பயனர்:Kalaiarasy/தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பத்து வயது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பத்து வயது!

பொதுத்தகவல்[தொகு]

இணையமே தற்காலத்து மிகப்பெரிய தகவல் ஊடகமாக இருக்கின்றது. இவ்வாறான இணையத்தில் மிகவும் பயனுள்ள, புகழ்பெற்ற ஊடகமாக விக்கிப்பீடியா கலைக்களஞ்சியம் இருக்கின்றது. 2001ஆம் ஆண்டு, இதனை ஜிம்மி வேல்ஸ் என்பவரும் லாரி சாங்கர் என்பவரும் இணைந்து ஆரம்பித்தனர். விக்கி நுட்பத்தைப் பயன்படுத்தி ஆங்கிலத்தில் தொடங்கப்பட்ட இந்த விக்கிப்பீடியா கலைக்களஞ்சியம், உலகின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து தன்னார்வத்துடன் இணைந்து கொண்ட பல பயனர்களின் பங்களிப்பால் மிக விரைவாக வளர்ச்சியடைந்து வந்தது. இந்த 2013ஆம் ஆண்டில், ஆங்கில விக்கிப்பீடியா 4.3 மில்லியன் கட்டுரைகளைத் தாண்டிச் சென்று கொண்டிருக்கின்றது.

அதிவேகமாக வளர்ச்சியடையத் தொடங்கிய விக்கிப்பீடியாவில், தமிழ் மொழி உட்பட பல்வேறு மொழிகளும் இணைந்து கொண்டன. இன்றைய காலகட்டத்தில், 286 மொழிகளில் விக்கிப்பீடியா இயங்கத் தொடங்கியுள்ளது. தமிழ் மொழியிலான தகவல்களுக்கும் இணையம் மிக அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருவதுடன், தமிழ் விக்கிப்பீடியாவும் மிக முக்கியமான ஒரு ஊடகமாக இருக்கின்றது. விக்கிப்பீடியாவின் உருவாக்கத்தின் பின்னர், விக்கிமீடியாவின் விக்கி நூல்கள், விக்கிச் செய்திகள், விக்சனரி, விக்கிப் பொதுவகம், விக்கி மேற்கோள்கள், விக்கித் தரவு போன்ற பல செயற்திட்டங்கள் உருவாக்கப்பட்டு, வளர்ச்சி பெற்றன. தமிழ் மொழியிலும் இதே செயற்திட்டங்கள் தொடங்கப்பட்டு, பல தன்னார்வலர்களின் பங்களிப்பால் வளர்ச்சியடைந்து வருகின்றன.

கட்டற்ற உரிமம்[தொகு]

விக்கிப்பீடியாவானது ஒரு கட்டற்ற கலைக்களஞ்சியம் என்னும் தனிச் சிறப்பைக் கொண்டுள்ளது. தமிழ்ச் சூழலில் இந்தக் கட்டற்ற படைப்பாக்கப் பொதுவெளி மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது. தமிழ் மக்களில் பலருக்கு இன்னமும் கணினி, இணையத்தின் பரவலான பயன்பாடு கிடைக்கவில்லை. அந்நிலையில், கட்டற்ற உரிமம் கொண்ட இத்தகையதொரு எண்மிய வடிவத்திலான கலைக்களஞ்சியத்தின் தேவை அதிகமாகின்றது. விக்கிப்பீடியாவின் உள்ளடக்கத்தை எவரும் பதிப்புரிமைச் சிக்கலின்றி, இலவசமாகவே பயன்படுத்திக் கொள்ளலாம். இங்குள்ள உள்ளடக்கத்தைப் பிரதி செய்யவோ, மீளமைக்கவோ, திருத்தியமைக்கவோ அனைவருக்கும் முழு சுதந்திரம் வழங்கப்படுகின்றது.

தமிழ் விக்கிப்பீடியா உருவாக்குநர்[தொகு]

செப்டம்பர் 30 ஆம் நாள், 2013 இல் தமிழ் விக்கிப்பீடியா 10 வயதை எட்டிப் பிடிக்கிறது. தமிழ் விக்கிப்பீடியாவின் ஆரம்பத்திற்கு முதலில் வித்திட்டவர், தற்போது ஐக்கிய அரபு இராச்சியத்தில் கட்டடக்கலைஞராக தொழில் புரிந்து வரும் மயூரநாதன் என்பவரே. இவர் தமிழ் விக்கிப்பீடியாவுக்கான சரியான இடைமுகத்தை 2003 நவம்பர் மாதத்தில் உருவாக்கினார். மயூரநாதன் அவர்கள் இலங்கையில், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர். ஆரம்பத்தில் விக்கிப்பீடியாவுக்குப் பங்களிக்க முயன்ற சிலர், தொடர்ந்து தமது பங்களிப்பை வழங்காமல், ஒரு சில தொகுப்புக்களுடன் நிறுத்திவிட்டாலும், மயூரநாதன் அவர்கள் தமிழரினதும், தமிழ் மொழியினதும் முன்னேற்றத்தையும், வளர்ச்சியையும் மனதில் கொண்டு இந்தக் கலைக்களஞ்சிய உருவாக்கத்தில் தமது தொடர்ந்த பங்களிப்பை முனைப்புடன் வழங்கி வருவதுடன், தமிழ் விக்கியை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்கான முயற்சிகளை இடையறாது செய்து வருகின்றார். விக்கிப்பீடியாவில் இவரது பல வகையான பங்களிப்புக்களுடன், இவர் தொடங்கி வைத்த கட்டுரைகள் மட்டுமே 3770 ஐத் தொட்டுள்ளது.

விக்கிப்பீடியாக்களின் பட்டியலில் தமிழ் விக்கிப்பீடியா[தொகு]

இந்தப் பத்தாண்டு காலத்தில், தமிழ் விக்கிப்பீடியாவில் 55,600 க்கு மேற்பட்ட கட்டுரைகள் உருவாகியுள்ளன. கட்டுரைகள் தவிர படிமங்கள், வார்ப்புருக்களுக்கான பக்கங்களும் உள்ளன. கட்டுரை எண்ணிக்கை அடிப்படையில் பார்த்தால், மொழிகளின் வரிசையில் தமிழ் விக்கிப்பீடியா 61 ஆவது இடத்தில் இருக்கின்றது. ஆனால் அதிக தகவல் செறிவான கட்டுரைகள், தரமான கட்டுரைகள் என நோக்கின், தமிழ் விக்கிப்பீடியா பல படிகள் மேலேயே நிற்பதாகக் கருதப்படுகின்றது. இருப்பினும் உலகில் அதிகமாகப் பேசப்படும் மொழிகளின் பட்டியலில் 20 இடத்திற்குள் இருக்கும் தமிழ், கட்டுரை எண்ணிக்கை அடிப்படையிலும் மேலேறி வரவேண்டும் என்பதே தமிழ் விக்கிச் சமூகத்தின் ஆவலாகும்.

தமிழ் விக்கிப் பயனர்கள்[தொகு]

தமிழ் விக்கியில் 55,600 க்கு மேற்பட்ட பதிவு செய்த பயனர்கள் இருக்கும் நிலையில், அவர்களில் கிட்டத்தட்ட 275 பயனர்கள் சுறுசுறுப்பாக இயங்கும் பயனர்களாக உள்ளனர். விக்கிப் பயனர்கள் கட்டுரை உருவாக்கம், படிமங்கள் பதிவேற்றல், ஏற்கனவே உள்ள கட்டுரைகளில் எழுத்துப் பிழைகள், இலக்கணப் பிழைகள் அல்லது தவறான தகவல்கள் இருந்தால் திருத்தங்கள் செய்தல், கட்டுரைகளில் உள்ள தகவல்களுக்கு மேற்கோள்கள் இணைத்தல், கட்டுரைகளுக்கு படிமங்களை இணைத்தல், பகுப்புக்கள் உருவாக்கல், துப்புரவாக்கப் பணி என்று பல்வேறு விதத்தில் தமது பங்களிப்புக்களை வழங்கி வருகின்றனர்.

இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் இருந்து குறிப்பிடத்தக்களவு பயனர்களும், கனடா, அவுஸ்திரேலியா, ஐரோப்பா, மலேசியா, இந்தோனேசியா, ஹொங்கோங், ஐக்கிய அரபு அமீரகம், போன்ற இடங்களில் வசிக்கும் புலம்பெயர் தமிழர்கள் சிலரும் முனைப்புடன் செயற்பட்டு வருகின்றனர். 11 வயதான சிறுவர் தொடக்கம், 77 வயதான பெரியவர் வரை தமிழ் விக்கியில் பங்களிப்பது சிறப்பான ஒன்றாகும். ஆனாலும் பெண்களின் பங்களிப்பு என்பது மிகவும் கணிசமாகவே உள்ளது. விக்கிப்பீடியாவின் பயனர்கள் அறிவியல், கணிதம், தொழில்நுட்பம், வரலாறு, விளையாட்டு, வேளாண்மை, தமிழ், கலை, புவியியல், பொறியியல், மருத்துவம், பண்பாடு, நபர்கள் என்று பல்வேறு துறைகளில் கட்டுரைகளை உருவாக்கி வருகின்றனர்.

தமிழ் விக்கியின் செயற்பாடுகள்[தொகு]

தமிழ் விக்கிப்பீடியாவானது ஏற்கனவே ஒரு கட்டுரைப்போட்டியையும், ஒரு ஊடகப்போட்டியையும் வெற்றிகரமாக நடத்தி, அதில் வெற்றி பெற்றோருக்குப் பரிசுகளையும் வழங்கியுள்ளது. அத்துடன் பல இடங்களில் நடத்தப்பட்ட நிகழ்வுகள் மூலம் பலருக்கும் தமிழ் விக்கிப்பீடியாவை அறிமுகப்படுத்தி வைத்ததுடன், வெவ்வேறு இடங்களில் பயிற்சிப் பட்டறைகள் நடத்தி தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிக்க விரும்பியவர்களுக்கு உதவியும் வந்துள்ளது. தமிழ் விக்கியின் இந்த பத்தாண்டு நிறைவை நினைவு கொள்ளும் முகமாக தமிழ் விக்கிச் சமூகம் பல்வேறு ஒழுங்குகள் செய்து வருகின்றது. தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைப்போட்டி, ஊடகங்களில் சிறப்பிதழ்கள் வெளியிடல், தமிழ் விக்கிப்பீடியா சட்டைகள் தயாரித்தல், தமிழ் விக்கியூடகக் கையேடு தயாரித்தல், தமிழ் விக்கிப்பீடியா அஞ்சல் தலை வெளியீடு, சென்னையில் தமிழ் விக்கிப்பீடியர் ஒன்றுகூடல் என்று பல முன்னெடுப்புகள் நிகழ்கின்றன. பல பத்திரிகைகள் தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டை முன்னிட்டு சிறப்பிதழ் வெளியிட முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

தமிழ் விக்கிப்பீடியாவின் பயன்பாடு[தொகு]

விக்கிப்பீடியாவின் பயன்பாடு மிகவும் பரந்தளவில் உள்ளது. மாணவர்கள், ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், பொதுமக்கள் எனப் பலராலும் விக்கிப்பீடியா பயன்படுத்தப்பட்டு வருகின்றது. விக்கிப்பீடியாவானது கூகிள் இணையத் தேடலில் பொதுவாக முதல் ஐந்து தரவுகளுக்குள் வரும் இணையத்தளமாக இருப்பது ஒரு மிக முக்கியமான விடயமாகும். தமிழ் விக்கிப் பக்கங்களைப் பார்வையிடுவோர் நாளொன்றுக்கு 175,000 க்கு மேல் இருப்பதாகப் புள்ளிவிபர அறிக்கை கூறுகின்றது.

தமிழ் விக்கியில் புதிய பங்களிப்பாளர்களின் தேவை[தொகு]

இந்த பத்தாண்டுகளில் தமிழ் விக்கிப்பீடியா வளர்ச்சியடைந்திருந்தாலும், மேலும் முன்னேறுவதற்கு பல துறைகளில், பல தலைப்புக்களில் கட்டுரைகள் தேவைப்படுகின்றன. சரியாக அமையாத கட்டுரைகளில் திருத்தங்கள் தேவைப்படுகின்றன. பல குறுங்கட்டுரைகள் விரிவாக்கம் செய்யப்பட வேண்டி உள்ளன. விக்கிப்பீடியாவானது பல தன்னார்வலர்களால் கூட்டாக இணைந்து தொகுக்கப்படும் இணையக் கலைக்களஞ்சியமாக இருப்பதும், அதனை எவரும் தொகுக்கலாம் என்பதுமே விக்கிப்பீடியாவின் தனிச் சிறப்பாகும். எனவே தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதன் மூலம், அதனை மேலும் வளர்ச்சியடையச் செய்வது தமிழர்களது கடமையாகும்.

ஒவ்வொருவரும், தமக்குத் தெரிந்த விடயங்களை, தமது துறைசார் விடயங்களை இந்தக் கலைக்களஞ்சியத்தில் சேர்த்து வைக்க முடியும். அப்படிச் சேர்க்கப்படும் விடயங்கள் இணையப் பயன்பாட்டின் அடிப்படையில் இயங்கிவரும் தற்போதைய காலகட்டத்தில் நமக்கும், எதிர்காலத்தில் நமது சந்ததியினருக்கும் மிகவும் உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. எழுதுவதில் ஆர்வமில்லாதவர்கள் கூட, புகைப்படக் கலையில் ஆர்வமுள்ளவராயின், தாம் எடுக்கும் படங்களை விக்கிப்பீடியாவுக்கு அளிக்க முடியும். தமிழ் வளர்ச்சியில் ஆர்வம் உள்ள ஒவ்வொருவரும் இன்றே உங்கள் பங்களிப்பை ஆரம்பிக்கலாம். எப்படிப் பங்களிப்பது என்பது அறியாவிட்டால் தமிழ் விக்கிப்பீடியாவில் உதவியை நாடலாம். அங்கே பல உதவிப் பக்கங்கள், தமிழ் விக்கிப்பிடியாவின் கொள்கைகள் மற்றும் வழிகாட்டல்கள் உள்ளன.

ஒவ்வொருவரும் தமது நேரத்தில், கிடைக்கும் சில மணித்துளிகளை தமிழ் விக்கிப் பங்களிப்புக்குப் பயன்படுத்தினாலே போதும். கலைக்களஞ்சிய உருவாக்கத்திற்கு உதவியவர்களாகவும், அதன் வளர்ச்சியில் பங்களித்தவர்களாகவும் இருக்கலாம். சிறு துளி பெரு வெள்ளம் என்று சும்மாவா சொன்னார்கள். அறிவே தமிழரின் பலம். அந்த அறிவை நமது சமூகத்திற்கு வழங்கி சமூகத்தைப் பலப்படுத்துவதில் அனைவரும் இணைவோம்.

தமிழ் விக்கிப்பீடியாவின் இணையமுகவரி ta.wikipedia.org