பந்து-குச்சி ஒப்புரு
பந்து-குச்சி ஒப்புரு அல்லது உண்டை-குச்சி ஒப்புரு என்பது வேதியியலில் மூலக்கூறுகளில் உள்ள அணுக்களைக் குறிக்க உருண்டைகளையும், அணுக்களுக்கிடையே உள்ள பிணைப்பைக் குறிக்க குச்சிகளையும் வரைந்து காட்டும் மூலக்கூற்றின் விளக்க ஒப்புரு (model) ஆகும். இவ்வகைப் ஒப்புருக்கள் (படம் அல்லது முத்திரட்சி உரு), மூலக்கூறில் உள்ள அணுக்களையும் அவ்வணுக்களுக்கிடையே உள்ள பிணைப்புகளையும் தெளிவாகப் புரிந்து கொள்ள உதவுகின்றன. இந்த உண்டை-குச்சிப் படங்கள் தவிர அணுக்களுக்கிடையே உள்ள பிணைப்பக் காட்ட குச்சிகள் இடுவதற்கு மாறாக அவ்விடத்தை சுருக்கி அணுக்களை நெருக்கமாக ஒன்றுடன் ஒன்று ஒட்டியிருப்பதாகக் காட்டும் வேறு ஓர் ஒப்புருவும் உண்டு. இதனை காலொட் ஒப்புரு (Calotte model) அல்லது இடச்சுருக்க ஒப்புரு (space-filling model) என்று அழைப்பர்.
பந்துரு-குச்சி ஒப்புருவில், அணுக்களுக்கிடையே உள்ள பிணைப்பைக் காட்டும் பொழுது, பிணைப்பின் நீளத்தையும், பிணைப்புகளுக்கிடையே உள்ள கோணத்தையும் காட்டுவது வழக்கம். பகிரிணைப் பிணைப்பாக (covalent bond) இருந்தால் நேர்க்கோடாகவும், இரட்டைப் பிணைப்பாகவோ அல்லது மூபிணைப்பாகவோ (மூன்று பிணைப்புகள்) இருந்தால் சுருள்கம்பி போன்ற குறியீடாகவும் குறிப்பது வழக்கம்.
பந்து-குச்சி அல்லது உண்டை-குச்சி விளக்க ஒப்புருவானது, காலொட் ஒப்புருவை விடத் தெளிவாக, மூலக்கூற்றின் அணு-அணுப்பிணைப்புகளின் அமைப்பைப் புரிந்து கொள்ள உதவுவது.
நிறக் குறியீடுகள்
[தொகு]பொதுவாக வெவ்வேறு வகை அணுக்களைக் குறிக்கத் தனி நிறக்குறீடுகள் ஏதும் இல்லை, ஆனால் ஒப்புருவை நெகிழி (பிளாஸ்டிக்) போன்ற பொருள்களால் செய்து வடிவமைக்கும் ஒப்புரு பூட்டுப் பயிற்சிப் பெட்டிகளில் உள்ள உருண்டைகளில் கோரி-பௌலிங்-கோல்ட்டன் நிறக்குறியீடு (Corey-Pauling-Koltun) பயன்படுகின்றது. இந்நிறக் குறியீட்டில், ஐதரசன் அணுக்கள் வெள்ளையாகவும், கரிம அணுக்கள் கறுப்பாகவும், ஆக்சிசன் அணுக்கள் சிவப்பாகவும், நைட்ரசன் அணுக்கள் சாம்பல் நிறத்திலும் காட்டுவது வழக்கம்.
வரலாறு
[தொகு]1865 ஆம் ஆண்டு மூலக்கூறுகளின் உள்ளமைப்பைக் காட்ட, முதன் முதலாக ஆகஸ்ட் வில்ஹெல்ம் ஃவான் ஹோஃவ்மன் (August Wilhelm von Hofmann) என்னும் டாய்ட்சு நாட்டு அறிஞர், ஐக்கிய இராச்சியத்தில் உள்ள ராயல் இன்ஸ்ட்டிட்யூசனில்(அரச கல்விக்கழகத்தில்) நிகழ்த்திய ஒரு சொற்பொழிவில் காட்டினார். மெத்தேனைக் (CH4) காட்ட அத்தகு விளக்க ஒப்புரு ஒன்று கீழே காட்டப்பட்டுள்ளது.