பன்சிலால் வர்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பன்சிலால் வர்மா (Bansilal Verma) மேலும், சாக்கோர் என்ற தன்னுடைய புனைப்பெயரால் நன்கு அறியப்படும் இவர், இந்திய மாநிலமான குஜராத்தைச் சேர்ந்த கேலிச் சித்திரக் கலைஞராவார்.[1]

வாழ்க்கை[தொகு]

பன்சிலால் வர்மா 1917 நவம்பர் 23 ஆம் தேதி தரங்காவுக்கு அருகிலுள்ள சோட்டியா என்ற கிராமத்தில் (இப்போது குசராத்தின் மெக்சனா மாவட்டம்) ஜம்நாகௌரி - குலாப்ராய் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இவரது குடும்பம் வாட்நகரைச் சேர்ந்தது. பிரபல ஓவியர் ரவி வர்மாவால் ஈர்க்கப்பட்ட இவர், ஆண், பெண் தெய்வங்களின் ஓவியங்களை வரைய ஆரம்பித்தார். தனது இளமைப் பருவத்தில், இவர் வாட்நகரிலிருந்து அகமதாபாத்திற்கு குடிபெயர்ந்தார். மேலும், கலையில் பயிற்சி பெறுவதற்கு 1935 ஆம் ஆண்டில் ஓவியர் ரவிசங்கர் ராவல் என்பவரிடம் சேர்ந்தார். 1936 ஆம் ஆண்டில், இந்திய தேசிய காங்கிரசின் இலக்னோ அமர்வில் மூன்று மாதங்கள் கலைஞராக பணியாற்றினார். அங்கே நந்தாலால் போஸையும் சந்தித்தார். 1937 ஆம் ஆண்டில், காகல்பாய் கோத்தாரி என்பவர் வெளியிட்டுவந்த நவசௌராஷ்டிரா என்ற பத்திரிக்கையில் ஒரு கேலிச் சித்திரக் கலைஞராகச் சேர்ந்தார். சுவரொட்டிகள், பதாகைகள், கேலிச் சித்திரங்களை வரைந்து இந்திய விடுதலை இயக்கத்தில் பங்களித்தார். பிரஜாபந்து என்ற வார இதழுக்காகவும் கேலிச் சித்திரங்களை வரைந்தார். ஜெயந்தி தலால் என்பவர் வெளியிட்டுவந்த கதி, ரேகா ஆகிய இதழ்களிலும் இவர் வரைந்துள்ளார் .

பத்திரிக்கை[தொகு]

1948 இல் மும்பை சென்று தினசரியான இந்துஸ்தான் என்ற பத்திரிக்கையில் சேர்ந்தார். வல்லபாய் பட்டேல் இறந்த பிறகு, பத்திரிக்கை நின்று போனது. பின்னர், "ஜன்மபூமி"யில் 1955 முதல் 1959 வரை பணியாற்றினார். 1959ஆம் ஆண்டில், இவர், தி ஃப்ரீ பிரஸ் ஜர்னல் என்ற ஆங்கில நாளேட்டில் சேர்ந்தார். இந்நிறுவனம் இவரது கேலிச்சித்திரங்களை அவர்களின் குஜராத்தி நாளேடான ஜன்ஷக்தியில் வெளியிட்டது. அரசியல் மற்றும் அரசியல்வாதி குறித்த இவரது கேலிச்சித்திரங்கள் செல்வாக்கு பெற்றவை. அரசியல் அழுத்தம் காரணமாக, 1972இல் அப்பணியை விட்டு விலகினார். 1978ஆம் ஆண்டில், அகமதாபாத்திற்கு வந்து சந்தேஷ் என்ற இதழில் சேர்ந்தார். அதில் இவர் பல ஆண்டுகள் பணியாற்றினார்.[2] இவர் பல புத்தகங்களிலும், பத்திரிகைகளிலும் விளக்கப்படங்கள் வரைந்தார்.[3]

இறப்பு[தொகு]

இவர் ஆகஸ்ட் 8, 2003 அன்று இறந்தார்.

அங்கீகாரம்[தொகு]

தி ஃப்ரீ பிரஸ் ஜர்னலில் வெளியிடப்பட்ட இவரது இஃப் டிராகன் கம்ஸ் டு யுஎன் என்ற கேலிச் சித்திரத்துக்காக கனடாவின் மொண்ட்ரியால் நகரில் நடந்த மூன்றாவது சர்வதேச கேலிச் சித்திர மாநாட்டில் ஒரு பரிசை வென்றார்.[4] இவர் சன்ஸ்கர் விருது, சூரத் லயன்ஸ் ஷீல்ட், கமலாஷங்கர் பாண்ட்யா விருது, வாட்நகர் நாக்ரிக் சன்மான் ஆகியவற்றையும் பெற்றார். குஜராத் அரசு நிறுவிய ரவிசங்கர் ராவல் விருதையும் இவர் பெற்றார்.[5] அகமதாபாத்தில் உள்ள வாஸ்னா-பிரானா பாலம் அருகே ஒரு இடத்துக்கு இவரது பெயரிடபட்டது .

மேற்கோள்கள்[தொகு]

  1. Desai, Dinesh. "કાર્ટૂનકલા: ચિત્રકલા અને રમૂજવૃત્તિનું સંયોજન". Mumbai Samachar (in குஜராத்தி). Archived from the original on 4 டிசம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 4 January 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. Madhuker Upadhyay; Safdar Hashmi Memorial Trust (1994). Punch line: a selection of cartoons against communalism. Safdar Hashmi Memorial Trust. https://books.google.com/books?id=dPRtAAAAMAAJ. 
  3. Vyas (2009). Moothi Uncheran Gujaratio:A Collection of Biographies. Gurjar Grantha Ratna Karyalaya. 
  4. Enlite. 1. Light Publications. 1967. பக். 36. https://books.google.com/books?id=Q_0nAAAAMAAJ. 
  5. Moothi Uncheran Gujaratio:A Collection of Biographies. Gurjar Grantha Ratna Karyalaya. 2009. பக். 151. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பன்சிலால்_வர்மா&oldid=3562320" இலிருந்து மீள்விக்கப்பட்டது