பயனர்:Abraham lincoln director

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நெஞ்சை தொடும்... உண்மை சுடும்...

ஆவணபட இயக்குனர் எம்.பி.ஆபிரகாம் லிங்கன்'


பழம் பெரும் சாதனைகளோடு பாரம்பரியமிக்க சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் 50வது பொன்விழா ஆண்டில் இந்த மன்றத்தில் உறுப்பினராக, தேசிய கவுன்சில் மெம்பராக பணியாற்றிய அந்த சந்தோஷமான தருணங்களை நினைவு கூர்ந்தபடி உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். பத்திரிகை நிருபராக பணியை தொடங்கி பல்வேறு நாளிதழ்கள், வாரஇதழ்களில் பணியாற்றி திரைத்துறையில் கால் பதித்திருக்கிற பலரில் நானும் ஒருவன். காண்கிற, நடக்கிற சம்பவங்களை பார்த்து அதை எழுத்து வடிவில் எண்ணற்ற மக்களை கவரக்கூடிய செய்தியாக்கும் திறமை படைத்த பத்திரிகையாளர்கள் ஏன் நல்ல தகவல்களை, வரலாற்று நிகழ்வுகளை, மறைக்கப்பட்ட உண்மைகளை காட்சி வடிவில் திரைப்படமாகவோ, ஆவணபடமாகவோ எடுத்து உலகுக்கு வெளிப்படுத்தலாமே என்ற எண்ணத்தில் திரையுலகில் அடியெடுத்தேன்.

அப்பா புலவர் பண்பரசன் ஒரு வாத்தியாரு... அந்த வேலையை பார்த்தாலும் தமிழ் உணர்வு, எழுத்து பணி, கவியரங்கம், பட்டிமன்றம்னு போறவரு... சில சமயம் நானும் கூட போவேன்... ‘பொன்மனம்’, ‘தினத்தந்தி’ பத்திரிகைக்கு செங்கல்பட்டு மாவட்ட செய்திகளை அப்பாதான் குடுத்துகிட்டிருந்தாரு... இப்ப இருக்குற மாதிரி இ&மெயில், இன்டர்நெட் வசதி, கம்ப்யூட்டர் வசதி எல்லாம் அப்ப இல்லை... அப்பா எழுதி தர்ற செய்திகளை எடுத்துகிட்டு தினத்தந்தி, மாலைமலர் ஆபீசுக்கு போய் குடுத்துட்டு வருவேன்... மறுநாளோ அதுக்கு அடுத்த நாளோ அந்த செய்தி பத்திரிகையில வரும்... 1992ன்னு நெனைக்கிறேன்... ஒரு நாள் அப்படி செய்தி குடுக்க போகும்போது அப்பாவும் கூட வந்திருந்தாரு... தினத்தந்தியில அப்ப திருவடிதான் ஆசிரியரா இருந்தாரு... என்னை பார்த்ததும்... என்ன புலவரே உம் பையனா... பேசாம ஆவடி ஏரியாவுக்கு இவனை போட்டுடலாம்... விளம்பரம் வாங்கிட்டு ஏரியாவுல நடக்குறதை எழுதி குடுக்கச் சொல்லுங்கன்னு சொல்லிட்டாரு... அப்படித்தான் நான் பத்திரிகை நிருபரா மாறினேன்...

தினத்தந்தி ஏரியா எழுத்தரா வேலைக்கு சேர்ந்து 3 நாள் இருக்கும்... தினத்தந்தி, மாலைமலர் பத்திரிகையில ஏரியா பாக்கிற நிருபர்களை ‘எழுத்தர்’ன்னுதான் குறிப்பிடுவாங்க... ராத்திரி நல்ல தூக்கத்துல இருந்தேன். அப்போ திடீர்னு வீட்டுக்கதவுவை யாரோ தட்டினாங்க... யார்னுபோய் பாத்தா திருநின்றவூர் திமுக நகர செயலாளர் பக்தன் வீட்டுல வாடகைக்கு இருக்குறவங்க பதட்டத்துல நின்னுகிட்டிருந்தாங்க... என்னன்னு விசாரிச்சா ‘பக்தனை யாரோ வீடு புகுந்து வெட்டிட்டாங்க... ஆஸ்பிட்டலுக்கு கூட்டிகிட்டு போறதுக்கு கூட யாரும் வரமாட்டேங்குறாங்க... கொஞ்ச வாங்க தம்பின்னு கூப்பிட்டாங்க... எங்கப்பா புலவர் பண்பரசன் செங்கல்பட்டு மாவட்ட நிருபரா இருந்தாரு, அதோட எனக்கும் ஏரியா ரிப்போர்ட்டர் அடையாளம் இருந்ததால எந்த யோசனையும் பண்ணாம அங்க போய் வெட்டுப்பட்டவரை தூக்கி கார்ல போட்டுகிட்டு, அந்த காரை நானே ஓட்டிகிட்டு சென்னை பெரிய ஆஸ்பத்திரில போய் சேர்த்தேன். ஏரியா நிருபரா வேலைக்கு சேர்ந்த சில நாள்ளயே நான் சந்தித்த ரத்த சகதியான சம்பவம் அது.

தினத்தந்தி, மாலைமலர், கதிரவன், மாலைமுரசு, பொன்மனம், தினசரி, தினத்தூது இப்படி பல பத்திரிகையில ஏரியா நிருபரா வேலை பாத்திருக்கேன். தினபூமி பத்திரிகையில சென்னையில வேலை பாத்துகிட்டிருந்த நேரம் முதல்ல முதல்ல சென்னையில நிருபரா வேலைக்கு சேர்ந்ததும் அந்த நிருபருக்கு பணி ஒதுக்குற இடம் சென்னை மாநகராட்சியும், ஜிஎச் ஆஸ்பத்திரியும்தான். காலையில வீட்டுலந்து ஆபீஸ்வந்து கையெழுத்து போட்டுட்டு நேரா ஜிஎச் ஆஸ்பத்திரிக்கு போய்... ஒவ்வொரு பிரிவா போய் பாத்துட்டு கடைசியா மார்ச்சுவரிக்கும் போய் பாத்து ஏதாவது நியூஸ் இருக்கான்னு விசாரிச்சிட்டு மாநகராட்சி பிரஸ் ரூம் போயிட்டு ஆபீஸ் போறது வழக்கமா நடக்குறதுதான்... அன்னிக்கும் அப்படித்தான் ஜிஎச்ல வழக்கமான ரவுண்ட்ஸ் முடிச்சிட்டு டீன் ரூமுக்கு போயிகிட்டிருந்தேன்... வழியில ஆஸ்பத்திரி குப்பையை எல்லாம் போட்டு எரிக்கிற இடம் ஒண்ணு இருந்துச்சி... (இப்ப எல்லாம் மாறிப்போச்சி). அங்க குவிஞ்சிகிடந்த குப்பையில யாரோ ஒருத்தரு கை கால முடக்கிட்டு படுத்துகிடந்தாரு... கிட்டத்தட்ட பிணம் மாதிரி... அதிர்ச்சியில ஓடிப்போய் பார்த்தா அந்த நபருக்கு உயிர் இருந்துச்சி... போட்டோகிராபரை வரச் சொல்லி போட்டோ எடுத்துட்டு டீன் ரூமுக்கு போனா அங்க யாருமே இல்ல... ஏதோ மீட்டிங் போயிட்டாங்களாம்... குப்பையில கிடந்தவரு யாருன்னு விசாரிச்சா... வடசென்னையில ஒரு நேரத்துல பெரிய தாதாவாம்... ஆட்டம் அடங்குன பிறகு உடம்பெல்லாம் வியாதி... சுத்தம் பண்ண முடியாத படி கழிஞ்சிகிட்டேயிருந்திருக்காரு... நல்ல நாள்லயே வேலை பாக்க காசுகேக்குற அரசு ஆஸ்பத்திரியில இந்தமாதிரி ஆளை வைச்சிருப்பாங்களா... ராத்திரியோட ராத்திரி தூக்கி குப்பையில போட்டுட்டாங்க... குளிர்ல விறைச்சி செத்துட்டா மார்ச்சுவரிக்கு அனுப்பிடலாம்னு... வேக வேகமா அந்த நியூசை எடுத்துகிட்டு ஆபீஸ் போய் பேப்பர் பேப்பரா எழுதி ‘குப்பையில் தூக்கி வீசப்பட்ட வடசென்னை தாதா ஜிஎச் மருத்துவமனையில் கண்ட அதிர்ச்சி’ அப்படீன்னு தலைப்பு போட்டு சீப் ரிப்போர்ட்டர் முத்துகிருஷ்ணன்கிட்ட குடுத்தா... ‘‘யோவ்... என்னய்யா நியூஸ் இது... அசெம்பிளி நடந்துகிட்டு இருக்குது... இந்த நியூசை போட்ட முதல்வர் டென்ஷன் ஆயிடுவாங்க... அப்புறம் விளம்பரமே வராது... போய்யா... போய் வேற நியூஸ் இருந்தா குடுன்னு என் கண்ணு முன்னாடியே அந்த நியூஸ் பேப்பர் கட்டை கசக்கி குப்பையில் போட்டார்...

அசராத நான் என் நண்பர் சுரேஷ் கிட்டயும், கோலப்பன் கிட்டயும் இந்த மேட்டரை சொன்னேன்... மறுநாள் பாத்தா தினமணியில பெருசா போட்டிருந்தாங்க... சட்டசபையில அப்ப முதல்வரா இருந்தது ஜெயலலிதா. சட்டசபையில ஒரே அமளி...

2001 சட்டசபை தேர்தல் நேரம்... சின்னக் கட்சி எல்லாம் யாரோட கூட்டு வைக்கலாம்னு தீவிர ஆலோசனை நடத்திகிட்டிருந்த நேரம்... காலையில அதிமுகவுல போய் பேசுனா... ராத்திரி திமுகவுல போய் பேசுவாங்க... அப்ப நான் சின்ன கட்சிகளை பாத்துகிட்டிருந்தேன்... பாமக வளர்ந்துகிட்டிருந்த நேரம் அது... அந்த தேர்தல்ல அதிமுக பக்கம் பாமக கூட்டு சேரப்போகுதுன்னு நான் நியூஸ் போட்டேன்... அப்பல்லாம் சன் டிவியில காலை நியூஸ்ல பத்திரிகையில வந்த செய்திகளை எடுத்து ஸ்கேன் பண்ணி காட்டுவாங்க... அன்னிக்கு நான் குடுத்த ‘அதிமுகவுடன் பாமக கூட்டணி’ செய்தி வந்துடுச்சி... உடனே ஸ்ரீலேகா ஓட்டல்ல டாக்டர் ராமதாஸ் அவசர பிரஸ்மீட் வைச்சார்... பிரஸ்மீட்ல வேற எதைப்பத்தியும் சொல்லல... தினபூமி பேப்பர்ல வந்த கூட்டணி செய்தி தப்பு... நாங்க யாரோட கூட்டணின்னு இன்னும் முடிவு பண்ணலன்னு சொல்லிட்டு என்னைய பாத்து யார் இப்படி பொய் செய்தி போடச் சொன்னாங்கன்னு கேட்டாரு... நான் பதில் பேசலாம்னு நினைக்கும்போது தலித்எழில்மலை என்னை ‘தம்பி பிரஸ்மீட் முடிஞ்சதும் இருங்க தம்பி அப்ப பேசிக்கலாம்னு’ சொல்லிட்டாரு... மறுநாள் எல்லா பேப்பர்லயும் ‘பாமக கூட்டணி முடிவாகவில்லை&ராமதாஸ்’ன்னு நியூஸ் வந்தது. எங்க ஆபீசுக்கு ‘தப்பா நியூஸ் போட்டு கட்சி பேரை கெடுத்துட்டீங்க. மறுப்பு செய்தி போடுங்கன்னு ஒரு வக்கீல் நோட்டீசு அனுப்பிட்டாங்க...’ அந்த நியூஸ் வந்த மறுநாள் போயஸ்கார்டன் போய் வெளிய வந்த டாக்டர் ராமதாஸ் பாமக&அதிமுகவுடன் கூட்டணி முடிவு செய்துள்ளதுன்னு சிரிச்சிகிட்டே பேட்டி குடுத்தாரு... அன்னிக்கு மாலையில அதே ஸ்ரீலேகா ஓட்டல்ல பிரஸ் மீட் முடிஞ்சதும் என்னை மட்டும் இருக்கச் சொல்லிட்டு சபாரி சூட் ஒரு செட் ஒரு கவர்ல போட்டு என் கையில வைச்சிட்டு ‘தம்பி அந்த நியூசை யார் சொன்னாங்கன்னு’ டாக்டர் கேட்டதும்... அந்த துணி கவரை அவர் கையிலயே திருப்பி குடுத்துட்டு ‘டாக்டர் நியூஸ் உண்மை அதனால அது எப்படி கிடைச்சுதுன்னு ஆராயவேணாம்னு’ சொல்லிட்டு ஆபீஸ் திரும்பிட்டேன்...

ஆபீஸ் வந்ததும் எங்க சீப் முத்துகிருஷ்ணன் ‘தம்பி பாமக இனிமே நீங்க பாக்க வேணாம்... கம்யூனிஸ்ட் கட்சிகளை மட்டும் பாத்தா போதும்னு’ சொல்லிட்டாரு... ஏன்னா பாமக அதிமுகவோட கூட்டணி போட்டுடுச்சே... அதிமுக அவர் பார்த்த பீட்...

அந்த தினபூமியில என்னோட பரமேஸ்வரன்னு ஒரு பத்திரிகையாளர் வேலை பாத்தாரு... தமாகா அவர் பார்த்த பீட். மூப்பனார் தமிழ்ல பேசுறதையே சன் டிவியில கீழ் பகுதியில தமிழ்ல டைப் பண்ணி ஓடவிடுவாங்க... அந்தளவுக்கு அவர் பேசுற தமிழ் டக்குன்னு யாருக்கும் புரியாது... ஆனா, இந்த நிருபர் பரமேஸ்வரனுக்கு மட்டும் மூப்பனார் பேசுன வார்த்தைகள் அத்துப்படி... அவர் பேட்டி முடிஞ்சதும்... என்ன சொன்னாருன்னு இவர் தனியா எல்லாருக்கும் சொல்லுவார்... வெளியூர்லந்து வந்து சென்னையில ரூம் எடுத்து தங்கியிருந்தாரு... தீபாவளி நேரம் ஊருக்கு போயிட்டு வர்றேன்னு சொல்லிட்டு போனாரு... திரும்பி வரவேயில்லை... விசாரிச்சா... தீபாவளிக்கு சில நாள் முன்னாடி திடீர்னு இறந்து போயிட்டாராம்... மஞ்சள்காமாலை அதிகமாகி இந்த மரணம் ஏற்பட்டுச்சாம்... பெரும்பாலும் பத்திரிகையாளர்கள் சாப்பாட்டு விஷயத்துலயும், தூங்குற விஷயத்துலயும் பெருசா கவனம் வைக்க மாட்டாங்க... அதுவும் வெளியூர்லந்து வந்து ரூம் எடுத்து தங்கியிருக்குறவங்க உடம்பு சரியில்லன்னு போனாலும் கடையில மாத்திரை வாங்கிப்போட்டுகிட்டு அப்போதைக்கு சரிபடுத்திக்க பாப்பாங்க... பரமேஸ்வரனும் பல நாள் ஜூரம் வந்தப்போ கடை மாத்திரையை போட்டுகிட்டு, பசிக்காம போனப்போ டீயும், சிகரெட்டையும் மட்டுமே புடிச்சதால உடம்புக்குள்ள வந்த மஞ்சள்காமலையை கண்டுபுடிக்க முடியாம போயிடுச்சி... ஒரு நல்ல நிருபரை இல்ல நண்பரை திடீர்னு இழந்துட்டது இன்னமும் மறக்க முடியாம போயிருக்கு...

தினபூமியிலந்து வெளிய வந்து தினமலர்ல வேலைக்கு சேர்ந்தேன்... நைட் டூட்டி மட்டும்தான் அப்ப குடுத்தாங்க... தேர்தல் நேரம் வேற... 6 மாசம் இரவு நிருபரா இருந்தேன்... தினத்தந்தியில நான் வேலை பார்க்கும்போது மாசா மாசம் ஏரியா எழுத்தர்களை எல்லாம் அழைச்சி ஆசிரியர் திருவடி மீட்டிங் போடுவாரு... அதுல எப்படி நியூஸ் எழுதனும்... ஒரு கத்தி குத்து கொலை செய்திய எழுதுறதா இருந்தா ‘சதக்... சதக்’ என கத்தியால் குத்தி கொன்றான்னு எழுதணும்... வெட்டிக்கொன்ற செய்தியா இருந்தா... ஓட ஓட விரட்டி வெட்டினான்... ஐயோ அம்மா என கதறியபடியே கீழே விழுந்தான்’னு நேர்ல பாத்தமாதிரி எழுதணும்னு சொல்லி குடுப்பாரு... அங்க கத்துகிட்ட மாதிரி தினமலர்ல நியூஸ் எழுதி குடுத்தா... ‘அதென்ன கொலை பண்ணும்போது சதக்... சதக்னு சத்தம் வருமா... என்ன நியூஸ் எழுதுறீங்கன்னு அவங்க பாணியில செய்தி எழுத சொன்னாங்க... ஒவ்வொரு பத்திரிகையும் அவங்களுக்கு தனி பாணி வைச்சிகிட்டிருக்குன்னு அப்பத்தான் எனக்கு புரிந்தது... 6 மாசமா நைட் டூட்டி மட்டுமே பாத்துகிட்டிருந்த என்னை திடீர்னு ஒருநாள் பகல் பணிக்கு மாத்தினதோட கல்வித்துறை பீட் ஒதுக்குனாங்க... அதுல கொஞ்சம் விவரம் ஆகும் நேரம் திடீர்னு ஆஸ்பத்திரி பீட் மாத்திட்டாங்க...

மூப்பனார் ராமச்சந்திரா ஆஸ்பத்திரியில அட்மிட் ஆகியிருந்தார்... ரொம்ப சீரியஸ்னு நியூஸ் பரவ ஆரம்பிச்சதும் எல்லா செய்தியாளர்களும் ஆஸ்பத்திரி வாசல்ல கூடிட்டோம்... உள்ளூர் விஐபிலந்து டெல்லி விஐபிவரைக்கும் வர்றதும் உள்ள போறதும்... வெளிய வந்து வருத்தமா பேட்டி குடுக்குறதும்... அந்த நாள் பொழுது ஓடிப்போனது... ராத்திரி ஆனதும் அந்த பரபரப்பு அடங்கிப்போனது... அன்னிக்கு ராத்திரி அந்த ஆஸ்பத்திரி வாசல்லயே காருக்குள்ள படுத்துகிடந்தேன்... மறுநாள் விடிச்சதும் வழக்கம்போல பரபரப்பு தொற்றிக்கொண்டது... எல்லா மீடியாவும் வந்துட்டாங்க... அன்னிக்கு ராத்திரியும் அந்த ஆஸ்பத்திரி வாசல்தான். கார்தான் வீடாயிருந்துச்சி... அதிகாலை 3 மணியிருக்கும்... அப்ப அந்த மாவட்ட எஸ்பி பொன்மாணிக்கவேல். அவர் ரவுண்ட்ஸ் வந்தாரு... வாசல்ல நிக்குற எங்க கார்கிட்ட யாருன்னு விசாரிக்க வந்தா... நானே அவர்கிட்ட போனேன்... பாத்ததும் ‘என்ன தம்பி வீட்டுக்கு போகலியா... போங்கப்பா எங்களுக்குத்தான் வீடு வாசல் எல்லாம் மறந்துடும்... ஏதாவது செய்தின்னா நானே போன் பண்றேன்... முதல்ல கிளம்புங்கன்னு அவசரப்படுத்திகிட்டே இருந்தாரு... அந்த நேரம் பாத்து அந்த ஆஸ்பத்திரி வாசல்ல ஒருத்தர் கற்பூரத்தை கொளுத்திட்டு சாமி கும்பிட்டார். நேரம் கடந்து போய் பொழுது விடியத் தொடங்கியது... அதுக்குள்ள ஆஸ்பத்திரிக்கு ஏகப்பட்ட வண்டிகள் வரத் தொடங்கியது... நமக்கு விஷயம் புரிஞ்சி போச்சி... அப்பத்தான் ஆஸ்பத்திரி பின் வாசல்லந்து ஸ்டெச்சர்ல மூப்பனார் உடலை மார்ச்சுவரிக்கு கொண்டுபோனாங்க... நானும், எங்கூடவே 3 நாளா இருந்த போட்டோகிராபரும் ஓடிப்போய் அந்த காட்சியை பதிவு செய்தோம்...

அதுக்கப்புறமா அமைச்சரா இருந்த எஸ்டிஎஸ் உடம்புக்கு முடியாம ஆஸ்பத்திரியில சேர்ந்தாரு... அங்க போயும் காத்துகிடந்து நியூஸ் எடுத்து வந்தேன்... இந்த சம்பவத்துக்கு பிறகு ஆஸ்பத்திரியில விஐபிக்கள் யார் போய் சேர்ந்தாலும் அந்த செய்திய சேகரிக்க என்னைத்தான் அனுப்பி வைப்பாங்க...

அப்பல்லோவுல சிவாஜி கணேசனை சேர்த்தாங்க... வழக்கம்போல அந்த நியூசுக்கும் நான்தான் போயிருந்தேன்... முரசொலி மாறன் அதே அப்பல்லோவுல சேர்ந்த நேரம் வழக்கம்போல நியூஸ் எடுக்க போய்ட்டு திரும்பினேன்... நான் உடல் நலமில்லாம படுத்துட்டேன்...

லீவு முடிஞ்சி ஆபீஸ் வந்ததும் ‘இனிமே நீங்க ஆஸ்பத்திரி ஏரியா பாக்க வேணாம் சினிமா ஏரியாவுக்கு போங்க’ன்னு நியூஸ் எடிட்டர் பார்த்திபன் சொன்னாரு... என்னை சினிமா ஏரியாவுக்கு மாத்தின முதல் நாள் நடிகர் கமல்ஹாசன் பேட்டிக்கு போயிருந்தேன்... ‘பம்மல் கே சம்மந்தம்’ படத்தோட கடைசி நாள் ஷூட்டிங் ஸ்பாட் பேட்டி... கமல், சிம்ரன், சினேகா, ரமேஷ்கண்ணான்னு அந்த படத்துல நடிச்ச எல்லாரும் மேடையில இருந்தாங்க... பேட்டி தொடங்கினதும்... ஜெயச்சந்திரன்னு ஒரு பத்திரிகையாளர் ‘சார் ஆளவந்தான் படத்துல உடம்ப நல்லா ஏத்தியிருந்தீங்க... இப்ப இந்த படத்துக்கு உடம்ப குறைச்சிட்டீங்களே எத்தனை கிலோ எடை குறைத்தீர்கள்’ கேள்வி கேட்டாரு... அந்த கேள்விக்கு முன்னாடி பலரும் சுரத்தில்லாம ஏதோ கேள்விகள் கேட்டதால கமல்ஹாசன் ‘என்னங்க சதை மேட்டர பத்தியே கேக்குறீங்க... ஏதாவது கதை மேட்டரா கேளுங்கன்னு சொன்னாரு...

உடனே நான் ‘கமல் சார் ஆளவந்தான் படம் எதிர்பார்த்த மாதிரி போகாததால தயாரிப்பாளர் தாணு சாருக்கு இன்னொரு படம் பண்ணித்தரப் போறீங்கன்னு சொல்றாங்களேன்னு கேட்டேன்...

‘அப்படி எல்லாம் எதுவும் இல்லீங்க...’ கமல் பதில்

நானும் விடாம ‘ஆளவந்தான் படத்துல தாணு சார் ஏதாவது சம்பள பாக்கி வைச்சிருக்காரா’ன்னு கேட்டேன்...

இந்த கேள்வியை எதிர்பார்க்காத கமல் முகம் டென்ஷன் ஆனாலும் அதை வெளிக்காட்டாமல் ‘ஆமாங்க... அத நீங்க குடுக்கப்போறீங்களா’ ன்னு கேட்டுட்டு கட்டாயமா சிரிக்க எல்லாரும் சிரிச்சாங்க...

நான் இப்படி கேள்விகள் கேட்கத்தொடங்கியதும் எனக்கு பக்கத்தில் அமர்ந்திருந்த பலர் ‘ஸ்...ஸ்ஸ்... உக்காருங்க... இப்படி கேள்வி கேட்டா அடுத்த பிரஸ் மீட்டுக்கு கூப்பிட மாட்டாங்க...ன்னு மெல்ல எச்சரித்தார்கள்...

அதை காதில் வாங்காமல் ‘கமல் சார் ஒரே ஒரு கேள்வி தாணு சார் வைச்சிருக்கிற சம்பள பாக்கி எவ்ளோன்னு சொல்ல முடியுமா’ என்று கேட்டதுதான் தாமதம்...

உட்கார்ந்த இடத்திலிருந்து சடாரென எழுந்த கமல் ‘ யார் நீங்க... இந்த மாதிரி எல்லாம் கேள்வி கேக்குறீங்க.... நீங்க பத்திரிகைகாரரா.... இன்கம்டாக்ஸ் ஆபீசரா...’ என்று படபடவெட பேசிவிட்டு மேடையில் இருந்து இறங்கி ரூமுக்கு போய்விட்டார்.

நடிகர் ரமேஷ்கண்ணா மேடையிலிருந்து கீழே வந்து என் தோள் மீது கை போட்டுக் கொண்டு ‘அண்ணே நீங்க எந்த பத்திரிகைன்னே...’ என்றார்.

நான் தினமலர் என்றதும் ‘உங்க கேள்விய பாத்ததும் நான் நெனச்சேன்... இன்னிக்கு லாஸ்ட் நாள் ஷூட்டிங் நைட் பார்ட்டி இருந்துச்சி... இப்ப எல்லாம் கெட்டுப்போயிருக்கும்... கமல் சார் டென்ஷன ஏத்தி விட்டுட்டீங்க...’ என சொல்லிக்கொண்டே அவருடைய டிரேட் மார்க் சிரிப்புடன் நழுவினார்...

நடிகர் தனுஷூம் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யாவும் காதலிக்கிறாங்கன்னு செய்திகள் வெளிவந்த நேரம்... ஒரு நாள் கடைசி நியூசா தனுஷ் கல்யாண அறிவிப்பை வெளியிடபோறான்னு செய்தி போட்டேன். அதே மாதிரி அன்னிக்கு சாயந்திரமே தன்னோட கல்யாண அறிவிப்பை தனுஷ் வெளியிட்டாரு... அந்த பிரஸ் மீட்ல ‘நீங்க சின்னப்பையன் பொதுவா கல்யாண அறிவிப்பை பெற்றோர்தானே சொல்லனும் நீங்க ஏன் சொல்றீங்க... அதுவும் ரஜினி ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் அவர் வீட்டுல நடக்குற முதல் கல்யாணம் அவர்தானே அறிவிச்சிருக்கனும் நீங்க ஏன் சொல்றீங்க... இந்த கல்யாணத்துல ரஜினிக்கு விருப்பம் இல்லியான்னு கேட்டேன்...’ தனுஷ் கொந்தளிச்சி நான் கேட்க கேள்வியை விட்டுட்டு அவருக்கு தோன்றதை சொல்லிட்டு பேட்டி முடிச்சிகிட்டு போயிட்டாரு... அந்த கல்யாண மேட்டரை ‘சூப்பர் ஸ்டாருக்கு சுள்ளான் மாப்பிள்ளை’ன்னு தலைப்பு வைச்சி நியூஸ் போட்டேன்... மறுநாள் ரஜினி நுங்கம்பாக்கத்துல இருக்குற குட்லக் தியேட்டருல படம் பாக்க வந்தாரு... படம் முடிஞ்சி வெளிய வந்ததும் கல்யாணத்தை பத்தி கேக்கலாம்னு காத்திருந்தோம்... அவர் வெளிய வர்றமாதிரியே இல்ல... பத்திரிகையாளர்களை தவிர்க்கனும்னு உள்ளயே இருந்தாரு... நாங்களும் ரொம்ப நேரம் காத்திருந்தோம்... வேற வழியில்லன்னு தெரிஞ்சதும் வெளிய வந்த ரஜினியிடம் ‘சார் இந்த கல்யாணத்து உங்களுக்கு விருப்பம் இல்லியான்னு கேட்டதுக்கு விருப்பம்தான்னு பதில் சொன்னாரு... அப்ப நீங்க ஏன் அறிவிக்கலைன்னு கேட்டதும்... ‘ஏன்...ஏன்...ஏன்... யார் அறிவிச்சா என்ன...’ என அவர் பாணியில் படபடவென சொல்லிவிட்டு அடுத்த கேள்வியை காதில் வாங்காமல் அவசர அவசரமாக காரில் ஏறி பறந்தார். மறுநாள் ‘கல்யாண டென்ஷன்&ரஜினி ஓட்டம்’னு நியூஸ் போட்டேன்.

சினிமா ஏரியா பாத்துகிட்டிருந்தப்போ திடீர்னு உடல் நலம் இல்லாம போயிடுச்சி... ஆபீசுக்கு லீவு போட்டிருந்தேன்... அந்த நேரம் நடிகர் அஜீத் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில கன்னிமாரா ஓட்டல்ல நடந்தது. உடல்நலம் சரியில்லாம வீட்டுல இருந்த நான் அந்த நிகழ்ச்சியில கலந்துகிட்டேன்னு யாரோ பொய் தகவல் குடுக்க... அதை நம்பிய நிர்வாகம் உடனே சினிமா ஏரியாவில் இருந்து ‘நாலாம்பக்கம்’ பாக்க சொல்லிட்டாங்க...

அந்த ‘நாலாம்பக்கம்’ பாக்க ஏற்கனவே குமரகுருபரன் இருந்தாரு... நான் அவர் உதவியாளராக மாற்றப்பட்டேன்... பேர்தான் உதவியாளர் நிஜத்துல ஏரியா ரிப்போர்ட்டர்கள் கிட்ட நியூஸ் வாங்குறது... சென்னையில நியூஸ் கேக்குறது... வந்த செய்திகளை எடிட் பண்ணி பக்கம் போடுறது... எல்லாம் நான்தான்... ஆனா... நாலாம்பக்கம் ரெடி ஆனதும் அந்த பக்கத்தை குமரகுருபரன் வாங்கிட்டு நேரா நிர்வாகி கோபால்ஜி ரூமுக்கு போயிடுவாரு...

பக்கம் நான் போடுவேன்... அந்த ரூமுக்குள்ள போய் அதை குமரகுருபரன் காட்டி விளக்கம் சொல்லிகிட்டிருப்பாரு... எப்படீன்னா... விதைய நட்டு தண்ணி பாய்ச்சுறவன் ஒருத்தன்... விளைஞ்சி காய்க்குறதை நோகாம நோண்டி திங்குறவன் இன்னொருத்தன் மாதிரி...

நாலாம்பக்கம் வடிவமைக்கிற சுரேஷ் சொந்த ஊரான திருச்சிக்கு போயிருந்தாரு... அப்ப நடிகர் ரஜினி நடித்த ‘பாபா’ படம் வெளியான நேரம்... திருச்சியில ஒரு தியேட்டருக்கு போய் பாபா பட டிக்கெட் வாங்கினா... டிக்கெட்டுக்கு பதில் வண்டி பார்க்கிங் டிக்கெட் குடுத்துட்டு சினிமா டிக்கெட் விலையை வாங்கியிருக்காங்க...

சென்னைக்கு வந்த சுரேஷ் இந்த விஷயத்தை சொன்னதோட... அந்த பார்க்கிங் டிக்கெட்டையும் குடுத்தார்... அதை அப்படியே ஸ்கேன் செய்து ‘வரி ஏய்ப்பு’ன்னு சின்னதா ஒரு பிட் நியூஸ் நாலாம் பக்கத்துல போட்டேன்... திருச்சி ஏரியாவில் ‘பாபா’ படத்தை தினமலர் திருச்சி நிர்வாகி பாலாஜியும், முன்னாள் எம்பி அடைக்கலராஜ் குடும்பமும்தான் ரிலீஸ் பண்ணியிருந்தாங்க... சுரேஷ் படம் பாக்கப்போன தியேட்டர் அடைக்கலராஜ் குடும்பம் ரிலீஸ் பண்ணியிருக்கிற தியேட்டர்...

வேண்டும் என்றே செய்தி போட்டதாக அடைக்கலராஜ் தரப்பு ஆத்திரப்பட... திருச்சியில் இருந்து அன்று மதியமே பாலாஜி சென்னை வந்தார்.... எப்படி நியூஸ் வந்தது... யார் அதை போடச் சொன்னதுன்னு ஒரு பெரிய விசாரணை நடத்த ஆரம்பிச்சிட்டாரு...

வழக்கமா நாலாம்பக்கம் போட்டு முடிச்சதும் அதை குமரகுருபரன் வாங்கிட்டு கோபால்ஜி ரூமுக்கு போறது வழக்கம்... அந்த செய்தி போட்ட அன்னிக்கு பக்கம் முடிஞ்சதும் தேடிப்பாத்தா குமரகுருபரன ஆபீஸ்ல காணோம்... உடனே எடிட்டர் பார்த்திபன் கிட்ட காண்பிக்க... அவரும் பக்கத்தை ஓகே பண்ணிட்டாரு... அதுக்கப்புறம் ஆபீஸ் வந்த குமரகுருபரனும் சார் பாத்தாரா... அப்ப ஓகேன்னு சொல்லிட்டாரு... பக்கம் பிரிண்டுக்கு போய் மறுநாள் பேப்பர்ல நியூஸ் வந்துடுச்சி...

விசாரணைய ஆபீஸ்ல வைக்காம எக்மோர் வீட்டுல வைச்சாரு... பக்கம் போட்ட நான்... பாத்து ஓகே பண்ண எடிட்டர் பார்த்திபன், இன்சார்ஜ் குமரகுருபரன்... ஆபீஸ் ஓஎஸ் சுப்பு, சப்&எடிட்டர் சேது.... கார் பார்க்கிங்ல எல்லாரும் நின்னுகிட்டிருந்தோம்... உள்ள இருந்து பாலாஜி சார் வெளிய வந்தாரு...

வந்ததும் ‘நீ யார் மேன்...’ குமரகுருபரனை பார்த்து கேட்டாரு...

‘சார்., நான் குமரகுருபரன்... நாலாம்பக்க இன்சார்ஜ்...’

இப்படி சொல்லி முடிக்கல... ‘என்ன... பு...த்தி இன்சார்ஜ்... இதான் நீ பாத்த லட்சணமா... ஆமா என்ன படிச்சிருக்கே... ’

‘வெட்னரி டாக்டர் சார்...’ இது குமரகுருபரன்.

‘மாட்டு....சூ....ல கை வுட வேண்டியதுதானே... இங்க ஏண்டா வந்து எங்க.... கை வைக்கிறீங்கன்னு... வரி ஏய்ப்புன்னா என்னான்னு தெரியுமா... சகட்டுமேனிக்கு திட்ட தொடங்கிட்டாரு... திடீர்னு திட்டுறதை நிறுத்திட்டு டக்குனு வீட்டுக்குள்ள போயிட்டாரு...

அப்பாடா சிக்கல் இத்தோட முடிஞ்சி போச்சின்னு நினைச்சதும்... திடீர்னு மறுபடியும் வெளிய வந்து... என்னை பாத்தாரு... ‘நீ... யார் மேன்... உன் பேரென்ன...’

‘ரிப்போர்ட்டர் சார்... பேரு ஆபிரகாம் லிங்கன்...’ சொல்லி முடிக்கல நான்...

‘அமெரிக்காவுல இருக்க வேண்டியவனெல்லாம் தினமலர்ல வந்து என்னய்யா பண்றீங்க... உன்ன யார்யா வேலைக்கு சேர்த்தது... சொல்லு அவனையும் அமெரிக்காவுக்கு அனுப்பிடுறேன்னு படபடவென முடிந்த மட்டும் சத்தம் போட்டார்... ‘பார்த்திபன் இவனுங்க 2 பேரையும் இப்பவே டிஸ்மிஸ் பண்ணி வீட்டுக்கு அனுப்பிடுங்க...ன்னு பேசிகிட்டிருக்கும்போதே திடீர்னு வீட்டுக்குள்ள போயிட்டாரு...

இரண்டு பேரும் திட்டு வாங்கிட்டோம்... இத்தோட மேட்டர் முடிஞ்சிபோச்சின்னு நினைக்கும்போது... மறுபடியும் வெளிய வந்தாரு...

அவரை பார்த்ததும் ‘சார்... நான்தான் பக்கத்துக்கு இன்சார்ஜ்... ஆபிரகாம் நியூஸ் வாங்கினது மட்டும்தான்... இந்த தப்பு என்னாலதான்னு’ குமரகுருபரன் சொல்லிகிட்டிருக்கும்போதே...

‘யோவ்... மாட்டு டாக்டரு... அவ்ளோ படிச்சிருக்கியே மூளை எங்கயிருக்கணும்னு தெரியுமான்னு கேட்டுகிட்டே... தலையில தட்டி இங்கதான் மூளை இருக்கணும்... ஆனா உனக்கு பின்பக்கத்தை தட்டிக்காட்டி... இங்க இருக்குபோல... என சொல்லிக்கொண்டே... சுப்பு... இவனுங்க 2 பேர்கிட்டயும் எழுதி வாங்கு... இனிமே இப்படி ஏதாவது நடந்தா வேலையை விட்டு நாங்க போயிடுறோம்னு எழுதி வாங்குன்னு சொல்லிட்டு வீட்டுக்குள்ள போயிட்டாரு...

அன்னிக்கு ராத்திரி ஆபீசுக்கு பாலாஜி சார் வந்தாரு... அவர் ஆபீஸ் உள்ள வர்றதுக்கும் நான் வெளிய போறதுக்கும் சரியா இருந்தது... எதிர்ல என்னைப்பார்த்ததும்... ‘என்ன ஆபிரகாம்... சினிமா ஏரியா எல்லாம் எப்படியிருக்குது... நல்ல கதையோட படம் ஏதாவது ரெடியானாசொல்லு வாங்கி ரிலீஸ் பண்ணலாம்... என்ன வீட்டுக்கு கிளம்பியாச்சான்னு’ விசாரிச்சார்... மதியம் அவ்ளோ கோபமா பேசுன எந்த சுவடும் அப்ப அவர்கிட்ட இல்லை...

ரொம்ப நாளா வாடகை வீட்டுலயே இருக்கோமே... பேங்க்ல லோன் வாங்கி எப்படியும் சொந்த வீடு வாங்கணும்னு தீவிரமா இடம் தேடிகிட்டிருந்தேன்... 2003ம் வருஷம் ஜூன் மாசம்... என்னோடு வேலை பார்த்த சப்&எடிட்டர் குணசேகரன் குரோம்பேட்டையில ஒரு வீடு விலைக்கு வருது வந்து பாருங்கன்னு சொன்னாரு... அந்த வீட்டையும் பாத்து விலை பேசிட்டேன்...தினமலர்ல வாங்கின சம்பளம் வாடகைக்கும், சாப்பாட்டுக்குமே சரியா போகும்... கையில பெருசா எதுவும் இல்லை...

பேங்க் லோன் கேட்டா நிரந்தர வேலையிருக்குறவங்களுக்குத்தான் லோன் தரமுடியும்னு சொல்லிட்டாங்க... பத்திரிகையில வேலை பார்க்கிற பலருக்கு பணி நிரந்தரமே கிடையாது... ஆனா ஒரு பத்திரிகையாளர் எப்ப வேணாலும் யாரை வேணாலும், அது மத்திய அமைச்சரா இருக்கலாம்... மாநில அமைச்சரா இருக்கலாம்.... முதல்வரா இருக்கலாம், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரியா இருக்கலாம் அவங்களை சந்திக்கலாம்... பேசலாம்... மத்தவங்களுக்கு சிக்கல்னா பேப்பர்ல எழுதி தீர்த்து வைக்கலாம்... ஜனநாயகத்தின் நான்காவது தூண்ல வேலை பார்க்கிறோம்னு சொல்லிக்கலாம்... எல்லாம் இருந்தாலும் பணி நிரந்தரம்னு வரும்போது அவங்க பணி ஈசல் பூச்சி மாதிரிதான்...

இத ஏன் இங்க சொல்றேன்னு யோசிக்கிறீங்களா... கையில பெருசா எதுவும் இல்லாம... பணி நிரந்தரமான்னு தெரியாம... தினமலர்ல வேலை செய்யுற என்னை நம்பி எப்படி பேங்க் லோன் கிடைக்கும்... ரொம்ப யோசனை... பாங்க் ஆப் பரோடா மேனேஜர்கிட்ட கேட்டா... ‘சார் உங்க முதலாளி ஒரு கியாரண்டி லெட்டர் குடுத்தா போதும்... நான் லோன் தர்றேன்...’னு சொல்லிட்டாரு...

முதலாளி லெட்டர் தருவாரா... அவரோ விஎச்பில மாநில பொறுப்புல இருக்குறவரு... நானோ ஈரோப்பியன் பேமிலி அதாங்க கிறிஸ்தவன்... அவங்க ‘ஆளும்’ இல்ல நாம... மாட்டேன்னு சொல்லிட்டா எப்படி ரெடி பண்றது... குடுத்த அட்வான்ஸ் திரும்பி வருமான்னு பல யோசனைகள்...

ஆபீஸ் வந்ததும் நேரா கோபால்ஜி ரூமுக்கு போனேன்... என்னை பார்த்ததும்... ‘என்ன ஓய்...’ என்று கேட்டார்...

‘சார்... வீடு வாங்கலாம்னு இருக்கேன்... பேங்க் லோன் போடப்போறேன்... மேனேஜர் நம்ப ஆபீஸ்ல லெட்டர் வாங்கிட்டு வரச் சொல்லிட்டாருன்னு...’ சொல்லிட்டு அவர் முகத்தையே பார்த்தேன்...

இதானா ஓய்... சுப்புகிட்ட எழுதி குடு...ன்னு சொல்லிட்டு போனை எடுத்து காதில் வைத்துக் கொண்டார்...

நான் வீடு வாங்க நினைச்ச நேரம் எங்கூட வேலைபார்த்த சங்கரசுப்பிரமணியனும், பாஸ்கரும் வீடு வாங்க என்னை மாதிரியே கடிதம் குடுத்திருந்தாங்க... அவங்களுக்குத்தான் முதல்ல கோபால்ஜி லெட்டர் குடுப்பாருன்னு நான் நினைச்சிகிட்டிருந்தேன்... 4 நாள் ஆகியிருக்கும்... நான் நினைச்சதுக்கு மாறாக... மத்தவங்களுக்கு முன்னாடியே என்னோட லெட்டர்ல கையெழுத்து போட்டிருக்கார் ஜி... இது தெரியாம ஆபீஸ்ல நுழைந்தேன்... சுப்பு கூப்பிட்டு ‘ஜி லெட்டர்ல கையெழுத்து போட்டுட்டாரு சாயந்திரம் வீட்டுக்கு போகும்போது வாங்கிட்டு போன்னு’ சொன்னார்... அன்னைக்கு கோபால்ஜி கையெழுத்து போட்டு தந்த கியாரண்டி லெட்டரால நான் லட்சங்களில் வாங்கிய வீட்டின் மதிப்பு இன்றைக்கு கோடியை தாண்டியுள்ளது...

சினிமா ஏரியா பாத்துகிட்டிருந்தப்போ குமுதம் பத்திரிகையில வேலை பார்த்துகிட்டிருந்த சந்துரு அறிமுகமானார்... நல்லா பழககூடிய நண்பர் கல்யாணம் ஆகி ரொம்ப நாள் ஆனாலும் அவருக்கு குழந்தைகள் இல்லை... குழந்தைகள்னா அவருக்கு ரொம்ப பிரியம்... அவர் திடீர்னு இறந்து போயிட்டாரு... விஷயம் தெரிஞ்சதும் சினிமா நிருபர்கள் எல்லாரும் ஆஸ்பத்திரிக்கு ஓடினோம்... அங்க நாங்க போய் சேர்றதுக்கு முன்னாடியே நடிகர் அஜீத் அங்க வந்திருந்தாரு... ஏதோ பழகியதற்கு வந்து விசாரிச்சிட்டு போயிடுவாருன்னு எல்லாரும் எதிர்பார்த்தாங்க... ஆனா பாருங்க... நிருபர் சந்துரு உடலை ஆஸ்பத்திரியிலந்து வீட்டுக்கு கொண்டு வரும்போதும் கூடவே வந்து வண்டியிலந்து உடலை தூக்கி வீட்டுக்குள்ள எடுத்து போகும்போது யாருமே எதிர்பார்க்காம நடிகர் அஜீத்தும் அந்த பத்திரிகையாளன் உடலை ஒருபக்கம் தூக்கிகிட்டு வீட்டுக்குள்ள கொண்டு வந்து கிடத்தினாரு... ‘அவர் மனைவி ஏன்னா எழுந்து வாங்கன்னா... பக்கத்து வீட்டு குழந்தை வந்திருக்கா... விளையாட வாங்கன்னா... என்னை விட்டுட்டு எங்கன்னா போயிட்டீங்கன்னு’ அழுது புலம்புன சத்தத்தையும்... பிரபலம் ஆனாலும் நடிகர் அஜீத்தோட அந்த தோழமையையும் இன்னும் மறக்க முடியல...

நிருபரா ஓடிகிட்டிருந்த என்னை திடீர்னு வாரஇதழ் பிரிவுக்கு மாத்தினாங்க... அங்க போனது ஒரு வகையில என் எழுத்துப்பசியை போக்க உதவி செய்தது... ஏன்னா ஏறக்குறைய எல்லா ஏரியாவிலும் செய்தி சேகரிக்க போய் வந்த அனுபவங்களை தொகுத்து எழுத தொடங்கினேன்... ‘பூவை அழிக்கும் பொட்டு’ன்னு ஒரு சிறுகதை திருவள்ளூர்&ஆந்திரா பார்டர்ல இருக்குற ஒரு கிராமத்துல இன்னிக்கும் பெண்களை பொட்டு கட்டி நேர்ந்து விடுகிறோம் என்ற பெயரில் நடக்கும் அவலத்தை அந்த கதையில சொல்லியிருந்தேன். ஆஸ்பத்திரி ஏரியா பார்த்தப்போ கிடைச்ச அனுபவங்களை வைச்சி ‘காதல் செய்வீர்&இதயங்களை அலசும் நிஜத்தொடர்’னு பிறந்த குழந்தை தொடங்கி 15 வயசுவரைக்கும் ஏற்படக்கூடிய இதய பாதிப்புகளை வாரா வாரம் சிறுகதையா நிஜங்களை சொன்னேன்... போதாததற்கு பத்திரிகையில வருகிற வித்தியாசமான நிஜக்கதையை சிறுகதையா மாத்தி கதையான நிஜங்கள்னு தொடர் எழுதினேன்... இப்படி என் எழுத்துப்பணியை அங்க மேம்படுத்திக்க முடிஞ்சது...

விழுப்புரத்துல ரேஷன்குடோன்ல முன்னாள் அமைச்சர் பொன்முடி திடீர்னு உள்ள நுழைந்து சோதனை நடத்தினார்... அந்த காட்சிய அங்கயிருந்த ‘சன்’டிவி நிருபர் சுரேஷ் படம் பிடிச்சி வெளியிட்டார்... அப்பவும் முதல்வரா ஜெயலலிதாதான் இருந்தாங்க... அத்துமீறி உள்ள புகுந்து அரசு பணியை தடுத்தாங்கன்னு பொன்முடி, சுரேஷ்னு அங்கயிருந்த எல்லாரையும் கைது செய்தார்கள்... விஷயம் தெரிஞ்சதும் பத்திரிகையாளர்கள் எல்லாம் ஆர்ப்பாட்டம் பண்ணோம்... ஆர்ப்பாட்டம் செய்த எங்களை போலீஸ் கைது செய்து வேப்பேரி போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிகிட்டு போயிட்டாங்க... காலையில பிடிச்ச எங்களை மாலையிலதான் விடுவிச்சாங்க... போலீஸ் ஸ்டேஷன்லந்து ஆபீஸ் வந்தா அங்க போராட்டத்துக்கு போனதற்காக உங்க மேல ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாதுன்னு மெமோ ரெடியா இருந்தது... ‘இனிமே போராட்டம்... ஆர்ப்பாட்டங்களுக்கு போறதா இருந்தா பர்மிஷன் வாங்கிட்டு போறேன்னு’ அந்த மெமோவுக்கு பதில் எழுதி குடுத்தேன்...

கொஞ்ச நாள் கூட ஆகியிருக்காது... மறுபடியும் என்னை சினிமா ஏரியாவுக்கே மாத்தினாங்க... முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவை மாதிரிதான் ‘தினமலர்’ நிருபர் பணி.... எப்ப எந்த ஏரியாவுக்கு மாத்துவாங்கன்னு தெரியாது... எப்ப வேலைய விட்டு தூக்குவாங்கன்னும் தெரியாது... காலையில ஆபீஸ் போய் செக்யூரிட்டி டேபிள்ள இருக்குற நோட்ல கையெழுத்து போட்டா நாம இன்னும் நிருபராதான் இருக்கோம்னு அர்த்தம்... உள்ள போய் நம்ம சீட்ல உக்காந்தா நம்ம ஏரியா நம்ம கிட்டதான் இருக்குன்னு அர்த்தம்...

தினமலர் வேலையிலந்து தினகரன் வேலைக்கு போனேன்... சன் டிவி அந்த பத்திரிகைய வாங்கியிருந்த நேரம்... புது தினகரன், புது தமிழ்முரசு வடிவமைச்சிகிட்டிருந்தாங்க... என்னை சினிமாவுக்கு தேர்வு பண்ணியிருந்ததால புதுசா ஏதாவது பண்ணலாம்னு யோசிச்சி... ‘கோடம்பாக்கம் கோடங்கி’ன்னு ஒரு கற்பனை கதாபாத்திரத்தை உருவாக்கி... சினிமா கிசுகிசுக்களை சுவாரசியமாக குடுக்கத் தொடங்கினேன்... சினிமா வட்டாரத்துல என் பேர் தெரியுதோ இல்லையோ என்னை கோடங்கியா பாத்தவங்கதான் நிறைய பேரு...

நடிகர் சரத்குமார் 100வது படம் ‘தலைமகன்’ அந்த படத்தை ஆர்.டி.பாலாஜின்னு ஒருத்தர் டைரக்ட் பண்ணாரு... ஷூட்டிங் இலங்கையில தொடங்கினப்போ ஸ்பாட்ல ஏதோ சிக்கல் ஷூட்டிங்கும் பேக்கப் ஆகி... போனவங்களும் ஊர் திரும்பிட்டாங்க... இந்த செய்தி தெரிஞ்சதும் ‘கோடங்கி’ பக்கத்துல எழுதி டைரக்டரை மாத்தப்போறாங்கன்னு ‘கிசுகிசு’ போட்டேன்... நியூஸ்பேப்பர் வெளிய வந்த ஒரு மணிநேரத்துல தயாரிப்பாளர் ராதிகாகிட்டயிருந்து ஆபீசுக்கு போன்... யார் அந்த நியூசை குடுத்தது... தப்பு தப்பா நியூஸ் போட்டிருக்காங்க... அந்த நிருபர் மன்னிப்பு கேக்கனும்... அப்படி இப்படின்னு காதுல ரத்தம் வர்ற மாதிரி சத்தம்போட்டாங்க... போதா குறைக்கு எடிட்டர் கதிர்வேல் தொடங்கி பத்திரிகை முதலாளி கலாநிதிமாறன்வரைக்கும் விளக்கம் கேக்க ஆரம்பிச்சாங்க...

‘நாங்க இலங்கைக்கே போகல உங்க நிருபர் யார்கிட்டயோ காசு வாங்கிட்டு அப்படி நியூஸ் போட்டுட்டாருன்னு’ கலாநிதிமாறன்கிட்ட ராதிகா சத்தம் போட்டாங்களாம்... யார் அந்த நியூசை குடுத்ததுன்னு கலாநிதிமாறன் எங்கிட்ட கேட்டாரு... ‘சார் செய்தி உண்மை. இந்த வேலைக்கு என்னை சேர்க்கும்போதே எந்த சூழல்நிலை வந்தாலும் செய்தி குடுத்தவங்களை பத்தி யார் கேட்டாலும் சொல்லக்கூடாதுன்னு நீங்கதான் சொன்னீங்க... அதனால ராதிகா டீம் இலங்கை போனது உண்மை... டைரக்டரை மாத்தப்போறதும் உண்மை... கொஞ்ச நாள்ள அது உங்களுக்கு தெரியும்னு’ சொல்லிட்டேன்... அதோட நான் கிசுகிசு டைப்ல போட்ட செய்திக்கு தினகரன்ல மறுப்பு மாதிரி இல்லாம செய்தியா தலைமகன் படப்பிடிப்பு பிசியாக நடக்கிறதுன்னு ராதிகா பேட்டியை போட்டாங்க... 2 வாரம் ஓடியிருக்கும்... பத்திரிகை ஆபீசுக்கு வந்த விளம்பரத்துல சரத்குமார் இயக்கத்தில் ‘தலைமகன்’ன்னு வந்தது...

2007ம் வருஷம் ‘அன்புத்தோழி’ன்னு ஒரு படத்தை எனக்கு வேண்டியவங்க தயாரிச்சாங்க... அதுல விடுதலைசிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் நடிச்சார். தேர்தல் நேரம் வேற... அவரை பாத்து தேதி வாங்கி ஷூட்டிங் அழைச்சி வந்து படத்தை எடுக்குறதே ஒரு பெரிய வேலை... பகல் பூரா தேர்தல் பிரசாரத்துல இருப்பாரு... ராத்திரியில மட்டும் நடிக்க வருவாரு... எப்படியோ அந்த படத்தை எடுத்து முடிச்சி அவர் பிறந்த நாள்ள ரிலீஸ் பண்ண ரெடி ஆனோம்... மறுநாள் ஆகஸ்ட் 17 திருமாவளவன் பிறந்த நாள். முதல் நாள் ராத்திரியே நான் ஜெமினிலேப்ல படத்தை முடிச்சி பெட்டியை குடுக்குற வேலைக்கு வந்துட்டேன்... கணக்கு பாத்தா லேபுக்கு கட்டவேண்டிய பணத்தில் சில லட்சங்கள் குறையுது... தயாரிப்பாளர் ஒரு பெண்... ஏற்கனவே ஒரு கோடிக்கு மேல செலவு பண்ணிட்டதால பணத்தை ரெடி பண்ண முடியல... கட்சி நிர்வாகிகள் பலர்தான் ரிலீஸ் பண்ண படத்தை வாங்கியிருந்தாங்க... லேப் வெளிய ஏகப்பட்ட வண்டிகள்ள கடசி ஆட்கள் படப்பெட்டியை வாங்கிட்டு போக காத்துகிட்டிருந்தாங்க... லேப் நிர்வாகத்துகிட்ட எவ்ளோ பேசியும் பணத்தை கட்டினா பெட்டி தருவோம்னு சொல்லிட்டாங்க... என்ன செய்யிறதுன்னு எனக்கு தெரியல... நேரம் வேற போயிகிட்டே இருந்துச்சி... வேற வழியில்லாம திருமாவளவனுக்கே போன் போட்டேன்... ‘அண்ணே படத்தை வெளிய எடுக்க கட்ட வேண்டிய பணத்துல கொஞ்சம் குறையுது... என்ன செய்யுறதுன்னு தெரியல... நம்ம கட்சிக்காரங்க வேற லேபுக்கு வெளிய காத்துகிட்டிருக்காங்க... பணம் கட்டலன்னா படம் ரிலீஸ் ஆகாது... லேப் ஆட்கள் பயப்படுறாங்க... என்ன பண்றதுன்னா’ என்று கேட்டேன்...

‘சரி... தம்பி நீங்க அங்கயே இருங்க நம்ம தம்பிமாருங்க வந்து உங்களை பாப்பாங்கன்னு’ சொல்லிட்டு போனை கட் பண்ணிட்டாரு... சரியா ஒரு 10 நிமிஷம் கடந்திருக்கும்... திடீர்னு சிலர் எங்கிட்ட பேசினாங்க... ஒரு அரை மணிநேரத்துக்குள்ள நான் கேட்ட பணம் என் கைக்கு வந்து சேந்துடுச்சி... படத்தையும் எப்படியோ ரிலீஸ் பண்ணிட்டோம்... அவ்ளோ போராட்டத்துக்கு பிறகு ரிலீஸ் ஆன ‘அன்புத்தோழி’ பெருசா போகாம தயாரிச்சவங்களுக்கு முழு நஷ்டத்தை குடுத்தது.

படப்பெட்டியை வாங்கிட்டு போன கட்சி நிர்வாகிகளும் சரியா கணக்கு குடுக்காம விட்டுட்டாங்க... படப்பெட்டியையும் திருப்பித்தரல... கலைஞர் டிவிக்கு படத்தை குடுத்ததுல 16 லட்ச ரூபாய் மட்டும்தான் தயாரிச்சவங்களுக்கு திரும்ப கிடைச்ச பணம். ஒரு கோடிக்கு மேல செலவு செய்ததுல படமும் பெருசா போகாம... போட்ட பணமும் திரும்ப வராம போனதால அந்த பெண் தயாரிப்பாளர் அதோட சினிமாவே வேணாம்னு விட்டுட்டு போயிட்டாங்க...

இந்த படத்துக்கு உதவி செய்ததால ‘தினகரன்’ வேலையிலந்து நான் வெளிய வரவேண்டியதா போயிடுச்சி... அங்கயிருந்து வந்ததும் ‘தமிழ் பிலிம் ரேட்டிங்.காம்’ அப்படீங்கிற இணையதளத்துக்கு ஆசிரியரா பணியில சேர்ந்தேன்... அப்பத்தான் பசும்பொன் முத்துராமலிங்கத்தோட 100வது ஜெயந்தி விழா நெருங்கியது...

ஒவ்வொரு வருஷமும் அவர் சமாதிக்கு அஞ்சலி செலுத்த வர்றவங்களோட எண்ணிக்கை லட்சத்துல உயர்ந்து கொண்டே போனதால அவரைப்பற்றி ஆவண படம் எடுக்க அந்த இணையதளத்தை நடத்தின கார்த்திக் முடிவு செய்தார்.

இதுக்காக பல புத்தகங்கள்... அவர் வாழ்ந்த இடங்கள்... அவரோடு பழகியவர்கள்னு தேடித்தேடி செய்திகளை சேகரிக்கும்போது பார்வர்டு பிளாக் முன்னாள் செயலாளர் தோழர் வி.எஸ்.நவமணி நிறைய ஆவணங்களும், அவர் தொடர்பான புத்தகங்களையும் தந்து படப்பிடிப்பு நேரங்களிலும் கூடவே வந்து உதவி செய்ததால ஒரு மணிநேரம் 20 நிமிஷம் வர்ற மாதிரி ஒரு ஆவண படத்தை எழுதி இயக்கி முறையா ‘பசும்பொன் தேவர் வரலாறு’ என்ற பேர்ல சென்சார் வாங்கினேன்.

முறையா சென்சார் வாங்கினாலும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துல பதவியில இருந்தவங்க நாங்க பாக்காம இந்த படத்தை ரிலீஸ் பண்ணக்கூடாதுன்னு சொல்லிட்டாங்க... அதுக்கு காரணம் அங்க பதவியல இருந்த தயாரிப்பாளர் அழகன் தமிழ்மணி.

தயாரிப்பாளர் சங்கத்துக்காக ஒரு ஷோவை போட்டு காட்டினேன்... படத்தை பாத்து முடிச்சதும் எதிர்ப்பு தெரிவிச்சவங்க பேச முடியாம அழுதுட்டாங்க...

ஒரு வழியா ஆகஸ்ட் 4ம் தேதி 2008ம் வருஷம்... தமிழ்நாட்ல 15 தியேட்டர் மும்பையில ஒரு தியேட்டர்னு ரிலீஸ் செய்தோம். சென்னையில பணம் கட்றோம்னு சொல்லியும் எந்த தியேட்டரும் முத்துராமலிங்கம் ஆவண படத்தை ரிலீஸ் பண்ண தியேட்டர் குடுக்கல... இந்த படம் ரிலீஸ் ஆகிறதுக்கு முன்னாடி பசும்பொன் முத்துராலிங்கம் பற்றி படமோ, ஆவண படமோ எதுவுமே வெளிவந்ததில்லை...

அதோட, முத்துராமலிங்கம்னு சொன்னா மதுரை பசும்பொன்தான் அவர் ஊருன்னு சொல்லிட்டு போயிடுறாங்க... என்னோட ஆவண படத்துல எது அவர் ஊரு... எங்க அவருக்கு சொத்து இருக்குது... இப்ப அதை யார் பாத்துகிறாங்க... அரசியல்ல இருக்கும்போது எங்க தங்கியிருந்தாரு... ஆன்மீகத்துக்கு வந்தப்போ எங்க தங்கியிருந்தாருன்னு எல்லா விவரத்தையும் ஒண்ணுவிடாம சொல்லியிருந்தேன்...

அவர் சார்ந்த அமைப்பு தலைவர்களுக்கும் படத்தை போட்டு காட்டினேன்... அப்ப முதல்வரா இருந்த கருணாநிதி எந்த புதுப்படம் ரிலீஸ் ஆனாலும் தவறாம பாத்து கருத்து சொல்லுவாரு... என்னோட ஆவணபடத்தை பாக்கனும்னு நேரம் கேட்டு தலைமை செயலகத்துக்கும், கோபாலபுரம் வீட்டுக்கும் பல முறை நடையா நடந்தேன்...

ஏற்கனவே, நான் பத்திரிகையாளரா இருந்தாலும் அவ்ளோ சீக்கிரம் முதல்வரை பார்க்க முடியல... அவர் உதவியாளர் சண்முகநாதனை கோபாலபுரம் வீட்டில் சந்தித்து கடிதம் தந்தேன்... 3 முறைக்கு மேல் கடிதம் குடுத்தும் முதல்வர் தரப்பில் இருந்து எந்த பதிலும் வரவில்லை... கடைசியா ஒருமுறை முயற்சி செய்து பார்க்கலாம்னு கோபாலபுரம் போய் உதவியாளர் சண்முகநாதனை சந்தித்தேன்... ‘தம்பி முதல்வர் இப்ப எந்த படத்தையும் பாக்குற சூழல்ல இல்லை... நேரம் வரும்போது சொல்றேன்’ போங்கன்னு சொல்லிட்டாரு...

ஆனா பாருங்க... அன்னிக்கு மாலையில பேரன் தயாரிச்ச சினிமாவை பார்த்து ரசித்தாரு கருணாநிதி. அதற்கு பிறகு ‘பெரியார்’ வாழ்க்கை வரலாற்று படத்துக்கு அரசு சார்புல 90 லடச ரூபாய் மானியம் குடுத்தாங்க... ஏனோ தெரியல பசும்பொன் முத்துராமலிங்கம் வாழ்க்கை வரலாற்று ஆவணபடத்தை பார்க்க கூட கருணாநிதிக்கு நேரமில்லாமல் போய்விட்டது.

திரையுலக பிரபலங்கள், அமைப்பு ரீதியிலான தலைவர்களுக்கு படம் போட்டோம்... அதுக்கு நடிகர் கார்த்திக்கை அழைச்சோம்... ‘எல்லாரோடயும் வந்து என்னால படம் பாக்க முடியாது... தனி ஷோ போட்டா நான் வந்து படம் பார்க்கிறேன்னு’ சொல்லிட்டாரு... அதனால, அவர் சொன்ன தேதியில நுங்கம்பாக்கம் போர்பிரேம் தியேட்டர்ல ஷோவுக்கு பணம் கட்டி காத்துகிட்டிருந்தோம்... முதல்நாளே சென்னையில உள்ள சோழா ஓட்டல்ல நடிகர் கார்த்திக்கை சந்திச்சி ஷோ போடப்போறதை உறுதி செய்துகிட்டோம்... ஷோ நேரம் நெருங்கியது... அவரோட உதவியாளருக்கு போன் போட்டா... ‘அண்ணன் ரெஸ்ட் எடுத்துகிட்டிருக்காரு... கண்டிப்பா வருவார் வெயிட் பண்ணுங்கன்னு சொல்லிட்டாரு... நாங்களும் வெயிட் பண்ணோம்... கிட்டத்தட்ட 5 மணிநேரம் பலமுறை போன் செய்த பிறகும் கார்த்திக் வரவேயில்லை... சரி இதுக்கு மேல காத்திருக்க வேணாம்... ஓட்டலுக்கு போய் பார்த்துடலாம்னு சோழாவுக்கு போனோம்... அங்க பார்த்தா... மதியம் ரெஸ்ட் எடுத்துகிட்டிருந்தவரு நாங்க போன பின்னாடியும் ரெஸ்ட்லயேதான் இருந்தாரு... கடைசிவரைக்கும் அவர் அந்த படத்தை பார்க்கவேயில்லை...

இப்போதைய முதல்வர் ஜெயலலிதா அப்போ எதிர்க்கட்சித்தலைவர் அவரையும் ஆவணபடம் பாக்க அழைத்தேன்... ஏவிஎம் ஸ்டுடியோவில் உள்ள தியேட்டர்ல வந்து படம் பாப்பாங்கன்னு சொல்லியிருந்தாங்க... நாங்களும் ரெடியா இருந்தோம்... திடீர்னு போன்ல கூப்பிட்டு ‘ஆவண படத்தோட டிவிடி மட்டும் குடுங்க...’ன்னு வாங்கிட்டு போயிட்டாங்க...

சில நாட்கள் கழித்து ஜெயா டிவியிலந்து பேசி இந்த ஆவணபடத்தோட டிவி உரிமையை வாங்கிட்டாங்க... 2008ம் ஆண்டு அக்டோபர் 30ம் தேதி ஜெயா டிவியில படத்தை வெளியிட்டாங்க... அதுலந்து ஒவ்வொரு வருஷமும் அவர் ஜெயந்தி நாளில் இந்த ஆவணபடம்தான் டிவியில் போடப்படுகிறது...

உலகில் எந்த ஒரு அரசியல் தலைவரின் வாழ்க்கை வரலாற்று ஆவணபடமும் வணிக ரீதியில் திரையரங்குகளில் வெளியானதில்லை என்ற நிலையை மாற்றி, தமிழனாக பிறந்த ஒரு அரசியல் தலைவரின் வாழ்க்கை வரலாற்றை ‘பசும்பொன்தேவர் வரலாறு’ என்ற பெயரில் முதல் முறையாக திரையரங்குகளில் வணிக ரீதியில் வெளியிட்டு உலக சாதனையை சொந்தமாக்கிக் கொண்டோம். பத்திரிகையாளனாக அடையாளம் காணப்பட்டதால்தான் பல தடைகளை, இடர்களை தாண்டி இந்த வரலாற்று நிகழ்வை ஏற்படுத்த முடிந்தது.

இந்த ஆவணபடம் வெளியாவதற்கு முன்புவரை இணையதளங்களில் பசும்பொன்தேவர் என்றோ, முத்துராமலிங்கதேவர் என்றோ தேடினாலும் நடிகர்கள் கமல்ஹாசன், சிவாஜி நடித்த ‘தேவர்மகன்’ திரைப்படத்தின் காட்சிகளே வரும். இந்த ஆவணபடம் வெளியான பிறகு பல நூறு இணையதளங்களில் 20 ஆயிரம் பக்கங்களுக்கு மேல் இந்த ஆவணபடத்தைப்பற்றியும், பத்திரிகையாளனாக என்னையும் அடையாளப்படுத்தி செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த சாதனையையும் சகபத்திரிகையாளனாக எனக்கு ஆதரவும், ஆக்கமும், ஊக்கமும் தந்த அனைத்து பத்திரிகையாளர்களுக்கும் சமர்ப்பிக்கிறேன்.

ஒருமுறை முன்னாள் முதல்வர்கள் வாழ்க்கை வரலாறு தொடர்பான புத்தகங்களை தேடிப்பிடித்து படிக்கிறபோது ஓமந்தூர் ராமசாமியின் வாழ்க்கை இன்றைய சூழலுக்கு சவுக்கடி கொடுப்பதுபோல இருந்தது. அவர் முதல்வராக இருந்தபோதும், அந்த பதவியை துறந்தபோதும் தன் வாழ்நாளில் அன்பளிப்பு என்பதையே ஏற்காதவர். அவர் பெற்ற அன்பளிப்பு இரண்டே இரண்டுதான். ஒன்று ஒரு கைத்தடி, இன்னொன்று புதிய பாய்’ நம்ப முடிகிறதா.

இன்றைய அரசியல்வாதிகள் தங்களுக்கு வந்த அன்பளிப்புகளை காட்சிப்பொருளாக வைப்பதற்ககே பல அரங்கங்கள் கட்டிக்கொள்கிறார்கள். சிலர் பரிசு பொருள் வாங்கியதற்காகவே வழக்குகளை சந்தித்து அதில் இருந்து வெளியே வர ஓடிக்கொண்டிருக்கிறார்கள்... இன்னும் சிலர் பதவியில் இருக்கும்போது வந்த பரிசு பொருட்களை பதவி முடிந்ததும் வீட்டுக்கு எடுத்து போய் சிக்கலில் மாட்டியிருக்கிறார்கள்... அப்படியிருக்கும்போது, இப்படியும் ஒரு முதல்வர் பதவியில் இருந்திருக்கிறாரா என அவரைப்பற்றிய குறிப்புகள், வாழ்க்கை நிகழ்வுகளை தேடிப்பிடித்து ‘முதல் முதல்வர்’ என்ற பெயரில் ஆவணபடம் இயக்கி தயாரித்தேன்.

ஒருமுறை பண்ருட்டிக்கு ஒரு நிகழ்ச்சிக்காக முதல்வர் ஓமந்தூர் ராமசாமி போய்விட்டு திரும்புகிறார். காரில் வரும்போதே அவருக்கு ஏதோ ஒரு வாசனை வந்து கொண்டே இருந்ததாம். சென்னை திரும்பியதும் அப்போதைய முதல்வரின் இல்லமான கூவம் மாளிகையில் காரில் இருந்து இறங்கியதும் டிரைவரிடம் ‘என்ன வரும்போது வழியெல்லாம் ஏதோ பழவாசனை அடித்துக் கொண்டே இருந்ததே’ என கேட்டிருக்கிறார். டிரைவர் தயங்கியபடியே ‘ஐயா, பண்ருட்டியில் பலாப்பழம் ரொம்ப சுவையாக இருக்கும். நீங்களும் விரும்பி சாப்பிடுவீர்களே என அந்த நிகழ்ச்சி அமைப்பாளர்கள் ஒரு பெரிய பலாப்பழத்தை தந்தார்கள். உங்களுக்கு தெரிந்தால் சத்தம்போடுவீர்களே என பயந்து கார் டிக்கியில் வைத்திருக்கிறேன்’ என கூறியிருக்கிறார். அடுத்த நொடியே அந்த காரை அதே டிரைவரோடு பண்ருட்டிக்கு அனுப்பி, நிகழ்ச்சி ஏற்பாட்டார்கள் தந்த பலாப்பழத்தை திரும்ப தந்துவிட்டு வரச் சொல்லியிருக்கிறார். இதுமட்டுமல்ல, சென்னையில் இருந்து மீண்டும் பண்ருட்டிக்கு போய் திரும்புவதற்கு காருக்கு ஆகும் டீசல் செலவை தன் சொந்த வருவாயில் இருந்து தந்திருக்கிறார் அந்த சுத்தமான முதல்வர் ஓமந்தூரார். இன்றைய நிலையை சொல்லித் தெரியவேண்டியதில்லை. இன்னொருமுறை, கூவம் மாளிகையில் திடீரென சில அதிகாரிகளை அழைத்து கூட்டம் போட்டிருக்கிறார் முதல்வர் ஓமந்தூரார். அப்போது, அவர்களுக்கு டீ தயாரிக்க சொல்லியிருக்கிறார்கள். முதல்வர் வீட்டிலோ சர்க்கரை இல்லை. முதல்வரின் உதவியாளர் ஒருவர் உடனே ஒரு வணிகருக்கு தொலைபேசியில் முதல்வர் வீட்டுக்கு சர்க்கரை கொண்டு வரும்படி சொல்ல, அந்த வியாபாரி உடனே 2 மூட்டை சர்க்கரையை கொண்டு வந்து முதல்வர் வீட்டில் இறக்கி வைத்திருக்கிறார். கூட்டம் நடந்து கொண்டிருக்கும்போதே, இதை கவனித்த ஓமந்தூரார் உடனே சமையல் அறைக்கு வந்திருக்கிறார். அங்கே இறக்கப்பட்ட மூட்டையை பார்த்து விசாரித்து, அந்த கடைக்காரை தொலைபேசியில் அழைத்து ‘இறக்கி வைத்த சர்க்கரை மூட்டைக்கு பணம் வாங்கிக் கொண்டாயா’ என்று கேட்டிருக்கிறார். அதற்கு அந்த கடைக்காரர் ‘ஐயா முதல்வர் வீட்டில் போய் பணம் கேட்கலாமா’ என பதில் சொல்லியிருக்கிறார். ஓமந்தூரார் பதிலுக்கு ‘இப்போது அந்த மூட்டைகளை நீ எடுத்துப்போகாவிட்டால் உன் வியாபாரத்தில் தவறு இருக்கிறது உரிய சோதனைக்கு அதிகாரிகள் வருவார்கள்’ என சொல்லிவிட்டு தொலைபேசியை துண்டித்திருக்கிறார். காலையில் தன் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவேண்டும் என சில எம்எல்ஏக்கள் தீர்மானிதித்திருக்கிறார்கள் என்பதை கேள்விப்பட்டதும் அடுத்த சில மணிநேரங்களிலேயே தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, முதல்வர் பதவியை ராஜினாமா செய்த ஒரு மணிநேரத்தில் தனது அதிகாரப்பூர்வ முதல்வர் இல்லமான கூவம் மாளிகையில் இருந்து தனது சொந்த காரில் தனது உடமைகளோடு வெளியேறிய பெருந்தன்மை. இப்படி பல சம்பவங்களை அந்த ‘முதல் முதல்வர்’ ஆவண படத்தில் சொல்லியிருக்கிறேன்.

பசும்பொன் முத்துராமலிங்கம் வாழ்க்கை வரலாற்று ஆவண படத்தை போட்டுக்காட்டி முதல்வரா இருந்த கருணாநிதிகிட்ட கருத்து வாங்க முடியாம போயிடுச்சி... முன்னாள் முதல்வர் ஓமந்தூர் ராமசாமியோட வாழ்க்கை வரலாற்று ஆவணபடத்துலயாவது அவர் கருத்தை எப்படியும் பதிவு பண்ணிடனும்னு முடிவு செய்தேன்... இதுக்கு காரணம் இல்லாம இல்ல... 1969ம் வருஷம் தமிழக முதல்வரா கருணாநிதி இருந்தாரு... அப்போ ஓமந்தூர் ராமசாமி உடல்நலம் இல்லாம சென்னையில இருக்குற தன்னோட தம்பி வீட்டுல தங்கி சிகிச்சை எடுத்தாரு... ரொம்ப முடியாம போனதால அரசு பெரிய ஆஸ்பத்திரியில சேர்த்துட்டாங்க... விஷயம் கேள்விபட்ட கருணாநிதி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து ‘தனியார் ஆஸ்பத்திரியில சேருங்க சிகிச்சைக்கு ஆகிற செலவை அரசே ஏத்துக்கும்’னு ஓமந்தூர் ராமசாமியிடம் சொல்லியிருக்காரு... அதுக்கு ஓமந்தூர் ராமசாமி ‘அரசாங்க பணத்தை ஏன் வீண் பண்றீங்க... தனியார் ஆஸ்பத்திரியில குடுக்குற அதே சிகிச்சையதான அரசு ஆஸ்பத்திரியிலயும் குடுக்குறாங்க...’ன்னு சொல்லிட்டு கருணாநிதியோட கோரிக்கைய ஏத்துக்க மறுத்துட்டாரு... இந்த நிகழ்வை குறித்து முதல்வர் கருணாநிதியிடம் கருத்து வாங்கி ‘முதல் முதல்வர்’ ஆவண படத்துல சேர்க்கலாம்னு மறுபடியும் கோபாலபுரம் போனேன்... இந்த முறையும் அவர் உதவியாளர் சண்முகநாதன் நான் குடுத்த கடிதத்தை வாங்கி வைச்சிகிட்டு வழக்கம்போல தலைவர் பிசியா இருக்காரு... அப்புறமா போன் பண்ணுவாங்க அப்ப வாங்கன்னு அனுப்பிட்டாரு... ஒரு மாசம் ஆன பிறகு போன் எதுவும் வரல... மறுபடியும் கோபாலபுரம் போனேன்... இந்தமுறை உதவியாளர் சண்முகநாதன் ‘தம்பி... தலைவருக்கு பேட்டி குடுக்க எல்லாம் நேரமில்ல... நீங்க வேணா என்ன கேள்வின்னு எழுதி குடுங்க... நேரம் கிடைக்கும்போது தலைவர்கிட்ட காட்டி பதில் வாங்கித் தர்றேன்னு சொன்னாரு.... நான் சொன்னேன் இல்ல சார்... இது பத்திரிகை பேட்டி இல்ல முன்னாள் முதல்வரோட வாழ்க்கை வரலாற்று ஆவண படம். அதில் தலைவர் கருத்து சொல்ற மாதிரி படம் பிடிக்கணும்... கொஞ்சம் டைம் கேளுங்கன்னு கேட்டேன்... சரி நான் பாக்குறேன் தம்பின்னு சொன்னவர் அதுக்கப்புறம் எந்த பதிலும் சொல்லவே இல்லை.... நான் கோபாலபுரம் வீட்டுக்கும், தலைமை செயலகத்துக்கும், அறிவாலயத்துக்கும் நடையா நடந்து நேரம் கேட்டது அப்ப முதல்வரா இருந்த கருணாநிதிக்கு தெரியுமான்னு எனக்கு தெரியல...

ஓமந்தூர் ராமசாமியோட கடைசி நாட்களில் கூட இருந்தவரு சொல்லின் செல்வருன்னு சொல்ற பொள்ளாச்சி மகாலிங்கம்... இவர்கிட்டதான் தனது உடமைகள் அனைத்தையும் ஓமந்தூர் ராமசாமி ஒப்படைச்சாராம்... ஓமந்தூர் ராமசாமியின் வாரீசுன்னு இவரை சொல்லுவாங்க... அதனால, அவர்கிட்ட பேசி நிறைய தகவல்களை சேகரிச்சி ஆவண படத்துல சேக்கலாம்னு சென்னையில இருக்குற அவரோட ஆபீஸ்... வடலூர்ல இருக்குற அறக்கட்டளை ஆபீஸ்னு எல்லா இடத்துலயும் போய் சந்திக்க அனுமதி கேட்டு கடிதம் குடுத்தேன்...

சென்னை ஆபீஸ்ல அவரோட உதவியாளர் ரவி. அவரிடம் எப்ப போய் கேட்டாலும்... ‘ஐயா கொஞ்சம் பிசியா இருக்காங்க... அடுத்த வாரம் பாக்கலாமேன்னு சொல்லி அனுப்பிடுவாரு...’ அடுத்த வாரம் போனா... ‘ஐயா... உடல்நிலை சரியில்ல... ஆஸ்பிடல்ல ரெஸ்ட் எடுக்குறாங்க... அடுத்த வாரம் பாக்கலாம்...’னு சொல்லுவாரு... நானும் 3 மாசத்துக்கு மேல நடையா நடந்து பார்த்தேன்...

சென்னையில நடக்குற கம்பன் விழாவுக்கு பொள்ளாச்சி மகாலிங்கம் வருவாருன்னு சொன்னதால எப்படியும் சந்திக்கணும்னு உதவியாளர் ரவிகிட்ட கேட்டேன்... இந்த நிகழ்ச்சி எல்லாம் 2 மாசத்துக்கு முன்னாடியே சம்மதம் சொன்னது... வேற சந்திப்புக்கு நேரம் ஒதுக்க முடியாது... கொஞ்சம் வெயிட் பண்ணுங்க... வேற ஏதாவது நாள் ப்ரீயா இருக்காரான்னு பாத்து சொல்றேன்னு சொல்லிட்டாரு...

‘ஐயா உடம்பு சரியில்லாம இருக்காருன்னு உதவியாளர் சொல்லி அனுப்பினா... மறுநாள் வர்ற பேப்பர்ல எதாவது விழாவுல பொள்ளாச்சி மகாலிங்கம் சிரிச்சிகிட்டே பரிசு குடுத்துகிட்டிருப்பாரு... அல்லது மேடையில உட்கார்ந்துகிட்டிருக்குற மாதிரி போட்டோ வரும்... 4 மாதம் ஓடிப்போன பிறகும் அவர்கிட்டயிருந்து எந்த பதிலும் இல்லை... சந்திக்கவும் நேரம் ஒதுக்கித்தரவில்லை... சரி எழுத்து வடிவில் கேள்வி பதிலாவது வாங்கலாம்னு கேட்டாலும்... பதில் எழுத ஐயாவுக்கு நேரம் இல்லை என்றே தட்டிக்கழித்தார்கள்...

யாரால் இந்தளவுக்கு உயர்ந்திருக்கிறார்களோ அவரைப்பற்றிய வரலாற்று ஆவண படத்தில் பார்த்த, பழகிய அனுபவங்களை பகிர்ந்து கொள்ளகூட இந்த பெரிய மனிதர்களுக்கு நேரமில்லாமல் போய்விடுகிறது...

நாடு முழுவதும் போலீஸ் எண்கவுண்டர்கள் நிஜத்தில் தற்செயலாக நடக்கிறதா அல்லது திட்டமிட்டு அரங்கேற்றப்படுகிறதா என்ற ஆயிரம் ஆயிரம் கேள்விகள் வெகுஜெனமக்களில் தொடங்கி அனைவர் மனதிலும் இன்னமும் கேட்டுக் கொண்டேதான் இருக்கிறது. பொதுவா ஒரு துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துட்டாலோ... அல்லது என்கவுண்டர் நடந்தாலோ சுடப்பட்டவர்களின் உடலை அவருக்கு உரியவர்களிடம் ஒப்படைப்பதுதான் வழக்கமா இருந்து வருகிறது... ஆனால், திடீர்னு அதிகாலையில போலீஸ் ஊருக்குள்ள வந்து கண்ணுல பட்ட ஆண்களை எல்லாம் புடிச்சி கொண்டுபோய் அடிச்சி துவைச்சி... அதுல இருந்து 5 பேரை மட்டும் தனியா பிரிச்சி கொண்டுபோய் சுட்டுக் கொல்லுது... செத்தவங்க உடலை கூட சொந்தக்காரங்ககிட்ட காட்டாம சத்தமில்லாம வேற ஊருக்கு கொண்டுபோய் போலீசே எரிச்சிடுறாங்க... ஆவண பட தேடுதல் வேட்டையில இந்த உண்மை சம்பவத்தை பற்றி கேள்விப்பட்டேன்... இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம்தான் சுதந்திரம் பெற்ற பிறகு தமிழக அரசியல் வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட முதல் துப்பாக்கிச் சூடு சம்பவமாம்... அந்த சம்பவத்தில் உண்மையில் நடந்தது என்ன? என்ற கேள்விக்கு விடை தேடும் முயற்சியில் இறங்கி சுமார் 1 ஆண்டுகள் அதற்கான ஆவணங்களை தேடி, பலியானவர்களின் வாரிசுகளை தேடிப்பிடித்து, சம்பவத்தை கண்ணால் கண்ட சாட்சியை தேடிப்பிடித்து, மறையாத வடுவாக மாறியிருந்த அந்த கொடுமையான மணித்துளிகளில் நடந்தவற்றை தொகுத்து ‘கருவேலங்காடு’ நெஞ்சை தொடும் உண்மை சுடும்’ என்ற பெயரில் உண்மை சம்பவ ஆவண திரைப்படமாக உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன். அரை நூற்றாண்டுகளை கடந்திருந்தாலும் அந்த கொடுமையை மறக்க முடியாமல் அந்த பகுதி மக்கள் படும் அவதியையும் இந்த திரைப்படத்தில் சொல்லயிருக்கிறேன்.

என்னோடு இந்த முயற்சியில் சக பத்திரிகையாளர்களாக தோள்கொடுக்கிற உங்கள் அனைவருக்கும் இந்த மலர் மூலமாக என் வணக்க மலர்களை தூர இருந்தே தூவுகிறேன் அது(மலர்கள்) உங்கள் தலையில் விழுந்தால் கிரீடமாக்கிக் கொள்ளுங்கள். ஒருவேளை உங்கள் காலடியில் விழுந்தால் ஆசீர்வதியுங்கள்.


என்றும் நன்றியுடன் எம்.பி.ஆபிரகாம் லிங்கன் ஆவணபட இயக்குனர்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Abraham_lincoln_director&oldid=2049316" இலிருந்து மீள்விக்கப்பட்டது