பன்னாட்டுத் தேயிலை நாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பன்னாட்டுத் தேயிலை நாள்
International Tea Day
Sri Lanka-Province du Centre-Cueilleuse de thé (3).jpg
இலங்கையில் தேயிலை உற்பத்தி
அதிகாரப்பூர்வ பெயர்International Tea Day
கடைபிடிப்போர்ஐக்கிய நாடுகள் அவை
தொடக்கம்2020
நாள்மே 21

பன்னாட்டுத் தேயிலை நாள் (International Tea Day) ஐக்கிய நாடுகள் அவையினால் ஆண்டுதோறும் மே 21 அன்று கொண்டாடப்படும் ஒரு நிகழ்வாகும்.[1] இது தொடர்பான தீர்மானம் 2019 திசம்பர் 21 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்டு, இதற்கான நாளை அனுசரித்து வழிவகுக்க ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.[2][3]

பன்னாட்டுத் தேயிலை நாள் உலக நாடுகளில் தேயிலையின் நீண்ட வரலாறு, ஆழமான கலாச்சார, பொருளாதார முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தேயிலையின் நிலையான உற்பத்தி, அதன் நுகர்வுக்கு ஆதரவான செயல்பாடுகளைச் செயல்படுத்துவதற்கும், பசி மற்றும் வறுமையை எதிர்த்துப் போராடுவதில் அதன் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்குமான கூட்டு நடவடிக்கைகளை ஊக்குவிப்பதும் வளர்ப்பதும் இந்த நாளின் குறிக்கோளாகும்.

இந்தியா, இலங்கை, நேபாளம், வியட்நாம், இந்தோனேசியா, வங்காளதேசம், கென்யா, மலாவி, மலேசியா, உகாண்டா, தன்சானியா ஆகிய தேயிலை உற்பத்தி செய்யும் நாடுகளில் 2005-ஆம் ஆண்டு முதல் திசம்பர் 15 அன்று பன்னாட்டுத் தேயிலை நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.[4] சர்வதேச தேயிலை தினம் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் மீதான உலகளாவிய தேயிலை வணிகத்தின் தாக்கத்தை அரசாங்கங்கள் மற்றும் குடிமக்களின் உலகளாவிய கவனத்தை ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அத்துடன், விலை ஆதரவு, நியாய வணிகம் ஆகியவற்றுக்கான கோரிக்கைகளுடன் இந்நாள் இணைக்கப்பட்டுள்ளது.[5][6]

பின்னணி[தொகு]

2001 ஆம் ஆண்டில் உலக நாடுகளின் அரசு சார்பற்ற அமைப்புகள், மற்றும் தொழிற்சங்கங்கள் இணைந்து உலக சமூக மாமன்ற மாநாட்டை பிரேசிலில் நடத்தின.[7] இதன் விளைவாக 2003 இல் உலக சமூக மாமன்றத்தின் ஆசிய மாநாடு இந்தியாவில் ஐதராபாதில் நடைபெற்றது.[7] இம்மாநாட்டில் இலங்கை, இந்தியத் தேயிலைத் தோட்டத் தொழிற்சங்கத் தலைவர்கள் கலந்து கொண்டனர். இதன் போது, 2004 ஆம் ஆண்டு மும்பை மாநாட்டில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் பிரச்சினை தொடர்பாக தனியான மாநாடு ஒன்று நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது. 2004 மும்பை மாநாட்டில் பன்னாட்டுத் தேயிலைத் தொழிலாளர்களின் பிரச்சினை ஏனைய தொழிற்துறை சார்ந்த தொழிலாளர்களின் பிரச்சினைகளில் இருந்து வேறுபட்டது என அடையாளம் காணப்பட்டது.[7] இவர்களது பிரச்சினைகளை வெளிப்படுத்த தனித்துவமான தினத்தின் அவசியம் குறித்து உடன்பாடு எட்டப்பட்டது. பிரித்தானியாவின் முதலாவது இந்திய அசாம் தேயிலைத் தோட்டத்தில் சீன ஒப்பந்தத் தொழிலாளர்கள் 1838 டிசம்பர் 15 இல் மேற்கொண்ட முதலாவது சம்பளப் போராட்டத்தின் நினைவாக ஆண்டு தோறும் டிசம்பர் 15 இல் இந்நாளைக் கொண்டாடுவதென 2005 ஆம் ஆண்டில் பிரேசிலில் நடந்த மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது.[7]

முதலாவது பன்னாட்டுத் தேயிலை நாள் 2005 டிசம்பர் 15 இல் புது தில்லி நடைபெற்றது.[8] இரண்டாவது பன்னாட்டு நாள் 2006 திசம்பர் 15 இல் இலங்கையில் கண்டியிலும், 2008 இல் மீண்டும் இலங்கையில் நடைபெற்றது.[5][7] பன்னாட்டுத் தேயிலை நாள் கொண்டாட்டங்கள் ஊடாக நடைபெறும் பன்னாட்டு மாநாடுகளை தேயிலைத் தொழிற்சங்க இயக்கங்கள் முன்னெடுக்கின்றன.[5]

2015-ஆம் ஆண்டில், இந்திய அரசு பன்னாட்டுத் தேயிலை நாளை ஐநா உணவு, வேளாண்மை அமைப்பின் மூலம் விரிவுபடுத்த முன்மொழிந்தது.[9]

தேயிலை மீதான ஐநா உணவு, வேளாண்மை அமைப்பு உலக தேயிலை பொருளாதாரத்தை ஆதரிப்பதற்கான பலதரப்பு முயற்சிகளுக்கு வழிவகுக்கிறது, இது பன்னாட்டுத் தேயிலை நாளை அறிவிப்பதற்கான சிறந்த நிறுவனமாக இருந்து வருகிறது. 2015 ஆம் ஆண்டில், இத்தாலியின் மிலான் நகரில் நடந்த சந்திப்பின் போது, தேயிலை பற்றிய ஐநா உணவு, வேளாண்மை அமைப்பு சர்வதேச தேயிலை தின யோசனை பற்றி விவாதிக்கப்படு, 2019 திசம்பரில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.[10]

மேற்கோள்கள்[தொகு]

  1. "International Tea Day". UN. 2020-05-21 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Resolution adopted by the General Assembly on 19 December 2019". United Nations. 2020-05-21 அன்று பார்க்கப்பட்டது.
  3. "International Tea Day". FAO. 2020-05-21 அன்று பார்க்கப்பட்டது.
  4. "International Tea Day". Confederation of Indian Small Tea Growers Association. December 22, 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-12-15 அன்று பார்க்கப்பட்டது.
  5. 5.0 5.1 5.2 "South Asian tea workers call for International Tea day". Sunday Times in Sri Lanka. 2016-03-04 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 2015-12-15 அன்று பார்க்கப்பட்டது.
  6. "International Tea Day: Consumers Demand a Fair Cuppa". Fairtrade Canada. 2010-01-11. 2015-12-22 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-12-15 அன்று பார்க்கப்பட்டது.
  7. 7.0 7.1 7.2 7.3 7.4 பெ. முத்துலிங்கம் (13 டிசம்பர் 2015). "சர்வதேச தேயிலை தினத்தின் பின்புலம்". வீரகேசரி. 
  8. "International Tea Day 2005 Report" (PDF). Centre for Education and Communication. 2006-03-02. 2015-12-22 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது (PDF) எடுக்கப்பட்டது. 2015-12-15 அன்று பார்க்கப்பட்டது.
  9. "'Tea day' proposal to UN". The Telegraph. 2015-11-20 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 2015-12-15 அன்று பார்க்கப்பட்டது.
  10. FAO Committee on Commodity Problems

வெளி இணைப்புகள்[தொகு]