பன்னாட்டுத் தாய்மொழி நாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சாகித்து மினார்: பெப்ரவரி 21, 1952 இல் உயிர்நீத்த மாணவர்கள் நினைவாக தாக்காவில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூண்

பன்னாட்டுத் தாய்மொழி நாள் (International Mother Language Day) பெப்ரவரி 21 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. 1952 இல் இந்த நாளன்று அன்றைய கிழக்கு பாகித்தான் தலைநகர் தாக்காவில் வங்காள மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்கக் கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின் போது உயிர்நீத்த நான்கு மாணவர்களின் நினைவாக இந்நாள் உலகளாவிய முறையில் மொழி தொடர்பாக நினைவு கூறப்படும் சிறப்பு நாளாகக் கொண்டாடப்படுகிறது.[1]

வங்காள தேச அரசாங்கத்தின் முயற்சிகள், அனைத்துலக அமைப்புகளது ஆதரவுகள் காரணமாக ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் (யுனெசுக்கோ) அமைப்பின் 1999, பெப்ரவரி 21 பொது மாநாட்டின் 30 ஆவது அமர்வில் இந்நாளை அனைத்துலக தாய் மொழிநாளாக அறிவித்தது. பல்வேறு சமூகங்களின் மொழி, பண்பாட்டுத் தனித்தன்மைகளைப் பேணுவதுடன் அவற்றுக்கிடையிலான ஒற்றுமையையும் உருவாக்கும் எண்ணத்தோடு இந்த நாளை யுனெசுக்கோ அறிவித்தது. 2000 ஆம் ஆண்டு முதல் இந்த நாளானது உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றது. 2013 ஆம் ஆண்டின் அனைத்துலகத் தாய்மொழி நாளை ஒட்டி யுனெசுக்கோ பாரிசில் "தாய்மொழிகளும் நூல்களும் - எண்ணிம நூல்களும் பாடநூல்களும்" (“Mother tongues and books - including digital books and textbooks”) என்னும் தலைப்பில் கருத்தரங்கம் நடத்தப்பட்டது[2]

வரலாறு[தொகு]

1999 ஆம் ஆண்டில் பிப்ரவரி 21 ஆம் திகதியை பன்னாட்டு தாய்மொழி தினமாக யுனெஸ்கோ அமைப்பு அறிவித்தது. முதல் உலகம் முழுவதிலும்  2000 ஆம் ஆண்டு முதல் பிப்ரவரி 21 ஆம் திகதி பன்னாட்டு தாய்மொழி தினமாக அனுஷ்டிக்கப்படுகிறது.

1947 ஆம் ஆண்டில் கிழக்கு பாக்கித்தான் (தற்போது வங்காளதேசம்), மேற்கு பாக்கித்தான் (தற்போது பாக்கித்தான்) ஆகிய இரு வெவ்வேறு பகுதிகள் இணைக்கப்பட்டு பாக்கித்தான் உருவாக்கப்பட்டது. இந்தியாவுக்கு இடையில் பிரிக்கப்பட்ட இரு பகுதிகளும் கலாச்சாரம், மொழி போன்றவற்றில் ஒன்றுக்கொன்று மிகவும் வித்தியாசப்பட்டன. கிழக்கு பாக்கித்தானில் (வங்களாதேசம்) பெரும்பான்மை மக்களால் வங்காள மொழி பேசப்பட்டாலும் 1948 ஆம் ஆண்டின் அப்போதைய பாக்கித்தான் அரசு உருது மொழியை பாக்கிஸ்தானின் ஒரே தேசிய மொழியாக அறிவித்தது. இதற்கு கிழக்கு பாக்கித்தான் மக்களால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. கிழக்கு பாக்கித்தான் மக்கள் அவர்களது தாய் மொழியான வங்காள மொழியை குறைந்தபட்சம் தேசிய மொழிகளில் ஒன்றாக அறிவிக்க வேண்டுமென்று கோரினார்கள். தாக்கா பல்கலைக்கழக மாணவர்கள் பொது மக்களின் ஆதரவுடன், பாரிய பேரணிகளையும் கூட்டங்களையும் ஏற்பாடு செய்தனர். போராட்டத்தை முடக்குவதற்காக பாக்கித்தான் அரசாங்கம் பொதுக் கூட்டத்தையும் பேரணிகளையும் தடை செய்தது. 1952 ஆம் ஆண்டு பிப்ரவரி 21 ஆம் திகதி நடைப்பெற்ற பேரணியில் காவல் துறையின் துப்பாக்கிச் சூட்டினால் சலாம், பர்கட், ரபீக், ஜபார் மற்றும் ஷபியூர் ஆகிய மாணவர்கள் கொல்லப்பட்டனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.  தாய்மொழிக்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த இந்த சம்பவம் வரலாற்றில் பதியப்பட்ட அரிய சம்பவங்களில் ஒன்றாகும். அன்றிலிருந்து வங்காளதேசத்தினர் பன்னாட்டு தாய்மொழி தினத்தை துக்க நாளாக அனுஷ்டிக்கின்றனர். உயிர்நீத்த தியாகிகளை கௌரவிப்பதற்காக ஷாஹித் மினார் நினைவு சின்னத்திற்கு சென்று தியாகிகளுக்கு தங்கள் ஆழ்ந்த துக்கத்தையும் நன்றியையும் தெரிவிக்கின்றனர். வங்காளதேசத்தில் பன்னாட்டு தாய்மொழி தினம் தேசிய விடுமுறை தினமாகும். 1998 ஆம் ஆண்டு சனவரி 9 அன்று கனடாவில் வசிக்கும் வங்காள தேசத்தினரான ரபீகுல் இஸ்லாம் என்பவர் அன்றைய ஐ.நா பொதுச் செயலாளரான கோபி அன்னான் உலக மொழிகளை அழிவிலிருந்து காப்பாற்ற பன்னாட்டு தாய்மொழி தினத்தை அறிவிக்குமாறு கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்தார். தாக்கா படுகொலைகளை நினைவுகூரும் வகையில் பிப்ரவரி 21 ஆம் திகதியை பன்னாட்டு தாய்மொழி தினமாக அறிவிக்க வேண்டுமென முன்மொழிந்தார்.[3]

விருதுகள்[தொகு]

பார்சிலோனாவில் லிங்குவாபாக்ஸ் நிறுவனம் மொழியியல் பன்முகத்தன்மையைப் பாதுகாத்தல், மொழியியல் சமூகங்களின் புத்துயிர் பெறுதல் மற்றும் பன்மொழியை மேம்படுத்தல் ஆகியவற்றில் சிறப்பான சாதனைகளுக்கான லிங்வாபாக்ஸ் பரிசை வழங்குகின்றது.[4]

2014 ஆம் ஆண்டில் வங்காளதேச ஹெரிடேஜ் அண்ட் எத்னிக் சொசைட்டி ஆஃப் ஆல்பர்ட்டா (BHESA) பன்னாட்டு தாய்மொழி தினத்தில் கல்வி, சமூக பணி மற்றும் சமூக சேவை போன்ற துறைகளில் சிறப்பான சாதனைகளுக்கான ஏகுஷே ஹெரிடேஜ் விருதை அறிவிக்கிறது.[5]

2015 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆல்பர்ட்டாவின் மஹினூர் ஜாஹித் மெமோரியல் ஃபவுண்டேஷன் (எம்.ஜே.எம்.எஃப்) கல்வி, விளையாட்டு, இளைஞர் நடவடிக்கைகள், இலக்கியம் மற்றும் சமூக சேவை ஆகிய துறைகளில் இளைஞர்களை ஊக்குவிக்கும் முகமாக ஆல்பர்ட்டா குடியிருப்பாளர்களுக்கான ஏகுஷே இளைஞர் விருதை வழங்குகிறது.[6]

அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]

  1. http://www.un.org/en/events/motherlanguageday/
  2. யுனெசுக்கோவின் 2013 ஆம் ஆண்டுக்கான கருத்தரங்கம் பாரிசில்
  3. "21st February: International Mother Language Day" (en-US) (2012-02-21).
  4. "Inici - Linguapax Internacional". மூல முகவரியிலிருந்து 2015-05-19 அன்று பரணிடப்பட்டது.
  5. "International Mother Language Day observed at Edmonton, Canada". மூல முகவரியிலிருந்து 2017-03-04 அன்று பரணிடப்பட்டது.
  6. "Ekushey Youth Awards".