திட்டம் அறிவு/தகவல் வலைப்பின்னல் (www.noolahamfoundation.org) ஒன்றை உருவாக்குவது ஆகும். "எண்ணிம நூலகம், ஆவணக்காப்பகம், மரபறிவுப் பாதுகாப்பு, தகவல் அறிதிறன், அறிவுப்பரம்பல், ஆய்வுச் செயற்பாடு மற்றும் கல்வி மேம்பாடு ஆகியவை தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் அவை தொடர்பில் வழிகாட்டுவதோடு தன்னிறைவானதும் சுதந்திரமானதுமான செயற்பாட்டு வினைதிறனுடைய தன்னார்வக்குழுக்களை உருவாக்குதல்" இதன் நோக்கமாகும்.

மதிரைத் திட்டம் (www.projectmadurai.org) பண்டைத் தமிழ் இலக்கியங்களை ஆவணப்படுத்தி உள்ளது. தமிழம் திட்டம் (www.thamizham.net) சிற்றிதழ்கள் மற்றும் நூற்களை ஆவணப்படுத்தும் திட்டம் ஆகும். இது பல வழிகளில் வளர்த்தெடுக்கக் கூடிய ஒரு திட்டம் ஆகும். தமிழ் மரபு அறக்கட்டளை (www.tamilheritage.org) தமிழ் ஆவணச் சுவடிகளையும், தொல்லியல் பொருட்களையும் ஆவணப்படுத்துதில் ஈடுபட்டுள்ளது. தமிழ்த் தேசிய ஆவணச் சுவடிகள் (www.tamilarangam.net) ஈழப் போராட்டம் தொடர்பான 2000 மேற்பட்ட எழுத்து ஆக்கங்கள், 1000 மேற்பட்ட ஒளிப்படங்கள், நிகழ்படங்கள் ஆகியவற்றி இதுவரை ஆவணப் படுத்தி உள்ளது.

இதுவரை இந்தத் திட்டங்கள் எழுத்து முறை ஆவணப்படுத்தலையே முதன்மையாகச் செய்து வருகின்றன. இவை ஒரு நல்ல தொடக்கமே. ஆனால் எமது தேவைகள் இவற்றை மீறியவை. தமிழ் மொழி, அடையாளம், அறிவு பேணப்படுத்தல் அவசியம் என்றால் தமிழில் பல்லூடக ஆவணப்படுத்தல் மிகவும் தேவையானது.