பத்மினி ஜேசுதுரை
மாண்புமிகு பத்மனி ஜேசுதுரை | |
|---|---|
| சென்னை உயர்நீதிமன்றம் முதல் பெண் நீதிபதி தமிழ்நாடு | |
| பதவியில் 1986–1993 | |
| துணை தலைவர், மத்திய நிர்வாகத் தீர்ப்பாயம் | |
| பதவியில் 1993–1997 | |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 20 சூலை 1931 பாளையங்கோட்டை, திருநெல்வேலி மாவட்டம் |
| தேசியம் | இந்தியர் |
| துணைவர் | ஜி. ஜேசுதுரை |
| பிள்ளைகள் | 3 மகள்கள், 1 மகன் (ஜோ ஜேசுதுரை - சென்னை லயோலா கல்லூரியின் முன்னாள் துணை தலைவர்) |
| பணி | நீதிபதி |
பத்மினி ஜேசுதுரை (20 சூலை 1931 - 6 அக்டோபர் 2014) என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி பதவி வகித்தவராவார்.[1] இவர் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத்தின் முதல் முழு நேரப் பெண் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.
இளமைக் காலம்
[தொகு]பத்மினி, 1931 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 20 ஆம் தேதி திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் டேவிட் மைக்கேலுக்கும் ரோஸ் மைக்கேலுக்கும் மகளாகப் பிறந்தார்.[2] சாராள் தக்கர் கல்லூரியில் பொருளாதாரம், வரலாறு இரண்டிலும் பட்டங்கள் பெற்றவர். 1953 ஆம் ஆண்டு சென்னை சட்டக்கல்லூரியில் சேர்ந்து சட்டம் முடித்தார். சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பதிவு செய்து கொண்டார். 1957 ஆம் ஆண்டு கல்லூரி விரிவுரையாளராக இருந்த ஜேசுதுரையை மணந்தார். இவர்களுக்கு ஒரு மகன், மூன்று மகள்கள் இருந்தனர்.
பணி
[தொகு]1964 ஆம் ஆண்டு முதல் 1970 ஆம் ஆண்டு வரை நெல்லையில் கூடுதல் அரசு வழக்கறிஞராக பதவி வகித்தவர், 1970 முதல் 1976 ஆம் ஆண்டு வரை அரசு வழக்கறிஞராகப் பணியாற்றினார். அதன் பின்பு ஆறு ஆண்டுகள் நெல்லையில் சொந்தமாக சட்டத் தொழில் செய்தார்.[3] மீண்டும் 1983ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார்.
1986 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் குடியரசுத் தலைவர் உயர்நீதிமன்ற நீதிபதியாக இவரை நியமனம் செய்தார். சென்னை உயர்நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியானார்.
1993 ஆம் ஆண்டு வரை அந்தப் பதவியில் பணியாற்றிய நிலையில் இவரை மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தின் துணைத் தலைவராக நியமனம் செய்தது மத்திய அரசு. இந்திய ஆட்சிப் பணித் தேர்வில் பொதுப்பிரிவினருக்கான மதிப்பெண்களை பட்டியலின/ பிற்படுத்தப்பட்டோர் இன மாணவர்கள் பெற்றிருந்தால், அவர்கள் பொதுப் பிரிவினர் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும் என்ற அரசாணை ஒன்றை அந்த ஆண்டு வெளியிட்டிருந்தது. ஆனால் அந்த அரசாணையை வெளிப்படுத்தாமல் மத்திய பொதுப்பணி தேர்வாணையம், அதே ஆண்டு நடத்தப்பட்ட ஆட்சிப்பணித் தேர்வில் பொதுப் பிரிவினர் பெற்ற அதிக மதிப்பெண் பெற்று வெற்றி பெற்ற பட்டியலின/பிற்படுத்தப்பட்ட மாணவர்களை அவ்வாறு பொதுப் பிரிவில் வைக்கவில்லை. இதை எதிர்த்து சென்னை மத்திய நிர்வாகத் தீர்ப்பாயத்தில் 1994 ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில், மத்திய பணியாளர் தேர்வாணையத்தைக் கண்டித்த பத்மினி இடஒதுக்கீட்டை சரி வர செயல்படுத்தாத காரணத்தால் தேர்வை இரத்து செய்யும்படி ஆணைப் பிறப்பித்தார். இவரது ஆணையை எதிர்த்து தேர்வாணையம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. ஆனால் உச்ச நீதிமன்றம் தீர்ப்பாயத்தின் தீர்ப்பு சரியானதே என்று உறுதி செய்தது.
1997 ஆம் ஆண்டு முழு நேரப் பெண் தலைவராக தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் இவரை நியமித்தது.
அந்தப் பதவியில் இருந்த காலங்களில் மாநிலத்தின் தொட்டில் குழந்தைத் திட்டம், கல்லூரி விரிவுரையாளர்களுக்கான சட்டப் பயிற்சித் திட்டம் போன்றவற்றை பெண்களிடம் எடுத்துச் சென்றதில் பெரும் பங்கு வகித்தார். இது தவிர மாநில ஆணையங்களில் உறுப்பினராகவும், ஐந்து தனி நபர் கமிஷன்களில் சிறப்பு அரசு வழக்கறிஞராகவும் செயல்பட்டார். கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் நீதித்துறைப் பணிக்கு பின் ஓய்வு பெற்றார்.
இறப்பு
[தொகு]2014 ஆம் ஆண்டு அக்டோபர் 6 அன்று பத்மினி ஜேசுதுரை காலமானார்.[4].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Hon'ble Juduge Tmt. Padmini Jesudurai auditorium". Tamilnadu National law university.
- ↑ "முதல் பெண்கள்! - சென்னை உயர் நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி; மாநில மகளிர் கமிஷனின் முதல் முழு நேரப் பெண் தலைவர்". விகடன். https://www.vikatan.com/lifestyle/150541-first-woman-judge-of-the-madras-high-court. பார்த்த நாள்: 14 March 2025.
- ↑ லூயிஸ், நிவேதிதா (2019). முதல் பெண்கள் (2nd ed.). மைத்ரி பத்பபகம்.
- ↑ "காலமானார் பத்மனி ஜேசுதுரை". தினமணி. அக்டோபர் 6, 2014.