பயனர்:Parvathisri/தமிழ் விக்கியூடகங்களில் பெண்களின் பங்களிப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தொழில்நுட்பத் துறையில், இணையத்தில் பெண்களின், அதுவும் குறிப்பாக இந்தியப் பெண்களின் பங்கேற்பு பொதுவில் மிகவும் குறைவாகவே உள்ளது. தமிழ் விக்கியூடகங்களிலும் அப்படியே. விக்கியூடகங்கள் கணினி ஆர்வலர்களைக் கொண்டு முதலில் உருவானதாலும், அதில் ஆண்களே அதிகம் இருந்தாலும் தொடக்க காலத்தில் இப்படி இருந்தது. சக பெண் பங்களிப்பாளர்கள் குறைவானதாக இருந்தால், அவர்கள் அன்னியப்படுத்தப்பட்டு இருக்கலாம். தமிழ்ச் சூழலில் தமிழ் பெண்களின் பங்களிப்பு பொதுவாழ்வில் மிக அரிதாகவே உள்ளது. எழுத்தாளர்களாக, கலைஞர்களாக, சமூக செயற்பாட்டாளர்களாக, சமூகத் தலைவர்களாக என ஒப்பீட்டளவில் பெண்களின் விழுக்காடு மிகச் சிறிதே. குடும்பச் சுமை, சமூக எதிர்பார்ப்புகள் வாய்ப்புகள், சூழல், தெரிவு என பல காரணிகள் இதற்குக் காரணமாக இருக்கலாம். விக்கிப்பீடியா என்பது விக்கி ஒரு தொழில்நுட்பச் சூழலில் தோன்றிய திட்டம். அந்தத் துறையை ஆண்களே ஆக்கிரமித்திருந்ததால், அதன் பிரதிபலிப்பாக இதைச் சொல்லாம். இந்திய, தமிழ்ச் சூழலில் பெண்கள் பொதுப் பணிகளில் ஈடுபடாமல் இருக்கும் நிலையின் ஒர் எடுத்துக் காட்டாகவும் இதைக் கொள்ளலாம். விக்கி சமூக அல்லது நுட்பக் கட்டமைப்பில் இருக்கும் தடைகள் காரணமாக இருக்கலாம்.

பெண்களின் பங்களிப்பு[தொகு]

தமிழ் விக்கியூடகங்களில் பெண்களின் பங்களிப்பு என்பது மிக மிகக் குறைவாகவே உள்ளது. தமிழ் விக்கிப்பீடியாவில் 300 வரையானோர் தொடர்ச்சியாக பங்களித்து வருகிறார்கள் எனலாம். இருப்பினும் இவர்களில் அறுவர் மட்டுமே பெண் பங்களிப்பாளர்கள். மொத்தப் பங்களிப்பில் இது 1 விழுக்காடு மட்டுமே. இது ஆங்கில மற்றும் பிற விக்கிப்பீடியாக்களைக் காட்டிலும் மிக குறைவாகும். ஆங்கில விக்கிப்பீடியாவில் 15 விழுக்காடு வரையில் பெண்களின் பங்களிப்பு இருக்கிறது. விக்சனரி மற்றும் விக்கி நூல்களில் ஒரு சில பெண்களின் பங்களிப்புகளை மட்டுமே காண முடிகிறது. விக்கிப் பொதுவகத்திலும் பெண் பங்களிப்பாளர்கள் குறைவே எனலாம். தமிழ் விக்கிப்பீடியா மட்டுமல்ல உலக மொழிகளில் அனைத்திலும் இது ஒரு குறையாகவே உள்ளது. உலக அளவில் பெண் விக்கிப்பீடியர்கள் 13 விழுக்காடு மட்டுமே பங்களிப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. இதில் கனடாவில் மட்டும் 7 விழுக்காடு என முன்னணியில் உள்ளது. இந்திய மொழி விக்கிப்பிடியாக்களில் வெறும் 3 விழுக்காடு மட்டுமே பெண்களின் பங்களிப்பு உள்ளது.

தமிழ்ப் பெண்களின் நிலைப்பாடு[தொகு]

தமிழகத்தைப் பொறுத்தவரை பேராசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், எழுத்தாளர்கள், வலைப்பதிவாளர்கள் என மிகப்பரந்த வட்டத்திலிருந்து பெண் பங்களிப்பாளர்கள் பங்களிக்கின்றனர். ஆயினும் இவர்கள் தொடர்ந்து பங்களிப்பது இல்லை. பிற மொழி விக்கிகளில் பாலினம் காரணமாக ஏற்படும் ஆண் பெண் என்ற வேறுபாடுகள் தமிழ் விக்கிப்பீடியாவில் நடைபெறுவதில்லை. ஆயினும் பெண் பங்களிப்பாளர்களின் பங்களிப்பு குறைவாகவே உள்ளது. தமிழ் விக்கிப்பீடியாவைப் பொறுத்த வரை பெண் பங்களிப்பாளர்களாக 2006 களில் பங்களிப்பைத் தொடங்கிய சந்திரவதனா, சிந்துஜா, பின்னர் கலை, பூங்கோதை பார்வதி ஆகியோரைக் குறிப்பிடலாம். நார்வேயில் இருந்து பங்களிக்கும் கலை, தமிழகப் பள்ளி ஆசிரியரான பார்வதி ஆகியோர் நிர்வாகிகளாகவும் உள்ளனர். கோவையிலிருந்து பங்களிக்கும் பூங்கோதை தொடர்ந்து தனது சிறப்பான பங்களிப்புகளைத் தந்து வருகிறார். இவ்வாண்டு தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டுக் கொண்டாட்டங்களில் ஒன்றான கட்டுரைப் போட்டியின் காரணமாக நந்தினி கந்தசாமி என்ற பெண் பங்களிப்பாளரும் ஆர்வமுடன் பங்களிக்கத் தொடங்கியுள்ளார்.

சந்திரவதனா செல்வகுமாரன்[தொகு]

சந்திரவதனா செல்வகுமாரன்
சந்திரவதனா செல்வகுமாரன்

சந்திரவதனா செல்வகுமாரன், யேர்மனியில் வாழும் ஈழத்து எழுத்தாளர். தமிழ்ப் பெண் வலைப்பதிவு முன்னோடிகளில் ஒருவர். 2006 முதல் தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களித்து வருகிறார். ஈழப் போராட்டம், இதழியல், அணி இலக்கணம், தமிழர் விளையாட்டுக்கள், ஈழத்து எழுத்தாளர்கள், மூலிகைகள் போன்ற துறைகளில் தமிழ் விக்கியில் எழுதி வருகிறார். சொல் அணி, எட்டுக்கோடு, பெண்கள் சந்திப்பு மலர், மயூரன், தெ. நித்தியகீர்த்தி ஆகியவை இவர் முதன்மையாகப் பங்களித்த கட்டுரைகளில் சில. யேர்மனியில் இருந்து சிறப்பான பங்களிப்புகளை வழங்கிய சந்திரவதனா இன்றளவும் தொடர்ந்து பங்களித்து வருகிறார்.

சிந்துஜா[தொகு]

இலங்கையைச் சிந்துஜா இராகங்கள் தொடர்பாகவும் இசைகருவிகள் தொடர்பாகவும் ஏராளமான கட்டுரைகளைத் தந்துள்ளார்.

பூங்கோதை[தொகு]

பூங்கோதை, கோயம்புத்தூரைச் சேர்ந்த பணி ஓய்வு பெற்ற கணித ஆசிரியர். 2010ஆம் ஆண்டு முதல் தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களித்து வரும் இவர், 300க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார். சிறந்த உரை திருத்துனரான இவர் புதுப்பயனர்களுக்கு உதவுவது, அனைத்து கட்டுரைகளையும் மேம்படுத்துவது முதலிய பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். 2012 தமிழ் விக்கிப்பீடியா ஊடகப் போட்டியை முன்னிட்டு தமிழ் விக்சனரியில் 6000க்கும் மேற்பட்ட ஒலிப்பதிவுக் கோப்புகளைப் பதிவேற்றியுள்ளார். 2012 விக்கிமேனியா நிகழ்வில் பங்கேற்றுள்ளார். 2012ஆம் ஆண்டுக்கான உலகளாவிய விக்கிமீடியா நிதி சேகரிப்பில் இவரது வேண்டுகோள் சிறப்பான இடம்பெற்றது. இருபடிச் சமன்பாடு, பரவளைவு, சார்பு, நீள்வட்டம், அதிபரவளைவு முதலியன இவர் பெரிதும் பங்களித்த கட்டுரைகளில் சில.

கலை[தொகு]

கலையரசி, நோர்வேயில் வாழும் ஈழத் தமிழர். பேர்கன் மருத்துவமனையில் சிறுநீரக ஆய்வியல் கூடத்தில் பணியாற்றுகிறார். 2008 முதல் தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பங்களித்து வருகிறார். மூச்சுத்தடை நோய், காச நோய், வடமுனை ஒளி, தொற்றுநோய், நோய்க்காரணி, எறும்பு முதலிய தலைப்புகளில் எழுதியுள்ளார். விக்கிப்பீடியா பயிற்சிப் பட்டறை, கூகுள் மொழிபெயர்ப்புத் திட்டச் சீரமைப்பு, விக்கிப்பீடியா கட்டுரைப் போட்டி ஒருங்கிணைப்பு முதலிய திட்டங்களிலும் ஈடுபட்டுள்ளார். இவர் தமிழ் விக்கிப்பீடியாவின் இரண்டு பெண் நிர்வாகிகளுள் ஒருவராவார்.

பார்வதி[தொகு]

பார்வதிஸ்ரீதரன்

பார்வதிஸ்ரீதரன், தமிழ்நாட்டின் சேலத்தைச் சேர்ந்தவர். அரசு நடுநிலைப் பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். செப்டெம்பர் 1, 2011 முதல் விக்கியில் பங்களித்து வருகிறார். தமிழ் இலக்கணம், தமிழ் இலக்கியம், சிற்றிலக்கியம் அறிவியல் அறிஞர்கள், கணிதம் முதலியன குறித்த கட்டுரைகளை எழுதுவதில் ஆர்வமுடையவர். இவர் பங்களித்த கட்டுரைகளில் ஓணம், மதுரை சுங்குடி சேலை, தலையாட்டி பொம்மை, தமிழ் எழுத்துகளின் தோற்றமும் வளர்ச்சியும், பிள்ளைத்தமிழ், நெப்பந்திசு, சிலப்பதிகாரத்தில் சமயக் கோட்பாடுகள், பட்டினப் பாலை, நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ் முதலியன சிலவாகும். இவர் விக்கி நூல்கள், பொது போன்ற விக்கியின் பிற திட்டங்களிலும் பங்களித்து வருகிறார். இவர் தமிழ் விக்கிப்பீடியாவின் நிர்வாகிகளுள் ஒருவராவார்.

நந்தினி கந்தசாமி[தொகு]

நந்தினி கந்தசாமி, ஆத்துரைச் சேர்ந்த கல்லூரி மாணவர். இளங்கலை இயற்பியல் படிப்பை முடித்துள்ள இவர் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டங்களின் ஒரு பகுதியான கட்டுரைப்போட்டியின் வழியாக விக்கிப்பீடியாவில் நுழைந்தவர். ஆகஸ்ட் மாதம் 29 கட்டுரைகளை விரிவாக்கி முதற்பரிசு வென்றவர்.

வெண்முகில்[தொகு]

வெண்முகில்

வெண்முகில், மதுரையைச் சேர்ந்த முதுகலைப் பட்டம் பெற்ற எழுத்தாளரான இவர் ஆகஸ்ட் 2012 முதல் பங்களித்து வருகிறார். விராட்டிபத்து,இரா. நடராசன் சிறுகதைகள்,வாழ்க்கை, அன்பு, நம்பிக்கை (குறும்படம்),உடையும் சித்திரங்கள்,இந்திய வரலாற்றில் பெண்மை (நூல்), சுடர் ஏந்திய தமிழ் மலர்கள் ஆகியன இவர் பங்களித்த கட்டுரைகளில் சிலவாகும்.


இவர்களுடன் சந்திரமதி கந்தசாமி, சுமஜ்லா மாணவியான அபிராமி நாராயணன் ஆகியோரும் பங்களித்து வருகின்றனர்.

பங்களிப்பு குறைவதற்கான காரணங்கள்[தொகு]

தமிழ் விகியில் பெண்பயனர்களின் பங்களிப்பு குறைவதற்கான காரணங்களாகப் பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.

இணையம்[தொகு]

தமிழ் நாட்டில் அணைத்து இடங்களிலும் இணைய வசதி என்பது இயலாததாக உள்ளது. அவ்வாறே இருப்பினும் இணையத்தைப் பயன்படுத்தும் பெண்கள் மிகவும் குறைவு. அவ்வாறு பயன்படுத்துவோரும் அறிவை முடக்கும் பிற ஊடகங்களில் பயனற்ற பலவகை அரட்டைகளில் ஈடுபடுவோரே அதிகம். இணையத்தைப் பயன்படுத்துவோருக்கும் விக்கிப்பீடியா பற்றிய அறிமுகம் இல்லாமல் இருக்கிறது. ஏனெனில் ஒரு குறிப்பிட்ட தலைப்பிட்டு தேடப்படும் போது மட்டுமே தேடலில் தமிழ் விக்கிப்பீடியாவின் கட்டுரைகள் வருகின்றன. அதிலும் தலைப்புளை உள்ளீடு செய்யும் போது இடம் விடுதல், ஒற்றுப்பிழை, கிரந்த எழுத்துகள் போன்ற காரணங்களால் தமிழ் விக்கிப்பீடியா தேடலில் பின்னோக்கி விடுகிறது. அதையும் மீறி பங்களிக்க வருவோருக்கு விக்கித் தொழில்நுட்பம் சிறிது கடினமாகவே உள்ளது.

இலங்கைச் சூழலைப் பொருத்தவரை தமிழ் விக்கியில் பெண்கள் பங்களிப்பு என்பது அறவே கிடையாது. தமிழகத்தை விட இலங்கையில் இணையப் பயன்பாடு என்பது குறைவாகவே உள்ளது. ஏனெனில் அவர்களுடைய அரசியல் சூழல் மற்றும் சமுதாயச் சூழல்கள் அத்தகைய ஒரு வாய்ப்புக்கு இடமளிப்பதில்லை. ஆயினும் புலம் பெயர்ந்து வாழும் இலங்கைத் தமிழ்ப்பெண்களுள் வளரும் நாடுகளில் உள்ள ஒரு சிலர் விக்கியின் பங்களிப்பாளர்களாகவே உள்ளனர்.

தன்னார்வம்[தொகு]

மேற்கண்ட ஒரு சில காரணங்களையும் தாண்டி தமிழின் மீதுள்ள மொழிப்பற்றும் தனது நேரத்தைப் பயனுள்ள வழிகளில் செலவழிக்க வேண்டும் என்ற நோக்கத்திலும் சில பெண் பங்களிப்பாளர்கள் தமிழ் விக்கியில் பங்களிக்க வருகின்றனர். இது விக்கிப்பீடியாவிற்கு பக்க பலம் என்றாலும் அவ்வாறு வரும்போது பிற விக்கிப்பீடியர்கள் அவர்களது கட்டுரைகளில் செய்யும் தொகுப்புகளையும் மாற்றங்களையும் பெண் பயனர்கள் விரும்புவதில்லை. மேலும் தலைப்பு மாற்றுதல், நகர்த்துதல், கட்டுரைகளை நீக்குதல் போன்ற மற்ற பயனர்களின் கருத்துகளோ, செயல்பாடுகளோ இவர்களுடைய ஆர்வத்தை குறைத்து விடுகிறது. இதற்கு விக்கிக் கொள்கைகளைப் புரிந்து கொண்டாலே போதுமானது.

விக்கி கொள்கைகள்[தொகு]

எழுத்தாளர்கள், வலைப்பதிவாளர்கள் போன்றோர் பெரும்பாலும் சொந்த கருத்துகளை எழுதுவதால் மூன்றாம் நிலை தரவு கோளான விக்கிப்பீடியாவின் கொள்கைகளான கட்டற்ற பொது உரிமம், விக்கி நடை, சொந்த கருத்துகளுக்கு இடம் கொடாமை, பதிப்புரிமைக்கொள்கைகள், தனித்தமிழ், கிரந்த எழுத்துகள் போன்ற கொள்கைகளால் அவர்களுடைய விக்கி ஆர்வம் சற்று குறைந்து போகிறது. மேலும் உரையாடல் பக்கங்கள் அவர்களுக்கு அயர்ச்சியைத் தருகின்றன.

வேலைப்பளு[தொகு]

இன்றைய பொருளாதாரச் சூழலில் பெண்கள் வேலைக்குச் செல்வது என்பது தவிர்க்க முடியாததாகிறது. எனவே வேலைக்குச் செல்லும் பெண்கள் வேலை முடிந்து பிறகு இல்லப்பணிகளையும் பொறுப்பேற்றுச் செய்ய வேண்டி உள்ளதால் அவர்களுடைய வேலைப்பளுவின் காரணமாக இணையத்தில் நேரம் செலவழிப்பது என்பது இயலுவதில்லை. மேலும் தமிழ்ர்களின் வாழ்வியல் பின்னணி குடும்ப வேலைகளுக்காகவும் குடும்பப் பராமரிப்புக்கும் பெண்களையே சார்ந்திருக்க வேண்டிய கட்டாயச் சூழலில் உள்ளது. எனவே வேலைகளை குடும்பத்தினர் பகிர்ந்து கொள்ளாமை, தமிழ்ச் சூழலின் உணவு முறைகள், போன்ற காரணங்களால் பெண்களுக்கு இணையத்தில் நேரம் செலவிட முடிவதில்லை. கூடுதலாக தங்கள் குழந்தைகளின் பள்ளிப்பணிகளையும் வீட்டுப் பாடங்களையும் கவனிக்க வேண்டிய கட்டாயத்திற்கும் பெண்கள் தள்ளப்படுகின்றனர்.


சமூக பண்பாட்டுச் சூழல்கள்[தொகு]

சமுதாயம் ஒரு சில கட்டுப்பாடுகளைத் தாமாகவே பெண்களுக்கென விதைத்துள்ளது. இதனால் ஒரு பெண் இல்லத்தில் இணைய தளத்தில் நேரம் செலவழித்தால் இன்றைய திசை திருப்பும் ஊடகங்களின் செயல்பாடுகள் காரணமாகவும் இணைய மோசடிகளின் காரணமாகவும் பெற்றொர்களுக்கு அச்சம் ஏற்படுகிறது. எனவே அத்தகைய சூழலில் பெண்கள் பங்களிப்பதற்கு முதல் தடையாக பெற்றோர்களே இருகின்றனர். மேலும் ஊதியம் பெறும் பெண்கள் கூட ஒரு வரையரைக்கு மேல் செலவு செய்ய அவர்களது குடும்பத்தார் அனுமதிப்பதில்லை

ஆர்வமின்மை[தொகு]

மேற்குறிப்பிட்ட காரணங்களுக்கு அப்பால் பொதுவாகப் பெண்களிடம் விக்கிப் பீடியாவில் பங்களிப்பது குறித்த ஆர்வமின்மையே அதிகமாகக் காணப்படுகிறது. அவர்கள் சமூக ஊடகங்களில் திரையிடப்படும் தொடர் நாடகங்கள், பொழுது போக்கு நிகழ்ச்சிகள், விவாதங்கள் , திரைப்படங்கள் போன்றவற்றில் ஆர்வமாகத் தங்கள் நேரங்களைச் செலவழிக்கின்றனர். தமிழ் விக்கியில் பங்களிக்க வருவதனால் பலனெதுவும் பெறபோவதில்லை என்பதும் அவ்வாறு வந்தாலும் தமிழ்த் தட்டச்சு தெரியாததும். இதற்கான காரணங்களாகும்.

பிற விக்கிகளில் இதற்காக மேற்கொள்ளப்பட்ட பணிகள்[தொகு]

பிற விக்கிப்பீடியாவில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்காகப் பல்வேறு வழிகளில் முயன்று வருகின்றனர். ஒரு சில விக்கிகளில் பெண் பங்களிப்பாளர்கள் தமக்கென தனியே குழுமங்களை ஏற்படுத்திக் கொள்கின்றனர். வேறு சில விக்கிகளில் பெண் விக்கியர்கள் மாதமொரு முறை கூடி, செய்ய வேண்டிய பணிகள் குறித்து கலந்துரையாடுகின்றனர். மேலும் புதிய பெண் பங்களிப்பாளர்களை ஈர்ப்பதற்கும் அவர்களைத் தக்க வைப்பதற்குமான முயற்சியாக அவர்களுக்கான பட்டறை நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்கின்றனர்.


தமிழ் விக்கியில் செய்ய வேண்டிய பணிகள்[தொகு]

தமிழ் விக்கியில் பெண் பயனர்களின் எண்ணிக்கை குறைவும் அப்பயனர்கள் வெவ்வேறு ஊர்கள் மற்றும் நாடுகளில் இருந்தும் பங்களிப்பதன் காரணமாகவும் அவர்களை ஒன்றிணைப்பது என்பது இயலுவதில்லை. பொதுவாக தமிழ் விக்கிப்பீடியா பற்றிய விழிப்புணர்வு பெண்களிடம் குறைந்தே காணப்படுகிறது. மாற்றாக சமூக வலைதளங்களை இதற்காகப் பயன்படுத்துவதும் தொடர்ந்து பயிற்சிப் பட்டறைகளை வழங்குவதும் தேவையான ஒன்றாக உள்ளது. மேலும் பங்களிக்க வருவோர்களிடத்து இறுக்கமான சில விக்கிக் கொள்களை உடனடியாகக் கட்டாயப்படுத்தாமல் அவர்கள் விக்கிக் கொள்கைகளைப் புரிந்து கொள்ளும் வகையில் உதவிகள் செய்து அதன் பிறகு விக்கிக் கொள்கைகளுக்கேற்ப அவர்களைப் பங்களிப்பு செய்ய வைக்கலாம். மாணவிகளுக்கான கட்டுரைப் போட்டிகள், பெண்களைப் பற்றிய, அவர்களுக்கு ஆர்வமூட்டக்கூடிய துறை சார் கட்டுரைகள் போன்ற திட்டங்கள் தீட்டி ஊக்கப்படுத்தலாம். காரணங்கள் எவையாகினும் நாம் இவற்றை மீறி பெண்களின் பங்களிப்பை ஊக்கப்படுத்துவதும், வரவேற்பதும் முக்கியமாகும்.