பயனர்:Soma132002/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாஸ்கர் கலைகள் கழகக் குழு   

சிங்கப்பூரில் இயங்கும் இந்தியச் செவ்வியல் மேடைக்கலைக்குழு பாஸ்கர் கலைகள் கழகக் குழு ஆகும். இந்நாட்டில் செவ்வியல் இசை, நடனக்கலை நிகழ்ச்சிகளைத் தயாரித்து நிகழ்த்துவதில் நீண்ட காலமாக ஈடுபட்டு வரும் அமைப்புகளில் இக்குழு முதன்மையானது. கதகளி, கதக், மணிப்பூரி போன்ற நடனக்கலைகளில் மேதையாக விளங்கிய கே.பி.பாஸ்கர் இக்குழுமத்தை நிறுவினார். நிருத்யாலயா என்னும் பயிற்றுவிக்கும் பிரிவு மூலம் இக்கலைகளைக் கற்பிக்கும் பணியிலும் இக்குழு ஈடுபடுகிறது. பாஸ்கர் கலைகள் கழகக் குழு ஆண்டுதோறும் நான்கு முதல் ஐந்து பருவங்களுக்கு நிகழ்ச்சிகளை நடத்தி, கலைநேயர்களை மகிழ்வித்து வருகிறது.

வரலாறு

இந்தியச் செவ்வியல் நடனக் கலைகளில் மேதையான கே.பி.பாஸ்கர் 1940களின் பிற்பகுதியில் இந்தியாவில் பாஸ்கர் நடனக்கலை கழகத்தைத் தொடங்கினார். 1952இல் சிங்கப்பூரில் இக்கழகம் நிறுவப்பட்டது. பிற்காலத்தில் பாஸ்கரின் மனைவி சாந்தாவும் கழகத்தை நடத்தும் பணியில் இணைந்தார். இருவரும் சேர்ந்து சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் விருப்பமுள்ளவர்களுக்குப் பரத நாட்டியம் கற்றுக்கொடுத்தனர். 1968இல் சிங்கப்பூர் மலேசியாவிலிருந்து தனி நாடாகப் பிரிந்தபோது, பாஸ்கர் இணையர் சிங்கப்பூரில் கவனம் செலுத்தினர். 1988இல் பாஸ்கர் நடனக்கலைக் கழகத்தின் பயிற்றுவிக்கும் பணிக்கெனத் தனிப்பிரிவாக நிருத்யலயா கவின் கலைகள் கழகம் என்பதைத் தோற்றுவித்தனர். நிருத்யலயா இசை, நடனத்தைத் தாண்டி, யோகா, தெருக்கூத்து ஆகிய பிரிவுகளிலும் படிப்புகளை வழங்குகிறது.

செவ்வியல் இசை, நடனக் கலைகளைக் கற்பித்தல், கலைநிகழ்ச்சிகள் நடத்துதல் ஆகியவற்றோடு, கழகம் தனக்கென ஒரு கதகளி கலைஞர்கள்வை யும் கொண்டுள்ளது. இந்தியாவுக்கு வெளியே உலகளவில் சீராகச் செயல்பட்டுவரும் கதகளி குழு இக்கழகத்திடம் மட்டுமே உள்ளது. கலைநிகழ்ச்சிகளை ஆவணப்படங்களாகத் தயாரிப்பது, தொகுப்பது உள்ளிட்ட தொழில்நுட்பப் பணிகளைச் செய்வதற்கென பாஸ்கர் பதிவு நிலையம் என்பதையும் கழகம் நடத்துகிறது. கழகத்தின் சார்பில் வெளியிடப்படும் கவின் கலை என்ற காலாண்டிதழ் பல ஆண்டுகளாகத் தனக்கென அகன்ற வாசகப்பரப்பைப் பெற்றுள்ளது.

பணிகள்

இந்திய(தெற்கு ஆசியா) இசை, நடன, அரங்கக் கலைகள் சார்ந்து நிகழ்வுகளை உருவாக்குதல், தயாரித்தல், அவற்றை மேடைகளில் நிகழ்த்துதல், ஊக்குவித்தல்.

நிகழ்ச்சிகள் மரபு வழித் தத்துவங்களையும் வழிமுறைகளையும் மூலமாகக் கொண்டிருத்தல்.

சிங்கப்பூர் சமூகத்தின் துடிப்பையும் பன்முகத்தன்மையையும் பிரதிபலிக்கும்நோக்கிலும், அதே வேளையில் தனித்துவமான படைப்பாக்க அணுகுமுறை மாறாமலும் நிகழ்ச்சிகளை வடிவமைத்தல்.

சிங்கப்பூர் பார்வையாளர்களைப் போலவே, உலக அளவிலான பார்வையாளர்களுக்கும் நிகழ்ச்சிகளைக் கொண்டுசெல்லுதல்.

தனிப்பிரிவு மூலமாக மாணவர்களுக்குச் செவ்வியல் இசை, நடன, யோக, தெருக்கூத்து கலைகளைக் கற்பித்தல்

நிறுவனர் வரலாறு

கே.பி. பாஸ்கர்

பாஸ்கர் கலைகள் கழகத்தின் நிறுவனர்களில் ஒருவரான கே.பி.பாஸ்கர் இந்தியாவில் கேரள மாநிலத்தில் 1925ஆம் ஆண்டில் ஜூலை 1 அன்று பிறந்தார். திருவிதாங்கூரில் உள்ள சமஸ்தான நடனப்பள்ளியில் கதகளி பயின்றதன் மூலம் நடனக்கலையுடனான  அவருடைய உறவு தொடங்கியது. மணிப்பூரி, கதக் ஆகிய நடனக்கலைகளையும் பயின்றார். பாஸ்கர் பெங்களூருவில் வசித்த காலத்தில் ரஷ்ய நாட்டின் நடனக்கலையான பாலே, இலங்கையில் இருந்தபோது கண்டிய நடனத்தையும் கற்றுக்கொண்டார். சிதார் மேதையான பண்டிட் ரவி சங்கரின் சகோதரரான உதய் சங்கர் பாஸ்கரின் நடன ஆசான்களில் ஒருவர். தனது நடன வாழ்க்கை குறித்து கல்பனா என்ற திரைப்படத்தை உதய் சங்கர் தயாரித்தபோது பாஸ்கரும் அவருடன் இணைந்து பணிபுரிந்தார். இதன் தொடர்ச்சியாக சென்னையில் இருந்த ஜெமினி ஸ்டூடியோவிலும் துணை நடன இயக்குனராகப் பணியாற்றும் வாய்ப்பும் அவருக்குக் கிடைத்தது. இரண்டாம் உலகப்போர் நடந்த காலத்தில், அதில் பங்கேற்ற  இந்திய படையினரை மகிழ்வூட்டுவதற்காகக் கலை நிகழ்ச்சிகள் நடத்திய குழுவில் பாஸ்கரும் இடம்பெற்றார். அவர்களுடன் மத்தியக் கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்கா வரைக்கும் நெடுந்தொலைவுப்பயணங்களை பாஸ்கர் மேற்கொண்டார்.

1952இல் பாஸ்கர் ஒரு முறை ஆஸ்திரேலியாவுக்குச் செல்ல வேண்டியிருந்தபோது, எதிர்பாராத விதமாக வழியில் சிங்கப்பூரில் தங்க வேண்டிய சூழல் உருவானது. எப்போதும் மனதின் விருப்பத்தைப் புரிந்துகொண்டு செயல்படும் பாஸ்கர் பயணம் தடைப்பட்டதை ஏற்றுக்கொண்டார். சிங்கப்பூரில் இசை, நடனக் கலைகளைக் கற்பிக்க வேண்டும் என்ற எண்ணம் அப்போதுதான் அவருக்குத் தோன்றியது. உடனடியாக வகுப்புகள் நடத்தத் தொடங்கிய பாஸ்கர் விரைவில் தன் மனைவி சாந்தாவுடன் இணைந்து, அங்கே பாஸ்கர் கலைகள் கழகத்தை நிறுவினார்.

பாஸ்கர் யோகக்கலை பயின்றவர். எழுதுவதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். இந்திய நடனம் குறித்து மூன்று நூல்களும் கலை இதழ்களுக்குப் பல கட்டுரைகளும் எழுதியுள்ளார். ’இந்திய நடனத்தின் கூறுகள்’ என்ற பெயரில் பரத நாட்டியம் குறித்து 26 பாகங்கள் கொண்ட ஒரு தொலைக்காட்சித்தொடருக்குத் திரைக்கதை அமைத்தார். கலைத்துறைக்கு அவரது நீண்ட காலப் பங்களிப்பின் பிரதிபலிப்பாகப் பல விருதுகள் அளிக்கப்பட்டன. சிங்கப்பூர் அரசின் மரியாதைக்குரிய சேவைக்கான பதக்கம், பிங்கத் ஜசா ஜெமிலாங், எம்பிகே அறக்கட்டளை வழங்கும் கலா விபாஞ்சி, நாட்டிய கலாநிதி, சண்டிகாரில் உள்ள பிரச்சீன் கலா கேந்திரா வழங்கும் நிருத்ய சிரோன்மணி முனைவர் பட்டம் போன்ற விருதுகள் அவற்றுள் அடங்கும்.

1962-63இல் சிங்கப்பூரிலிருந்து இந்தியாவுடனான கலை, பண்பாட்டுப் பரிமாற்றத்துக்காக பயணம் மேற்கொண்ட குழுவுக்கு பாஸ்கர் தலைமை தாங்கினார். சிங்கப்பூர் அரசின் பண்பாட்டு அமைச்சகத்தின் கீழ் வரும் நடன ஆலோசனைக்குழுவின் முன்னோடித்தலைவராகவும் அவர் விளங்கினார். மக்கள் கழகம், அரங்க நிகழ்வுக்கான தேசிய அறக்கட்டளை, தேசிய அரங்கக் கழகம், சிங்கப்பூர் கலைக்கூட்டமைப்பு ஆகியவற்றில் உறுப்பினராக இருந்தார். சிங்கப்பூர் கதகளி யோகத்தின் தலைவராக 20 ஆண்டுகளுக்கு மேலாகச் செயல்பட்டார்.

‘மனித குல முன்னேற்றத்தில் ஒரு பகுதியாகக் கலைகளும் கருதப்பட வேண்டும். கலைகளைக் கற்கும் விரும்பும் எவருக்கும் அந்த வாய்ப்பு மறுக்கப்படக்கூடாது’ என்பதைத் தன் வாழ்நாள் முழுதும் வலியுறுத்துபவராக  பாஸ்கர் விளங்கினார்.

பாஸ்கர் 2013இல் ஏப்ரல்-17ஆம் நாளில் தனது 88ஆம் வயதில் இதயத்தில் ஏற்பட்ட கோளாறுகள் காரணமாக இறந்தார்.

சாந்தா பாஸ்கர் பாஸ்கர் கலைகள் கழகத்தின் நிறுவனர்களில் ஒருவரான சாந்தா பாஸ்கர் அதன் கலை இயக்குனராகவும் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் உள்ள கலைகளுக்கான மையத்தின் தலைமை நடன வடிவமைப்பாளராகவும் பொறுப்பு வகிக்கிறார்.

பல்வேறு நடனங்களில் உள்ள தேர்ச்சி காரணமாக சாந்தா பாஸ்கர் தனிச்சிறப்புடன் கூடிய நடனப்பாணிக்கு உரியவராக உள்ளார். ஒருபுறம் இந்தியச் செவ்வியல் நடனக்கலை மரபிலிருந்து எழுந்த நாட்டிய நாடகங்கள், அவற்றை மையமாகக் கொண்ட தற்காலப் படைப்புகள்; மறுபுறம் சிங்கப்பூரின் பன்முகத்தன்மை கொண்ட பண்பாட்டு மரபோடு பொருந்தும் வகையிலான அயலகக் கூறுகள் அடங்கிய படைப்புகள், பரிசோதனை வகையில் அமைந்த படைப்புகள் என இரு வேறு தளங்களிலும் இவர் நிகழ்ச்சிகளை உருவாக்கியுள்ளார். காலப்போக்கில் சீன, மலேசிய, தாய்லாந்து மற்றும் மேற்கத்திய மரபுகளிலிருந்து தான் பெற்ற தாக்கங்களையும் தனது நடன பாணியில் வெளிப்படுத்தினார்.

பழங்காலத்திலிருந்து நவீன காலம் வரை மனிதர்களின் தகவல் தொடர்புமுறையைக் கருவாகக் கொண்ட ‘பீப்பிள் கெட் கனெக்ட்டட்(2006)’, நடனத்துடன் ஒளி, காணொளி மற்றும் நாடகக்கூறுகள் நிகழ்த்தும் குறுக்கீடுகளைப் பரிசோதிக்கும் முயற்சியான ‘வைப்ரேஷன்ஸ்’(2007), முதன்முதலாக மணல் சிற்பக் கலையுடன் இந்திய மரபு நடனக்கலை கைகோர்த்த நிகழ்ச்சியான ‘சக்ரா’(2012) போன்றவை சாந்தா பாஸ்கர் சம காலத்தில் வழங்கிய நடனக்கலைப் படைப்புகளில் குறிப்பிடத்தக்கவை. பொழுதுபோக்கு நோக்கில் தயாரிக்கப்பட்ட ‘பப்படும்’ என்ற நாட்டிய நாடகத்துக்காக என்யூஎஸ் டான்ஸ் ப்ளாஸ்ட் என்னும் ஹிப் ஹாப் நடனக்குழுவுடன் இணைந்து பணிபுரிந்தார். கலைத்துறையில் இவரது பங்களிப்புக்காக சிங்கப்பூர் அரசின் பண்பாட்டுப்பதக்கம் 1990இல் வழங்கப்பட்டது.

பாஸ்கர், சாந்தா இணையருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.

நிருத்யலயா கவின் கலைகள் கழகம்

பாஸ்கர் கலைகள் கழகக் குழுமத்தின் பயிற்றுவிக்கும் பிரிவான நிருத்யலயா கவின் கலைகள் கழகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயில்கிறார்கள். இதுவரை இசையிலும் நடனத்திலும் நூற்றுக்கும் மேற்பட்ட அரங்கேற்றங்களைக் இக்கழகம் நிகழ்த்தியுள்ளது. பொருளாதார வசதி அற்ற மாணவர்களுக்கு உதவித்தொகையும் ஊக்கத்தொகையும் அளித்து ஆதரிக்கிறது. மாணவர்களுக்கு வகுப்பறைப்பயிற்சியுடன் அனுபவ அறிவும் வேண்டும் என்ற நோக்கத்துடன், அவர்கள் தொடர்ச்சியாக மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்க வழிசெய்கிறது. சங்கீத அங்கூரா என்னும் பெயரில் நடத்தப்படும் பாஸ்கர் கலைகள் கழகத்தின் ஆண்டுவிழா, இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் ’பால நிருத்யம்(இளையர் நடனம்)’, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கழகம் நடத்தும் ‘மஞ்சரி’ நிகழ்ச்சி, கோயில்களில் நடைபெறும் பண்பாட்டு விழா நிகழ்ச்சிகள் ஆகியவை மாணவர்கள் மேடையேற உதவுகின்றன. நடனம் பயிலும் மாணவர்களில் அதிகளவு செயல்திறன் கொண்டவர்கள் தேர்வு செய்யப்பட்டு, பாஸ்கர் கலைகள் கழகத்தின் மைய நடனக்கலைஞர்கள் திட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்படுகிறார்கள். இதன் மூலம் மிகச் செறிவான, பன்முகத்தன்மை கொண்ட பயிற்சியை மாணவர்கள் பெற வழிவகை செய்யப்படுகிறது. பருவ அடிப்படையில் நடத்தப்படும் கழக நிகழ்ச்சிகள், அயல்நாட்டு நிகழ்ச்சிகளுக்கான பயணங்கள் ஆகியவற்றில் பங்கேற்று, உலகத்தரம் வாய்ந்த கலைஞர்களிடம் பயிற்சி பெறும் வாய்ப்பை இம்மாணவர்கள் பெற முடிகிறது.

படிப்புகள்

நடனம் பரத நாட்டியம்

கதகளி

கதக்

இசை

கர்நாடக இசை வாய்ப்பாட்டு

இந்துஸ்தானி வாய்ப்பாட்டு

இசைக்கருவிகள்

புல்லாங்குழல்

வீணை

மிருதங்கம்

ஹார்மோனியம்

வயலின்

யோகக்கலை

ஹத யோகம்

பிராணாயாமம்

அரங்கம்

தெருக்கூத்து

மேற்கோள் இணைப்புகள்

www.bhaskarartsacademy.com, பாஸ்கர் கலைகள் கழகக் குழுமத்தின் அதிகாரபூர்வ இணைய தளம் nas.org.sg, நிருத்யலயா கவின் கலைகள் கழகத்தின் அதிகாரபூர்வ இணைய தளம்

சிராங்கூன் உயர்நிலைப் பள்ளி

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Soma132002/மணல்தொட்டி&oldid=2250827" இலிருந்து மீள்விக்கப்பட்டது