பயனர்:Sancheevis/தமிழ் விக்கிச் சமூகம்
பின்வரும் விடயங்களை இக்கட்டுரையில் பேசலாம் என்றுள்ளேன்.
முன்னுரை
[தொகு]அறிவுப் பொருளாதாரத்தில் தகவல் உலகமே முதன்மை பெற்று நிற்கின்றது. அத்தகைய அறிவுத் தேடல்களை இலகுவாகப் பெற்றுக் கொள்ளும் ஊடகமான இணைய வழி தமிழில் ஆற்றவொண்ணாக் காரியமாகப் பார்க்கப்பட்ட காலமிருந்தது. அந்த மாயை உடைந்து தமிழிலே தேடவும் எழுதவும்கூடிய விளைகளமாக தமிழ் இணையம் வளர்ந்து நிற்கின்றது. இந்த வேளையிலே தமிழிணைய விளைகளத்தின் முதன்மைக் களமான தமிழ் விக்கிப்பீடியா பற்றியும் தமிழ் விக்கிச் சமூகம் பற்றியும் பதிவு செய்வது முக்கியமுடையதாகும்.
தமிழ் விக்கிச் சமூகம்
[தொகு]தமிழ் விக்கிச் சமூகம் என்பது, தமிழ் விக்கிப்பீடியா மற்றும் அதன் சகோதரத் திட்டங்களான விக்சனரி, விக்கிச் செய்திகள், விக்கி மூலம், விக்கி நூல்கள், விக்கி மேற்கோள், பொதுவகம், மற்றும் விக்கித் தரவு என்பவற்றில் எழுதுபவர்கள், மேம்படுத்துபவர்கள், மெய்பார்த்தல், நிருவகித்தல், படம் சேர்த்தல், நிரலாக்கம் முதலான பல்வேறு பணிகளிலும் பங்களிப்புச் செய்கின்ற தனியாட்களையும் நிருவனங்களையும் உள்ளடக்கும்.
விக்கித் திட்டங்களிலே கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவே முதன்மையானதாகக் கொள்ளக் கூடியது. இந்த வகையில் தமிழ் விக்கிப்பீடியாவின் தொடக்குனரான இ. மயூரநாதன் தமிழ்விக்கிச் சமூகத்தின் முதலாவது உறுப்பினராக கொள்ளப்படுகின்றார். இந்தப் பத்து ஆண்டுகளில் சுமார் 55000 த்துக்கும் அதிகமான பதிவுசெய்யப்பட்ட பயனர்களை தமிழ் விக்கிச் சமூகம் தன்னகத்தே கொண்டுள்ளது.
விக்கிச் சமூகம் எனும் போது பொதுப்படையாக விக்கித் திட்டங்கள் பலதும் உள்ளடக்கப்பட்டிருந்தாலும் உண்மையில் விக்கிப்பீடியா, விக்சனரி, விக்கிச் செய்திகள், விக்கிநூல்கள் விக்கி மேற்கோள் என்பவையே பெரிதும் கருதப்படக் கூடியவை. ஏனெனில், பொதுவகம், விக்கித் தரவு முதலானவை மொழித்தளை கடந்த பொதுவான தளங்களாகும்.
விக்கிச் சமூகக் கூட்டிணைவின் முக்கியத்துவம்
[தொகு]விக்கித் திட்டங்கள் யாவும் கட்டற்ற முறையிலும் கூட்டு மதிநுட்பம் மற்றும் கூட்டுப் பங்களிப்பு என்ற வகையிலும் வளர்க்கப்படுகின்ற செயற்திட்டங்கள். அந்த வகையில் சிறிது சிறிதாக பலரது வேறுபட்ட உள்ளீடுகள் வேறுபட்ட அறிவு மற்றும் அனுபவத் தளத்தின் ஊடாக பெறப்படுபவை. ஒரே கட்டுரையில் சிறு வயது மாணவனும் பேராசிரியரும் பங்களித்தல் மேம்படுத்துதல் இதன் மூலம் விளைகின்றது. மதிநுட்ப நிரலாக்கச் செயற்பாடுகளும் இவ்வாறே. எடுத்துக்காட்டாக ஆரம்ப காலங்களில் தமிழ் எழுத்துருக்களை பதிய வேறு மென்பொருள்களை பயன்படுத்த வேண்டியிருந்தது. படிப்படியாக பல்வேறு நுட்பங்களைப் பயன்படுத்தி இன்று பல எழுத்துருக்களை விரும்பியவாறு தெரிவுசெய்ய முடிகின்றது.
விக்கிச் சமூகத்தின் பண்புகள்
[தொகு]விக்கிச் சமூகம் நடுநிலைமை, இணக்க முடிவு, ஆதார பூர்வத் தகவல்கள், கட்டற்ற படைப்பாக்கம், திறந்த நடவடிக்கைகள், நன்னம்பிக்கை முதலான கொள்கைகளை தமது பண்புகளாக கொண்டவர்கள். தமக்கிடையில் ஒருவரை ஒருவர் பேச்சுப் பக்கத்தில் அழைக்கும் போது வழக்கமான மரபு அடைமொழிகளைத் தவிர்த்து பெயர் கொண்டே அழைப்பர். வயது, பதவி குறித்த வேறுபாடுகள் பாராட்டாமை முக்கியமாகக் கடைப்பிடிக்கப்படுகின்றது.
விக்கிச் சமூகத்தின் பணிகள்
[தொகு]விக்கிச் சமூகம் தம்மைப் பதிவுசெய்து கொண்ட பயனர்களையும் அதற்கு மேலதிகமாக சில நிருவாக அணுக்கங்களைக் கொண்ட நிருவாகப் பயனர் மற்றும் அதிகாரிகள் தரப் பயனர்கள் என வேறுபட்ட மேலாண்மை அணுக்கங்களைக் கொண்ட பயனர்களின் கூட்டமைவு ஆகும்.
விக்கிப் பயனர்கள் கட்டற்றவகையில் தளத்தின் தகவல்களை பயன்படுத்துவதோடு அல்லாமல், கட்டுரைகள் மற்றும் ஆவணங்களைத் தொகுத்தல், படம் சேர்த்தல், மேம்படுத்துதல், நிரலாக்கம், விக்கி முறைமைகளுக்கு ஏற்ப சீரமைத்தல் என பல்வேறு செயற்பாடுகளை ஆற்றி வருகின்றனர். இதற்கு மேலதிகமாக விசமத் தொகுப்பு மற்றும் பொருத்தமற்ற தொகுப்புகளை நீக்குதல், தொடர்ச்சியாக விசமச் செயற்பாடுகளில் ஈடுபடும் பயனர்களை தடுத்தல், கட்டுரை ஒருங்கிணைப்பு, மற்றும் காக்கப்பட்ட பக்கங்களை மேம்படுத்துதல், இற்றைப்படுத்துதல் முதலான பணிகளை நிருவாகிகள் மேற்கொள்வர்.
இணக்க முடிவுகளை பெறும் வகையிலான கருத்தாடல், சந்தேகங்களை உரையாடி தீர்த்துக்கொள்ளல் அதன் படி செயலாற்றுதல், விக்கியூடகப் பொது மேம்பாடும் அதன் தீர்மானங்களையும் கலந்தாலோசித்து தீர்க்கம் செய்தல் என்பன விக்கிச் சமூகத்தின் மற்றைய பணிகளாகும்.
இணக்கமுடிவாற்றலுக்கு எடுத்துக்காட்டாக விக்கிப்பீடியாவில் கிரந்தப் பயன்பாடு, தமிழ் நாட்டு - இலங்கை மொழிவழக்கு, ஆங்கிலச் சொற்களுக்கு நிகரான கலைச் சொல்லாக்கம் முதலானவற்றில் தீர்க்கமாகப் முடிவாற்ற இணக்க முடிவுகள் பெரிதும் பயன்பட்டமையை இங்கு குறிப்பிடலாம்.
இது தவிர விக்கிப்பீடியாக்கு அதிக பயனர்களைக் கவர்ந்திழுக்கும் வகையில் பயிற்சிப் பட்டறைகளை ஒழுங்கமைத்தல் மற்றும் நடாத்துதல் நடாத்துதல், ஆக்கப் போட்டிகளையும் ஆண்டுவிழா முதலானவற்றையும் ஒழுங்கமைத்தல் மற்றும் நடாத்துதல், ஊடகங்களில் விக்கிப்பீடியா பற்றிய அறிமுகங்கள் என்பனவும் விக்கிச் சமூகம் ஆற்றும் இதர பணிகளாகும்.
விக்கிப்பீடியாவுக்கு புதிய பயனர்களைக் கவர்வதற்கும் மேலதிகமாக அவர்களுக்கு முனைப்புடன் வழிகாட்டி செல்லுகின்ற பணி பெரிதும் கவனிக்கப் படாத பணியாக இருந்தபோதிலும் முக்கியமுடைய ஒன்றாகும். வெவ்வேறு காலகட்டங்களில் இந்தப் பணியை வெவ்வேறு பயனர்கள் மிக முக்கியத்துவம் கொடுத்து புரிந்துவந்துள்ளனர். இந்த வகையில் பயனர் சோடாபாட்டில், சண்முகம் ஆகியோரை சிறப்பாகக் குறிப்பிடலாம்.
பங்களிப்புகளால் பயனர்கள் பெறும் பயன்கள்
[தொகு]விக்கிப் பங்களிப்புகளால் பயனர்கள் பெற்றுக் கொள்ளும் விலை மதிப்பற்ற பயன் உள்ளார்ந்த திருப்தியே. இந்தத் திருப்தி பல வகைப் பட்டதாக இருக்கலாம். தமிழ் எண்ணிம உலகத்துக்கு என்னால் தினையளவு பயன்தானும் விளைந்ததே என்ற திருப்தி. நல்ல பொழுதுபோக்கு ஒன்றில் என் காலம் பயனாகின்றதே என்ற திருப்தி. பன்முகப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட குமுகத்தில் இணைந்திருக்கும் மகிழ்ச்சி. கட்டற்ற செயற்பாடுகள் தருகின்ற பெருமிதம். ஏற்பும் மறுப்புமாக நீளுகின்ற உரையாடல்கள் நம் கருத்தியலை வெட்டியும் ஒட்டியும் விளைவதால் கிடைக்கின்ற அங்கீகாரம். மகிழ்வெளுச்சி; தனிமையைப் போக்கும் உறவுத்துணையாக விக்கித்தொடர்புகள், ஒரு வெளி உலகத்துடன் தொடர்பாயிருப்பதான் உணர்வைத் தருவது; என நீளும்.
அறிவைப் பகர்தல், பெற்றுக் கொள்ளல், பெருக்குதல் மற்றும் திறனையும் அறிவையும் செழுமைப் படுத்திக் கொள்ளுதல் என்பவற்றுக்கு வாய்ப்பாதல்.
மொழி ரீதியான விக்கிப்பீடியர் ஒன்று கூடலுக்கு வெளியில் விக்கிமேனியா முதலான பொது கூடல்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பு.
போட்டிகளில் கலந்து கொண்டு தம் திறனை வெளிப்படுத்துதல் மற்றும் போட்டிகளை ஒழுங்குபடுத்தி நடாத்துவதன் மூலம் பெற்றுக் கொள்ளும் அனுபவம்.
கட்டுரை ஆக்கம் மட்டுமன்றி தொழில்நுட்ப அறிவையும் வெளிப்படுத்துவதன் மூலம் கற்றவற்றைப் பயன் படுத்தும் வாய்ப்பு.
விக்கிப்பீடியர் என்பதை வெளிப்படுத்துவதன் மூலம் கிடைக்கும் சமூக நன்மதிப்பு மற்றும் வாய்ப்புகள்.
விக்கிச் சமூகத்தைக் கட்டமைப்பதில் பயன்பட்ட அணுகுமுறைகள்
[தொகு]தமிழ் விக்கிச் சமூகம் பல்வேறு அணுகுமுறைகள் மூலம் தம் சமூகக் கட்டமைப்பை பேணியும் வளைர்த்தும் வந்துள்ளது.
தமிழ் விக்கிப்பீடியா அதன் ஆரம்ப காலத்தில் வலைப்பதிவுகளில் விக்கிப்பீடியாவுக்கான இலச்சினையைக் காட்டி வாசகர்களையும் பங்களிப்பாளர்களையும் கவர்ந்தது. அதற்கு அடுத்த கட்டத்தில் முதற்பக்கத்தில் பங்களிப்பாளர் அறிமுகம் போன்றவை பங்களிப்பாளர்களுக்கான ஊக்குவிப்பாக இருந்தது. நேரடியான பயிற்சிப் பட்டறைகள் மூலம் சேர்த்துக் கொண்ட அல்லது தக்கவைத்துக் கொண்ட பங்களிப்பாளர்கள் எண்ணிக்கையில் குறைவு. ஆனாலும், இது பங்களிப்பாளர்களிடையே முகம் பார்த்து அறிமுகம் செய்து கொள்வதற்கான வாய்ப்பைத் தந்தது. இந்த நட்பும் புரிதலும் விக்கிப்பீடியர் சமூகத்தின் ஒற்றுமையைக் கட்டிக் காக்க உதவியது. தள அறிவிப்பில் பங்களிப்பாளர் படங்களை இட்டதன் மூலம் புதிய பங்களிப்பாளர்களைப் பங்களிக்க தூண்டியதோடு பழைய பயனர்களையும் விக்கியில் இறுக்கம் கொள்ளச் செய்தது.
தமிழ் விக்கிப்பீடியா நிறைய பங்களிப்பாளர்களுக்கு நிருவாக அணுக்கம் அளித்தது விக்கிச் சமூகத்தைக் கட்டிக்க ஒரு அணுகுமுறையாக இருந்தது. அவர்களுக்கு ஒரு பொறுப்பையும், தமிழ் விக்கிப்பீடியாவின் மீதான ஒரு பிணைப்பையும் அளித்துள்ளது. மற்ற பல விக்கிகளை ஒப்பிடுகையில் தமிழ் விக்கிப்பீடியாவில் மிக அதிக அளவில் பங்களிப்பாளர்கள் நிருவாகிகளாக உள்ளனர். இது ஒரு வகையில் நிருவாகப் பராமரிப்பும் அதிகாரமும் ஒரு சில பயனர்களிடையே குவிக்காமல் பரவலாகச் செய்தது.
கட்டுரைப் போட்டி ஊடகப் போட்டி முதலானவையும் சிறந்த பங்களிப்பாளர்களைப் பெற்றுத் தந்தது. எடுத்துக்காட்டாக விக்கிப்பயனர்களான பவுல், அன்டன் போன்றவர்களைக் குறிப்பிடலாம்.
தமிழ் விக்கிச் சமூகத்தின் பன்முகத்தன்மை
[தொகு]தமிழ் விக்கிச் சமூகம் அதன் பூகோள வீச்சு, பால் வயதுப் பன்மைத்துவம், துறைவகுதியான பன்மை, பன்மொழிவிக்கிப் பங்களிப்பு, பல்வேறு திட்டப் பங்களிப்பாளர்களைக் கொண்டிருத்தல் என பன்முகத்தன்மை கொண்ட உறுப்பினர்களைக் கொண்டது. தமிழ் விக்கிச் சமூகம் தமிழில் எழுதக்கூடிய பல்வேறு இன வகுதிகளைக் கொண்ட உறுப்பினர்களைக் கொண்டது. பல்வேறு சமயங்களைப் பின்பற்றபவர்களும் இறைமறுப்பாளர்களும் அல்லது சமய பின்பற்றல் குறைந்தவர்களும் கூட உள்ளனர். சாதி, குலப் பல்வகைமை கொண்டிருந்த போதிலும் அவற்றை வெளிப்படுத்தாமல் தமக்கு ஆர்வமுள்ள துறைகளில் முழுச் சுதந்திரத்துடன் எழுதுகின்றனர். ஆதாரம் உள்ள நடுநிலைத் தன்மையான தரவுகளை தருவதே யாவரும் இங்கு ஏற்றியங்கும் கட்டுப்பாடாக உள்ளது.
பரந்த பூகோள வீச்சு
[தொகு]இந்த பத்து வருட வளர்ச்சியில் தமிழ் விக்கிச் சமூகம் பரந்த பூகோள வியாபகத்துடன் விரிந்து நிற்கின்றது. இந்தியா, இலங்கை மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, தென்கொரியா, யப்பான், ஆத்திரேலியா, கொங்கொங், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், குவைத், பஃரெயின், பெலருசு, சேர்மனி, நோர்வே, சுவீடன், இத்தாலி, பிரித்தானியா, பெல்ஜியம், அமெரிக்கா, கனடா என இந்த விரிவு நீளுகின்றது. மேற்குலக நாடுகளில் புலம்பெயர்ந்தும் வேறு தொழில் முதலான நோக்குகளில் வெளிநாடுகளில் வாழுகின்றவர்களுமாக இந்த விரிவு காணப்படுகின்றது. இதில் இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் இருந்து கணிசமான பங்களிப்பாளர்கள் இருந்த போதிலும் மலேசியா, சிங்கப்பூர் முதலான நாடுகளில் பெருமளவு தமிழர்கள் வாழுகின்ற போதிலும் பங்களிப்பவர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.
பால் வயதுப் பன்மைத்துவம்
[தொகு]தமிழ் விக்கிச் சமூகத்தின் உறுப்பினர்களை அவர் தம் அகவை கொண்டு நோக்கினால், சிறுவர் முதல் வயோதிபர் வரைப் பரந்த வயது வீச்சில் ஆண்,பெண் இருபாலாரையும் காணலாம். 11 வயதுச் சிறுவர்கள் முதல் மிக வயதானவர்கள் வரைப் பங்களிக்கின்றார்கள். சில பயனர்கள் தம்மால் கணினிகளின் சொருக்கியைப் பயன்படுத்துவதில் இடர்ப்படுமளவுக்கு வயதானவர்களாகத் தம்மை வெளிப்படுத்தியுள்ளனர். பள்ளிச் சிறுவர் முதல் பதவி நிலைகளில் ஓய்வு பெற்றவர்கள் வரை பரந்த வீச்சாகவும் தமிழ் விக்கிச் சமூகத்தைக் குறிப்பிடலாம். ஆயினும் பெண் பயனர்கள் இணைவதும் பங்களிப்பதும் பல்வேறு காரணங்களால் குறைவளவாக் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப் படுகின்றது.
துறை சார் பன்மைத்துவம்
[தொகு]கணனித் துறை சார்ந்த நுட்பவல்லுனர் மற்றும் நிரலாக்க பங்களிப்பாளர்கள் மட்டுமன்றிப் பல்வேறு தொழில்துறை மற்றும் கற்கைப் புலங்களைச் சேர்ந்த விக்கிப்பீடியர்கள் தமிழ் விக்கிச் சமூகத்தில் உள்ளடங்கியுள்ளனர். அவரவர் தத்தமது அறிவு மற்றும் அனுபவப் புலத்தில் அல்லது அறிகைச் சூழல்களில் தமது தேட்டங்களை விக்கியில் பகர்ந்தும் வருகின்றார்கள். ஆயினும் அறிவியல் மற்றும் தழில்சார் துறைகளில் உடனடியான இற்றைப் படுத்தல்களையோ அறிவுப் பகர்வையோ அடைய முடியாதவகையில் தமிழ் விக்கிச் சூழலில் பயனர்கள் தமது பணிப்பழு அல்லது அறிவுத் தெளிவிப்பு இடைவெளியை கொண்டிருப்பதை பல கட்டுரைகளின் பேச்சுப் பக்கங்களின் மூலம் அறிய முடிகின்றது. தொழில்சார் பன்மைத்துவ விரிவு தமிழ் விக்கிச் சூழலில் இன்னும் வேண்டப்படுகின்ற ஒன்றாகவே இருந்து வருகின்றது.
சக விக்கி திட்டங்களும் பங்களிப்பாளர்களும்
[தொகு]தமிழ் விக்கிப் பங்களிப்பாளர்கள் சிலர் ஆங்கில விக்கி உள்ளிட்ட பலமொழி விக்கிப்பீடியாவிலும் பங்களிப்பவர்களாகவும் உள்ளனர். இதன் மூலம் மற்றைய விக்கி அனுபவங்களையும் முன்னெடுப்புகளையும் தமிழுக்கும் கொண்டுவர உறுதுணையாகும். அத்துடன் தமிழ் விக்கி பற்றிய சரியான அறிமுகத்தை மற்றைய மொழி விக்கிப்பீடியர்களும் பெற இயலும்.
ஆயினும் தமிழில் விக்கிப்பீடியா தவிர்ந்த மற்றைய திட்டங்களில் தமிழ் விக்கிச் சமூகத்தின் பங்களிப்பு வேகம் போதுமானதல்ல. விக்சனரித்திட்டம் ஓரளவு வெற்றியானதயிருப்பினும் விக்கிச் செய்திகள், விக்கி நூல், விக்கி மேற்கோள் முதலான திட்டங்கள் சற்று மந்தமாகவே நகர்கின்றது. இத்திட்டங்களில் முன்னெடுப்பு செய்வது தொடர்பங்களிப்பாளர்களை அதிகரிக்காதவரை அகலக் கால்பதிப்பாக சிலவேளைகளில் எடுத்துக்காட்டப்படுவதும் உண்டு. விக்கிச் சமூகம் தன்னை இன்னும் அகலப் படுத்திக் கொள்ளவும் வேறுபட்ட தளங்களில் முனைப்புக் காட்ட வேண்டியும் உள்ள தேவைப்பாட்டை இது காட்டுகின்றது.
தமிழ் விக்கிக் குழுமங்களும் அமைப்புகளும்
[தொகு]தமிழ் விக்கிச் செயற்பாடுகளை முன்னெடுக்கும் வகையில் பாடசாலை மட்டத்தில் , கிராம, மாவட்ட அலகுகள் மட்டத்தில் மற்றும் தமிழ் கூரும் நல்லுலகெங்கும் நாடுகள் ரீதியிலும் அமைக்கக் கூடிய குழுமங்கள், மற்றும் இணைய வழி குழமங்களை இவ்வாறாக வகை கொள்ளலாம். இந்த வகையில் திருவட்டாறு, எக்செல் பள்ளிகளின் விக்கிப்பீடியா மன்றங்களை முதலாவதாக தொடக்கப்பட்ட பள்ளி மன்றமாகக் குறிப்பிடலாம். விக்கிப்பீடியாவை மேலும் முன்னோக்கிக் கொண்டுசெல்ல இத்தகைய அமைப்புகள் உதவும். இந்த வகையில் பாடசாலை மட்டத்திலும், உயர்கல்வி நிலைகளிலும் இத்தகைய குழுமங்களை அமைப்பது முக்கியமானதாகும்.
தமிழ் விக்கிச் சமூகமும் நிறுவனமயமாதலும்
[தொகு]தமிழ் விக்கிச் சமூகம் விக்கிப் பங்களிப்புகள் மூலம் கட்டற்ற தகவல் தளங்களை வெற்றிகரமாக நடாத்தி வருகின்றன. இந்த விக்கித் திட்டங்களுக்கு ஆர்வலர்களையும் பயனர்களையும் ஈர்க்கும் வகையில் இதுவரை பல விக்கிப் பயிற்சிப் பட்டறைகளை நன்னார்வல நோக்கில் செயற்பட்டு நடாத்தி இருக்கின்றது. இந்தியாவில் இதுவரை 28 தமிழ்விக்கிப் பட்டறைகளும், இலங்கையில் 07 பட்டறைகளும் கனடா, நோர்வே,மலேசியா ஆகிய நாடுகளில் முறையே ஒவ்வொரு பட்டறைகளுமாக மொத்தம் 38 பயிற்சிப் பட்டறைகள் நடாத்தப்பட்டுள்ளன. மேலும் விக்கி மரதன் முதலான முன்னெடுப்புகள், வேறு நிகழ்வுகளில் விக்கிபற்றி அறிமுகப்படுத்தல் எனப் பலவும் நடைபெற்றுள்ளன. இவை தவிர விக்கி மீடியாத் திட்டம் மற்றும் தமிழ் நாட்டு அரசின் நிதி வழங்கலுடன் இரு பெரும் போட்டிகளை வெற்றியுற நடாத்தியுள்ளது. தற்போது பத்தாண்டுக் கூடலுடன் கட்டுரைப் போட்டியும் நடைபெற்றுவருகின்றது. இத்தகைய சந்தர்ப்பங்களில் பெரும்பாலும் தொடர்பாடல் முறையாக விக்கித் தள அறிவிப்பு மற்றும் விக்கி உயயாடல்கள் தவிர குழு மற்றும் தனிப்பட்ட மின்னஞ்சல் (தமிழ் விக்கிப்பீடியா உறுப்பினர்கள் தம்மிடையே மின்னஞ்சல் பகர்வு செய்யக்கூடிய உள்ளக முறையும் உள்ளது) , இசுகைப்பு, சமூக வலைத் தளங்கள், முதலியவையே பெரிதும் பயன்பட்டன. இருந்த போதிலும் நிறுவன மயப்படுத்தப்பட்ட தமிழ் விக்கிச் சமூகக் கட்டமைப்பு இதுவரை இல்லை. தமிழ் விக்கிச் சூழலில் நிறுவனமயமாதல் தெரிந்தே தவிர்க்கப்பட்ட ஒன்றாகவும் கூறப்படுவதுண்டு.விக்கிமீடியா அறக்கட்டளையின் இந்தியக் கிளை இந்தியா அளவில் பல மொழி விக்கித்திட்டங்களை நிறுவன ரீதியில் ஒன்றிணைக்கின்றது. இதே போல் முழு தமிழ் விக்கிச் சமூகத்தையும் ஒன்றிணைக்கும் கட்டமைப்பு ஒன்று பற்றி பேசப்பட்டதுண்டு. ஆயினும் ஆற்றலும் முயற்சியும் நிறுவனத்தைக் கட்டமைத்து வழிநடாத்துவதில் விரயமாக்கப்படும், மற்றும் பதவிப் படிநிலைகள் பற்றிய சிக்கல்கள் என்பவற்றால் இது பற்றிய முன்னெடுப்புகள் தவிர்க்கப்பட்டன. ஆயினும் புறச்சூழலில் தம்மை அடையாளப்படுத்த வேண்டிய தேவை வரும்போதும், வெளி நிறுவனங்களிடம் சில தேவைகளுக்காக அனுமதிகள் கோரும் போதும் நிறுவனமயமாதல் குறித்த தேவை உணரப்பட்டது.
முடிவுரை
[தொகு]தமிழ் விக்கிச் சமூகம் என்பது விக்கித் திட்டங்களை வளர்த்தெடுப்பதிலும் அதன் எதிர்கால நகர்விலும் மிக முக்கியமிக்க கூறாகும். இது காத்திரமாக வளர்தெடுக்கப்படுவதும் பேணப்படுவதும் இன்றியமையாத தேவைகளாகும். தமிழ் விக்கிச் சமுகம்பரந்துபட்டதாவும் பன்முகப்பட்டதாகவும் விரிந்து நின்றாலும் அது முனைப்புக் கொள்ளவேண்டிய பல தேவைப்பாடுகளை காட்டமாக எதிர்கொள்ளவேண்டிய ஒன்றாகவுள்ளது. ஒன்றுபட்ட முன்னெடுப்புகளின் மூலம் உறுதிமிக்க விக்கிச் சமூகத்தை கட்டியெழுப்புவோம்; செயற்படுவோம்.