பன்னிரண்டாவது இரவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பன்னிரண்டாவது இரவு நாடகத்தில் இருந்து ஒரு காட்சி (ஓவியம்: டானியேல் மேக்கிளிசு)

பன்னிரண்டாவது இரவு (Twelfth Night, or What You Will, டுவல்த் நைட் அல்லது 'வாட் யு வில்' என்பது வில்லியம் சேக்சுபியர் எழுதிய ஒரு நகைச்சுவை நாடகமாகும்.[1] இந்நாடகமானது 1601-02 களில் எழுதப்பட்டதாக நம்பப்படுகிறது. ஒரு கப்பல் விபத்தில் பிரிக்கப்பட்ட வயோலா மற்றும் செபாஸ்டியன் ஆகிய இரட்டையர்களைச் சுற்றியே இக் கதை நகர்கிறது. வயோலா (மாறுவேடத்தில் பையனாகத் தோன்றுபவர்) டூக் ஆர்ஸினோவுடன் காதலில் விழுகிறார். ஆனால் டூக் ஆர்ஸினோவோ கவுண்டெஸ் ஒலிவியாவின் மீது காதல் கொள்கிறார்.கவுண்டெஸ் ஒலிவியாவோ வயோலாவைச் சந்தித்த பின் அவளை ஆண் என்று நினைத்துக் கொண்டு அவள் மீது காதல் வயப்படுகிறாள்.இந்நாடகத்தின் கதையானது பார்னெப் ரிச்சின் "அப்பல்லோனிஸ் மற்றும் சில்லா" என்ற சிறுகதையினை அடிப்படையாகக் கொண்டதாகும்.இந்நாடகமானது பிப்ரவரி 2,1602 ல் முதன் முதலாக கேன்டில் மாஸின் பொழுது அரங்கேற்றபட்டது. 1623 ம் ஆண்டு ஃபஸ்ட் ஃபோலியோவில் இடம் பெறும் வரை இந்நாடகம் வெளியிடப்படவில்லை.,[2]

கதைச்சுருக்கம்[தொகு]

வயோலா பயணம் செய்த கப்பல் இல்லீரியா கடற்கரையில் விபத்துக்குள்ளாகிறது. அதன் பின் கேப்டன் உதவியோடு கடற்கரைக்கு வந்து சேர்கிறாள்.இதைத் தொடர்ந்து அவளோடு ஒட்டிப்பிறந்த சகோதரனான செபாஸ்டினுடன் தொடர்புகளை இழந்துவிடுகிறாள். அவன் கடலில் மூழ்கடிக்கப்பட்டதாக நம்புகிறாள். பின்பு சிசேரியோ என்ற பெயரில் ஒரு இளைஞனாக மாறுவேடத்தில் டூக் ஆர்ஸினோவோவிடம் வேலைக்கு சேர்கிறாள். இந்நிலையில் டூக் ஆர்ஸினோ கவுண்டெஸ் ஒலிவியாவின் மீது காதல் கொள்கிறார். ஆனால் ஒலிவியாவோ தன் அப்பா மற்றும் சகோதரர் இறப்புக்குப்பின் தான் எந்த ஆண்மகனையும் பார்ப்பதில்லை என்றும் யாருடைய காதலையும் ஏற்பதில்லை என்ற முடிவோடும் இருக்கிறார். இவ்வாறாக ஏழு வருடங்கள் கடந்து விடுகிறது. இதனால் ஆர்ஸினோ,சிசேரியோவை தன் காதலுக்கு தூது செல்லும்படி அறிவுறுத்துகிறார். இவ்வாறு தூது செல்லும் போது சிசேரியோ (அவன் மாறுவேடத்தில் இருக்கும் ஒரு பெண் என்பதை அறியாமல்) மீது காதல் கொள்கிறார் ஒலிவியா. வயோலாவோ ஆர்ஸினோவின் மீது காதலில் விழுகிறார். இவ்வாறாக இக்காதலானது முக்கோண வடிவில் சுழல்கிறது.

துணைக்கதையில் ஒலிவியாவின் பணியாளன் மல்வோலியோவிடம் ஒலிவியா அவனை காதலிப்பதாக மற்ற கதாபாத்திரங்களாகிய ஒலிவியாவின் மாமா 'சர் டாபி பெல்ச்', 'சர் ஆன்ட்ரீவ் ஆகுசீக்' (ஒலிவியாவின் முறை மாப்பிளை),ஒலிவியாவின் பணியாளர்கள் 'மரியா' மற்றும் 'ஃபேபியன்' மற்றும் ஃபூல் 'ஃபெஸ்ட்' ஆகியோர் கூறி ஏமாற்றுகின்றனர். சர் டாபி பெல்ச் மற்றும் சர் ஆன்ட்ரீவ் ஆகுசீக் ஆகிய இருவரும் எப்பொழுதும் குடித்துக் கொண்டு வீட்டின் அமைதியை கெடுத்துக் கொண்டு இருந்தனர். மேலும் மரியாவோடு சேர்ந்துக் கொண்டு மல்வோலியோவை பழி வாங்கும் நோக்கில் மரியா எழுதிய ஒரு கடிதத்தை ஒலிவியா மல்வோலியோவிற்கு எழுதியது போல் மறைத்து வைக்கின்றனர். அக் கடிதத்தில் மல்வோலியோ மஞ்சள் நிறத்தில் உடை அணிய வேண்டும் என்றும், மற்ற பணியாளர்களிடம் முரட்டுத்தனமாக நடந்துக்கொள்ள வேண்டும் என்றும் ஒலிவியாவை காணும் பொழுதெல்லாம் அசட்டுத்தனமாக சிரிக்க வேண்டும் என்றும் எழுதப்பட்டு இருந்தது. அக்கடிதத்தை கண்ட மல்வோலியோ அதில் குறிப்பிட்டவாரே நடந்துக்கொள்கிறான். மல்வோலியோவின் இந்நடத்தை ஒலிவியாவிற்கு அதிர்ச்சியளிக்கிறது. அவனுக்கு பைத்தியம் பிடித்து விட்டது என்று கருதி அவனை ஒரு இருட்டு அறையில் வைத்து பூட்டுகின்றனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Use of spelling, capitalization, and punctuation in the First Folio:"Twelfe Night, Or what you will"
  2. "Shakespeare, having tackled the theatrical problems of providing Twelfth Night with effective musical interludes, found his attitude toward his material changed. An episodic story became in his mind a thing of dreams and themes." Thomson, Peter. Shakespeare's Theater. London: Routledge & Kegan Paul, 1983, p. 94. ISBN 0-710-09480-9.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பன்னிரண்டாவது_இரவு&oldid=2625249" இருந்து மீள்விக்கப்பட்டது