பயனர்:வைகுண்ட ராஜா/அய்யாவழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அய்யாவழி (தமிழ்:அய்யா+வழி - "தந்தையின் வழி") பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் தென் தமிழ் நாட்டில் தோன்றிய ஒரு தர்மக்கோட்பாட்டு சமய மரபாகும். பல ஆய்வுகள் அய்யாவழியை தனி சமயம் என நிலைப்படுத்துகின்ற போதிலும், இதை பின்பற்றும் பெரும்பாலானோர் மக்கள்தொகை கணக்கீட்டில் தங்களை இந்து சமயத்தினர் என அடையாளம் காட்டுகின்றனர். இதனால் இது இந்து சமயத்தின் உட்பிரிவு என்னும் கருத்தும் நிலவுகிறது.

அய்யாவழி தன் மையத்தை அய்யா வைகுண்டரின் வாழ்வு மற்றும் செய்திகளில் கொண்டுள்ளது. இதன் கருத்தியல், தத்துவம் ஆகியன அகிலத்திரட்டு அம்மனை மற்றும் அருள் நூல் ஆகிய புனித நூற்களை அடித்தளமாக கொண்டு அமைந்துள்ளன. இதன்படி வைகுண்டர், நாராயணரின் மனு அவதாரமாவார். அய்யாவழி பல கருத்துக்களை, குறிப்பாக புராணம், சடங்குகள் போன்றவற்றை இந்து சமயத்துடன் பகிர்ந்துகொண்டுள்ள அதே வேளையில் மற்றுபல கருத்துக்களுக்கு மறுவுரு கொடுத்திருக்கிறது. இது தர்மக்கோட்பாடு, தீய சக்தி ஆகியவற்றை உருசெய்யுமிடத்து இந்துசமயத்திடமிருந்து குறிப்பிடத்தக்க வண்ணம் வேறுபடுகிறது. ஆப்பிரஹாமிய சமயக்கோட்பாடான பரலோகம் போன்றதோர் கருத்தினை அய்யாவழி தன் முழுமுதல் லட்சியமாக கொண்டுள்ள போதிலும், இதன் கருத்தியல் தர்மக்கோட்பாட்டில் மையம் கொண்டுள்ளதால், இதனை தனி சமயமென்போர் அய்யாவழியை தர்மிய சமயமாக கருதுகின்றனர்.

அய்யாவழி முதன்முதலாக 19-ம் நூற்றாண்டில் இந்துசமயத்தின் ஒரு துணை சமயமாக அடையாளம் காணப்பட்டது. வைகுண்டரின் செயல்பாடுகள், மற்றும் அவரை பின்பற்றுவோரின் எண்ணிக்கையின் அசாதாரண உயர்வு, ஆகியன அன்றைய தமிழ் மற்றும் திருவிதாங்கூர் சமூகத்தில் ஒரு பெரிய சீர்திருத்தத்தையும் புரட்சியையும் உருவாக்கியது. இதன் திடீர் வளர்ச்சி அப்போதைய தென் இந்தியாவில் வேரூன்றியிருந்த முதலாளித்துவ சமூக அமைப்பின் அடித்தளத்தை உலுக்குவதாக அமைந்தது.

இதனை பின்பற்றுவோர் இந்தியா முழுவது பரவலாக காணப்பட்டாலும், கணிசமான அளவில் தென்னிந்தியாவிலும், அதிகமாக தமிழ் நாடு மற்றும் கேரளப்பகுதிகளுலும் காணப்படுகின்றனர். இதனை பின்பற்றுவொரின் எண்ணிக்கை 700 000 முதல் 80 லட்சம் வரை இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ள போதிலும் மக்கள் தொகை கணக்கீட்டில் இந்து சமயத்தினர் என கணக்கிடப்படுவதால் பின்பற்றுவோரின் சரியான எண்ணிக்கை தெரியவில்லை. ஆனால் அய்யாவழியின் முதல் நூற்றாண்டு கடும் வளர்ச்சியை கிறிஸ்தவ சமயப்பரப்பு சமுகங்களின் ஆண்டறிக்கைகள் வெகுவாக படம்பிடித்து காட்டுகின்றன.

வரலாறு[தொகு]

அய்யாவழி, வைகுண்டரை வழிபட சுவாமிதோப்பில்(அப்போதைய பூவண்டன் தொப்பு) மக்களின் பெருந்திரளான கூடுகையினால் முதன்முதலாக அடையாளம் காணப்பட்டது. வைகுண்டரின் அறிவுரையோடு 1840-ல் நடத்தப்பட்ட துவையல் தவசு அய்யாவழியை ஒரு மாற்று சமய-சமூக அமைப்பாகக் காண ஏதுவாக்கியது என ஆய்வுகள் கூறுகின்றன. இதில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானோர் சமூகத்தின் மித-கீழ்த்தட்டு மக்களாகவே இருந்தனர். அவர்கள் ஒரு தனி அமைப்பாக செயல்படத் துவங்கி பின்னர் படிப்படியாக தங்களை அய்யாவழியினர் என அடையாளம் காட்டிக்கொண்டனர். இவர்களில் பெரும்பாலானோர் சாணார் இனத்தவர்களாக இருந்தபோதிலும் மற்ற சாதியினரும் கணிசமான அளவில் இவ்வமைப்பில் இருந்ததற்கு சான்றுகள் உள்ளன. மற்றொரு புறம் அய்யாவழி அன்றைய தமிழ்-மலையாள சமூகத்தில் வேகமாக நடந்துவந்த சமயமாற்றத்துக்கு பெரும் தடையாக அமைந்தது. இதனால் இதன் வளர்ச்சி கிறிஸ்தவ சமயப்பரப்பு சமூகங்களுக்கு பெரும் சவாலாக அமைந்தது.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியிலெல்லாம் அய்யாவழி தின்னெவேலி மற்றும் கேரளத்தின் தென் பகுதியில் ஆழமாக வேரூன்றி ஒரு தனி சமய மரபாக அங்கிகரிக்குமளவு தன்னை நிலைபடுத்திக்கொண்டது. 1940-களிலிருந்து அதன் வளர்ச்சி மேலும் அதிகரித்தது. அன்னூற்றாண்டின் நிறைவு காலகட்டத்தில் சுவாமிதோப்பு அய்யாவழியின் தலைமையகமாக கருதப்பட ஆரம்பித்துவிட்டது. வைகுண்டரின் காலத்துக்குப் பின்னர் அவரின் போதனைகளின் அடிப்படையில் அய்யாவழி பரப்பப்பட்டது. அய்யாவின் சீடர்கள், துவையல் பண்டாரங்கள் மற்றும் அவர்களில் வம்சாவளியினர் நாட்டின் பலபகுதிகளுக்கும் சென்று அவரின் போதனைகளை பரப்ப ஆரம்பித்தனர். அதேவேளையில் பையன் வாரீசினர் சுவாமிதொப்பு பதியை நிர்வகிக்கத்துவங்க மற்ற பதிகளை அந்தந்த பகுதிகளில் வாழும் அய்யாவழியினரின் கட்டுப்பட்டின்கீழ் வந்தன. மற்றொருபுறம் நாடெங்குமாக நூற்றுக்கணக்கான நிழல் தாங்கல்கள் எழுந்தன.

அய்யாவழியின் முதல் அச்சுப்பிரதியாக 1927-ல் அருள் நூல் வெளிவர, தொடர்ந்து இயற்றபட்டு கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்கப்பால் 1933-ல் அகிலத்திரட்டு வெளிவந்தது. அதுவரை செவிவழிச் செய்தியாக பரவி வந்த அய்யாவழி, இதன்மூலம் திரிந்து புனித நூற்கள் அடிப்படையில் பரவ ஆரம்பித்தது. தலைமையக அறிக்கைகளின் படி இந்திய சுதந்திரத்துக்குப் பின்னால் அய்யாவழி மிக வேகமாக வளர்ந்த்து வருகிறது. குறிப்பாக 20-ஆம் நூற்றாண்டின் 90-களிலிருந்து அதன் வளர்ச்சி-விகிதம் இன்னும் அதிகரித்துள்ளது. அந்நூற்றாண்டின் இறுதி காலகட்டத்தில் பல அய்யாவழி-சார் சமூக-நல அமைப்புகள் உருவாக்கப்பட்டன. அதே கால கட்டத்தில் அகிலத்துக்கு மேலும் பல மாற்று பதிப்புகள் வெளிவந்தன; சில கடுமையாக விமர்சனத்துக்குள்ளாயின. 1990-களின் துவக்கத்தில் இச்சமயமரபை ஒருங்கிணைத்து செயல்படுத்த அன்புக்கொடிமக்கள் திருச்சபை என்னும் ஜனநாயக-அமைப்பை தலைமையகம் நிறுவியது. இந்நோக்கங்களை நிறைவேற்றும் பொருட்டு, சென்னை, திருவனந்தபுரம் உள்ளிட்ட பெருநகரங்களில் இவ்வமைப்பின் சார்பாக பல மாநாடுகள் நடத்தப்பட்டன.

அய்யாவழியின் வளர்ச்சியை கருத்தில்க் கொண்டு 1994-ஆம் ஆண்டு முதல் குமரி மாவட்டத்துக்கும், 2006-ஆம் ஆண்டு முதல் நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்துக்கும் வைகுண்ட அவதார தினத்தை பொது விடுமுறை நாளாக தமிழக அரசு அறிவித்தது. அய்யாவழியின் தற்போதைய தலைவராக பையன் வாரீசினரில் ஒருவரும், சுவாமிதொப்பு பதியின் தற்போதைய பட்டது அய்யாவகவும் இருக்கும் பால பிரஜாதிபதி அடிகளார் கருதப்படுகிறார்.