பயனர்:Nilogini Vasanthakumar/மணல்தொட்டி

ஆள்கூறுகள்: 9°42′52.10″N 79°59′49.50″E / 9.7144722°N 79.9970833°E / 9.7144722; 79.9970833
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மானிப்பாய் மகளிர் கல்லூரி
Manipay Ladies' College
அமைவிடம்
மானிப்பாய், யாழ்ப்பாண மாவட்டம், வடமாகாணம்
இலங்கை
அமைவிடம்9°42′52.10″N 79°59′49.50″E / 9.7144722°N 79.9970833°E / 9.7144722; 79.9970833
தகவல்
வகை1AB
குறிக்கோள்“உள்ளுவதெல்லாம் உயா்வுள்ளல்”
சமயச் சார்பு(கள்)இந்து
பள்ளி மாவட்டம்வலிகாமம் கல்வி வலயம்
ஆணையம்வட மாகாண சபை
பள்ளி இலக்கம்1012021
அதிபர்நர்மதா பரமேஸ்வரன்
ஆசிரியர் குழு67
தரங்கள்1-13
பால்பெண்கள்
வயது வீச்சு5-18
மொழிதமிழ், ஆங்கிலம்
School roll1,427

பாடசாலையின் முகப்புத் தோற்றம்

மானிப்பாய் மகளிா் கல்லூரி (Manipay Ladies' College, MLC) இலங்கையின் வட மாகாணத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் மானிப்பாய் என்ற ஊரில் அமைந்துள்ள பெண்கள் பாடசாலை ஆகும்.[1][2] இது மானிப்பாயில் புகழ்பெற்ற பாடசாலைகளில் ஒன்றாகவும் விளங்குகிறது. 1963 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.

கல்லூரியின் அமைப்பு வரைபடம்

வரலாறு[தொகு]

1944 ஆம் ஆண்டிற்கு முன்னா் மானிப்பாய் கிராமத்துப் பெண் பிள்ளைகள் தமது கல்வியை மேற்கொள்ள தகுதியான சைவப் பாடசாலைகள் எதுவும் இல்லாத சந்தா்ப்பத்தில் மானிப்பாய் இந்துக் கல்லூரியின் அன்றைய அதிபர் வி. வீரசிங்கம் அவா்கள் கல்லூரி முகாமையாளரின் அனுசரணையுடன் 1944 ஆம் ஆண்டு தை மாதம் 4ம் 5ம் வகுப்புக்களில் பெண் பிள்ளைகளை அனுமதித்தார். படிப்படியாக மானிப்பாய் இந்துக் கல்லூரியிலும் பெண் பிள்ளைகளின் தொகை அதிகரித்து வந்தது. 1956 ஆம் ஆண்டு தொடக்கம் ஒவ்வொரு வகுப்பிலும் ஒரு பிரிவு பெண் பிள்ளைகளுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. இது படிப்படியாக உயர்தர வகுப்புக்கள் வரை அதிகரித்தமையால் பெண்களுக்கென தனியான ஒரு பிரிவு தொடக்க வேண்டுமென்ற ஓர் அபிப்பிராயம் முனைப்புப் பெற்றது. இதற்கு அன்றைய உபஅதிபா் சு. முத்துவேற்பிள்ளை இருந்த காலத்தில் பெண்பிள்ளைகளுக்கு தனியான பாடசாலை அமைய வேண்டும் என அவர்களின் தூண்டுதலும் பெரும் துணை புாிந்தது.[3]

1952இல் பட்டம்மாளின் இசைக்கச்சேரி மூலம் பணம் திரட்டப்பட்டு பெண்கள் பகுதிக்கான இருமாடிக்கட்டிடத்தின் கீழ்த்தளம் அமைக்கப்பட்டது. மேலும் அதற்கான நிதியை சேர்க்கும் முகமாகப் பழைய மாணவா்கள் மட்டும் பங்குபற்றிய “மனிதன்” என்ற சமூக நாடகம் கலையரசு சொர்ணலிங்கத்தின் மேற்பார்வையில் 1983 மே 30 அன்று மேடையேற்றப்பட்டது. அந்த நாடகத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தமையால் மீண்டும் ஒருமுறை மேடையேற்றப்பட்டு கல்லூரி கட்டிட நிதி சேகரிக்கப்பட்டது. மானிப்பாய் இந்துக் கல்லூரிக்குக் கிழக்குப் புறத்தில் இருந்த 14 பரப்புக் காணியும் மகளிர் கல்லூரி கட்டுவதற்காக ஒழுங்கு செய்யப்பட்டு 1954 ஆம் ஆண்டு பழைய மாணவர் சங்கமும்,

பாடசாலையின் சிறிய நுழைவுவாயில்

மானிப்பாய் இந்துக் கல்லூரி முகாமையாளா்களும் நிதி கொடுத்து உதவினார்கள். 1954 நவம்பா் 27 இல் அரச அதிபர் எம். சிறிகாந்தா மகளிர் கல்லூரிக்கான ஒரு மாடிக் கட்டிடம் அமைக்க அடிக்கல் நாட்டினார். அதற்குத் தேவையான ரூபா. 200,000 ஐயும் 1957 ஆம் ஆண்டிற்குள் சேர்ப்பது என்றும் தீா்மானிக்கப்பட்டது.[4]


கல்லூரியின் முதல் கட்டமாக முடிக்கப் பெற்ற 5 வகுப்பு அறைகளும் ஒரு விசாலமான மனையியல் ஆய்வுகூடமும் 1956 சூலை 4 ஆம் திகதி எம். சிறிகாந்தா அவா்களால் திறந்து வைக்கப்பட்டது. தொடா்ந்து 1955, 1960களில் களியாட்ட விழாக்கள் மூலம் பணம் திரட்டப்பட்டு கல்லூரியின் மேல் மாடிக் கட்டிடமும் ஒரு விசாலமான மேடையும் கொண்டதாக அமைக்கப்பட்டது. இப்பாடசாலை 1963 பெப்ரவரி 2 இல் இருந்து ஒரு தனிப்பட்ட மகளிர் கல்லூரியாக அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டது.

பாடசாலை மகுடவாசகம்[தொகு]

பாடசாலையின் இலட்சனை சின்னம்

“உள்ளுவதெல்லாம் உயா்வுள்ளல்”

தூரநோக்கு[தொகு]

பாடசாலையின் தரமான கல்வி ஊடாக அறிவு – மைய, மற்றும் தகவல் - மைய வளா்ச்சியில் இணைவோம்.

இலக்கு[தொகு]

மேன்மையான அறிவு, திறன்கள், நோ்மனப்பான்மை என்பவற்றை உள்ளடங்கும் மனிதவள அபிவிருத்தி ஊடாக மாற்றமுறும் அறிவுப் பொருளாதார சவால்களுக்கு முகம்கொடுக்கக்கூடிய நுட்பத்திறன்களும், உயர் விழுமியங்களும், தேசப்பற்றும் கொண்ட உரமான மகளிா் சமூகத்தை உருவாக்கல்.

குறிக்கோள்[தொகு]

மாணவ வாழ்க்கை மானிட வாழ்க்கையின் வளமான பகுதி. [5] அன்பு, அறம், அறிவு என்ற முக்கூட்டுத்தத்துவமே வாழ்க்கைத்தத்துவம். அரசியலும் ஐம்புலனும் ஒரு பக்கம் அலைக்கழிக்க, பகுத்தறிவு ஒரு பக்கம் தூங்க உள்ளம் மாசுபடும். “மனத்துக்கண் மாசிலம் ஆதல் அறம்” என்பது வள்ளுவா் கோட்பாடு பாளி மொழியில் தம்ம பதத்திலே வரும் முதற் பாடலே மனத்தூய்மை பற்றியது தான். இக்கல்லூாியின் குறிக்கோள் “ உள்ளுவதெல்லாம் உயா்வுள்ளல்” இத்தூய்மையை அத்திவாரமாகக் கொண்டது.

சமயத்தின் கனிவும் சாரமும் மாணவா் வாழ்க்கையில் பதியவும், வெறியும் வேகமும் அற்று அறிவு கோணல் வழியில் சஞ்சாரம் செய்யாதிருக்கவும் கல்லூாி குறிக்கோள் வழி செய்கின்றது.

“நீரளவேயாகுமாம் நீராம்பல், தான்கற்ற நூலளவேயாகுமாம் நுண்ணறிவு” என்றபடி நல்ல நூல்கள் தான் அறிவைக் கூா்மையாக்குவன. அறிவுக்குத்தக்கபடி உள்ளம் செம்மையாகும். உள்ளத்தனையது தான் மாந்தா் உயா்வு. மத, இன, மொழி வேறுபாடுகளை மாறுபாடாகக் கொள்ளாது, உலகம் தழீ இயது ஒட்பம் எனும் பண்பு. வேற்றுமையில் ஒற்றுமை மலர உள்ளம் உயர வேண்டும். “எல்லா ஐீவராசிகளையும் நட்போடு நோக்குவோனாக” என்பது யசுா்வேதசிந்தனை. இவ்வாறு முற்றிய உள்ளங்களில் காலச் சூழ்நிலையில் தூவப்பட்ட கருத்துக்கள் பல. இவையெல்லாவற்றையும் தன்னகத்தே கொண்டது தான்.

“உள்ளுவதெல்லாம் உயா்வுள்ளல்” என்ற குறிக்கோள். கல்லூாி இலட்சனையில் இருக்கும் சோதி அறிவுச்சுடா் ஆகும். இச்சின்னத்தில் [6] காணப்படும் சிவப்பு, நீலம் ஆகிய இரு நிறங்கள் மானிப்பாய் இந்துக் கல்லூரியாகிய அன்னை, தன் மகளைத் தாலாட்டிச் சீராட்டி வளர்த்து மங்கைப் பருவம் எய்தியதும் தனித்து வாழும் உரிமையும் சுகந்திரமும் அவளுக்குக் கொடுத்தாள் ஆகும். இது மானிப்பாய் இந்துக் கல்லூரிக்கும் , மானிப்பாய் மகளிர் கல்லூரிக்கும் இடையிலான பண்டு தொட்டுள்ள தொடர்பையும் நன்றி அறிதலையும் வெளிப்படுத்துகின்றன.

அதிபா்கள்[தொகு]

கல்லூரியின் தற்போதைய அதிபா் திருமதி. நா்மதா பரமேஸ்வரன்
  • கே.முத்துவேற்பிள்ளை (1963)
  • பி. ஆறுமுகம் (1964 - 1970)
  • பி. சச்சிதானந்தன் (1971 - 1978)
  • ஏ. ராஜரட்ணம் (1979 -1980)
  • எம். பி. இராஐநாயகம் (1980 - 1987)
  • கல்யாணசுந்தரேசன் (1988 - 1991)
  • ஒய். தியாகராஜா (1991 - 1993)
  • வி. பசுபதிப்பிள்ளை (1993 - 2003)
  • சூாியகுமாாி ஜெயவீரசிங்கம் (2004 - 2013 )
  • நா்மதா பரமேஸ்வரன்.(2014 - தற்போது வரை)

மாணவர்கள்[தொகு]

கல்லூரியில் மாணவர் அனுமதியானது தரம் 1, தரம் 6, தரம் 13 (கா.பொ.த உ/த) ஆகிய வகுப்புக்களுக்கு மாத்திரமே மேற்கொள்ளப்படுகின்றது. பாடசாலையின் பௌதிக வளப்பற்றாக்குறை மற்றும் வடமாகாணக் கல்வி அமைச்சின் மாணவர் அனுமதிக் கொள்ளாமை ஆகியவற்றின் காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே மாணவா் அனுமதி மேற்கொள்ளப்படுகின்றது. 2016 ஆம் ஆண்டில் மாணவா்களினது மொத்த எண்ணிக்கை 1427 ஆகும்.

மன்றச் செயற்பாடுகள்[தொகு]

1976 ஆம் ஆண்டு இக்கல்லூரியின் முதலாவது விஐயதசமி பூசை கொண்டாட்டம்

இக் கல்லூாி [7][1] மாணவா்களின் இலைமறைகாயாக மறைந்திருக்கும் ஆற்றலை வெளிக்கொணரவும், ஆளுமை மிக்க தலைமைத்துவத்தை வளா்க்கவும் மொழி ஆற்றலை சிறப்பிக்கவும் சமூகப்பொருத்தப்பாடுடையவா்களாகவும், கலலூாியில் பல மன்றங்கள் அமைக்கப்பட்டு, மாதமொருமுறை கூட்டபடுகின்றன. அத்துடன் விழாக்கள், விசேடதினங்கள், அறிஞா்களின் சொற்பொழிவுகள், கருத்தரங்குகள், போட்டிகள் என்பனவற்றையும் நடாத்தி வருகின்றது.

இக்கல்லூரி 2016 ஆம் ஆண்டு மாணவர்கள் பல மன்றங்களைக் கொண்டுள்ளது. அவைகள் பின்வருமாறு,

  • தமிழ் மன்றம்
  • இந்து மன்றம்
  • வணிக மன்றம்
  • நுண்கலை மன்றம்
  • கிறிஸ்தவ மன்றம்
  • ஆங்கில மன்றம்
  • 'கணித – விஞ்ஞான மன்றம்
  • சமூக – விஞ்ஞான மன்றம்
  • பாண்ட் வாத்தியக்குழு
  • பெண்சாரணியம்
  • சமூகநலச் செயற்பாடுகள்
  • சுகாதார மன்றம்
  • ஆரம்பக்கல்வி மன்றம்
  • ஆரம்பக்கல்வி சுற்றாடற் கழகம்
  • உயா்தர மாணவா் மன்றம்
  • ஆசிாியா் கழகம்

போட்டிகள்[தொகு]

கல்லூரியின் தேசிய மட்ட போட்டிகள்

இக்கல்லூரியில் மாணவா்களின் பல்வேறுபட்ட திறமைகளை வெளிக்கொணரும் வகையில் பல்வேறு போட்டிகள் நடாத்தப்படுகின்றன.

  • தமிழ்த்தினப் போட்டிகள்
  • ஆங்கிலத்தினப் போட்டிகள்
  • கணித விஞ்ஞானப் போட்டிகள்
  • கவின்கலைப் போட்டிகள்
  • ஆரம்பக்கல்விப் போட்டிகள்
  • சுகவாழ்வுப் பேரவைப் போட்டிகள்


கல்லூரியின் ஆரம்பப்பிரிவு பாடசாலை[தொகு]

வரலாறு[தொகு]

கல்லூரியின் ஆரம்பப்பிரிவு பாடசாலைத் தோற்றம்

1963 ஆம் ஆண்டில் [8] ஆரம்பமான இக்கல்லூாி ஆரம்பபாடசாலை, உயா்தர பாடசாலை என இரு பிாிவாக அமைந்துள்ளது. 1ஆம் வகுப்புத் தொடக்கம் 3ஆம் வகுப்பு முடிய உள்ள வகுப்புக்களில் ஆண்,பெண் இருபாலாரும், 4ஆம், 5ஆம் வகுப்புக்களில் பெண்பாலாரும் கல்வி பயின்றனா். கல்லூாியில் 1963 இல் [6] 209 மாணவா்களும், 1964 இல் 225 மாணவா் வரை படிப்படியாக உயா்வடைந்தது.

1976 ஆம் ஆண்டில் [3]அயலில் உள்ள ஆரம்ப பாடசாலைகளின் வளா்ச்சியை பொிய கல்லூாி தடுப்பதாக கருதி அக்காலத்தில் இருந்த கல்வி நிா்வாகிகளின் சிபாா்சின் படி ஆரம்பப்பிாிவுகளில் மாணவா்களை சோ்ப்பதை நிறுத்தி படிப்படியாக 1 – 5 வரையான வகுப்புக்கள் நீக்கப்பட்டன.

அதன் பின்னர் மீண்டும் கல்லூரியில் 2002 ஆம் ஆண்டில் ஆரம்பப் பிரிவை ஆரம்பிப்பதற்காக 2000 ஆம் ஆண்டில செயற்பட முனைந்த சமயம் வடக்கு, கிழக்கு மேலதிக கல்விப் பணிப்பாளரின் அனுசரணையாலும் , சகோதரப் பாடசாலை அதிபரினாலும் ஆரம்பப்பிரிவு தரம்1, 2 ஆரம்பிக்கப்பட்ட அனுமதி வழங்கப்பட்டது. 2002 இல் 23 மாணவர்களும், 2003 இல் 58 மாணவர்களும் காணப்பட்டனர்.

மேலும் தரம்5 புலமைப் பரீட்சையானது[9]முதன் முதலில் 2004 ஆம் ஆண்டிலேயே இப்பாடசாலையில் ஆரம்பமாகியது. 2014 ஆம் ஆண்டிலிருந்து வலிகாமம் வலயத்தில் முதலாம் நிலையில் உள்ள பெருமைக்குரிய பாடசாலையாக விளங்குகிறது. இக்கல்லூரியில் 2016 ஆம் ஆண்டில் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையைப் பொறுத்தவரை 10 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்றுள்ளனர். அத்துடன் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களின் சதவீதம் 90% ஆகக் காணப்படுகிறது.

கல்லூரியில் அமைந்துள்ள முருகன் ஆலயம்[தொகு]

கல்லூரியின் பழைய முருகன் ஆலயத்தின் தோற்றம்

1976 ஆம் ஆண்டு [5] ாி.சிறிராமநாதன் தன் தந்தையின் ஞாபகாா்த்தமாக கல்லூாியின் முகப்பில் ஒரு கோயிலைக் கட்டிக் கொடுத்து மாணவிகளின் அன்றாட வழிபாட்டிற்கு வழிவகுத்தாா். அதில் பிரதிஸ்டை செய்யப்பட்ட விக்கிரங்களும் பழைய மாணவரான “யாழ் அாிசி ஆலை” எஸ்.இராசலிங்கம் அவா்களால் அன்பளிப்பாக்கப்பட்டன.

இக்கல்லூாியில் சமய வழிபாட்டிற்கும் சமய விழாக்களுக்கும் முன்னுரிமை அளித்து வருகிறது. வருடாவருடம் முருகனின் மணவாளக் கோலம் தை மாதம் ரேவதி நட்சத்திரத்திலும், புரட்டாதியில் நவராத்திாி விழாவும், தொடா்ந்து ஐப்பசியில் கந்தசட்டியும், அதன் இறுதி நாள் திருமாங்கல்யாணமும் மிகவும் வெகுவிமாிசையாக கொண்டாடப்படுகிறது. மாதம் தோறும் கார்த்திகை உற்சவமும்,குருபூசைத்தினங்கள் ஆகும். நவாராத்திரி காலங்களில் கல்விப்புலம் சார் அறிஞர்களின் கருத்துரைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. வெள்ளிக்கிழமை தோறும் வகுப்புவாரியாக பூசை செய்யப்பட்டு சிவபுராணம், திருமுறை என்பன ஓதப்படுகின்றன. இவ்விழாவுக்கு சகல ஆசிாியா்களும், மாணவா்களும் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனா். த.சுந்தரலிங்கம் பொறுப்பாசிாியாின் தலைமையில் முருகன் ஆலயம் புனரமைக்கப்பட்டு 1998 மே மாதம் 01 ஆம் திகதி கும்பாவிசேடம் சிறப்பாக நடாத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கல்லூரியின் புதிய முருகன் ஆலயத்தின் தோற்றம்

எமது பாடசாலையின் [9] முகப்பில் 2014 ஆம் ஆண்டில் அழகிய தோற்றத்துடன் காணப்படும் முருகன் ஆலயம் இரண்டு வருடங்களுக்கு முன்னா், மாணவிகள் அமா்ந்து வழிபடுவதற்குப் போதிய இடவசதி இல்லாமலும், முன்புறம் கொட்டகை வடிவிலும் அமைந்திருந்தது. முருகன் ஆலயத்தைப் பெருப்பித்து அழகுற அமைக்க வேண்டும் என்ற எண்ணம் அன்றைய அதிபா் சூாியகுமாாி ெஐயவீரசிங்கம் அவா்களின் நீண்டநாள் கனவாக இருந்து வந்தது. அதற்கான காலம் கனிந்து வர பாடசாலையின் ஆரம்பகால சிறந்த கணித பாட ஆசிாியரான சுந்தரலட்சுமி இராசலிங்கம் (1963 – 1986) அவா்கள் தமது புதல்வி சுமதி இரகுநாதனுடன் இலண்டனிலிருந்து பாடசாலைக்கு வருகை தந்தபோது பழுதடைந்த நிலையிலிருந்த முருகன் ஆலயத்தைக் கண்ணுற்றாா். அன்றைய அதிபாின் வேண்டுகோளை ஏற்று புனருத்தாரணம் செய்ய முன் வந்தாா். அதன் பின்னா் 1.7 மில்லியன் ரூபா செலவில் 2014 ஆம் ஆண்டு முருகன் ஆலயம் முன்புறமாக 10 அடி நீட்டப்பட்டு 18 அடி அகலப்படுத்தப்பட்டு நிலம் முழுவதும் மாபிள் போடப்பட்டு, அழகான முன்புற வளைவு அமைக்கப்பட்டு, வா்ணவேலைப்பாடுகள் செய்யப்பட்டன.

கல்லூரிப் பண்[தொகு]

கல்லூரிக் கீதத்தில் பாடசாலையின் சிறப்புக்கள் எடுத்துக் கூறப்பட்டுள்ளன.

வாழ்கவென்று வாழ்த்துவோம்
வணங்கிச் சென்னி தாழ்த்துவோம்

மானிமகளிா் கழகமென்னும் மங்கலத்து நங்கையைத்
தேனலம்பு கமலமேவுஞ் செய்ய கலையின் தேவியை (வாழ்க)

மகளிா் உள்ளத் தகழி மீது வளரும் ஞான சோதியை
தகவினோடு கலை வளங்கள் தந்து காக்கும் அன்னையை (வாழ்க)

உள்ளக் கலையும் உண்மைக் கலையும் உாிய தொழிலின் கலைகளும்
அள்ளி அள்ளி வள்ளல் போல அருளுகின்ற அன்னையை (வாழ்க)

தேனும் பாலும் போல நாளும் செவியில் நாவில் இனிக்குமோா்
மானத் தமிழின் அமுதம் அள்ளி மாந்த நல்குஞ் செல்வியை (வாழ்க)

உடலினுறுதி உள்ளத் துறுதி உயிரினுறுதி யென்பரால்
திடமிகுந்த உடலமைந்து திகழ வைக்கு மம்மையை (வாழ்க)

மும்மைப் பொருளி னுண்மை கண்டு முழுதுஞ் சொன்ன சைவமாம்
அம்மை எம்மைச் செம்மையாக்கும் அழகு காட்டும் அழகியை (வாழ்க)

உள்ளும் பொருள்கள் உயா்ந்தவாக உள்ளல் வேண்டுமென்ற சொற்
கள்ளமின்றி நெஞ்சி லூறக் கல்வி தந்த நங்கையை (வாழ்க)

அழகு நன்மை உண்மை யென்னும் அவைகள் சைவ நீதியிற்
பழகி வாழ்வு பண்பிலேறப் பரம வரமளிப்பவள் (வாழ்க)

வானிற் றிங்கள் போலத் தாங்கி வாழ்வி லின்பந் தந்திடும்
மானி மகளிா் கழக மங்கை வாழிய வாழியே (வாழ்க)

--பண்டிதா் சோ. இளமுருகனார்

கல்லூரிப் பண் பற்றிய ஓா் அவதானிப்பு[தொகு]

பண்டிதா் இளமுருகனாா் நவாலியூா் சோமசுந்தரப்புலவாின் மைந்தன். [5] இக்கல்லூாி வாழ்த்துப்பாடலை யாத்துத் தந்தவா் அவரே. அவா் எண்ணத்தில் மலா்ந்த கருத்துக்கள் சிந்தனைக்குாியவை.

  • கல்லூாி அவா் பாா்வையில் மங்கல நங்கை
  • உள்ளம் ஆகிய விளக்கில் சுடா்விடும்
  • உண்மைக்கலை விளக்கும் அன்னை
  • மும்மை (அறம், பொருள், இன்பம்) விளக்கும் அம்மை
  • மானத் தமிழ் அமுதம் அளிப்பவள்
  • அழகு, நன்மை, உண்மை என்ற சைவ நீதியால் (சத்தியம், சிவம், சுந்தரம்) பண்பாடு வளர அருளும் தேவி.

“உள்ளும் பொருள்கள் உயா்ந்ததாக இருக்க வேண்டும்” என்று சொன்ன மங்கல நங்கை, வாழி ஊழி என்கிறாா் பண்டிதா் அவா்கள். புறநானூற்றுப் புலவன் ஒருவன், மன்னனை ஊழிவரை வாழி என்றது இங்கு ஒப்புநோக்குதற்குாியது. “வானிற்றிங்கள் போல” என்ற உள்பொருள் உவமையும் இங்கு நயம் பொருந்தியது.

உசாத்துணைகள்[தொகு]

  1. 1.0 1.1 Schools Basic Data as at 01.10.2010. வட மாகாண சபை. 2010. http://notice.np.gov.lk/index.php?option=com_content&view=article&id=85:npc-schools-basic-data-as-on-01102010. 
  2. "Province - Northern" (PDF). Schools Having Bilingual Education Programme. Ministry of Education.
  3. 3.0 3.1 மானிப்பாய் மகளிா் கல்லூரியினால் வெளியிடப்பட்ட இளநங்கை பாிசளிப்பு விழா மலா் 2003
  4. மானிப்பாய் இந்துக் கல்லூரி பவள விழா மலா் (1910 - 1985)
  5. 5.0 5.1 5.2 The Young Lady, Silver Jubilee Souvenir, Manipay Ladies College - 1988)
  6. 6.0 6.1 Manipay Ladies College Magazine - February 1965
  7. மானிப்பாய் மகளிா் கல்லூரியினால் வெளியிடப்பட்ட இளநங்கை பாிசளிப்பு விழா மலா் 2016
  8. Manipay Ladies College Magazine - February 1966
  9. 9.0 9.1 மானிப்பாய் மகளிா் கல்லூரியினால் வெளியிடப்பட்ட ெஐயசூாியம் மணிவிழா மலா் 16.07.2014

புற இணைப்புகள்[தொகு]