பனாப்பெருமம்
பொது இயல்புகள் பனாப்பெருமம் | |
---|---|
வகுப்பும் வகையும்: | [[ Failed to render property vessel class: vessel class property not found. ]] (?) |
நிறை: | 52,500 DWT |
நீளம்: | 289.56 m (950 அடி) |
வளை: | 32.31 m (106 அடி) |
உயரம்: | 57.91 m (190 அடி) |
பயண ஆழம்: | 12.04 m (39.5 அடி) |
கொள்ளளவு: | 5,000 TEU |
குறிப்புகள்: | Opened 1914 |
பொது இயல்புகள் புதுப்பனாப்பெருமம் | |
---|---|
வகுப்பும் வகையும்: | [[ Failed to render property vessel class: vessel class property not found. ]] (?) |
நிறை: | 1,20,000 DWT |
நீளம்: | 366 m (1,201 அடி) |
வளை: | 49 m (161 அடி) |
உயரம்: | 57.91 m (190 அடி) |
பயண ஆழம்: | 15.2 m (50 அடி) |
கொள்ளளவு: | 13,000 TEU |
குறிப்புகள்: | Opened 2016 |
பனாப்பெருமம் (Panamax), புதுப்பனாப்பெருமம் (Neopanamax) என்பன பனாமாக் கால்வாய் ஊடாகப் பயணிக்கும் கப்பல்களுக்கான அளவு வரையறைகளைக் குறிக்கும் தரப்பாடு ஆகும். முன்னர் இந்த அளவு வரையறைகளும் பிற தேவைகளும் "கப்பல்களுக்கான தேவைகள்" என்னும் தலைப்பில் பனாமாக் கால்வாய் ஆணையத்தினால் வெளியிடப்பட்டிருந்தது.[1] இந்த ஆவணத்தில், அதிவறட்சிப் பருவகால வரையறைகள், உந்துகை, தொலைத்தொடர்பு, விபரமான கப்பல் வடிவமைப்பு போன்றவை குறித்த விடயங்களும் இடம்பெற்றிருந்தன.
ஏற்புடைய அளவுகள், கால்வாய்ப்பூட்டு அறையின் நீளமும் அகலமும், கால்வாயில் உள்ள நீரின் ஆழம் ஆகியவற்றில் தங்கியிருந்தது. கால்வாய்க்குக் குறுக்கே அமெரிக்காக்கள் பாலம் அமைக்கப்பட்டபின் அதன் உயரமும் அளவுகளைத் தீர்மானிக்கும் ஒரு காரணியானது. இத்தரப்பாடு பனாமாக் கால்வாயூடாகச் செல்லக்கூடிய கப்பல்களுக்கான அளவுகளுக்கான தெளிவான வரையறைகளைத் தருவதால், இது சரக்குக் கப்பல்கள், கடற்படைக் கப்பல்கள், பயணிகள் கப்பல்கள் ஆகியவற்றின் வடிவமைப்பிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
பனாப்பெருமத் தரப்பாடு 1914ல் பனாமாக் கால்வாய் திறக்கப்பட்ட காலத்திலிருந்து பயன்பாட்டில் இருந்தது. 2009ல் பனாமாக் கால்வாய் ஆணையம் புதுப்பனாப்பெருமத் தரப்பாட்டை வெளியிட்டது.[2] இது முன்னைய இரண்டு கால்வாய்ப்பூட்டுக்களிலும் பெரிதான மூன்றாம் கால்வாய்ப்பூட்டுத் தொகுதி திறக்கப்பட்ட 26 யூன் 2016ல் இருந்து புழக்கத்துக்கு வந்தது.
அதிகூடிய அளவுகளைக் கொண்ட கப்பல்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது, கால்வாயில் பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றது. பனாப்பெருமக் கப்பல்கள் கால்வாயுடன் நெருக்கமான பொருந்துதன்மை கொண்டவையாக இருப்பதால், கால்வாய்ப்பூட்டுகளுக்குள் துல்லியமான கட்டுப்பாடு தேவையாக உள்ளது. இதனால் பூட்டுகளுக்குள் கப்பல்கள் அதிக நேரம் செலவிடவேண்டி இருப்பதுடன், பயணம் பகலிலேயே நடைபெறவேண்டியும் உள்ளது. இங்கு அமைந்துள்ள குலேபிரா வெட்டுப் பகுதியில், எதிர்த் திசைகளில் வரும் பெரிய கப்பல்கள் ஒன்றையொன்று கடந்து செல்ல முடியாததால், கால்வாய் ஒன்றுவிட்டு ஒரு நாள் மாறிமாறி ஒருவழிப் பாதையாகவே செயற்படவேண்டியும் உள்ளது.
கப்பல் அளவுகள்
[தொகு]பனாப்பெருமம் முதன்மையாகக் கால்வாயின் தொடக்க கால்வாய்ப்பூட்டு அறைகளின் அளவுகளிலேயே தங்கியுள்ளன. இவை ஒவ்வொன்றும் 110 அடி (33.53 மீ) அகலமும், 1,050 அடி (320.04 மீ) நீளமும், 41.2 அடி (12.56 மீ) ஆழமும் கொண்டவை. ஒவ்வொரு கால்வாய்ப்பூட்டு அறையினதும் பயன்படு நீளம் 1000 அடி (304.8 மீ). கால்வாய்ப்பூட்டு அறைக்குள் இருக்கக்கூடிய நீரின் ஆழம் வேறுபடும், ஆனால், பெட்ரோ மிகுவேல் கால்வாய்ப்பூட்டின் தெற்குப் பகுதியில் மிகக் குறைவான ஆழம் காணப்படும். இது 41.2 அடி (12.56 மீ) ஆழமானது. மிராபுளோரசு ஏரி மட்டத்தில் ஆழம் 54 அடி 6 அங்குலம் (16.61 மீ). பல்போவாவில் அமைந்துள்ள அமெரிக்காக்கள் பாலத்தின் உயரமே பனாப்பெருமம், புதுப்பனாப்பெருமம் ஆகிய வகைக் கப்பல்களின் மொத்த உயரத்தைக் கட்டுப்படுத்தும் காரணியாக உள்ளது. சரியான உயரம் நீர் மட்டத்தில் தங்கியுள்ளது.
இவ்விரு தரப்பாடுகளின் கீழ் ஏற்புடைய கப்பல்களின் அதிகூடிய அளவுகள் வருமாறு:[1]
நீளம்
[தொகு]மொத்த நீளம் (நீட்சிகள் அடங்கலாக): 950 அடி (289.56 மீ). புறநடைகள்:
- கொள்கலன் கப்பல்களும், பயணிகள் கப்பல்களும்: 965 அடி (294.13 மீ)
- இழுவைக் கப்பல் சேர்க்கை, திடமாகப் பிணைக்கப்பட்டது: 900 அடி (274.32 மீ)
- வேறு தானுந்தல்லாத கப்பல் இழுவைச் சேர்மானம்: 850 அடி (259.08 மீ)
புதுப்பனாப்பெருமம் ஏற்புடைய நீளத்தை 366 மீ (1,201 அடி) க்குக் கூட்டியுள்ளது.
அகலம் (வளையளவு)
[தொகு]வெளிப்புற அகலம்: 106 அடி (32.31 மீ)
- பொதுப் புறநடை: வெப்பமண்டல நன்னீரில் மிதப்புயரம் 37 அடி (11.3 மீ) க்குக் குறைவாயின், 107 அடி (32.61 மீ)
புதுப்பனாப்பெருமம் ஏற்புடைய அகலத்தை 49 மீ (161 அடி) க்குக் கூட்டியுள்ளது.
மிதப்புயரம்
[தொகு]வெப்பமண்டல நன்னீரில் (வெ.ந.நீ - TFW) மிதப்புயரம் 39.5 அடி (12.04 மீ). மேற்படி மிதப்புயரத் தரமும் வெ.ந.நீ க்கான வரைவிலக்கணமும், நன்னீர் ஏரியான கட்டுன் ஏரியை அடிப்படையாகக்கொண்டு பனாமாக் கால்வாய் ஆணையத்தினால் உருவாக்கப்பட்டது. கட்டுன் ஏரி நீரின் அடர்த்தி 29.1 °C (84 °F) வெப்பநிலையில் 0.9954 கி/சமீ3 ஆகும்.[3] பெட்ரோ மிகுவேல் கால்வாய்ப்பூட்டின் கீழ் (கடற்கரைப் பக்கம்) வாயிலே இதன் பௌதிக எல்லை. அதி வரட்சிக் காலத்தில் கட்டுன் ஏரியில் நீர் மட்டம் குறைவாக இருக்கும்போது, ஏற்புடைய மிதப்புயரம் குறைக்கப்படலாம். கப்பல்களில் சரக்கேற்றும் திட்டங்களில் உகந்த நடவடிக்கைகளை எடுப்பதற்கு நேரம் வழங்குவதற்காக, இவ்வாறான கட்டுப்பாடுகள் மூன்று கிழமைகளுக்கு முன்பே அறிவிக்கப்படும்.
புதுப்பனாப்பெருமத் தரத்தின்படி ஏற்புடைய மிதப்புயரம் 15.2 m (49.9 அடி) அளவுக்குக் கூடியுள்ளது.[2] எனினும், புதிய கால்வாய்ப்பூட்டு யூன் 2016ல் திறக்கப்பட்டபோது குறைவான மழைவீழ்ச்சி காரணமாக ஏற்புடைய மிதப்புயரம் 43 அடியாகக் குறைக்கப்பட்டது. பின்னர் கட்டுன் ஏரியின் நீர்மட்டத்தையும், காலநிலை நிலைமைகளையும் கருத்தில் எடுத்து ஆகத்து மாதத்தில் மிதப்புயரம் 44 அடியாக (13.41 மீ) உயர்த்தப்பட்டது.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Vessel Requirements" (PDF). Panama Canal Authority. Archived from the original (PDF) on 2011-06-11. பார்க்கப்பட்ட நாள் 2016-12-28..
- ↑ 2.0 2.1 Manuel E. Benítez, ACP (2009-01-19). "Dimensions for Future Lock Chambers and "New Panamax" Vessels" (PDF). ACP. Archived from the original (PDF) on 2009-05-06. பார்க்கப்பட்ட நாள் 2010-05-02.
- ↑ "Regulation on navigation in Panama Canal Waters" (PDF). The Panama Canal Authority. 1999-06-03. p. 10. பார்க்கப்பட்ட நாள் 2012-12-10.
- ↑ Canal adds foot to maximum draft of neo-Panamax locks, Joseph Bonney, joc.com, Aug 08, 2016, Accessed December 11, 2016