பயனர்:Ksmuthukrishnan/மணல்தொட்டி
| மலேசிய கல்வி அமைச்சு | |
|---|---|
| கல்வி அமைச்சர் | பட்லினா சிடேக்[1] |
| தேசிய கல்வி நிதி (2020) | |
| நிதி ஒதுக்கீடு | RM 66.198 பில்லியன் (US$ 15,852 பில்லியன்) (2025)[2] |
| பொது தகவல் | |
| முதன்மை மொழிகள் | மலேசிய மொழி; ஆங்கிலம்; சீனம்; தமிழ் |
| முறைமை | தேசிய வகை |
| அமைவு | 1956 |
| எழுத்தறிவு (2009) | |
| மொத்தம் | 97% (15 வயது +) |
| ஆண்கள் | 97% மொத்தம், 98% 15-24 வயது |
| பெண்கள் | 97% மொத்தம், 98% 15-24 வயது |
| பதிவு | |
| மொத்தம் | 5,407,865 மாண்வர்கள்; 405,716 ஆசிரியர்கள் (விகிதம் 13:1); 163,746 மழலையர் |
| தொடக்கப் பள்ளி | 2,899,228 (தேர்ச்சி 99%) |
| மேல்நிலைப் பள்ளி | 2,344,891 66% ஆண்கள்; 72% பெண்கள் (மேல்நிலைப் பள்ளிக்குப் பிறகு 28% - 34% மாணவர்கள் தனியார் கல்வி நிறுவனங்களுக்கு மாறுகிறார்கள்) |
மலேசியாவில் கல்வி (மலாய்: Pendidikan di Malaysia; ஆங்கிலம்: Education in Malaysia) என்பது மலேசியாவின் கல்வி முறைமையைக் குறிப்பிடுவதாகும். மலேசிய கல்வி அமைச்சினால் மலேசியாவின் கல்வி முறைமை கண்காணிக்கப்படுகிறது.
கல்வித்துறை என்பது மலேசிய நடுவண் அரசின் முக்கியமான துறைகளில் ஒன்றாக விளங்கினாலும், மலேசியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும், கூட்டரசு பிரதேசப் பகுதிகளும் அவற்றின் மாநில அளவிலான கல்விச் செயல்பாடுகளை ஒருங்கிணைக்க, தனித்தனியான கல்வித் துறைகளைக் கொண்டுள்ளன. இருப்பினும், அனைத்து மாநிலங்களின் கல்வி முறைமையைக் க்ண்காணித்து நிர்வகிக்க மலேசிய கல்விச் சட்டம் 1996 (Education Act 1996) எனும் சட்டம் ஒரு முக்கியச் சட்டமாக விளங்குகிறது.
கல்வித்துறைக்கான செலவு பொதுவாக ஆண்டு தோறும் மலேசிய வரவு செலவுத் திட்டத்தில் ஏறக்குறைய 14 விழுக்காடாக இருக்கும்; இது மலேசிய வரவு செலவுத் திட்டத்தில் மிகப்பெரிய ஒதுக்கீடாக அமைகிறது.[3]
கல்வி அமைப்பு
[தொகு]மலேசியாவில் கல்வி முறை ஐந்து நிலைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது:
- மழலையர் கல்வி (Preschool)
- தொடக்கக் கல்வி (Primary Education)
- இடைநிலைக் கல்வி (Secondary Education)
- மேல்நிலைக் கல்வி (Higher Education)
- உயர்நிலைக் கல்வி (Tertiary Education)[4] மேலும், இந்தக் கல்வி அமைப்பு; தேசியக் கல்வி மற்றும் தனியார்க் கல்வி என இரு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
மலேசிய தேசிய பன்மொழி பள்ளி அமைப்பின் கீழ் மலேசியர் அனைவரும் இலவசக் கல்வியைப் பெறலாம். மேலும், பள்ளிக் கட்டணங்களைப் பெற்று, கல்வி கற்பிக்கும் தனியார்ப் பள்ளிகளின் மூலமாகவும் கல்வியைப் பெறலாம்; பன்னாட்டுத் தனியார் கல்வி நிறுவனங்களின் வழியாகவும் அல்லது வீட்டுக்கல்வியின் வழியாகவும் கல்வியைப் பெறலாம்.
மலேசிய கல்விச் சட்டம் 1996
[தொகு]2003-ஆம் ஆண்டு தொடக்கம், தொடக்கக் கல்வி என்பது 1996-ஆம் ஆண்டு கல்விச் சட்டத்தின்படி மலேசியாவில் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.[5][6] இதற்கிடையில், சூலை 2025-இல், மலேசிய மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட சட்ட முன்வரைவுடன்,[7] இடைநிலைக் கல்வியும் கட்டாயமாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,[8][9]
கொரியா குடியரசு, சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் போன்ற பல ஆசிய-பசிபிக் நாடுகளைப் போலவே மலேசியாவிலும் சீர்தரப்படுத்தப்பட்ட தேர்வுகள் ஒரு பொதுவான நடைமுறைக் கூறாக அமைகிறது. தற்போது, மலேசியாவில் 20 பொதுப் பல்கலைக்கழகங்கள், 54 தனியார் பல்கலைக்கழகங்கள், 39 தனியார் பல்கலைக்கழகக் கல்லூரிகள், 10 வெளிநாட்டுப் பல்கலைக்கழகக் கிளை வளாகங்கள், 331 தனியார் கல்லூரிகள், 36 பலதொழில்நுட்பப் பயிலகங்கள் (Polytechnic Institutes) மற்றும் 105 சமூகக் கல்லூரிகள் உள்ளன.[10]
வரலாறு
[தொகு]

குடிசைப் பள்ளி (Sekolah pondok), மதராசா (Madrasah); மற்றும் பிற இசுலாமியப் பள்ளிகள் போன்றவை; மலேசியாவில் கிடைக்கக்கூடிய தொடகக்கால பள்ளிகளின் வடிவங்களாகும். இக்காயாட் அப்துல்லா (Hikayat Abdullah) போன்ற மலாய் இலக்கியத்தின் தொடக்கக்கால படைப்புகள் இந்தப் பள்ளிகளைக் குறிப்பிடுகின்றன. அவை தற்போதைய மதச்சார்பற்ற கல்வி மாதிரிக்கு முன்னதாக இருந்தவை என்பதைக் குறிக்கின்றன. அந்தக் காலக்கட்டத்தில், சில மதராசாக்கள் மாநில மதக் குழுவின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கின. அவை இன்றுவரை அவ்வாறே தொடர்கின்றன என்றும் அறியப்படுகிறது.[11]
பிரித்தானிய குடியேற்ற காலம்
[தொகு]மலேசியாவின் பல தொடக்கக்கால பள்ளிகள் பினாங்கு, மலாக்கா, சிங்கப்பூர் எனும் நீரிணை குடியேற்றங்களில் நிறுவப்பட்டன. மலாயாவில் உருவாக்கப்பட்ட மிகப் பழைமையான ஆங்கில மொழிப் பள்ளி பினாங்கு இலவசப் பள்ளி (Penang Free School) ஆகும். இது 1816-ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. பின்னர் மலாக்கா உயர்நிலைப் பள்ளி, மலாக்கா செயிண்ட் சேவியர் பள்ளி (St. Xavier's Institution), தைப்பிங் ஏழாம் எட்வர்ட் மன்னர் பள்ளி (King Edward VII School); மற்றும் கிள்ளான் ஆங்கிலோ சீனப் பள்ளி (Anglo Chinese School) ஆகியவை நிறுவப்பட்டன.
1874-1914-ஆம் ஆண்டுகளுக்கு இடையில், மலாயாவின் மலாய் மாநிலங்களுக்கும்; பிரித்தானிய பேரரசிற்கும் இடையே தொடர்ச்சியாக பல உடன்படிக்கைகள் செய்து கொள்ளப்பட்டன. இருப்பினும் அந்த உடன்படிக்கைகள் மலாய் தீபகற்பத்தின் மீது பிரித்தானிய கட்டுப்பாட்டையும் செல்வாக்கையும் படிப்படியாக விரிவுபடுத்தின. அதே வேளையில், பாரம்பரிய மலாய் ஆட்சியின் தோற்றத்தையும் தக்க வைத்துக் கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.[12] அந்த வகையில், மலாய் ஆட்சியாளர்களின் பாரம்பரிய முடியாட்சியை நிலைநிறுத்த பிரித்தானியர்கள் முயற்சிகள் மேற்கொண்டனர் என்றும் அறியப்படுகிறது.
உயர்க் கல்வி வாய்ப்புகள்
[தொகு]இந்த நடைமுறை மலாய்க்காரர்களுக்கு சில சலுகைகளையும் வழங்கியது. குறிப்பாக, தெரிவு செய்யப்பட்ட மலாய்க்காரர்கள் சிலர் உயர்க் கல்வியைப் பெறுவதற்கான வாய்ப்புகளை வழங்கியது. பிரித்தானிய குடியேற்ற நிர்வாக அமைப்பில் மலாய்க்காரர்களின் பங்களிப்புகள் தொடர வேண்டும் என்பதே அந்த நடைமுறையின் முதனமை நோக்கமாக இருந்தது. இதுவே அரசியல் படிநிலைக்குள், மலாய்க்காரர்கள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துவதை உறுதி செய்தது.[13].
இந்தச் சலுகை நடைமுறை நீரோட்டம், அரசியல் மற்றும் பொருளாதாரத் துறைகளில் சிறுபான்மை இனத்தவர்களான சீனர் மற்றும் இந்தியர் மீது மலாய்க்காரர்களின் ஆதிக்கத்தை நிலைநிறுத்தச் செய்தது. இதன் தொடர்ச்சி, மலேசியாவில் வாழும் சீனர் மற்றும் இந்தியர் சிறுபான்மை இனத்தவரின் சமூகப் பொருளாதாரம்; மற்றும் வாழ்வாதார ஏற்றத் தாழ்வுகளில் நீடித்த தாக்கங்களைத் தற்காலம் வரையில் நீட்டிக்கச் செய்துள்ளது.[14]
மலாய் ஆசிரியர்கள்
[தொகு]பிரித்தானிய வரலாற்றாசிரியர் ரிச்சர்ட் ஓ. வின்சுடெட் (Richard O. Winstedt) என்பவர் மலாய்க்காரர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த பற்பல முயற்சிகளை மேற்கொண்டார். அந்த வகையில், மலாய் ஆசிரியர்களை உருவாக்கும் நோக்கத்தில் சுல்தான் இட்ரிஸ் பயிற்சி கல்லூரியை நிறுவுவதில் முக்கிய பங்கு வகித்தார். அடுத்த நிலையில், ரிச்சர்ட் ஜேம்ஸ் வில்கின்சன் (Richard James Wilkinson) என்பவர், 1905-ஆம் ஆண்டில் கோலா கங்சார் மலாய் கல்லூரியை நிறுவுவதற்குப் பெரிதும் உதவினார். இந்தக் கல்லூரி மலாய் உயரடுக்குப் பிரிவினருக்கு கல்வி கற்பிப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது.[15]
தொடக்கத்தில், பிரித்தானிய காலனித்துவ அரசாங்கம், மலாய் மொழி இடைநிலைப் பள்ளிகள் எதையும் உருவாக்கவில்லை. இதனால் தொடக்கப் பள்ளியில் மலாய் மொழியில் படித்தவர்கள் இடைநிலைக் கல்வியைத் தொடர்வதற்கு வாய்ப்பு கிடைத்தால், அவர்கள் ஆங்கில மொழிக் கல்விக்கு ஏற்றவாறு மாற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. மலாய் மொழியின் வரம்புகள் தொடக்கக் கல்விக்கு மட்டுமே என்பதை பிரித்தானிய குடியேற்ற அறிக்கைகளும் உறுதிப்படுத்துகின்றன.[16] இந்தப் பிரச்சினையால் மலாய்க்காரர்கள் பலர் கூடுதல் கல்வியைப் பெற முடியாமல் போய்விட்டது.[17]
கோலா கங்சார் மலாய் கல்லூரி
[தொகு]1903-ஆம் ஆண்டு மலாயா ஆட்சியாளர்கள் மாநாட்டின் போது, பிரித்தானிய கொள்கையின் வடிவமைப்பு நோக்கத்தை பேராக் சுல்தான் முர்சிடுல் அசாம் சா (Idris Murshidul Azzam Shah of Perak) அவர்களும் கூட விமர்சித்துள்ளார்.[18]
இந்தப் பிரச்சினையைத் தீர்க்க பிரித்தானியர், கோலா கங்சார் மலாய் கல்லூரியை நிறுவினர். இருப்பினும், இந்தக் கல்லூரி, கீழ்நிலை அரசு ஊழியர்களுக்கு கல்வி கற்பிப்பதற்கான ஒரு முக்கிய வழித்தடமாகவே அறியப்பட்டது; மலாய் மக்களுக்கு வணிகக் கதவுகளைத் திறப்பதற்கான ஒரு தீர்வாக அமையவில்லை. அத்துடன், உயர்க் கல்விக் கழகங்களுக்கு மலாய் மாணவர்களைத் தயார்படுத்தும் நோக்கம் கொண்டதாகவும் அமையவில்லை.[19]
மலாயா தேசிய கல்வி முறை
[தொகு]1950-களில், தேசிய கல்வி முறையை மேம்படுத்துவதற்கு நான்கு தொடக்கத் திட்டங்கள் உருவாகின.
- பார்ன்ஸ் அறிக்கை (Barnes Report) (மலாய்க்காரர்களால் ஆதரிக்கப்பட்டது)
- கட்டளைச் சட்ட அறிக்கை (Ordinance Report) (பார்ன்ஸ் அறிக்கையின் மாற்றம்)
- பென்-வு அறிக்கை (Fenn-Wu Report) (சீனர்; இந்தியர்களால் ஆதரிக்கப்பட்டது)
- ரசாக் அறிக்கை (Razak Report) (பார்ன்ஸ் அறிக்கை; பென்-வு அறிக்கை; ஆகிய இரு அறிக்கைகளுக்கும் இடையிலான நல்லிணக்க அறிக்கை)
சீனர் எதிர்ப்புகளின் மையத்தில், 1952-ஆம் ஆண்டு கல்வி கட்டளைச் சட்டத்தின் மூலம் பார்ன்ஸ் திட்டம் செயல்படுத்தப்பட்டது. 1956-ஆம் ஆண்டில், ரசாக் அறிக்கையை விடுதலை மலாயாவிற்கான கல்விக் கட்டமைப்பாக மலாயா அரசாங்கம் ஏற்றுக்கொண்டது.
ரசாக் அறிக்கை
[தொகு]ரசாக் அறிக்கை, தொடக்க நிலையில் மலாய், ஆங்கிலம், சீனம் மற்றும் தமிழ் வழிப் பள்ளிகளையும், இடைநிலைப் பள்ளிகளில் மலாய் மற்றும் ஆங்கில வழிப் பள்ளிகளையும் கொண்ட ஒரு தேசிய பள்ளி அமைப்பிற்கு முன்மொழிவு செய்தது. இவை எந்த மொழி கற்பித்தல் முறையையும் பொருட்படுத்தாமல் ஒரே மாதிரியான தேசிய பாடத்திட்டத்தைக் கொண்டிருந்தன. மலாய் வழிப் பள்ளிகள் தேசிய (National) என்றும், மற்ற மொழிப் பள்ளிகள் தேசிய வகை (National-type) என்றும் அழைக்கப்படும் எனும் கோரிக்கையையும் முன்வைத்தது.
1957 மலேசிய விடுதலைச் சட்டத்திற்கு பின்னர் வந்த ஆண்டுகளில், ஏற்கனவே இருந்த சீனப் பள்ளிகள், தமிழ்ப் பள்ளிகள்; மற்றும் சமயப் பள்ளிகள் (Mission Schools) அரசாங்க நிதியுதவியை ஏற்றுக் கொண்டன. தேசிய பாடத்திட்டத்தை ஏற்றுக்கொள்ளும் கட்டுப்பாட்டின் கீழ், அவை தங்கள் பயிற்றுவிக்கும் மொழியைத் தக்க வைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டன.
சீன மேல்நிலைப் பள்ளிகள்
[தொகு]சீன மேல்நிலைப் பள்ளிகளுக்கு இரண்டு முடிவுகள் வழங்கப்பட்டன; அவை அரசாங்க நிதியை ஏற்றுக்கொள்வது; மற்றும் அவை ஆங்கில தேசிய வகை பள்ளிகளாக மாறுவது; அல்லது சீன மொழியிலேயே தக்க வைத்துக் கொள்வது; மற்றும் அரசாங்க நிதி இல்லாமல் தனியார் பள்ளிகளாக இயங்குவது எனும் முடிவுகள். பெரும்பாலான சீனப் பள்ளிகள் இந்த மாற்றத்தை ஏற்றுக்கொண்டன. இருப்பினும் ஒரு சில பள்ளிகள் இந்தச் சலுகையை நிராகரித்து, தனிப்பட்ட சீன உயர்நிலைப் பள்ளிகள் (Chinese Independent Schools) எனும் தனித்த நிலையில் இயங்கின.
மேற்காணும் மாற்றத்திற்குப் பின்னர், சில தேசிய வகை சீனப் பள்ளிகள், தங்களின் தனியார் சீன உயர்நிலைப் பள்ளிகளின் கிளைகளை மீண்டும் நிறுவின. எஞ்சியிருந்த தேசியமயமாக்கப்பட்ட அனைத்துப் பள்ளிகளும்; 1970-களில், மலாய் மொழியை முக்கிய கல்வி ஊடக மொழியாகப் படிப்படியாக ஏற்றுக் கொண்டன. இருப்பினும் ஆங்கில மொழி மட்டும் அவர்களின் பாடத்திட்டத்தில் கட்டாயப் பாடமாகவே நிலைத்து நீடித்தது.[20]
மலேசிய கல்வி அமைச்சுகள்
[தொகு]1996-ஆம் ஆண்டில், 1956-ஆம் ஆண்டின் கல்வி மேலாணையையும் (Education Ordinance of 1956); 1961-ஆம் ஆண்டின் கல்விச் சட்டத்தையும் (Education Act of 1961) திருத்துவதற்காக 1996-ஆம் ஆண்டின் கல்விச் சட்டம் (Education Act of 1996) நிறைவேற்றப்பட்டது. 2004-ஆம் ஆண்டில், மலேசிய கல்வி அமைச்சு மற்றும் மலேசிய உயர்க் கல்வி அமைச்சு[21] என கல்வி அமைச்சு இரு அமைச்சுகளாகப் பிரிக்கப்பட்டது.
மலேசிய உயர்க் கல்வி அமைச்சு என்பது மலேசியாவின் உயர்க்கல்வி தொடர்பான கூறுகளைக் கையாளுகிறது. 2013-இல் இரண்டு அமைச்சுகளும் இணைக்கப்பட்ட பிறகு, 2015-இல் அவை மீண்டும் பிரிக்கப்பட்டன. 2018 பொதுத் தேர்தலுக்குப் பிறகு, மலேசிய உயர்க் கல்வி அமைச்சு என்பது மலேசிய கல்வி அமைச்சின் கீழ் உயர்க்கல்வி பிரிவாக மாறியது. முகிதீன் யாசின் அமைச்சரவையில்,[22][23] உயர்கல்வி பிரிவு மீண்டும் மலேசிய கல்வி அமைச்சில் இருந்து பிரிக்கப்பட்டு மார்ச் 10, 2020-இல் மீண்டும் ஒரு புதிய அமைச்சாக உருவாக்கப்பட்டது. 2023-இல் இருந்து மலேசிய உயர்க் கல்வி அமைச்சு தனி ஒரு அமைச்சாக இயங்கி வருகிறது.
மலேசிய சீன—தமிழ்ப்பள்ளிகள் மீது வழக்கு
[தொகு]மலேசிய சீனப் பள்ளிகள்; மற்றும் மலேசிய தமிழ்மொழிப் பள்ளிகள் ஆகிய இருவகை தாய்மொழிப் பள்ளிகளும்; மலேசிய அரசியலமைப்பின் பிரிவுகள் 152 (1) (a) மற்றும் (b) ஆகியவற்றுடன் இணைந்து செயல்படுகின்றன என்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் திசம்பர் 2021-இன் பிற்பகுதியில் தீர்ப்பளித்தது. இந்த வழக்கு மலேசியர் பெரும்பாலோரைப் பெரிதும் ஈர்த்த வழக்காக அறியப்படுகிறது.
தீபகற்ப மலாய் மாணவர் சங்கம் (Gabungan Pelajar Melayu Semenanjung) (GPMS), இசுலாமிய கல்வி மேம்பாட்டு மன்றம் (Islam Education Development Council) (Mappim); மற்றும் மலேசிய எழுத்தாளர்கள் கூட்டமைப்பு (Confederation of Malaysian Writers Association) (Gapena) ஆகிய மூன்று அரசு சாரா நிறுவனங்கள் தொடர்ந்த அந்த வழக்கை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் நிராகரித்தது. மலேசியாவில் உள்ள தாய்மொழிப் பள்ளிகள் மலேசிய அரசியலமைப்பிற்கு முரணாக அமைவதால், அவற்றைத் தடை செய்ய வேண்டும் என அந்த மூன்று அரசு சாரா நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தன.[24]
கோலாலம்பூர் உயர் நீதிமன்ற]த்தின் தீர்ப்பை மலேசிய சீன சங்கத்தின் பொதுச் செயலாளர் டத்தோ சோங் சின் வூன்; முன்னாள் மலேசிய துணைக் கல்வி அமைச்சரும் மலேசிய இந்திய காங்கிரசு உறுப்பினருமான டத்தோ பா. கமலநாதன்; ஜனநாயக செயல் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ரோனி லியூ ஆகியோர் வரவேற்றனர்.[25] இருப்பினும், கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்குப் பிறகு, தாய்மொழிப் பள்ளிகளின் அரசியலமைப்புச் சட்டப்பூர்வத்தன்மை குறித்து மலேசிய உச்சநீதிமன்றம் முடிவு செய்ய வேண்டும் என்று அந்த மூன்று அரசு சாரா நிறுவனங்களும் மீண்டும் கோரிக்கை வைத்துள்ளன.[26]
மலேசிய பள்ளி தரங்கள்
[தொகு]தேசிய பாடத்திட்டத்தைப் பின்பற்றும் அரசு மற்றும் தனியார் பள்ளிகள்
[தொகு]மலேசியாவில் பள்ளி ஆண்டு என்பது இரண்டு அரைக் கல்வி ஆண்டுகளாகப் (Semester) பிரிக்கப்பட்டுள்ளது. முதல் அரைக் கல்வி ஆண்டு சனவரி மாதத்தில் தொடங்கி மே மாத இறுதியில் முடிவடைகிறது; இரண்டாவது அரைக் கல்வி ஆண்டு சூன் மாதத்தில் தொடங்கி நவம்பர் மாதத்தில் முடிவடைகிறது.
| நிலை/தரம் | வயது |
|---|---|
| பள்ளிக்கு முந்தைய | |
| மழலையர் விளையாட்டு பள்ளி | 3–4 |
| மழலையர் பள்ளி | 4–6 |
| தொடக்கப் பள்ளி | |
| முதலாம் வகுப்பு - 1-ஆம் ஆண்டு | 7 |
| இரண்டாம் வகுப்பு - 2-ஆம் ஆண்டு | 8 |
| மூன்றாம் வகுப்பு - 3-ஆம் ஆண்டு | 9 |
| நான்காம் வகுப்பு - 4-ஆம் ஆண்டு | 10 |
| ஐந்தாம் வகுப்பு - 5-ஆம் ஆண்டு | 11 |
| ஆறாம் வகுப்பு - 6-ஆம் ஆண்டு | 12 |
| மேல்நிலைப் பள்ளி | |
| படிவம் 1 | 13 |
| படிவம் 2 | 14 |
| படிவம் 3 | 15 |
| படிவம் 4 | 16 |
| படிவம் 5 | 17 |
| பல்கலைக்கழகத்திற்கு முந்தைய (ஆறாம் படிவ கல்லூரி அல்லது மேல்நிலைப் பள்ளிகள்) | |
| 12-ஆம் வகுப்பு - கீழ்நிலைப் படிவம் 6 | 17–18 |
| 13-ஆம் வகுப்பு - மேல் படிவம் 6 | 18–19 |
| உயர்நிலைப் பள்ளிக்குப் பிந்தைய கல்வி | |
| மூன்றாம் நிலைக்கல்வி (கல்லூரி, பாலிடெக்னிக் அல்லது பல்கலைக்கழகம்) | வயது மாறுபடும் |
மேலும் காண்க
[தொகு]- மலேசிய கல்வி அமைச்சு
- மலேசிய உயர்க் கல்வி அமைச்சு
- மலேசியாவில் தமிழில் கல்வி
- மலேசியத் தமிழ்ப் பள்ளிகளின் பட்டியல்
- மலேசிய மாநிலங்களின் தமிழ்ப்பள்ளிகள்
- மலேசியத் தமிழ்ப்பள்ளிகளின் புள்ளிவிவரங்கள் 2020
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Fadhlina Sidek Menteri Pendidikan". kosmo. Retrieved 3 December 2022.
- ↑ "Kementerian Pendidikan Buget 2025 -2026" (PDF). © 2025 Kementerian Kewangan Malaysia. Retrieved 9 November 2025.
- ↑ "Budget 2023: Education Ministry receives biggest allocation at RM52.6 billion". New Straits Times. 2023-02-04. https://www.nst.com.my/news/nation/2023/02/883258/budget-2023-education-ministry-receives-biggest-allocation-rm526-billion.
- ↑ "APDM". MyGOV – The Government of Malaysia's Official Portal www.malaysia.gov.my. Retrieved 2024-06-29.
- ↑ Hassan, Hafiz (30 September 2024). "Compulsory education in Malaysia: Amend the law, or enact anew — Hafiz Hassan". Malay Mail. https://www.malaymail.com/news/what-you-think/2024/09/30/compulsory-education-in-malaysia-amend-the-law-or-enact-anew-hafiz-hassan/152069.
- ↑ Mohd Janjang, Juliana; Mohd Nor, Mohamed Yusoff; A. Hamid, Aida Hanim (2023-11-03). "Parents' Challenges Against The Intention of The Implementation of The 12-Year Compulsory Education Policy in Malaysia". E-Bangi Journal of Social Science and Humanities 20 (4): 116, 118. doi:10.17576/ebangi.2023.2004.10. https://journalarticle.ukm.my/23042/1/648792252371PB.pdf.
- ↑ CARVALHO, MARTIN; VETHASALAM, RAGANANTHINI; YUNUS, ARFA; MONIHULDIN, MAHADHIR (2023). "Compulsory education may be up to secondary level, says deputy minister". The Star (in ஆங்கிலம்). Retrieved 2023-12-22.
- ↑ "No more dropping out: Govt tables Bill to make secondary school compulsory". Malay Mail. 28 July 2025. https://www.malaymail.com/news/malaysia/2025/07/28/no-more-dropping-out-govt-tables-bill-to-make-secondary-school-compulsory/185513.
- ↑ Yunus, Arfa; Tan, Tarrence; Gimino, Gerard (28 July 2025). "Bill to make secondary school compulsory tabled in Parliament". The Star. https://www.thestar.com.my/news/nation/2025/07/28/bill-to-make-secondary-school-compulsory-tabled-in-parliament.
- ↑ UNESCO National Commission Country Report Template (PDF) (Report) (in ஆங்கிலம்). UNESCO. 2022-04-28. p. 4. Retrieved 2024-11-28.
- ↑ Lee, Raymond L.M.; Ackerman, Susan Ellen (1997). Sacred Tensions Modernity and Religious Transformation in Malaysia (in English). University of South Carolina Press. p. 45. ISBN 9781570031670. Retrieved 14 November 2024.
{{cite book}}: CS1 maint: unrecognized language (link) - ↑ Wang, Lin; Ma, Tengyue (2025). "A comparative study of Malay/Chinese and Malay/Indian ethnic conflicts and relations in Malaysia's multi-ethnic society". Advances in Social Behavior Research 15: 1–11. doi:10.54254/2753-7102/2025.20512. https://doi.org/10.54254/2753-7102/2025.20512.
- ↑ Wang, Lin; Ma, Tengyue (2025). "A comparative study of Malay/Chinese and Malay/Indian ethnic conflicts and relations in Malaysia's multi-ethnic society". Advances in Social Behavior Research 15: 1–11. doi:10.54254/2753-7102/2025.20512. https://doi.org/10.54254/2753-7102/2025.20512.
- ↑ Chong Ching Yee, Kristy; Jones, Liz (2025). "Racialised perspectives on inequality: a qualitative exploration into cultural knowledge structures among Malaysian minorities". Ethnic and Racial Studies: 1–20. doi:10.1080/01419870.2025.2493938. https://doi.org/10.1080/01419870.2025.2493938.
- ↑ Federation of Malaya: Annual Report 1946 (Report) (in English). The Stationery Office. p. 56. Retrieved 2024-11-27.
{{cite report}}: CS1 maint: unrecognized language (link) - ↑ Hirschman, Charles (1972). "Educational Patterns in Colonial Malaya". Comparative Education Review 16 (3): 488–9. doi:10.1086/445630. பன்னாட்டுத் தர தொடர் எண்:0010-4086.
- ↑ Puthucheary, Mavis (1978). The Politics of Administration: The Malaysian Experience, p. 9. Kuala Lumpur: Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-580387-6.
- ↑ Puthucheary, pp. 9–10.
- ↑ Puthucheary, pp. 10–11.
- ↑ Adelaar, K. Alexander; Himmelmann, Nikolaus, eds. (2005). The Austronesian Languages of Asia and Madagascar. Psychology Press. p. 71. ISBN 0700712860.
- ↑ "MoHE - Ministry of Higher Education". www.mohe.gov.my (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Retrieved 10 November 2025.
- ↑ "Mufti Wilayah Menteri Agama, CEO CIMB Menteri Kewangan". BH Online (in மலாய்). 2020-03-09. Retrieved 2020-03-09.
{{cite web}}: CS1 maint: url-status (link) - ↑ "Six new senators sworn in at Dewan Negara | The Star Online". www.thestar.com.my. Retrieved 2020-03-10.
- ↑ Dzulkifly, Danial (29 December 2021). "Court rules vernacular schools constitutionally protected, throws out Malay-Muslim group's suit". Malay Mail இம் மூலத்தில் இருந்து 30 December 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211230061044/https://www.malaymail.com/news/malaysia/2021/12/29/court-rules-vernacular-schools-constitutionally-protected-throws-out-malay/2031761.
- ↑ Liew, Jia Xian (30 December 2021). "Parties laud court ruling on vernacular schools". The Star இம் மூலத்தில் இருந்து 30 December 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211230073202/https://www.thestar.com.my/news/nation/2021/12/30/parties-laud-court-ruling-on-vernacular-schools.
- ↑ Lim, Ida (2023-12-21). "Two groups now want Federal Court to decide on vernacular schools' constitutionality". Malay Mail (in ஆங்கிலம்). Retrieved 2023-12-23.
வெளி இணைப்புகள்
[தொகு]- Ministry of Education Malaysia All Information Login website
- Ministry of Education Malaysia official website
- Ministry of Higher Education official website
- Education Malaysia Global Services, official government portal for international students applying to study in Malaysia
- UNESCO Regional Office for Education in Asia, Bangkok, 1973 – The Educational statistics system of Malaysia, 1972
- Schools In Malaysia, School Directory
- Delima 2.0 KPM Login