பயனர்:எஸ்ஸார்/மணல்தொட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

Madurai — City —

மதுரை (ஆங்கிலம்:Madurai) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு தொன்மையான நகரம் ஆகும். மதுரை மாவட்டத்தின் தலைநகராக இருக்கும் மதுரை, மக்கள் தொகை அடிப்படையிலும்[1], நகர்புற பரவல் அடிப்படையிலும் மாநிலத்தின் மூன்றாவது பெரிய நகரம். வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ள மதுரை நகரம் இங்கு அமைந்துள்ள மீனாட்சியம்மன் கோவிலுக்காக அதிகம் அறியப்படுகிறது. நகரின் உள்ளாட்சி நிர்வாகம் 1971 ஆம் ஆண்டு முதல் மதுரை மாநகராட்சி மூலம் மேற்கொள்ளப்படுகிறது[2].

அமைவிடம்[தொகு]

இந்திய துணைக்கண்டத்தில் ஒரு தொன்மையான வரலாறைக் கொண்ட மதுரை நகரம், சுமார் 2500 ஆண்டுகள் பழமையான, தொடர்ந்து மக்கள் வசித்து வரும் உலகின் சில நகரங்களுள் ஒன்று[3]. பாண்டிய மன்னர்களின் தலைமையிடமாக விளங்கிய மதுரை தமிழ் மொழியுடன் நெருங்கிய தொடர்புடையது. சங்க காலம் என குறிக்கப்படும் கிமு.3 ஆம் நூற்றாண்டு முதல் கிபி. 3 ஆம் நூற்றாண்டு வரையிலான காலத்தில் தமிழ் மொழி அறிஞர்களை கொண்டு மூன்றாம் தமிழ் சங்கம் அமைக்கப்பட்டு தமிழை வளர்த்த பெருமையுடைய நகரம் மதுரை.

பிற பெயர்கள்[தொகு]

மல்லிகை மாநகர், கூடல் நகர், மதுரையம்பதி, கிழக்கின் ஏதென்ஸ் என்பன மதுரையின் வேறு பல பெயர்களாகும்.

மௌரிய பேரரசின் அமைச்சர் கவுடில்யர் (கிமு 370 - கிமு 283) மற்றும் கிரேக்க தூதர் மெகஸ்தெனஸ்(350 கிமு - 290 கிமு) ஆகியோரின் குறிப்புகளுடன் துவங்குகிறது மதுரையின் எழுதப்பட்ட வரலாறு. புராதான சின்னமாக பார்க்கப்படும் மதுரை நகரம் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு ஆட்சியாளர்களால் ஆளப்பட்டது. சங்ககாலப் பாண்டியர், இடைக்கால சோழர்கள், பிற்கால சோழர்கள், பிற்காலப் பாண்டியர்கள், மதுரை சுல்தானகம், விஜயநகரப் பேரரசு, மதுரை நாயக்கர்கள், சந்தா சாகிப், கர்நாடக ராச்சியம் மற்றும் ஆங்கிலேயர்கள் போன்றோர் மதுரையை ஆண்டுள்ளனர்.

சிறப்புமிக்க இடங்கள்[தொகு]

அமெரிக்கன் கல்லூரி

நகரத்தில் பல வரலாற்று நினைவிடங்கள் அமைந்துள்ளன. மீனாட்சி அம்மன் கோவில், திருமலை நாயக்கர் அரண்மனை போன்றவை அவற்றில் புகழ்பெற்றவை. நகரில் ஆண்டு முழுவதும் பல கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன. சித்திரை திருவிழா என்று பொதுவாக அழைக்கப்படும் மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் ஆண்டு தோறும் 10 நாட்கள் கொண்டாடப்படும் நகரின் முக்கிய விழாவாகும். பத்து லட்சம் மக்களால் கண்டுகளிக்கப்படும் சித்திரை திருவிழாவின் ஒருபகுதியாக கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் நடைபெறுகிறது. நகரின் ஒருபகுதியான அவனியாபுரம் பகுதியில் பொங்கல் திருநாளை முன்னிட்டு நடைபெறும் ஏறுதழுவல் மற்றும் நகரின் அருகே உள்ள அலங்காநல்லூர் பாலமேடு பகுதிகளில் நடைபெறும் ஏறுதழுவல் நிகழ்ச்சிகள் மாநில அளவில் பெயர்பெற்ற நிகழுவுகள்.

தொழில்கள்[தொகு]

தென்தமிழகத்தின் முக்கிய தொழில்துறை மற்றும் கல்வி மையமாக மதுரை திகழ்கிறது. ரப்பர், ரசாயனம், கிரனைட் போன்ற உற்பத்தி தொழில்கள் மதுரையில் நடைபெறுகின்றன[4]. தகவல் தொழில்நுட்பத்துறையில் இரண்டாம் அடுக்கு நகரமாக பட்டியலிடப்பட்டுள்ள மதுரையில் சில பன்னாட்டு மற்றும் உள்நாட்டு மென்பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் அமைந்துள்ளன. மதுரை மருத்துவக்கல்லூரி, மதுரை சட்டக் கல்லூரி போன்ற கல்வி நிலையங்கள் நகரில் அமைந்துள்ளன. நகர நிர்வாகம் 1971 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட மாநகராட்சி அமைப்பின் மூலம் நடைபெறுகிறது.

மக்கட்தொகை[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்தியா மக்கட்தொகை கணக்கெடுப்பின் முதல்கட்ட தகவலின் படி மதுரை நகரில் 1,016,885 பேர் வசிக்கின்றனர்[5]. மதுரையில் பன்னாட்டு சேவைகள் வழங்கும் வானூர்தி நிலையமும், தென் மாவட்டங்களில் பெரிய புகைவண்டி நிலையமும் அமைந்துள்ளது. முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளால் மதுரை நகரம் இணைக்கப்பட்டுள்ளது.

  1. "All towns and agglomerations in Tamil Nadu having more than 20,000 inhabitants.".
  2. http://www.maduraicorporation.co.in/overview-of-madurai-city.html
  3. "India heritage - Meenakshi temple, Madurai".
  4. "An industry that can bolster the economy of Madurai.".
  5. "Cities having population 1 lakh and above" (PDF). The Registrar General & Census Commissioner, India. பார்த்த நாள் 17 October 2011.