பயனர்:G.Kiruthikan/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

COVID-19 பற்றி அனைத்தும் அறிவோம்

1. வைரஸ் என்றால் என்ன? 2. COVID-19 என்றால் என்ன? 3. COVID-19இன் ஆரம்பமும், பரவலும் 4. COVID-19ஐயும் தடிமனையும் ஒப்பிடுவோம் 5. COVID-19 பரவும் விதம் 6. COVID-19க்கும் எம் உடலுக்குமான போட்டி 7. COVID-19ஆல் எப்படி இறப்பு ஏற்படும்? 8. நீண்ட கால சிக்கல்கள் 9. ஆபத்தில் உள்ளவர்கள் 10. ஏன் இவ்வளவு வேகமாக பரவுகின்றது? 11. ஏன் இவ்வளவு இறப்புகள்? 12. சுத்தியலும் நடனமும் 13. புதிய திரிபுகள்

"நாம் இதில் ஒன்றாக உள்ளோம். இதை ஒன்றாக கடந்து செல்வோம்" - அன்டோனியோ குட்டேரஸ், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர்

வாழ்க்கை ஒரு பஞ்சு மெத்தை... அல்லது அவ்வாறு அவளுக்கு தோன்றியிருக்கலாம். தருஷிக்கு 21 வயது. ஐக்கிய அமெரிக்காவின் சிறப்பான பல்கலைக்கழகம் ஒன்றில் சட்டப்படிப்பில் உள்வாங்கப்பட்டுள்ளதாக சற்று முன்னர் தான் கடிதத்தைப் பெற்றிருந்தாள். அவளின் நண்பி சந்தமினி மருத்துவ பீடத்தில் 4ஆம் வருடத்தில் கல்வி கற்கின்றாள். தனது நண்பியை வாழ்த்துவதோடு மட்டுமல்லாமல் ஒரு எச்சரிக்கை ஒன்றையும் கூறிச் செல்கின்றாள் சந்தமினி. தருஷி வெற்றியைக் குறிவைக்க 2020 வேறு திட்டங்களை வகுத்துள்ளாதாகத் தெரிகின்றது.

சந்தமினி: வணக்கம் தருஷி! நல்ல செய்தி ஒன்றைக் கேள்விப்பட்டேன். நீ வெல்வாய் என்று எனக்குத் தெரியும்.

தருஷி: ஹா ஹா... ஆனால் நான் எதிர்பார்க்கவேயில்லை

சந்தமினி: ரொம்பவும் தன்னடக்கம் வேண்டாம்! இணைப்பாடவிதான செயற்பாடுகளுடன் இவ்வளவு பெரிய விடயத்தை சாதிப்பது மிகவும் கடினமான விடயம். உன்னைப் போன்ற கடின உழைப்பாளர்களுக்கு இது மிகவும் பொருத்தமான பெறுபேறு. எனக்கு மிகவும் சந்தோசமாக உள்ளது.

தருஷி: சந்தமினி, தற்போது தான் எல்லா விடயங்களும் எனக்கு சாதகமாகச் செல்வது போல் உள்ளது. என் எல்லா கனவுகளும் ஒரு மயிரிழை தொலைவில் தான் உள்ளது போலுள்ளது. எனது இலட்சியங்களுக்கும் எனக்கும் இடையில் இனி எதுவும் வராது.

சந்தமினி: தருஷி, எப்போது பயணம்?

தருஷி: வீசா மற்றும் ஏனைய ஆவணங்கள் அடுத்த மாதமளவில் தயாரானவுடன் பயணமாக நினைக்கிறேன்.

சந்தமினி: ஆகா.. அது மிகவும் சிறப்பு. ஆனால்....

தருஷி: புது நண்பர்களைச் சந்தித்தவுடன் உன்னை மறந்துவிடுவேன் என்று பயந்து விட்டாயா?

சந்தமினி: அவ்வளவு இலகுவில் என்னிடம் இருந்து உன்னால் தப்பித்துவிட முடியாது! நான் இந்த கொரோனா நிலைமை காரணமாக பாதிக்கப்படப்போகும் சர்வதேசப் பயணம் தொடர்பில் தான் பயப்படுகின்றேன்.

தருஷி: ஆம். அந்த கொரோனா நிலைமை பற்றிக் கேள்விப்பட்டேன். நான் நினைக்கின்றேன் அது சரியாகி விடும் என்று...

சந்தமினி: நீ செய்தியைப் பார்க்கவில்லையா? அது உலகம் முழுவதும் மிக வேகமாகப் பரவுகின்றது. அது புதிய வைரஸ் காரணமாகப் பரவும் ஒரு சுவாச நோய். பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும், இறப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.

தருஷி: மன்னிக்க வேண்டும் சந்தமினி. நான் கொஞ்சம் இந்த செய்திகளிடமிருந்து விடுபட்டுச் சென்று விட்டேன். எனக்கு இந்த கொரோனா பற்றியோ, இந்த வைரஸ் பற்றியோ ஒன்றும் தெரியாது. எனக்கு இவற்றைப் பற்றி கொஞ்சம் விபரிக்க இயலுமா?

சந்தமினி: சரி.. முதலில் வைரஸுடன் ஆரம்பிப்போம். எங்களுக்கு ஏற்படும் பல நோய்களுக்கு வைரஸ்களால் தான் காரணம் என்று நாம் எல்லோருக்கும் தெரியும். தடிமன் காய்ச்சல் தொடக்கம் எய்ட்ஸ் வரை வைரஸ்களாலேயே ஏற்படுத்தப்படுகின்றன. ஆனால் வைரஸ்கள் ஏனைய உயிரினங்களிலிருந்து சற்று வேறுபட்டவை. அனேகமான உயிரினங்களின் கலங்கள் பிற கலங்களின் உதவியின்றி வாழக்கூடியவை அல்லவா?

தருஷி: உண்மையைச் சொல். என்னால் உதவியின்றி ஒரு நாள் கூட தப்பிப்பிழைக்க முடியாது.

சந்தமினி: ஹா ஹா... நான் என்ன சொல்ல வந்தேன் என்றால் வைரஸ் ஒரு வகை கட்டுப்பட்ட ஒட்டுண்ணி. அதாவது அதனால் ஒரு விருந்துவழங்கி இன்றி இயங்க இயலாது. அத்துடன் ஒரு உயிருள்ள கலத்துள் நுழைந்தால் மட்டுமே அதனால் பெருக முடியும். ஒரு நபர் தொற்றுக்குள்ளானவுடன் அவரது கலங்களைப் பயன்படுத்தி தன்னைப் போன்ற பல பிரதிகளை உருவாக்கச் செய்யும். ஒரு தனி வீரர் ஒரு இராணுவத் தளத்துக்குள் நுழைந்து ஒரு புது படையையே உருவாக்குவது போன்ற நிலை தான் இது. தருஷி, உனக்கு விளங்கிவிட்டது தானே?

தருஷி: அப்படித் தான் நினைக்கிறேன். அப்படியென்றால் வைரஸ் என்னைத் தொற்றுகின்றது, பின்னர் தப்பிப்பிழைத்துப் பெருகுவதற்கு எனது கலங்களைப் பயன்படுத்துகின்றது. ஆனால் எப்படி அப்படியொன்றை அதனால் செய்ய முடிகின்றது? எனது கலங்கள் அதற்கெதிராக ஒன்றும் செய்யாமலா இருக்கின்றன?

சந்தமினி: ஆம். எதிராக அவை சில வேலைகள் செய்கின்றன தான். ஆனால் இதில் தான் விடயம் கொஞ்சம் சிக்கலாகின்றது. தொற்றை ஏற்படுத்தும் முழுமையான வைரஸ் துணிக்கையை வைரியோன் எனப்படும். மிகவும் எளிய வைரியோன் நியூக்கிளிக் அமிலம், புரத உறை என இரண்டு அடிப்படைக் கூறுகளைக் கொண்டது. நியூக்கிளிக் அமிலம் RNA அல்லது DNA ஆக இருக்கலாம். அந்தப் புரத உறையின் முக்கிய செய்ற்பாடுகளில் ஒன்று நியூக்கிளிக் அமிலத்தை தொற்றுக்குள்ளான விருந்து வழங்கியிடமிருந்து பாதுகாப்பதாகும்.

தருஷி: எனவே உள்ளே இருக்கும் கூறுகளைப் புரத உறை பாதுகாக்கின்றது. அப்படி தானே? அது மிகவும் வித்தியாசமாக உள்ளது. ஒரு பாதுகாப்புக் கவசம் போல இல்லையா?

சந்தமினி: ஆம். நியூக்கிளிக் அமிலங்களை அழிக்கக்கூடிய நியூக்கிளியேஸ் எனப்படும் சில இரசாயனப் பொருட்களை விருந்து வழங்கி உருவாக்கும். புரத உறை இதைத் தடுக்கும்.

தருஷி: மிகவும் சுவாரஷியமாக உள்ளது. அப்படியென்றால் இந்த வைரஸ்கள் எங்கே உள்ளன? அவை எல்லா இடத்திலுமா உள்ளன?

சந்தமினி: எங்கள் சூழலில் மில்லியன் கணக்கான வைரஸ்கள் உள்ளன. ஆனால் அவற்றில் மிக சொற்பமானவையே அடையாளங்காணப்பட்டுள்ளன. ஒவ்வொரு வருடமும் மனிதர்களைத் தொற்றக்கூடிய 3 தொடக்கம் 4 வைரஸ்கள் அடையாளங்காணப்படுகின்றன. மனிதர்களில் நோய்களை ஏற்படுத்தும் அங்கிகளில் மூன்றில் இரண்டு பங்கு வைரஸ்களாகும்.

தருஷி: இவ்வளவு வைரஸ்களா? இது எப்படி சாத்தியம்?

சந்தமினி: வைரஸ்கள் மரபியல்ரீதியில் பல்வகைமை நிறைந்தவை. அத்துடன் புதிய இனங்களும், புதிய திருபுகளும் மிக விரைவாகக் கூர்ப்படைகின்றன. மனிதர்களில் நோயறிகுறிகளற்ற சாதாரண தொற்று முதல் உயிராபத்தை விளைவிக்கும் தீவிர நோய் வரை ஏற்படுத்தக்கூடியவை. சுவாசத் தொகுதி, சமிபாட்டுத்தொகுதி, நரம்புத் தொகுதி என கிட்டத்தட்ட அனைத்து தொகுதிகளையும் தொற்றக்கூடியவை. HIV, விசர்நாய்க்கடி நோய் போன்றவை வைரஸ்களால் ஏற்படுத்தப்படும் உயிர்க்கொல்லி நோய்களாகும். இவற்றில் கொரோனா வைரஸால் சாதாரண தடிமன் முதல் மேர்ஸ் (MERS) எனப்படும் அதிதீவிர நோய்வரை ஏற்படுத்த இயலும்.

தருஷி: அப்படியென்றால் இப்போது எல்லோரும் கதைக்கும் கொரோனா வைரஸ் பற்றி கொஞ்சம் கூற முடியுமா?

சந்தமினி: கொரோனா ஒரு RNA வைஸாகும். அதன் மென்சவ்வுறையில் முட்கள் போன்ற பல வெளிநீட்டங்கள் உள்ளன. அவை சூரியனின் வளிமண்டலமான கொரோனா போல வெளிநீட்டிய படி உள்ளதால் இந்த வைரஸுக்கு இந்தப் பெயர். கொரோனாவால் மனிதரிலும் விலங்குகளிலும் நோயை ஏற்படுத்த முடியும். தற்போது அறியப்பட்டுள்ள RNA வைரஸ்களில் கொரோனா பெரிய மரபணுத்தொகை கொண்டுள்ள வைரஸாக உள்ளது.

தருஷி: மிக ஆச்சரியமாக உள்ளது. அது சரி, மரபணுத்தொகை தொகுப்பு என்றால் என்ன?

சந்தமினி: மரபணுத் தொகுப்பென்றால் ஒரு அங்கியில் இருக்கும் மொத்த மரபணுத் தகவல்களை ஒருமித்து கூறும் சொல்லாகும். இதுவரை மனிதர்களில் நோய்களை ஏற்படுத்தும் 6 கொரோனா வைரஸ் இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் 4 இனங்கள் மனிதரில் மட்டுமுள்ளவை.SARS, MERS பற்றிக் கேள்விப்பட்டிருக்கின்றாயா?

தருஷி: ஆம். அவை பெருந்தொற்றுக்கள் அல்லவா? SARS என்றால் Severe Acute Respiratory Syndrome, மற்றும் MERS என்றால் Middle Eastern Respiratory Syndrome.

சந்தமினி: ஆம். மிகச்சரி. அவையும் கொரோனா வைரஸால் ஏற்படுத்தப்படுபவையே.

தருஷி: அப்படியென்றால் சார்ஸ், மேர்ஸ், கோவிட்-19 மூன்றும் கொரோனா வைரஸால் ஏற்படுத்தப்படுபவையா?

சந்தமினி: ஒரே இனங்கள் அல்ல. கொரோனா வைரஸின் மூன்று வெவ்வேறு இனங்களால். மூன்றிலும் நிறைய மரபியல் ஒற்றுமைகள் உள்ளன.

தருஷி: நன்றி சந்தமினி. மிகவும் விளக்கமாக சொல்லி விட்டாய். இவை எல்லாம் எப்படித் தொடங்கியதென்று கூகிளில் தேடிப் பார்ப்போமா?

டிசெம்பர் 31, 2019- ஒரு நியூமோனியா தொற்றுக் கொத்தணி தொடர்பாக சீனாவின் வூகான் மாநகர சபை அறிவித்தது. புதிய கொரோனா வைரஸ் இனம் கண்டறியப்பட்டது.

ஜனவரி 4, 2020- வூகான் நியூமோனியா கொத்தணி தொடர்பில் உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது.

ஜனவரி 11, 2020- சீனாவில் முதலாவது கோவிட்-19 மரணம் அறிவிக்கப்பட்டது.

ஜனவரி 13, 2020- தாய்லாந்தில் ஒரு கோவிட் நோயாளி கண்டறியப்பட்டதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது (சீனாவுக்கு வெளியில் கண்டறியப்பட்ட முதல் நோயாளி).

ஐக்கிய அமெரிக்கா, நேபாளம், பிரான்ஸ், அவுஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர், தென் கொரியா, வியட்நாம், தாய்வான் ஆகிய நாடுகள் நோயாளிகள் கண்டறியப்பட்டதாக அறிவிக்கின்றன. பல நாடுகள் வூகான் பயணிகளில் நியூமோனியா தொடர்பாக சோதனைகளை ஆரம்பித்தன.

ஜனவரியின் இறுதிப்பகுதி, 2020- ஹூபெய் மாகாணத்துக்கு வெளியே சீனாவின் பிற இடங்களிலும் கோவிட்-19 மரணங்கள் ஏற்படுகின்றன.

ஜனவரி 23, 2020- ஹூபெய் மாகாணத்தின் நகரங்கள் தனிமைப்படுத்தல் சட்டத்தை நடைமுறைப்படுத்தின. கடுமையான பயணக்கட்டுப்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டது.

ஜனவரி 30, 2020- உலக சுகாதார நிறுவனத்தால் கோவிட்-19 உலக பொதுச்சுகாதார அவசர நிலையாக அறிவிக்கப்பட்டது.

பெப்ரவரி 2, 2020- பிலிப்பைன்ஸில் சீனாவுக்கு வெளியேயான முதல் இறப்பாக கோவிட் இறப்பொன்று அறிவிக்கப்பட்டது.

மார்ச் 11, 2020- உலக சுகாதார நிறுவனத்தால் கோவிட்-19ஆனது உலகளாவிய பெருந்தொற்றாக அறிவிக்கப்பட்டது.

மார்ச் 21, 2020- இத்தாலியில் இறந்தோர் எண்ணிக்கை சீனாவின் எண்ணிக்கையைக் கடந்தது. அங்கு அதுவரை 53 578 நோயாளிகளும், 4825 இறப்புக்களும் பதிவிடப்பட்டிருந்தன.

ஏப்ரில் 2020- ஒரு நாளில் பதிவிடப்பட்ட அதிக நோயாளிகளும், மரணங்களும் ஐக்கிய அமெரிக்காவில் பதிவிடப்பட்டது. உலகம் முழுவதும் 213 நாடுகளில் இந்நோய் பரவியிருந்தது.

கோவிட்-19இன் ஆரம்ப நோயாளிகளில் பலர் ஹுணான் மாகாணத்தில் உள்ள ஒரு சந்தையுடன் தொடர்புபட்டவர்களாக அடையாளங்காணப்பட்டுள்ளனர். அவர்களில் பலர் இந்த சந்தைக்கு அதிகம் சென்றுள்ளனர். சந்தையிலிருந்து பெறப்பட்ட சூழலியல் மாதிரிகளிலும் கோவிட்-19 வைரஸ் உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆதாரங்கள் மூலம் கோவிட்-19 தொற்று இச்சந்தையில் தொடங்கியிருக்கலாம் அல்லது இச்சந்தை ஒரு அதிதீவிரப் பரவலுக்கான மையப்புள்ளியாகச் செயற்பட்டிருக்கலாம் என ஊகிக்கப்பட்டுள்ளது. அந்த சந்தைக்கு வெளிநபரொருவராலா அல்லது விலங்கொன்றாலா பரவியது எனக் கண்டறியப்படவில்லை. எனினும் அந்த சந்தை இதன் பின்னர் மூடப்பட்டது.

தருஷி: தனிமைப்படுத்தல் முறைமைகள் சீனாவில் வினைத்திறனாக இருந்தனவா? அப்படி இருந்திருந்தால் எப்படி ஏனைய நாடுகளுக்குத் தொற்று பரவியிருக்க முடியும்?

சந்தமினி: தனிமைப்படுத்தல் மூலம் மார்ச் மாதமளவில் சீனாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முடிந்தது. ஆனால் சீனாவுக்கு வெளியில் அதற்கிடையில் அதிதீவிரமாகப் பரவத்தொடங்கிவிட்டது. சீனாவுக்கு வெளியில் ஐரோப்பா பரவலின் மையப்புள்ளியாக மாறிவிட்டது. சீனாவை விட இத்தாலியில் பாதிப்பு அதிகமாக இருந்தது.

தருஷி: இத்தாலி, சீனா இரண்டும் வளர்ச்சியடைந்த நாடுகள் அல்லவா? அப்படியிருக்கையில் எவ்வாறு இத்தாலியில் அதிக் பாதிப்பு?

சந்தமினி: அதற்கு பல காரணங்கள் உள்ளன. பிந்திய எதிர்வினை, குறைவான சோதனைத் திறன், முதியோர்களின் எண்ணிக்கை அதிகமாக இருத்தல், சமூக நடத்தை ஆகிய முக்கிய காரணங்களாகும்.

தருஷி: கொரோனா வைரஸ் எவ்வாறு மக்களிடையே அவ்வளவு இலகுவாக ப்ரவுகின்றது?

சந்தமினி: என்னுடன் படிக்கும் நண்பர் ஒருவர் இது தொடர்பாக ந்ல்ல பதிவொன்றை அனுப்பியிருந்தார். அதை உனக்கு அனுப்புகின்றேன். பார்.

தருஷி: எப்படி இந்த வைரஸ் எமது ஆரோக்கியமான கலங்களுக்குள் நுழைகின்றது?

சந்தமினி: வைரஸ்கள் எமது கலங்களின் கலமென்சவ்வுகளிலுள்ள வாங்கிகளுடன் இணைவதன் மூலம் உள்நுழைகின்றன. எனினும் அவ்வாங்கிகள் வைரஸுகளுக்காக இருப்பவை அல்ல. அவை வேறு தேவைகளுக்காக இருக்கும் வாங்கிகள். எனினும் அவற்றை வைரஸ்கள் தமது தேவைக்காகப் பயன்படுத்திக்கொள்கின்றன.

தருஷி: தொற்றுக்குள்ளாகும் அனைவருக்கும் நோயேற்படவேண்டுமென்றில்லை என்று கூறுகின்றார்களே. சிலருக்கு மற்றவர்களை விட தொற்று ஏற்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளதா?

சந்தமினி: கோவிட்-19ஆல் எந்த வயதுக்குரியவரும் பாதிக்கப்படலாம். ஆனால் அதிகளவானோர் நோயறிகுறி எதனையும் வெளிக்காட்டுவதில்லை. சிலருக்கு நோயின் வீரியம் அதிகமாக உள்ளது. இது தொடர்பான சில ஆபத்துக் காரணிகள் கண்டறியப்பட்டுள்ளன. நீண்டகால நோய்களைக் கொண்டுள்ளோரும், வயதில் முதிர்ந்தோரும் ஏனையோரை விட கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்படும் வாய்ப்பை அதிகம் கொண்டுள்ளனர். நோயறிகுறியற்றோருக்கு உயிராபத்து எதுவும் இல்லாவிட்டாலும், நோய் பரவலுக்கு அவர்களும் பெரியளவு பங்களிப்பை வழங்குகின்றனர்.

தருஷி: கோவிட்-19 ஒரு சுவாச நோய் தானே? அதாவது தடிமன் போன்றதல்லவா? ஏன் அதைப் பற்றி அதிகம் கவலைப்பட வேண்டும்?

சந்தமினி: இரண்டு நோய்களும் பொதுவான அறிகுறிகள் சிலவற்றைக் கொண்டுள்ளதால், இரண்டையும் வேறுபடுத்துவது சிறிது கடினம் தான். ஆனால் கோவிட்-19 சாதாரண தடிமனை விட மிகவும் ஆபத்தானது. அத்துடன் இரண்டும் ஒன்றென்று எம்மால் கூறிவிட முடியாது.

தருஷி: எனவே எனக்கு இருமலும், தடிமனும் இருந்தால், எனக்கு கொரோனா இருக்குமா என்று எப்படி ஊகிக்க முடியும்?

சந்தமினி: ஐயோ, அதிகம் யோசிக்க வேண்டாம். இந்த கட்டுரையை வாசி. இதில் கோவிட்-19இன் அறிகுறிகள் பற்றி விபரிக்கப்பட்டுள்ளது.

தருஷி: அப்படியென்றால் கோவிட்-19 சுவாசத்தொகுதியை மட்டும் தான் பாதிக்கும். இல்லையா?

சந்தமினி: இல்லை தருஷி. அது பிரதானமாக சுவாசத்தொகுதியைப் பாதித்தாலும், அது எமது உடலின் ஏனைய பாகங்களான குருதிக்குழாய்கள், இதயம், மூளை, ஈரல், சிறுநீரகம் என பல பாகங்களையும் பாதிக்கக்கூடியது.

தருஷி: மிக்க நன்றி நண்பியே! இந்த உலகளாவிய பெருந்தொற்று பற்றிய பல சந்தேகங்களைத் தீர்த்துவிட்டாய். இதைப் பற்றி எத்தனையோ வதந்திகள் உலாவுவதால் உண்மையையும், வதந்தியையும் வேறுபடுத்துவது மிகவும் கடினமாக உள்ளது.

சந்தமினி: நான் முன்னர் சொன்னது போலவே நம்பிக்கையான மூலங்களை மட்டும் பார், ஊடகங்கள் கூறும் அனைத்தையும் அப்படியே நம்பி விடாதே. தேவையற்ற பயம் இந்த பெருந்தொற்றை விட ஆபத்தானது.

உங்களுக்குத் தெரியுமா (Did you know?)

1. டிசெம்பர் 2019இல் சீனாவில் புதிய நியூமோனியா தொற்று ஒன்று பரவியது. இது முன்னர் அறியப்படாத புதிய வகை நோய்க்காரணியால் பரவியுள்ளது. ஜனவரி 2020இல் இதனை உலக பொதுச்சுகாதார அவசர நிலையாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. இது மனிதர்களில் நோயை உண்டாக்கக்கூடிய ஏழாவது வகை கொரோனா வைரஸாகப் பதிவிடப்பட்டது. இந்த புதிய கொரோனா வைரஸை SARS-CoV-2 (Severe Acute Respiratory Syndrome) எனப் பெயரிட்டார்கள். இந்த வைரஸால் ஏற்படுத்தப்படும் நோயை கோவிட்-19 (COVID-19: Coronavirus Disease-2019) எனப் பெயரிட்டார்கள்.

2. SARS-CoV-2 இன் மரபணுத்தொகையானது, SARS-CoV உடன் 79.5%இலும், MERS உடன் 40%இலும் ஒத்துப்போவதாக, இதன் மரபணுத்தொகையை ஆராய்ந்த விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். மரபணு வரிசை தரவுகளின் படி வௌவால்கள் இவ்வைரஸின் மூலமாக இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.

3. SARS-CoV-2 வைரஸானது தனது ஸ்பைக் புரதங்கள் மூலம் விருந்துவழங்கிக் கலங்களின் வாங்கிகளுடன் இணைந்துகொள்கின்றது. இதுவரை நிகழ்த்தப்பட்ட ஆய்வுகளின் படி இவ்வைரஸ் மனிதர்களின் ACE-2 (Angiotensin Converting Enzyme-2) வாங்கியுடன் இணைவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு கலங்களினுள் செல்லும் வைரஸ் கலங்களினுள் பிரிந்து பெருகத் தொடங்கி விடும். தொற்று ஏற்பட்டு 4-5 நாட்களில் தொண்டையில் உள்ள வைரஸின் அளவு உச்சத்தைத் தொடுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

தடிமனிலிருந்து கோவிட்-19 எவ்வாறு வேறுபடுகின்றது?

கோவிட்-19, தடிமன் இரண்டுமே வைரஸ்களால் ஏற்படுத்தப்படும் சுவாச நோய்களாகும். SARS-Cov-2 வைரஸால் கோவிட்-19உம், இன்புளுவென்சா வைரஸால் தடிமன் காய்ச்சலும் உண்டாகின்றது. இரண்டும் தொற்று நோய்களாக இருப்பதுடன் அவை பொதுவான அறிகுறிகளைக் கொண்டுள்ளமை இவற்றை வேறுபடுத்துவதைக் கடினமாக்கின்றது. எனினும் இதுவரை கண்டறியப்பட்ட விடயங்களின் படி கோவிட்-19ஆனது தடிமன் காய்ச்சலை விட பல மடங்கு ஆபத்தானதாகும்.

R0 எண், நோயரும்பல் காலம், வைத்தியசாலை அனுமதி வீதம், இறப்பு வீதம் என்பவை கோவிட்-19ஐயும், தடிமன் காய்ச்சலையும் வேறுபடுத்தும் பிரதான விடயங்களாக உள்ளன. R0 எண் என்பது ஒரு தொற்றுக்குள்ளான நபரால் மேலும் தொற்றுக்குள்ளாக்கக்கூடிய நபர்களின் எண்ணிக்கையின் அண்ணளவான பெறுமானமாகும். இது தடிமன் காய்ச்சலுக்கு 1.3ஆக இருக்கும் அதேவேளை, கோவிட்-19க்கு 2-2.5ஆக உள்ளது. இதிலிருந்து கோவிட்-19ஆல் தொற்றுக்குள்ளானவரால் தடிமனால் பாதிக்கப்பட்டவரை விட அதிகளவானோருக்கு நோய்த்தொற்றைப் பரப்ப முடியும் என்ற விளக்கம் பெறப்படுகின்றது.

அத்துடன் நோயரும்பல் காலம் என்றால் நோய்க்காரணி எம் உடலினுள் நுழைந்த நேரத்துக்கும், நோயறிகுறிகள் வெளிப்படும் காலத்துக்குமிடைப்பட்ட காலமாகும். இதை நோக்கினோமானால், கோவிட்-19 இன் நோயரும்பல் காலம் 1 தொடக்கம் 14 நாட்களாகவும், தடிமனின் நோயரும்பல் காலம் 1 தொடக்கம் 4 நாட்களாகவும் உள்ளது.

அத்துடன் கோவிட்-19இன் வைத்தியசாலை அனுமதி வீதம் 19% ஆகவும், தடிமனின் வைத்தியசாலை அனுமதி வீதம் 2% ஆகவும் உள்ளது. இறப்பு வீதமும் கோவிட்-19க்கு அதிகமாக உள்ளது. தடிமனில் 0.1%ஐ விட குறைவாக இருக்கும் அதே வேளை கோவிட்-19க்கு 1-3.4% ஆக உள்ளது.

இவை இந்த இரண்டு நோய்களுக்கும் இடையே பிரதான வித்தியாசங்களாக இருந்தாலும், நோயறிகுறிகளைக் கொண்டு வேறுபடுத்துவது கடினமாக உள்ளது. எனவே கோவிட்-19 தொற்றை உறுதிப்படுத்த PCR சோதனை செய்வது அவசியமானதாக உள்ளது.

உங்களுக்கு கோவிர்-19 தொற்று இருக்கும் என நீங்கள் சந்தேகப்பட்டால் நீங்கள் செய்ய வேண்டியது என்ன?

உங்களுக்கு காய்ச்சல், இருமல், தொண்டை அரிப்பு, சுவாசிப்பதில் சிரமம் ஆகிய நோயறிகுறிகள் இருந்து நீங்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருக்கலாம் எனக் கருதினால் உங்களையும், உங்களை சூழ உள்ளோரையும் பாதுகாக்க சில நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

  • மருத்துவ உதவிக்காக வெளியே போவதைத் தவிர, இயலுமான வரை வீட்டினுள்ளேயே இருக்க முயற்சி செய்யுங்கள்.
  • மருத்துவ உதவிக்காக வெளியே செல்லும் போது உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளையும், சமூக இடைவெளியையும் பின்பற்றுங்கள். உங்கள் வைத்தியரிடம் பயண விபரங்களையும், தொற்றுக்குள்ளாகியிருக்கக்கூடிய வழிமுறைகளையும் முழுமையாகக் கூறுங்கள்.
  • வீட்டில் உங்கள் அறையை மட்டும் பயன்படுத்துங்கள். உங்களுடைய கோப்பை, தட்டு, படுக்கையை மட்டும் பயன்படுத்துங்கள். இவற்றை தனியாக சவர்க்காரத்தையும், நீரையும் கொண்டு கழுவுங்கள். வீட்டில் ஏனையோரிடமிருந்து இயலுமானவரை விலகி இருங்கள்.
  • உங்கள் கைகளை இடைக்கிடையில் 20 விநாடிகளுக்காவது சரியான முறையில் சவர்க்காரம் மற்றும் நீரைப் பயன்படுத்திக் கழுவுங்கள். வீட்டில் ஏனையோரையும் இவ்வாறு கழுவச் சொல்லுங்கள்.
  • வீட்டில் விருந்தினர்களை வரும்படி அழைக்காதீர்கள்.
  • இருமும் போதும், தும்மும் போதும் டிஷ்ஷு ஒன்றை அல்லது உங்கள் முழங்கையின் உட்பகுதியையோ பயன்படுத்தி மூடிக்கொள்ளுங்கள். முகக்கவசங்களையும், கையுறைகளையும் மீண்டும் மீண்டும் பயன்படுத்த வேண்டாம். அவறை மூடி உள்ள ஒரு குப்பைத்தொட்டியில் பாதுகாப்ப போட்டு அகற்றிடுங்கள்.
  • மேற்கூறிய அறிகுறிகளுடன் இறுதி 14 நாட்களில் கோவிட்-19 தொற்றுக்குள்ளான நபரொருவடுன் தொடர்பு இருந்தாலோ அல்லது தொடர்பு இருக்குமென நீங்கள் கருதினாலோ அல்லது வெளிநாட்டிலிருந்து வருகை தந்து 14 நாட்களாகவில்லை என்றாலோ உங்கள் பிரதேசத்துக்குரிய பொதுச்சுகாதார அதிகாரிக்கு உடனடியாக அறிவிங்கள். அருகிலுள்ள வைத்தியசாலையிலிருந்து மருத்துவ ஆலோசனையையும் உடனடியாகப் பெற்றுக்கொள்ளுங்கள்.
  • அவசர நிலைமைகளின் போது 1990 மருத்துவ அவசர ஊர்தி சேவைக்கு அழைப்பை ஏற்படுத்துங்கள்.
  • 1999 அவசர இலக்கத்துக்கு அழைப்பதன் மூலமும் கோவிட்-19 தொடர்பான மருத்துவ ஆலோசனைகளையும், வேறு விளக்கங்களையும் பெற்றுக்கொள்ள முடியும்.

SARS CoV2 வைரஸ் தொற்றால் தீவிர உயிராபத்தை எதிர்நோக்கக்கூடியவர்கள் யார்?

இவ்வைரஸால் தொற்றுக்குள்ளாக்கபட்ட அனைவரும் தீவிர உயிராபத்தை எதிர்கொள்ளும் ஆபத்தைக் கொண்டுள்ளனர். பெரும்பாலானோர் அறிகுறிகளற்றோ அல்லது மெல்லிய அறிகுறிகளோடே இருப்பர். எனினும் சிலர் ஏனையோரை விட உயிராபத்தை எதிர்நோக்கும் தனமையை அதிகமாகக் கொண்டுள்ளனர். அதிக வயது, சில இனக்குழுவின் அங்கத்தவராய் இருத்தல், பாலினம், சில நோய்களுக்கு உள்ளாகியிருத்தல், சில மருந்துகளின் பாவனை, ஏழ்மை, சன நெரிசலான இடங்களில் வசித்தல்/ வேலை செய்தல், சில தொழில்கள், கர்ப்பமுற்றிருத்தல் ஆகிய காரணிகள் தீவிர நோய்க்கான வாய்ப்பை அதிகரிக்கின்றன. இவற்றில் பிரதானமாக வயதில் முதிர்ந்தோராய் இருத்தலும், நீண்டகால நோய்களைக் கொண்டிருத்தலும் முக்கிய காரணிகளாக உள்ளதுடன் இவற்றின் பங்களிப்பு தொடர்பில் அதிக ஆதாரங்கள் உள்ளன. 85 வயதிற்கு மேற்பட்டோரில் அதிதீவிர நோய்க்கான வாய்ப்பு மிக அதிகமாக உள்ளது.

பின்வரும் நோய்களைக் கொண்டுள்ள எவ்வயதினரும் ஏனையோரை விட தீவிர நோய்க்கான வாய்ப்பை அதிகம் கொண்டுள்ளனர்:

  • குருதி தொடர்பான நோய்கள். உ-ம்: தலசீமியா
  • புற்றுநோய்
  • இருதயச் சுற்றோட்டத்துக்குரிய நோய்கள் மற்றும் மூளைச் சுற்றோட்டத்துக்குரிய நோய்கள் (உ-ம்: மாரடைப்பு, பக்கவாதம்)
  • அதிக குருதியழுத்தம்
  • தீவிர இதய நோய்கள் (உ-ம்:இதய செயலிழப்பு)
  • நீண்டகால சிறுநீரக நோய்
  • நிர்ப்பீடனத் தொகுதிக் குறைபாடுகள் (உ-ம்: என்பு மச்சையுடன் தொடர்புபட்ட நோய்கள்/ குறைபாடுகள், மச்சை இடமாற்றம், HIV-AIDS, ஸ்டிரொய்ட்/ நிர்ப்பீடனத்தொகுதி வலுக்குன்றச் செய்யும் வேறு மருந்துகளின் பாவனை)
  • ஈரல் நோய்கள்
  • டிமென்ஷியா போன்ற நரம்புத் தொகுதி நோய்கள்
  • அதிக உடற்பருமன் (BMI>30)
  • ஆஸ்துமா போன்ற நீண்டகால சுவாச நோய்கள்
  • வகை-2க்குரிய நீரிழிவு நோய்

இவற்றைத்தவிர புகைப்பிடித்தல் நேரடியாகவும், நீண்டகால சுவாச நோய்களை, புற்றுநோய்களை ஏற்படுத்துவதாலும் கோவிட்-19இன் தீவிர நோயை உண்டாக்கும் வாய்ப்பை அதிகரிக்கின்றது.

மற்றைய சிறுவர்களை விட நரம்பியல், மரபியல், அனுசேபக் குறைபாடுகளைக் கொண்டுள்ள சிறுவர்களும், பிறப்பால் உண்டாகிய இருதய நோய்களுடைய சிறுவர்களும் தீவிர நோயைப் பெறும் வாய்ப்பை அதிகம் கொண்டுள்ளனர்.

கோவிட்-19இன் நீண்டகால விளைவுகள்

கோவிட்-19 பிரதானமாக நுரையீரல்களைப் பாதித்தாலும் அதன் பாதிப்பு மற்றைய அங்கங்களையும் விட்டுவைப்பதில்லை. அத்துடன் வயது முதிர்ந்தோரும், ஏனைய நீண்ட கால நோயுடையோரும் ஏனையோரை விட வலுக்குறைந்த உடலைக் கொண்டுள்ளதால், அவர்களிடம் அதிக காலம் கோவிட்-19இன் அறிகுறிகள் காணப்படலாம்.

கோவிட்-19ஆல் பாதிக்கப்படும் பிரதான அங்கம் நுரையீரலாகும். கோவிட்-19ஆல் நுரையீரலில் நுரையீரல் தொற்று/ நியூமோனியா நிலை ஏற்படும். இதனால் உண்டாகும் சுவாசச்சிற்றறைகளின் பாதிப்பு நீண்ட காலம் இருக்கலாம். நியூமோனியாவில் உண்டாகும் நார்டைதல் (scarring) காரணமாக நீண்ட காலத்துக்கு சுவாசிப்பதில் சிரமம் காணப்படலாம்.

கோவிட்-19 தொற்று நீங்கி பல மாதங்களின் பின்னும் இதயத் தசைகளில் பாதிப்பு தொடர்கின்றமை கதிரியக்கப் படமெடுக்கும் ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இது தீவிர அறிகுறிகளைக் கொண்டுள்ளோரில் மட்டுமலாமல் குறைவான அறிகுறிகளைக் கொண்டிருந்தோரிலும் கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறான பாதிப்புகளால் இதயம் செயலிழக்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

குலைன்-பாரே சின்ட்ரோம், பக்கவாதம் போன்ற நரம்புத் தொகுதியுடன் தொடர்புபட்ட பாதிப்புகள் முதியோரில் மட்டுமல்லாமல் இளையோரிலும் அவதானிக்கப்பட்டுள்ளது. நோய்த்தொற்றிலிருந்து விலகிய பின்னர் கூட இதன் தாக்கத்தால் பார்க்கின்சன் நோய், அல்ஸைமர் நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

அத்துடன் நோய்த்தொற்று உள்ள போது இரத்தம் உறையும் தன்மை அதிகரிக்கும். இதனால் குருதிக்கலன்களுக்குள் இரத்தம் உறைவதால் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நீண்டகால நோய்கள் ஏற்படலாம். இதயம், மூளை மட்டுமலாமல் ஈரல், சிறுநீரகங்களுக்குரிய குருதிக்கலன்களும் அடைக்கப்பட்டு வேறு பல நீண்ட கால பாதிப்புகளும் ஏற்படலாம்.

உடல் களைப்பு, இருமல், சுவாசச்சிரமம், தலைவலி, மூட்டுவலி என்பன நீண்டகாலம் காணப்படலாம். இவற்றை தீவிரமாகக் கொண்டுள்ளோர் நீண்ட காலம் வென்டிலேட்டர்களின் உதவியுடன் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையளிக்கப்படுவதால், அதிர்ச்சிக்குப் பின்னரான மன அழுத்தக் கோளாறையும், மனச்சோர்வையும் உருவாக்கிக்கொள்வதற்கான வாய்ப்பை அதிகம் கொண்டுள்ளனர்.

எனினும் இது ஒரு புதிய வைரஸ் என்பதால் பல நீண்டகால பாதிப்புகள் இதுவரை கண்டறியப்படாமல் உள்ளன. எனினும் ஸார்ஸ் (SARS) தொற்று போலவே இதன் நீண்ட கால விளைவுகளும் இருக்கும் என விஞ்ஞானிகளும், ஆய்வாளர்களும் ஊகித்துள்ளனர். கோவிட்-19இலிருந்து விரைவாகக் குணமடையும் நோயாளிகளிலும் அதன் நீண்டகாலப் பாதிப்புகள் தீவிரமாக இருக்க வாய்ப்புள்ளது. எனவே கோவிட்-19 தொற்றாமல் தடுப்பது மிகவும் முக்கியமானதாகும். எப்போதும் குணப்படுத்தலை விட தடுத்தல் சிறந்தது.

படியேற்ற வளர்ச்சி என்றால் என்ன?

இலங்கையில் முதல் 100 நோயாளிகள் அறிக்கையிடப்பட 54 நாட்களும், இரண்டாவது 100 நோயாளிகள் அறிக்கையிடப்பட 19 நாட்களும், மூன்றாவது 100 நோயாளிகள் அறிக்கையிடப்பட 8 நட்களும், நான்காவதற்கு 4 நாட்களும், ஐந்தாவதற்கு 2 நாட்களும் எடுத்தது. இதை வாசித்தவுடன் எமக்கு தோன்றும் முதலாவது கேள்வி- ஏன் கோவிட்-19 தொற்றின் நோயாளிகளின் எண்ணிக்கை இவ்வளவு சடுதியாக அதிகரிக்கின்றது?

இதற்குக் காரணம் பெருந்தொற்றுக்களின் படியேற்ற வளர்ச்சித் தன்மையாகும். படியேற்ற வளர்ச்சி என்றால் என்ன?

ஒரு எளிமையான உதாரணம் மூலம் இதை விளங்கிக்கொள்ள முயற்சி செய்வோம். களைகள் எதுவுமற்ற ஒரு குளத்தை கற்பனை செய்யுங்கள். அங்கு ஆக்கிரமிப்புத் தாவரமான சல்வீனியா ஒன்றை உட்புகுத்தி விடுவோம். இந்த சல்வீனியா தாவரங்களில் ஒன்று தன்னைப் போன்ற இன்னொன்றை ஒரு நாளில் உருவாக்கக்கூடியது என எடுத்துக்கொள்க. எனவே இரண்டாம் நாள் 2 தாவரங்களும், மூன்றாம் நாள் 4 தாவரங்களும், நான்காம் நாள் 8 தாவரங்களும் என பெருகிச் செல்லும். முழுக் குளத்தையும் நிரப்ப சல்வீனியா தாவரங்கள் 60 நாட்களை எடுத்துக் கொண்டன எனக் கருதுக.

தற்போது இரண்டு கேள்விகள் ஊடாக இந்த விடயத்தை ஆராய்வோம்.

முதல் கேள்வி- அரைவாசி குளம் நிரப்பப்பட எவ்வளவு நாட்கள் எடுத்தது? முதல் சிந்தனையில் 30 நாட்கள் எனத் தோன்றினாலும், உண்மையில் 59 நாட்கள் எடுத்திருக்கு. சல்வீனியா இரட்டிப்படைய ஒரு நாள் எடுத்துக்கொள்ளும் என்பதிலிருந்து இது தெளிவாகின்றது. இரண்டாவது கேள்வி- குளத்தின் 1% மூடப்பட எத்தனை நாட்கள் எடுத்தது? இதற்கான விடையைக் கண்டுபிடிப்பதற்கு நாம் பின்னாலிருந்து எண்ண வேண்டும். அரைவாசி குளம் நிரம்ப-59 நாட்கள், கால்வாசிக்கு- 58 நாட்கள் என எண்ணிச் சென்றால், விடையாக 53க்கும் 54க்கும் இடைப்பட்ட ஒரு பெறுமானம் கிடைக்கும். குளத்தின் 1% மூடப்பட 53-54 நாட்கள் எடுக்கின்றதென்பதும், மீதியிருக்கும் 99% குளத்தை நிரப்ப வெறும் 7 நாட்களே எடுக்கின்றதென்பதும் மிகவும் ஆச்சரியமான விடயங்களாகும். இதுவே சல்வீனியா தாவரங்களின் படியேற்ற வளர்ச்சியாகும்.

கோவிட்-19 பெருந்தொற்றும் சல்வீனியா தாவரங்கள் போன்றதாகும். ஆரம்ப கட்டங்களில், மிகக்குறைவான நோயாளிகளே பதியப்படும் போது அதிகாரிகள் சமூக இடைவெளி, ஊரடங்கு, தனிமைப்படுத்தல் என அளவுக்கதிகமாகச் செயற்படுவது போலத் தோன்றும். ஆனால் இந்த நடவடிக்கைகள் அனைத்தும் கோவிட்-19 படியேற்ற வளர்ச்சி மூலம் குறுகிய காலத்தில் பல்லாயிரம் உயிர்களைக் காவு கொள்வதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளாகும் என்பதை நாம் அனைவரும் மனதில் கொள்ள வேண்டும்.

ஏன் வளர்ச்சியடைந்த நாடுகளிலும் கோவிட்-19 இறப்புக்கள் அதிகமாக உள்ளது?

இரண்டு வகை பெருந்தொற்றுக்கள் உள்ளன- வேகமான பெருந்தொற்றுக்கள், மெதுவான பெருந்தொற்றுக்கள். தினமும் பதிவாகும் நோயாளிகளின் எண்ணிக்கை வேகமான பெருந்தொற்றுக்களில் அதிகமாகக் காணப்பட்டாலும், அவை குறுகிய காலத்துக்கே நீடிக்கும். மெதுவான பெருந்தொற்றுக்களில் தினமும் பதிவாகும் நோயாளிகளின் எண்ணிக்கை குறைவாகக் காணப்பட்டாலும், அவை நீண்ட காலத்துக்கு நீடிக்கக்கூடியவை. ஒரு பெருந்தொற்றின் இறுதி விளைவு அது வேகமானத அல்லது மெதுவானதா என்பதில் பெரிதும் தங்கியுள்ளது.

வேகமான பெருந்தொற்றுக்களின் மிகப்பெரிய ஆபத்து அவற்றின் தினமும் பதிவாகும் அதிக நோயாளிகள் எண்ணிக்கையாகும். அவ்வெண்ணிக்கை அந்த பிரதேசத்துக்குரிய அல்லது நாட்டிற்குரிய மொத்த சுகாதார சேவை வலுவைக் கடந்துவிட்டால் சுகாதார சேவை கோவிட் அலையில் மூழ்கடிக்கப்படலாம். அவசர சிகிச்சை கட்டில்களின் எண்ணிக்கை, சுகாதார சேவை ஊழியர்களின் எண்ணிக்கை, கருவிகள் மற்றும் உபகரணங்களின் எண்ணிக்கை போன்றவற்றில் மொத்த சுகாதார சேவை வலு தங்கியுள்ளது. வளர்ச்சியடைந்த நாடுகளில் மொத்த சுகாதார வலு அதிகமாகக் காணப்பட்டாலும், கோவிட்-19 தொற்று படியேற்ற வளர்ச்சியைக் காண்பிப்பதாலும் அது வேகமான பெருந்தொற்று என்பதாலும், அந்நாடுகளின் சுகாதார சேவை வலுவும் மீறப்பட்டு அதிக இறப்புக்கள் பதிவாகின்றன. எனவே இலங்கை ஒரு வளர்ச்சியடைந்து வரும் நாடு என்பதால் இந்த இடர் நிகழாமல் இருப்பதை நாம் உறுதிப்படுத்த வேண்டும். முகக்கவசம் அணிதல், கைகளை கழுவுதல், சமூக இடைவெளியைப் பேணுதல் போன்ற எளிமையான வழிகளால் எம்மால் கோவிட்-19 பெருந்தொற்ற மெதுவான பெருந்தொற்றாக மாற்ற முடியும். இதனால் குறுகிய காலத்துக்குள் அதிகளவு நோயாளிகள் உருவாவதைத் தடுத்து எமது சுகாதார சேவை வீழ்ச்சியடையாமல் பாதுகாக்க முடியும். இதனால் பல கோவி-19 இறப்புக்களையும், சுகாதார சேவையைப் பயன்படுத்தும் ஏனைய நோயளிகளின் அசௌகரியத்தையும் தடுக்க இயலும்.

"சுத்தியல் மற்றும் நடன நிகழ்வு" என்றால் என்ன?

ஒரு பெருந்தொற்றின் போது அதைக் கட்டுப்படுத்த சில கட்டுப்பாட்டு முறைகளை நாடுகளோ அல்லது பிரதேசங்களோ பின்பற்ற இயலும். இதில் ஒரு வழிமுறையே நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்தாமல், வெறுமனே நோயால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கும் முறையாகும். ஆனால் இப்போது முழு உலகுக்கும் இந்நோயை இவ்வாறு வெல்ல முடியாது என தெரிந்திருக்கும். எமது நாடு நோய் பரவலைக் கட்டுப்படுத்தாமல் சிகிச்சையை மட்டும் செய்திருந்தால், எமது நாட்டின் முழு சுகாதார முறைமையும் குறுகிய காலத்தினுள் நிரம்பி வழியும் நோயாளிகள் எண்ணிக்கையால் தரைமட்டமாக்கப்பட்டிருக்கும். எனவே இவ்வழிமுறை கோவிட்-19க்கு கொஞ்சமும் பொருந்தாது.

ஓரளவுக்கு நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுப்பது இரண்டாவது வழிமுறையாகும். இதை தணிப்பு என அழைப்பார்கள். "எம்மால் இந்நோயை முழுமையாகத் தடுக்க இயலாது. எனினும் பரவலை ஓரளவுக்குக் கட்டுப்படுத்தி தினமும் பதிவாகும் அதிகபட்ச நோயாளிகளின் எண்ணிக்கையை மட்டுப்படுத்துவதன் மூலம் சுகாதார முறைமையை செயலழக்காமல் காப்பாற்றலாம்" என்பதே இம்முறையின் அடிப்படைக் கோட்பாடாகும். பொருத்தமான பாதுகாப்பு நடைமுறைகளும், சமூக இடைவெளிக் கோட்பாடுகளும் மக்களிடையே பரப்பப்படுவதுடன், பாடசாலைகளும் பல்கலைக்கழகங்களும் மூடப்பட்டு, நோயாளிகளும் தனிமைப்படுத்தப்பட்டு இம்முறை நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இவ்வழிமுறைகளை இறுக்கமாகக் கையாளுவதன் மூலம் வரைபின் வளைவு மேலும் தட்டையாக்கப்படுகின்றது. நோயிலிருந்து மக்கள் சிறிது சிறிதாக குணமடைய மக்களிடையே கூட்டெதிர்ப்பு சக்தி (herd immunity) விருத்தியடையும். இந்த தணிப்பு முறைமையானது கோவிட்-19ஐ ஒழிப்பதுக்கு மிகவும் உகந்த சிறப்பான முறை போல தென்பட்டாலும், கோவிட்19ஐ ஒழிப்பதற்கு இம்முறையும் போதுமானதல்ல. இம்முறை போதாமைக்கு மிக முக்கியமான காரணம் வைரஸ்களின் விகாரமடையும்/ பிறழ்வடையும் தன்மையாகும். இதனால் சமூகத்தில் கோவிட்19இன் ஒரு திரிபுக்கு கூட்டெதிர்ப்பு சக்தி உருவானாலும், புதிய திரிபுகளால் தொடர்ந்து நோய்ப்பரவல் இடம்பெற்றுக்கொண்டிருக்கும். அத்துடன் இம்முறையைப் பின்பற்றிய பல நாடுகளில் முறையாக இது நடைமுறைப்படுத்தப்படாததால் மிக அதிகளவில் நோயாளிகள் பதிவிடப்பட்டனர். முக்கியமாக இத்தாலி, ஸ்பெய்ன், ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளில் இவ்வழிமுறையின் குறைபாடுகள் தெளிவாகத் தெரிகின்றன.

மூன்றாவது முறையே சுத்தியலைப் பயன்படுத்தி பின்னர் நடனத்தைக் கையாளும் முறையாகும். இதில் சுத்தியல் என்பதன் மூலம், ஆரம்ப கட்டங்களிலேயே மிக இறுக்கமான மற்றும் மிக வேகமான நோய்ப்பரவல் கட்டுப்பாட்டு நடைமுறைகள் மூலம் நோய்ப்பரவல் கட்டுப்படுத்தப்படுவது குறிக்கப்படுகின்றது. நாட்டினுள் வரும் பயணிகளை தனிமைப்படுத்தல் அல்லது தற்காலிகமாக விமான நிலையங்களை மூடுதல், ஊரடங்கை நடைமுறைப்படுத்தல், மிக இறுக்கமாக நோயாளிகளையும் அவர்களுடன் தொடர்புபட்டோரையும் தனிமைப்படுத்தல் ஆகிய செயற்பாடுகள் இவ்வழிமுறையின் சுத்தியலாக இடம்பெறுகின்றன. இவற்றை சரியாக நடைமுறைப்படுத்தினால், ஒரு சுத்தியலின் அடி போல நோயாளிகளின் எண்ணிக்கை சடுதியாக வீழ்ச்சியடையும். எனினும் அனைவரும் இச்செயற்பாடுகளை முழுமையாகப் பின்பற்றத் தவறுவதால், நோயாளி எண்ணிக்கை வரைபில் ஒரு நடனம் போல வரைபு பூச்சியத்துக்கு வராமல் சிறிதளவு நோயாளிகள் எண்ணிக்கையுடன் காணப்படும். இவ்வாறான நிலை சென்ற வருடம் செப்டம்பர் மாதம் வரை காணப்பட்டது.

இம்முறை மிகவும் அசௌகரியமானதுடன் கடினமானதென்றாலும், இதில் சில முக்கிய அனுகூலங்கள் உள்ளன: 1. நோயாளிகளின் எண்ணிக்கை சடுதியாக வீழ்ச்சியடைவதால், நாட்டின் சுகாதார முறைமையால் தொடர்ந்தும் வினைத்திறனுடன் இயங்க முடியும். 2. நோயாளிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், நோயாளிகளுடன் தொடர்புபட்டோரை கண்டறிந்து தனிமைப்படுத்தி, நோயைக் கட்டுப்படுத்துவது இலகுவாக இருக்கும். 3. சுகாதார முறைமையை அடுத்து வரும் அலைகளுக்குத் தயார்ப்படுத்த அதிக காலம் கிடைக்கும். 4. நோய் பற்றிய சரியான அறிவை வளர்த்துக்கொள்ளவும், நோய்க்கான சிகிச்சைகளை விருத்தி செய்யவும், தடுப்பூசிகளை உருவாக்கவும் போதியளவு நேரம் கிடைக்கும்.

சீனா, தென் கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் இம்முறையைக் கையாளுவதன் மூலம் ஓரளவு வெற்றிகரமாக நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்தின. எமது நாட்டிலும் கடந்த வருடத்தின் மார்ச் முலம் செப்டம்பர் வரை இம்முறை ஓரளவு வெற்றியளித்தது. எனினும் கடந்த ஒக்டோபர் மாதம் முதல் பதிவாகும் நோயாளிகளினதும், இறப்புக்களினதும் எண்ணிக்கைகள் சடுதியாக அதிகரித்தன. இது எம் நாட்டை தாக்கிய இரண்டாவது அலையாகக் கருதப்பட்டது.

வைரஸின் புதிய திரிபுகள்

கோவிட்-19 தோற்றம் பெற்றதிலிருந்து இதுவரை மில்லியன் கணக்கான உயிர்களைக் காவுகொண்டுள்ளது. தற்போது சோதனைகளில் வினைத்திறன் நிறைந்த தடுப்பூசிகளின் விருத்தியும், அவற்றால் உலகளாவியரீதியில் சாத்தியமாகியுள்ள தடுப்பூசித் திட்டமும் தொடர்ந்து துன்பத்தில் வாடும் மக்கள் மனதில் நம்பிக்கை ஒளியை ஏற்படுத்தியுள்ளன. எனினும் புதிய வைரஸ் திரிபுகளின் வருகை இந்நம்பிக்கையில் சந்தேகத்தைத் தோற்றுவித்திருப்பதுள்ளது. இப்புதிய திரிபுகள் தடுப்பூசிகளுக்கு எதிர்ப்புத் தன்மை மிகுந்தனவாக இருக்கலாமென்பதும், அவை பரவுந்தன்மையும், கொல்லுந்தன்மையும் அதிகாமாகக்கொண்டிருக்கலாமென்பதும் இக்கவலைகளுக்குக் காரணங்களாகும்.

B.1.1.7 பரம்பரைக்குரிய திரிபு முதன்முதலில் 2020 செப்டெம்பர் 9ஆம் திகதி ஐக்கிய இராச்சியத்தில் கண்டறியப்பட்டது. இதனாலேயே பயணக்கட்டுப்பாட்டு நடைமுறைகள் ஐக்கிய இராச்சியத்தின் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு வினைத்திறனுடன் செயற்பட்டன. இத்திரிபானது 2020 டிசெம்பர் 18ஆம் திகதியில் "கவலைக்குரிய திரிபாக" அறிவிக்கப்பட்டது. இத்திரிபானது வூகானில் கண்டறியப்பட்ட ஆரம்பத் திரிபை விட 70% அதிகம் பரவுந்தன்மையுடையது எனக் கண்டறியப்பட்டுள்ளது. செப்டெம்பர் 2020இல் இத்திரிபு நான்கிலொரு பங்கே வகித்தாலும், 2020இன் டிசெம்பர் மத்திய பகுதியில் நோயாளிகளின் மூன்றில் இரண்டு பங்கானோர் இத்திரிபினால் பீடிக்கப்பட்டிருந்தனர். இதனால் ஐக்கிய இராச்சியத்தில் நான்காம் அடுக்கு முடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டது. உணவகங்கள், உடற்பயிற்சி நிலையங்கள், நீச்சல் தடாகங்கள், பொழுதுபோக்கு சார்ந்த நிலையங்கள் உட்பட அத்தியாவசியமற்ற சேவைகள் அனைத்தும் மூடப்பட்டன. மக்கள் அனிவரும் வீடுகளிலேயே தங்கியிருக்க அறிவுறுத்தப்பட்டதுடன், மிக அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் வெளியில் செல்ல அனுமதிக்கப்பட்டனர். இந்த புதிய திரிபுக்கு வருடம்,மாதம், ஒரு எண் என்பனவற்றை உள்ளடக்கிய குறியீடாக VOC 2020/12/01 என ஐக்கிய இராச்சியத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது வரை இந்த திரிபு 75க்கும் மேற்பட்ட நாடுகளில் அடையாளங்காணப்பட்டுள்ளது. ஐக்கிய அமெரிக்காவில் B.1.1.7 திரிபுக்குரிய முதல் நோயாளி 2020 டிசெம்பரில் அடையாளங்காணப்பட்டதுடன், இலங்கையில் 2021 ஜனவரி 2ஆம் திகதி அடையாளங்காணப்பட்டார். பல பிறழ்வுகளால் இத்திரிபின் வீரியம் அதிகரித்திருக்கலாம் என கருதப்படுகின்றது. இந்த பிறழ்வுகள் காரணமாக வைரஸ் பரவுந்தன்மை அதிகரிப்பதுடன், மக்களின் எதிர்ப்புசக்தியிலிருந்து விடுபடுந்தன்மையும் அதிகரிக்கின்றது. எனினும் இதற்கான ஆதாரங்கள் இன்னும் முழுமையாகக் கிடைக்கப்பெறவில்லை. அத்துடன் நோயறிகுறிகளின் தன்மையிலோ, தீவிரத்திலோ, காலத்திலோ எந்த மாற்றங்களுமில்லை என சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனினும் B.1.1.7 இன் பரவுந்தன்மை ஆரம்பத் திரிபை விட அதிகமென்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அத்துடன் ஃபைஸர் மற்றும் ஒக்ஸ்பேர்ட் அஸ்ரா ஸெனகா தடுப்பூசிகள் இத்திரிவுக்கெதிராக வினைத்திறனுடன் செயலாற்றுவதாக ஆரம்ப அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

எனவே நாம் கவலைப்பட வேண்டுமா? ஆம், இல்லை இரண்டுமே இதற்கு விடையாகும்.

வேகமாக மாறும் சூழ்நிலைகள் காரணமாக புதிய திரிபுகளுடன் தொடர்புபட்ட ஆதாரங்கள் முடிவுகளற்றனவாக உள்ளன. கொரோனா வைரஸ் உள்ளடங்கும் RNA வைரஸ்கள் புதிய RNAஐ உருவாக்கும் போது தோன்றும் பிறழ்வுகளை திருத்தும் பொறிமுறையைக் கொண்டிருக்காததால், அவற்றில் புதிய பிறழ்வுகள் தொடர்ந்து உருவாகிக்கொண்டிருக்கும். எனினும் இது இயற்கையானது என்றதாலும் இது தொடர்பில் விஞ்ஞான சமூகம் நீண்ட காலத்தைக் கொண்டிருப்பதாலும், புதிய திரிபுகளுடன் தொடர்புபட்ட சவால்களை எதிர்கொள்வது புதிதல்ல. சாரம்சமாக B.1.1.7 திரிபானது அதிக பரவுந்தன்மையைத் தவிர வேறு விதங்களில் ஆரம்பத் திரிபிலிருந்து வேறுபட்டிருக்கவில்லை. எனினும் இனிவருங்காலங்களில் திரிபுகள் கொண்டுவரக்கூடிய சவால்கள் தொடர்பில் காலத்தால் மட்டுமே பதிலளிக்க முடியும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:G.Kiruthikan/மணல்தொட்டி&oldid=3271533" இலிருந்து மீள்விக்கப்பட்டது