பன்னாட்டு வானூர்தி நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வானிலிருந்து இரவுநேரத்தில் எடுக்கப்பட்ட சான் பிரான்சிஸ்கோ பன்னாட்டு வானூர்தி நிலையத்தின் ஒளிப்படம்; முனைய கட்டிடத்திலிருந்து வெளியே பரவும் புறப்பாடு வாயில்களையும் வான்பாலங்களையும் ஏற்றிடங்களையும் நிறுத்தப்பட்டுள்ள வானூர்திகளையும் காணலாம். (2005)

பன்னாட்டு வானூர்தி நிலையம் (international airport) நாடுகளுக்கிடையே பயணப்படும் பயணிகளுக்காக சுங்கம், குடிவரவு போன்ற வசதிகள் அமைந்த வானூர்தி நிலையம் ஆகும். பன்னாட்டு வானூர்தி நிலையங்கள் பொதுவாக உள்நாட்டு வானூர்தி நிலையங்களை விட பெரியதாகவும் நீண்ட ஓடுபாதைகள் கொண்டவையாகவும் இருக்கும்; பொதுவாக கண்டங்களிடையே செல்லும் எடைமிகு வானூர்திகள் வந்திறங்கி செல்வதற்கான வசதிகளைக் கொண்டிருக்கும். பன்னாட்டு வானூர்தி நிலையங்களிலிருந்து உள்நாட்டுப் பறப்புகளும் இயக்கப்படுவதுண்டு. செருமனியிலுள்ள பிராங்க்ஃபுர்ட் வானூர்தி நிலையம் போன்ற சில பன்னாட்டு வானூர்தி நிலையங்கள் மிகப் பெரியன; அதேநேரத்தில் தாகித்தியிலுள்ள ஃபாஆ பன்னாட்டு வானூர்தி நிலையம் போன்ற மிகச் சிறிய நிலையங்களும் உள்ளன.

இருபதாம் நூற்றாண்டின் மையத்திலிருந்து பன்னாட்டு வானூர்தி நிலையக் கட்டிடங்கள், இயக்கம், மேலாண்மை மிகவும் அதிநவீனமாகி வருகின்றன; பாதுகாப்பையும் உலகளவில் இயக்கப் பொது குறியீட்டு அமைப்புக்களையும் உறுதிசெய்ய மிக விரிவான தொழினுட்ப சீர்தரங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. மில்லியன் கணக்கான பயணிகளுக்கும் பறப்புகளுக்கும் சேவை வழங்கிட உருவாக்கப்படும் இயல் கட்டமைப்புகள் தொடர்ந்து நவீனமயமாகி வருகின்றன; இருபத்தி முதலாம் நூற்றாண்டின் இரண்டாம் பத்தாண்டுகளில் 1200க்கும் மேற்பட்ட பன்னாட்டு வானூர்தி நிலையங்கள் ஆண்டுக்கு இரண்டு பில்லியன் பயணிகளையும் 50 மில்லியன் மெட்றிக் டன் சரக்குகளையும் மேலாள்கின்றன.