பயனர்:ஜெயாபாரதிப்ரியா/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கரிசக்காடும் செவக்காடும்

மதுரைக்குத் தெற்கே கன்யாகுமரி போக மூன்று வழிகள் உண்டு. ஓன்று திருமங்கலம், விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, நாகர்கோவில் வழியாக கன்னியாகுமரி போகும் தேசிய நெடுஞ்சாலை. இரண்டு அருப்புக்கோட்டை,பந்தல்குடி,எட்டயபுரம்,தூத்துக்குடி,காயல்பட்டிணம்,திருச்செந்தூர் குலசேகரபட்டிணம் உவரி கூடங்குளம் அஞ்சுகிராமம் வழியாக கன்னியாகுமரி. மூன்றாவது திருமங்கலம் கல்லுப்பட்டி ராஜபாளையம் ஸ்ரீவில்லிபுத்தூர் சங்கரன்கோவில் தேவர்குளம் திருநெல்வேலி வழி. மதுரையிலிருந்து கோவில்பட்டி வழியாகப் போகும்போது இருபுறமும் கவனித்தால் எட்டு மட்டுக்கும்கண்ணுக்குத் தெரிவது காய்ந்த கருவாடாய் கிடக்கும் கரிசல்காடுதான். அம்புட்டும் மழையை நம்பிய மானாவாரி.

கருமாயப்படும் சம்சாரிகளுக்கு லேசாத் தூரல் விழுந்தாலே போதும். கம்மம் புல்லையும் பருத்தியையும் சோளத்தையும் விதைத்து பாதியை மேகத் தூரலிலும் மீதியை உழைத்த தேகம் வடிக்கும் வியர்வையிலுமே விளைய வைத்து விடுவார்கள். விவசாயி நாலு சொட்டு கண்ணீர் விட்டால்கூட அதையும் உள்வாங்கி பயிரை உயிர்க்கும் பூமி. உயிர் காக்கும்பூமி - கரிசல் பூமி. இப்போது நாலுவழிச் சாலைகளும் புறவழிச் சாலைகளும் சர்வீஸ் ரோடுகளும்-ஊர்களையும் நிலங்களையும்,வீடுகளையும், ஏன் குடும்பங்களையும் கூட ரெண்டாக, நாலாகக் கூறு போட்டு பிரித்து விட்டன.

நெடுஞ்சாலைகளின் இருபுறமும் மோட்டல்களும்,காபி டீ சிற்றுண்டிக் கடைகளும் பிளாட்டுகளும் புற்றீசல்களாக புறப்பட்டு விட்டன. சாலைகளின் குறுக்கே வரி வசூலிக்கும் டோல்கேட் எனப்படும் சுங்கச் சாவடிகளும் இவற்றோடு சேர்ந்து பறக்கும் வாகனங்களும் பயணிகளைச் சாகடிக்கின்றன.

அதிர்ஷ்டவசமாக இதிலிருந்தெல்லாம் தப்பி நீங்கள் கோவில்பட்டி வந்துவிட்டால் இறங்கி அங்கிருந்துமேற்காக சங்கரன்கோவில் போகும் பஸ்ஸில் ஏறி என்னோடு கழுகுமலையில் இறங்கி விடுங்கள். கிட்டத்தட்ட அம்பது வருஷத்துக்கு முன்பு எப்படி இருந்ததோ அப்படியே அந்த ஊரும் மலைக் குன்றும், கழுகாசலமூர்த்தி தேவஸ்தானம் முருகன் கோவிலும் மாறாமல் இருக்கும்.

சற்றே தாக சாந்தி செய்து கொள்ளலாம். அப்படியே சின்னதாய் ஒரு ஃபிளாஷ்பேக். கழுகுமலை ஒரு பெரிய கிராமம்,அல்லது ஒரு சின்ன டவுண். இது பாரதி பிறந்த எட்டயபுரம் சமஸ்தானத்துக்கு சொந்தமானது. வீட்டுக்கு வீடு தீப்பெட்டித்தொழில். எங்கு பார்த்தாலும் தீப்பெட்டித் தொழிற்சாலைகள். ஊருக்கு நடுவில் ஒரு சின்ன மலை. மலையடிவாரத்தில் கழுகாசலமூர்த்தி தேவஸ்தானம் எனப்படும் அழகான முருகன் கோவில். அதில் மூக்கும் முழியுமாக அற்புதமான அந்தத் தெரு பெண்களைப் போன்ற சிற்பங்கள் நிறைய உண்டு. . கோவிலுக்குள்ளே ஊருக்கே குடி தண்ணீர் வழங்கும் தெப்பக்குளம்.கோவிலை ஒட்டி உயரமான ஒரு மலைக்குன்று. இந்த மலையின் உச்சியில் சம்பாதி எனும் முனிவர் வாழ்ந்தார். அவர் வைக்கும் உணவைத் தின்பதற்காக தினமும் ஒரு கழுகு வரும். அதனால் இந்த ஊருக்கு கழுகுமலை எனும் பெயர் வந்தது என்றொரு கதையுண்டு.

பாண்டிய மன்னர்கள் காலத்தில் சமண முனிவர்கள் வந்து இம்மலைக் குகைகளில் தங்கி தவமிருந்து சமண மதக்கொள்கைகளை பரப்பியதாகவும் அடுத்து வந்த பாண்டிய மன்னன் ஒருவனால் நூற்றுக்கணக்கான சமண முனிவர்கள் கழுவிலேற்றி கொல்லப்பட்டதாகவும் கழுவேற்றிக் கொல்லப்பட்ட மலைதான் கழுமலையாகி மருவி அப்புறம் கழுகுமலை யானதாகவும் ஒரு வரலாறு உண்டு.அதற்கு சான்றுகளும் உண்டு.

மலையில் அவர்கள் குடைந்து வழிபட்ட அழகான குடைவரை கோவிலும் உச்சி மலையில் சிற்பங்களும் இப்போது தொல்பொருள் ஆய்வுத்துறையால் பாதுகாக்கப்படுகிறது. குடைவரைக்கோவிலை குடைந்த சிற்பியின் மகன் தன் தந்தையைப் போல தானும் அவருக்குத் தெரியாமலே சிற்பம் வடித்ததாகவும் அது பொறுக்காத சிற்பி மகனைக்கொன்று விட்டதாகவும் அதனாலேயே குடைவரைக் கோவில் முற்றுப்பெறாமல் போனதென்றும் ஒரு ரீல் உண்டு.

மலை உச்சியிலிருந்து பார்த்தால் நாலாபக்கமும் சுமார் பத்துப்பதினைஞ்சு மைல் தூரத்தில் உள்ள அத்தனை ஊர்களும் தெரியும்.கிழக்கே குமராபுரம், காலங்கரைப்பட்டி வானரம்பட்டி வரைக்கும் மேற்கே ஆலங்குளம் குருவிகுளம் நாலுவாசம்கோட்டை,வடக்கே ராமநாதபுரம் சீகம்பட்டி கொளக்கட்டாகுறிச்சி வரைக்கும் தெற்கே பழங்கோட்டை கூழத்தேவன்பட்டி வேலாயுதபுரம் கொக்குளம் புதுக்குளம் நாயக்கர்பட்டி வரைக்கும் தெரியும்.

நாங்கள் மலை உச்சிக்குப் போனால் பெரும்பாலும் தெற்கேதான் பார்ப்போம். ஏனென்றால் தெற்கேதான் எங்க ஊர் கரடிகுளம் தெரியும். இடையில் பழங்கோட்டை எனும் ஊரும் அடுத்து அடர்ந்த காடும் தெரியும். அந்தக்காடுகள் எட்டயபுரம் மஹாராஜா வேட்டையாடுவதற்காக பல நூற்றாண்டுகளாக அழியாமல் பாதுகாக்கப்பட்ட, விலங்குகள் வாழ்ந்த வனப்பகுதி.

அங்கேயிருந்துதான் செவல்காடுகள் ஆரம்பமாகிறது. மழை பெய்தால் ஓடைகளில் தண்ணீர் சிவப்புக் கலரில்தான் ஓடும். குளங்களிலும் நீர் செம்மண் நிறத்தில்தான் நிறைந்து காணப்படும். இந்த செம்மண் பூமியில் விளையும் வேர்க்கடலைக்கும், சீனிக்கிழங்குக்கும், தட்டப்பயறு, பாசிப்பயறு, கம்மம்புல், கேப்பை குருதவாலி, காடக்கண்ணி,தினை போன்ற தான்ய வகைகளுக்கும் ருசியின்னா ருசி அப்பிடி ஒரு ருசியிருக்கும்.

முன்பொரு காலத்தில் எங்கள் ஊரை ஒட்டிய அந்தவனப் பகுதியில்தான் கரடி,மான், காட்டுப்பன்றி, மிளா, முயல், நரி போன்ற விலங்குகளும் மயில், குயில், காடை,கௌதாரி, செண்பகத்தான் குருவிகளும் கொஞ்சிக்குலாவும். காட்டுக்குள்ளிருக்கும் சின்ன சின்ன நீர்த் தடாகங்களிலும் சுனைகளிலும் கொக்கு, நாரை, உள்ளான், முங்குளிப்பான்,நண்டு, நத்தை வாத்து நீர்க்காக்கை மீன்கொத்திப் பறவை போன்ற நீர்ப்பறவைகள் அதில் மீன் பிடித்து வித்தைகள் காட்டும்.

வன தேவதைகள் என்னும் கன்னிகள் அந்த நீர் நிலைகளிலும் கன்னிமார் ஓடைகளிலும் அம்மணமாய் குளிப்பார்கள் என்றும் அதை பார்த்தால் கண்கள் அவிஞ்சு போகுமென்றும் ஆடு மாடுகள் மேய்ப்போர் சொல்லியிருக்கிறார்கள்.

இப்போது அந்த இடத்தில் இலவச கழிப்பறைத் திட்டத்தில் வீட்டுக்கொரு கழிப்பறை கட்டி அதுவும் பாழடைந்து கிடக்கிறது. கழுகு,பருந்து,ஆமைகள்,முள்எலிகள், எறும்பு தின்னி, இன்னும் பெயர் தெரியாதநூற்றுக் கணக்கான பறவைகளும், விலங்குகளும் வித விதமான பாம்புகளும்,தவளைகளும் அது பாட்டுக்கு சுதந்திரமாய் அலையும். சிறுவர்களாய் இருந்தபோது கொஞ்சம் கூட பயமே இல்லாது அதுகளை விரட்டித் திரிந்ததையும் விளயாண்டதையும் இப்போது நினைத்துப் பார்த்தால் மெய்சிலிர்க்கிறது.

அடர்ந்த காட்டுக்குள் நுழைந்து விட்டால் திக்கும் தெரியாது திசையும் தெரியாது. வேட்டைக்கு வரும் மஹாராஜா தன் பரிவாரங்களுடன் அந்த மரத்தடியில்தான் கூடாரம் அமைத்து இளைப்பாறுவாராம் அடையாறு ஆல மரம்போல வளர்ந்து பரந்து விரிந்து கிடக்கும் அந்த மரத்தை மஹாராசா ஒட்டரை என்றுதான் அழைப்போம்.

அந்தப்பக்கமுள்ள பதினெட்டுப் பட்டிகளைச் சேர்ந்த கிராமத்து மக்கள் இந்தப் பக்கமிருக்கும் கழுகுமலை சந்தைக்கு வருவதற்கு முதலில் ஒத்தயடிப் பாதையையும் அப்புறம் வண்டிப் பாதையையும் பிறகு கப்பி ரோட்டையும்தான் பயன் படுத்தினார்கள்.வழிப்போக்கர்கள் அந்தஓட்டரையின் அடியில் சற்று இளைப்பாறி விட்டுத்தான் போவார்கள்.

தனியாளாக யாரும் வர மாட்டார்கள். காட்டு விலங்குகள்,திருடர்கள் வழிப்பறி கொள்ளைக்காரர்கள்,அதோடு பேய் பிசாசுகளுக்கும் மக்கள் அநியாயத்துக்கு பயந்து செத்த காலமது .போலீசுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு ஒளிந்து திரியும் அருவா வேலு போன்ற சமூக விரோதிகளும் காட்டுக்குள்ளேதான் கிடப்பார்கள்.

நாங்கள் ஐந்தாம் வகுப்பில் வெற்றிகரமாக பாஸாகி கழுகுமலை உயர்நிலைப்பள்ளிக்கு ஆறாம் வகுப்புக்கு தினமும் 5 கிலோமீட்டர் நடந்துதான் போய் வருவோம்.அப்போது காட்டுக்குள்ளேயே தலைமறைவாய் வாழும் அருவா வேலுக்கு என்றொரு சமூக விரோதிக்கு காராசேவு, கடலைமிட்டாய், முறுக்கு, பொரிகடலை,கருப்பட்டி, காப்பித்தூள் போன்றவைகளை நாங்கள்தான் வாங்கிக்கொடுபோம்.

இங்கே மலைமீது நின்று பார்த்தால் அடர்ந்த காட்டுக்குள் தனியாக அந்த ஒட்டரை மரமும் குளமும் நன்றாகத் தெரியும். ராஜாக்களின் காலம் போய் மந்திரிகள் காலம் வந்தது.

ஸ்ரீமாவோ-சாஸ்திரி இலங்கை இந்திய ஒப்பந்தப்படி 1970 களில் புலம்பெயர்ந்து இலங்கைத் தமிழர்கள் சிலோன் அகதிகள் என்ற பெயரில் வந்தார்கள். அவர்களின் குடியிருப்புகளுக்காகவும் பிழைப்புக்காகவும் காடுகள் அழிக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பிரிக்கப்பட்டு அகதிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன. அடர்ந்த மரங்களும் செடி கொடிகளும் பறவைகளும் விலங்குகளும் எங்கேதான் புலம் பெயர்ந்தனவோ ? நினைக்க நினைக்க வகுத்தெறிச்சலாக இருக்கிறது ...அதுபோன்ற உயிரினங்களை கற்பனையில் கூட இனிமேல் காணமுடியாது.

இன்று அங்கே காலனி வீடுகளும் குடிருப்புகளும் தீப்பெட்டி தொழிற்சாலைகளும் அதன் உப தொழில்களும் ஒன்றிரண்டு தென்னைமரங்களும் தென்படுகின்றன. . எது எப்படியாயினும் கழுகுமலையின் நடுநாயகமாக நிற்கிறது ஒரு சூடான வெடி குண்டைப் போன்ற அந்த மலைக்குன்று. அதில் பல நீர்ச்சுனைகள் உண்டு. மழைக்காலத்தில் நிரம்பி வழியும் குழிகளும் உண்டு. கண்ணாடிபோல் முகம் காட்டும் நீரை இரு கைகளாலும் அள்ளி மொண்டு குடித்தால் தேனாய் இனிக்கும். பள்ளிச் சிறுவர்களாயிருந்த போது மலை மீதிருக்கும் மர நிழலில்தான் அமர்ந்து படிப்போம். சுனையில் குளிப்போம் இருட்டியதும் ஒரே ஓட்டமாய் ஓடி வந்து விடுவோம்.

வருஷத்துக்கு ரெண்டுதடவை வரும் மாட்டுத்தாவணி என்னும் மாட்டுச்சந்தையும் வாரா வாரம் நடக்கும் ஆட்டுச்சந்தையும் வாரச்சந்தையும் இந்த ஊரின் ஸ்பெஷல்.

அந்த ஆட்டுச்சந்தையில் ஆடுகளை விற்க வரும் வியாபாரிகளும் விவசாயிகளும் அந்த ஆடுகளுக்கு அகிலாண்டபுரி எனும் பெயரிலுள்ள குளத்தில் நிரம்பிக் கிடக்கும் சாக்கடை கலந்த சேத்துத் தண்ணியை பதநீர் குடிக்கும் ஒலைப்பட்டையில் மொண்டு ரெண்டுபேர் ஆட்டின் வாயைப்பிளந்து கைகளால் பிடித்துக்கொள்ள கதறக்கதற அதன் வாயில் ஊற்றி அதைக் குடிக்க வைத்து ஆடுகளை சந்தைக்கு இழுத்துச் செல்லுவார்கள்.

வெடிக்குமளவுக்கு வயிறு உப்பி எடை அதிகரிக்கத்தான் இந்தச் சித்திரவதை. வீட்டில் ஆடு மாடுகளை கோழி குஞ்சுகளை பெத்த பிள்ளையாய் வளர்க்கும் அதே பாசமுள்ள விவசாயிதான் நாலு காசு கூடக்கிடைக்குதே என்பதற்காக இதயமில்லாத வியாபாரியாகவும் நடந்து கொள்கிறான்.

இன்றும் நடக்கும் அந்தக் கொடுமையைப் பார்த்தால் கொடுங்கோலன் ராஜபக்ஷேயெல்லாம் சும்மா. காசு கிடைக்கிறதென்றால் நம்ம மக்கள் எந்தக் கொடூரத்துக்கும் தயங்க மாட்டார்கள். பாண்டிய மன்னனால் கழுவிலேற்றி கொல்லப்பட்ட சமணர்களுக்கும் வியாபாரிகளால் கொடுமைப் படுத்தப்படும் இந்த ஆடு மாடு களுக்கும் எந்த வித்தியாசமுமில்லை.அது இன்றும் தொடர்வது தான் சாபக்கேடு.

தாது வருஷப் பஞ்சம்,மக்காசோளப் பஞ்சம்,சாணாக்கிழங்கு பஞ்சம் என்று பெரும்பஞ்சங்கள் வந்து 100 ஏக்கர், 150 ஏக்கர், பூமிக்குச்சொந்தக்காரர்களான பெருத்த சம்சாரிகளும் பண்ணைகளுமே திருடர்களாகவும் வழிப்பறி கொள்ளைக் காரர்களாகவும்,கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பவர்களாகவும் பெத்த தாய் தகப்பனையே வெட்டிக்கொன்ற கொலைகாரர் களாகவும் மாறி அது இன்றளவும் தொடர்கிறது. மழையின்மை,வறட்சி,பஞ்சம், பசி என்று வந்துவிட்டால் பற்றும் பாசமும்கூட பறந்துவிடும் போல. நதிகள் இணைப்பு பற்றி பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.ஏதாவது ஒரு நதி தட்டுக்கெட்டு திசைமாறி இந்தப்பக்கம் வந்துவிடாதா என்று பல நூற்றாண்டுகளாக தவமிருக்கிறார்கள் இந்த மண்ணின் மைந்தர்கள்.

இந்தியாவில் பக்தி என்பது ஒழுக்கத்தோடு சம்பந்தப்பட்டதாகத்தான் போதிக்கப்பட்டது ராமாயாணமும் மகாபாரதமும் பெண்ணாசை மண்ணாசை கூடாது என்பதையே பிரதானமாகக்கொண்டு தெருக்கூத்துக் களாகவும் நாடகங்களாகவும் நடிக்கப்பட்டன . விடிய விடிய ராமாயாணம் பார்த்த பண்ணையார்கள் அதில் சீதையாக பெண் வேஷமிட்டு நடித்த ஸ்திரீ பார்ட் நடிகரோடு பகலில் சல்லாபிக்க அடித்துக்கொண்டு கிடந்த கதைகள் இந்தியாவில் ஏராளம்.

அரிச்சந்திரா நாடகம் பார்த்து வாழ்நாள் முழுதும் உண்மையே பேசிய ஒரே ஓருவர் மட்டும்தான் சத்தியசீலராக வாழ்ந்து காட்டினார்..உத்தமர் காந்தியானார்.

அப்பா தசரதனுக்கு ஆயிரம் மனைவியர் மகன் இராமனுக்கு ஒரே ஒரு மனைவிதான்.அவளையும் ராவணனிடம் கோட்டை விட்டு அனுமன் மீட்டு வந்தது தனிக்கதை. அப்புறம் அவள்மேல் சந்தேகப்பட்டு தீக்குளிக்க வைத்தது உபகதை. ஒருவனுக்கு ஒருத்தியென்ற உன்னதமான வாழ்க்கை நெறியை உலகுக்கு உணர்த்திய இந்தியாவில்தான் உலகிலேயே அதிக எய்ட்ஸ் நோயாளிகள் இருப்பதாக புள்ளிவிவரம் கூறுகிறது.

அரசியல் வாதிகள் நல்லவர்களாக இருக்க வேண்டுமென்ற கட்டாயம் இந்தியாவில் மட்டும் இல்லை.அது அவரது பெர்சனல் விஷயம் அதில் அடுத்தவன் மூக்கை நுழைப்பது நாகரீகமில்லை என்று ஒதுங்கி விடுகிறோம்.அதனால்தான் நமக்கு நல்ல தலைவர்கள் இன்று வரை கிடைக்கவே இல்லை.