பயனர்:குமரி ஆதவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குமரி ஆதவன் தமிழ் நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கல்குளம் தாலுக்காவில் குமாரபுரத்தில் 1970 இல் ஆகஸ்ட் 4 ஆம் தேதி பிறந்தார். இவரது இயற்பெயர் செ. ஜஸ்டின் பிரான்சிஸ். இவர் தம்மை ஈன்ற பெருமைக்குரியவர்கள் திரு. செபாஸ்டின் - திருமதி. மேரி செபாஸ்டின் தம்பதியர். இவரோடு உடன் பிறந்தவர்கள் நான்கு பேர். மூத்தவர் அருட்சகோதரி. சாக்லெட் செபாஸ்டின், இரண்டாவது சகோதரி திருமதி. சுசீலா, மூன்றாவது சகோதரன் திரு. கிறிஸ்துதாஸ், நான்காவது சகோதரர் திரு. ஸ்டீபென்சன். குமரி ஆதவன் கடைசி மகன்.

இவர் தனது தொடக்கக் கல்வியை குமாரபுரம் அரசு நடுநிலைப் பள்ளியில் தமிழ் வழியில் கற்றார். தனது ஏழு வயதில் தந்தையை இழந்த இவர் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை குமாரபுரம் பள்ளியில் பயின்றார். பின்னர் ஒன்பது முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை மணலிக்கரை, புனித மரிய கொரற்றி மேல்நிலைப்பள்ளியில் பயின்றார். அச்சமயம் அங்கு கார்மேல் சபை அருட்பணியாளர்கள் நடத்தும் கார்மல் மாணவர் இல்லத்தில் தங்கி படித்தார். இங்கு காப்பாளராக இருந்த அலோசியஸ் அவர்களால் நாடகத் துறையிலும் வளர்ச்சி பெற்றார்.

ஆறாம் வகுப்பு காலத்திலேயே பேச்சுப் போட்டிகளில் தடம் பதித்த இவர் ஏராளமான முதல் பரிசுகளை அள்ளிக் குவித்தார். ஒன்பதாம் வகுப்பில் தனது முதல் கவிதையை எழுதி தனது தமிழாசியை திருமதி. டெய்சி அவர்களிடம் பாராட்டு பெற்று தொடர்ந்து கவிதை, கதைகள் எழுதி வந்தார். பதினொன்று பனிரெண்டாம் வகுப்பு காலங்களில் தமிழாசிரியர் திரு. ஜெரார்டு மஜில்லா மற்றும் திரு. லேமுவேல் ஆகியோரால் எழுதும் ஆற்றலில் வளம் பெற்றார்.

இளங்கலை கணிதம் வகுப்பை நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் பயின்றார். இங்கு பயிலும் போது அரசு பிற்பட்டோர் நல விடுதியில் தங்கிப் படித்தார். இளங்கலை படிக்கும் போது பேராசிரியர் ஜேசுதாசன் அவர்களால் கவிதை எழுத்தில் அடுத்த அத்தியாயத்தைத் துவங்கினார். கல்லூரி காலத்தில் கவிதை மற்றும் பேச்சு போட்டிகளில் ஏராளம் முதல் பரிசுகளைக் குவித்தார்.

1992 முதல் 1994 வரை நாகாலாந்தில் கணித ஆசிரியராகப் பணி செய்தார். முன் முனைவர் மற்றும் கல்வியியல் பட்டங்களை அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பெற்றார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ., இலக்கியம் கற்றார். கணிப்பொறி அறிவியலில் பட்டயப் பயிற்சி பெற்ற இவர் 1998 முதல் 1999 வரை மணலிக்கரை நிர்மலா தொழிற்பயிற்சி நிலையத்தில் கணினி ஆசிரியராகப் பணியாற்றினார். 1999 முதல் தான் பயின்ற புனித மரிய கொரற்றி மேல்நிலைப்பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

திண்டுக்கல் லியோனி குழுவில் சிறந்த பட்டிமன்றப் பேச்சாளராக வலம் வரும் இவர், சிறந்த நாடக நடிகர் - கருத்தாளர் - பத்திரிகை ஆசிரியர் - குறும்பட இயக்குநர் - விழிப்புணர்வுப் பாடலாசிரியர். இவரது கவிதைகள், கட்டுரைகள் மற்றும் நூல்கள் தமிழகம் மற்றும் கேரளாவில் பள்ளிக் கல்லூரி மாணவர்களுக்குப் பாடமாக உள்ளன.

தமிழக அரசின் தமிழ்ச் செம்மல் விருது உட்பட இருபதுக்கு மேற்பட்ட விருதுகளைப் பெற்ற இவர் இன்றைய இளைய தலைமுறைக்கு இலக்கியப் பயிற்சியளிப்பதற்காக இலக்கியப் பட்டறை என்ற அமைப்பை நிறுவி மாதம் தோறும் பல்வேறு அறிஞர்களைக் கொண்டு பயிற்சியளித்து வருகிறார். அமுதசுரபி இலக்கிய இயக்கம். தமிழ்நாடு அறிவியல் இயக்கம். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் போன்றவற்றில் தீவிரமாக இயங்கி வருபவர்.

நூல்வடிவம் பெற்ற படைப்புகள்:

1. ரத்தம் சிந்தும் தேசம் - கவிதைகள்

2.எரிதழல் கொண்டு வா - கவிதைகள்

3. குருதியில் பூத்த மலர் - வரலாறு

4. அருமை மகளே-கவிதைகள்

5.குலைகுலையா முந்திரிக்கா - ஆய்வு நூல்

6. பேரறிஞர்களுடன்... - நேர்காணல்கள்

7.ஆதவன் பதில்கள் - கேள்வி பதில்

8. அறிக: பாசிசம் (இ.ஆ) - கட்டுரை

9. ஒரு தமிழ்ச்சிற்பியின் பயணம் - வரலாறு

10.தெற்கில் விழுந்த விதை - வரலாறு

11. என் கேள்விக்கென்ன பதில்? - கேள்வி பதில்

12.பெருங்கடலின் சிறுதுளி - கேள்வி பதில்

13.தூண்டில்காரனும் ஒரு கூடை மனிதர்களும்

14.கேட்கச் செவியுள்ளவர் கேட்கட்டும் -கட்டுரைகள்

15.தமிழக கிராமிய விளையாட்டுகள் - ஆய்வு நூல்

16.சிகரம் நோக்கி சிறகுகள் விரிப்போம் - கட்டுரை

17. தம்பதியர்களின் கனிவான கவனத்திற்கு - கட்டுரை

18. ஒருகோப்பை அமுதம் (தொ.ஆ)

19. தன்னம்பிக்கை தீபம் (தொ.ஆ)

20. குரலற்றவர்களின் குரல் - கேள்வி பதில்

21. Homeland (ஹோம்லேன்ட்) - Poetry

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:குமரி_ஆதவன்&oldid=3637756" இலிருந்து மீள்விக்கப்பட்டது