பன்னாட்டுத் துணை மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பன்னாட்டுத் துணை மொழி (international auxiliary language) என்பது, பொதுவான முதல் மொழியைக் கொண்டிராத வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களின் தொடர்பாடலுக்குப் பயன்படும் மொழியாகும். ஒரு துணை மொழி பெரும்பாலும் இரண்டாவது மொழியாக இருக்கக்கூடும்.

ஆதிக்கம் பெற்றிருந்த பல சமூகங்களின் மொழிகள் கடந்த காலத்தில் துணை மொழிகளாக இருந்துள்ளன. சில சமயங்களில் இம்மொழிகள் பன்னாட்டு மட்டத்தில் பயன்பட்டன. இலத்தீன், கிரேக்கம், நடுநிலக்கடற்பகுதிப் பொது மொழி என்பன பழங்காலத்தில் துணை மொழிகளாக இருந்துள்ளன. அரபு மொழி, ஆங்கிலம், பிரெஞ்சு, உருசியம், எசுப்பானியம், பொதுச் சீனம் போன்றவை அண்மைக் காலத்தில் துணை மொழியாக உலகின் பல நாடுகளில் பேசப்படுகின்றன.[1] ஆனாலும், இம்மொழிகள் அவற்றின் பண்பாட்டு, அரசியல், பொருளாதார ஆதிக்கத்தின் ஊடாகவே இவ்வாறு பிரபலம் பெற்றிருப்பதால், அவற்றுக்கு எதிர்ப்புக்களும் உள்ளன. இதனால், செயற்கை அல்லது உருவாக்கப்பட்ட மொழியொன்று இதற்குத் தீர்வாக அமையக்கூடும் எனச் சிலர் கருதுகின்றனர்.[1]

துணை மொழி என்னும் சொல், இது உலக மக்களுக்குக் ஒரு கூடுதலான மொழியேயன்றி அவர்களுடைய தாய் மொழிக்குப் பதிலாகப் பயன்படுத்துவதற்கானது அல்ல என்பதையும் குறிக்கிறது. பன்னாட்டுத் தொடர்பாடலை இலகுவாக்குவதற்காக உருவாக்கப்பட்ட எசுப்பரான்டோ, இடோ, இன்டர்லிங்குவா போன்ற திட்டமிடப்பட்ட அல்லது உருவாக்கப்பட்ட மொழிகளைக் குறிக்கவும் இச்சொல் அடிக்கடி பயன்படுத்தப்படுவது உண்டு.

வரலாறு[தொகு]

பொதுத் தாய்மொழியைக் கொண்டிராத மக்களிடையே தொடர்பாடலை இயலச் செய்வதற்கு, இரு தாய்மொழிகளும் அல்லாத மூன்றாவது மொழியொன்றைத் துணை மொழியாகப் பயன்படுத்தும் வழக்கம் மொழிகளின் பழமைக்கு ஈடான பழமை கொண்டதாக இருக்கக்கூடும். இந்த வழக்கம் மிகப் பழங்காலத்தில் இருந்தே இருந்தது என்பதை உறுதியாகக் கூற முடியும். இலத்தீனும், கிரேக்க மொழியும் நடுநிலக்கடற்பகுதியின் எல்லா இடங்களிலும் இடை மொழியாகப் பயன்பட்டன. அக்காடியனும், பின்னர் அராமைக்கும் பல பேரரசுகளின் காலப்பகுதியில் மேற்காசியாவின் பெரும்பகுதியில் துணை மொழியாக இருந்தன. இவ்வாறு பயன்படுத்தப்படு மொழிகள் "பொது மொழி"கள் எனப்பட்டன.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Bodmer, Frederick. The loom of language and Pei, Mario. One language for the world.