பத்திரகாளி சமேத வீரபத்திரர் கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பத்திரகாளி சமேத வீரபத்திரர் கோவில்
பத்திரகாளி சமேத வீரபத்திரர் கோவில் நுழைவாயில்
பத்திரகாளி சமேத வீரபத்திரர் கோவில் is located in இலங்கை
பத்திரகாளி சமேத வீரபத்திரர் கோவில்
பத்திரகாளி சமேத வீரபத்திரர் கோவில்
இலங்கையில் கோவிலின் அமைவிடம்
ஆள்கூறுகள்:9°43′43″N 79°56′51″E / 9.728497°N 79.947463°E / 9.728497; 79.947463ஆள்கூற்று: 9°43′43″N 79°56′51″E / 9.728497°N 79.947463°E / 9.728497; 79.947463
பெயர்
பெயர்:பத்திரகாளி சமேத வீரபத்திரர் கோவில்
அமைவிடம்
நாடு:இலங்கை
மாகாணம்:வட மாகாணம்
மாவட்டம்:யாழ்ப்பாணம்
கோயில் தகவல்கள்
மூலவர்:அம்பிகை
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை
வரலாறு
கட்டப்பட்ட நாள்:1678
அமைத்தவர்:முதன்மையினார்

யாழ் நகரில்  இருந்து எட்டுமைல் தொலைவிலுள்ள கிராமம் வட்டுக்கோட்டை. இதன் அயற்கிராமமாகக் காணப்படும் சங்கரத்தை, மிக அழகிய கிராமமாகும். இங்குள்ள பிட்டியம்பதி என்னும் இடம், பச்சைப் பசேலென்ற சோலைகளும், நெல் வயல்களும் சூழ இயற்கை எழில் கொஞ்சுமிடமாகக் காணப்படுகின்றது. பிட்டியம்பதியிலுள்ள பத்திரகாளி அம்மன் கோவில், மிகப்பிரபல்யம் பெற்ற கோவிலாக விளங்குகின்றது. இக்கோவில் மூர்த்தி, தலம், தீர்த்தம், ஆகிய முச்சிறப்புகளையும் தன்னகத்தே கொண்டது. மருத மரங்களுக்கும், அரச மரங்களுக்கும் மத்தியில் இயற்கைச் சூழலில் அமைந்திருப்பது இக்கோவிலின் தனிச்சிறப்பாகக் காணப்படுகின்றது.

வரலாறு[தொகு]

சங்கரத்தை பிட்டியம்பதியில் பத்திரகாளி அம்மன் கோவில் அமைந்துள்ள நிலப்பரப்பு, பெருந்தனவந்தராக விளங்கிய பெருமையினார் என்பவரின் குமாரர் முதன்மையினார் என்பவருக்கு உரியதாகக் காணப்பட்டது. ஆதியில், இவ்விடத்திலே பரந்த விருட்சமாகப் புளியமரமொன்று காணப்பட்டுள்ளது. புளிய மரத்திலே வாசம் செய்த கிளிகள் அயலிலுள்ள நெல் வயல்களைச் சேதப்படுத்தி அழித்தன. இதனைக் கண்ணுற்ற முதன்மையினார் அப்புளியமரத்தைத் தறிக்க எண்ணினார்.

கி. பி. 1678 ஆம் ஆண்டு, வட்டுக்கோட்டையிலே கிறிஸ்தவ தேவாலயம் ஓன்று அமைக்கப்பட்டுக் கொண்டிருந்தது. தேவாலய அமைப்பு வேலையில் ஈடுபட்டிருந்த ஆசாரி ஒருவரை அழைத்து வந்து, பட்சிகள் வாசம் செய்யும் புளிய மரத்தை தறிக்குமாறு கேட்டுக் கொண்டார். புளிய மரத்தை தறிப்பதற்கு ஆசாரி மறுப்பு தெரிவித்தார். எனவே, தானே அம்மரத்தைத் தறிக்க முயன்றார். அப்போது அப்புளியமரத்தினடியில் காணப்பட்ட புற்றிலிருந்து வெளிப்பட்ட நாகசர்ப்பமொன்று முதன்மையினாரைத் துரத்தியது. முதன்மையினார் சற்றுத் தூரம் ஓடிய பின் களைப்படைந்து, அருகிலிருந்த பனைமர நிழலில் நின்று பார்த்தபோது, துரத்திய நாகம் படமெடுத்து ஆடுவதைக் கண்டார். இனந்தெரியாத குற்ற உணர்வு வாட்ட, சோர்வுடன் இல்லம் சென்றார்.

புளிய மரத்தடி

அன்றிரவு முதன்மையினார் கனவிலே தோன்றிய அம்பிகை, அவர் தறிக்க எண்ணிய புளியமரத்தடியில் தனக்கு ஒரு நிழல் அமைக்கும்படி கூறியுள்ளார். அன்னையின் ஆணைக்கிணங்க முதன்மையினார், புளியமரத்தடியில் அம்பிகைக்கு, நிழல் மடம் அமைத்து வழிபடத் தொடங்கினார். இவ்வாறு அமைக்கப்பட்ட புளியமரத்தடியை நிழல் மடம் என அழைத்து ஊர் மக்களும், அயலூரவரும் வணங்கி வழிபாடு செய்ய ஆரம்பித்தனர். இவ்வாறு நிழல் மடமாகக் காணப்பட்ட இடம் நாளடைவில் மாற்றம் பெற்று, இன்று புகழ்பெற்ற பத்திரகாளி அம்பாள் ஆலயமாக மாறியுள்ளது.

தற்காலத்திலும், பத்திரகாளி அம்பாள் ஆலய தலவிருட்சமாகப் புளியமரமே காணப்படுகின்றது. ஆதியிலுருந்த புளியம் விருட்ஷம்  அழிந்து விட்டது. தற்போது காணப்படும் தலவிருட்ஷம், ஆதியிலுருந்த தலவிருட்ஷத்தின் வேரிலிருந்து உற்பத்தியாகியுள்ளது. புளிய மரமானது வேரிலிருந்தோ அன்றி விருட்ஷத்தின் எந்த பக்கத்திலிருந்தோ உருவாகக் கூடிய மரமல்ல. இவ்வாறு வேரிலிருந்து உருவாகி வளர்ச்சி பெற்றுக் காணப்படும் இவ்விந்தை, தாவரவியல் வல்லுனர்களின் ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டுக் காணப்பட்டதை அவர்களே வியந்துள்ளனர்.

அற்புதங்கள்[தொகு]

இவ்வாலயத்திலே நடைபெறும் அற்புதங்கள் பல. இப்புளிய மரத்தில் இப்பொழுதும் ஒரு நாக பாம்பு காணப்படுவதாகக் கூறுவர். ஆன்றவிந்தடங்கிய சான்றோராகிய சித்தர்களே பாம்புருவில் வழிபாட்டு தலங்களில் உறைவதாக ஓர் ஐதீகமுண்டு. இச்சித்தர்கள் ஆலயங்களிலே காணப்படும் திருவுருவங்களில் எழுந்தருளி, பக்தர்கள் வேண்டியதை அருளுவர். இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் சித்தர்கள் வாழ்ந்த தலங்கள் சக்திமிக்க தலங்களாக காணப்படுகின்றன.

சங்கரத்தை பத்திரகாளி அம்மன் ஆலய புளிய மரத்தடியில் உறையும் நாகம், திருவிழாக் காலங்களில் உள் மண்டபத்தில், விக்கிரகங்களுக்குப் பக்கத்தில் வந்து, பூசகர் வைக்கும் பாலைக் குடித்துவிட்டுப் போவதைப் பக்தர்கள் கண்டு வியந்து வணங்கி வழிபடுவது வழக்கம். திருவிழாக் காலங்களிலே புளியமரத்தின் கீழ் மேளக்கச்சேரி இடம் பெறுவது வழக்கம். அப்போது மகுடி இசைத்தால், அவ்வேளையில் அம்மரத்தில் உறையும் நாக பாம்பு புளியமரத்தில் காட்சி கொடுப்பதையும், இசைகேற்ப ஆடுவதையும் திருவிழாக் காண வருவோர் கண்டு வியந்துள்ளனர்.

இவ்வாலயத்தின் அயலில் அமைந்துள்ள திருக்கேணியில் காணப்பட்ட நீர் ஒரு சில தினங்கள், பால் போல் வெண்ணிறமாகி, நறுமணம் வீசியது. இவ்வாறான அற்புதத்தைக் காண நாடெங்கிலுமிருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரித்துச் சென்றுள்ளனர்.

2001 ஆம் ஆண்டு பங்குனி உத்தரத் தேர்த் திருவிழா மிகச் சிறப்பாகக் கொண்டாட ஆயத்தங்கள் செய்யபட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் ஆலயத்தில் திரண்டிருந்தனர். திடீரெனப் பெருமழை ஏற்பட்டு, தேரோடும் வீதி சேறும், சகதியுமாகக் காணப்பட்டது . வாகனங்கள் பல சகதியுள் புதையுண்ட நிலையில் தேரோட்டம் நடைபெறுமா? எனப் பக்தர்கள் அன்னையின் முன் இறைஞ்சி நின்றனர். இந்நிலையில் தேரை இழுங்கள் என்ற அருள்வாக்கினைக் கேட்ட பக்தர்கள் வெள்ளம், சகதி இவற்றையும் பொருட்படுத்தாது தேரை இழுத்த போது, எவ்வித இடருமின்றித் தேர் இருப்பிடத்துக்கு வந்தது. அவ்வேளையில் சுவாமியின் பீடத்தின் அடியிலிருந்து, ஒரு சிறிய பாம்பு ஊர்ந்து சென்ற காட்சியைக் கண்டு, பக்தர்கள் அன்னையின் அருளை ஏற்றிப் போற்றினர்.

கருணையே வடிவானவள் அன்னை. தனது பக்தர்கள் துன்புறும் வேளையில் அவர்கள் துயர் நீக்கி அருளிய சம்பவங்களை இவ்வூர் மக்கள் தமது அனுபவ வாயிலாக அறிந்துள்ளனர். சங்கரத்தை பத்திரகாளி அம்பாள் அருளிய அற்புதங்களோ சொல்லில் அடங்காதவை. 1976 ஆம் ஆண்டு நடைபெற்ற அற்புத நிகழ்வொன்றை அனுபவித்த அடியவர் ஒருவர் கொழும்புத்துறையில் வாழ்ந்து வந்தார். இவர், கொழும்புத்துறை விநாயகர் கோவிலில் அமைந்துள்ள ஸ்ரீஇராஜ இராஜேஸ்வரி அம்பாளில் மிகவும் பக்தி கொண்டவர். தனது துன்பங்களைத் தீர்த்து வைக்க வேண்டி, அம்பாளை வழிபட்டு, வறுமையிற் செம்மையாகத் தனது கணவருடனும் ஏழு குழந்தைகளுடனும் இந்த அடியவர் வாழ்ந்து வந்தார்.

1976 ஆம் ஆண்டு மாசி மாதம் 9ஆந் திகதி மாலை ஆறு மணியளவில், ஒரு வயோதிபப் பெண்மணி, அடியவர் வீட்டுக்கதவைத் தட்டியுள்ளார். வீட்டிலுள்ளோர் கதவைத் திறந்து பார்த்த பொழுது, கருமையான நிறங்கொண்ட வயோதிபப் பெண்மணியொருவர், வெண்ணிற ஆடையணிந்து கையிலே பிரம்புடன் நின்று கொண்டிருந்தார். கதவைத் திறந்த அடியவரைப் பார்த்து, "உனக்கு மருந்து கொண்டு வந்துள்ளேன், என்னைத் தெரியவில்லையா?" என அன்போடு கூறியுள்ளார்.

அப்பொழுது அடியவர் "ஆச்சி, உங்களை எனக்கு தெரியவில்லை, எங்கிருந்து வருகிறீர்கள்?" என்று வினவ, "நான் சங்கரத்தை பத்திரகாளி அம்மன் கோவிலிலிருந்து வருகின்றேன்" எனக் கூறியுள்ளார். அதனைக் கேட்ட அடியவர், "ஆச்சி நீங்கள் தூரத்திலிருந்து வந்திருக்கிறீர்கள், போகும்போது பஸ்ஸிலே போகலாம்" என்று கூற, "நான் பஸ் ஏறுவதில்லை, நடந்தே போய் விடுவேன்" எனக் கூறியவாறு சிறிது தூரம் நடந்து சென்று திடீரென மறைந்து விட்டார்.

இச்சம்பவத்தினால் மனங்கலங்கியிருந்த வேளை, அடியவரின் கணவர் அன்றிரவு தான் ஓர் கனவு கண்டதாக மனைவியிடம் விவரித்துள்ளார். அக்கனவிலே ஒரு பழைய கட்டிடத்தைக் கண்டதாகவும், அதனைச் சூழவுள்ள வயலில் பெண்கள் அறுவடை செய்து கொண்டிருந்ததாகவும், அக்கட்டிடத்தின் முன் ஒரு கேணி இருந்ததாகவும் கூறினார். தான் கனவிலே கண்ட கட்டிடத்தினுள் ஒரு அழகிய பெண், ஆடை ஆபரணச் சிறப்புடன் ஊஞ்சல் ஆடுவதைக் கண்டதாகவும் விபரித்தார். தமது வீட்டிற்கு வருகை தந்த வயோதிபப் பெண்மணிக்கும், தான் இரவு கண்ட கனவிற்கும் ஏதோ தொடர்பிருக்க வேண்டும் என எண்ணி, சங்கரத்தை இருக்குமிடந் தேடித் தம்பதிகள் சென்றனர்.

அடியவர், தான் கனவிலே கண்ட அதே காட்சிகளைப் பிட்டியம்பதியிலே கண்டார். ஆனால் ஊஞ்சல் பலகையிலே பெண்ணிற்குப் பதிலாகப் பூசகர் இராமநாதன் என்பவர் அமர்ந்திருந்தார். அவரிடம், தமது வீடு தேடிவந்த ஆச்சியின் தோற்றத்தை விவரித்து, கோவிலுக்கு அருகாமையில் யாராவது ஆச்சி வசிக்கிறார்களா? என வினவினார். அதற்குப் பூசகர் இராமநாதன், அப்படி யாரும் அவ்விடத்தில் வசிப்பதில்லை என்று கூறி, "ஏன் ஆச்சியின் தரிசனம் கண்டா வந்தீர்கள்? ஆச்சி எங்கெல்லாமோ போய் வருகின்றா" எனக் கூறியதோடு "பத்திரகாளி ஆச்சி நேரில் உங்களிடம் வந்து தனது அற்புதத்தைக் காட்டியுள்ளார். நீங்கள் பெறற்கரிய பேறு பெற்றவர்கள்" எனப் பூசகர் இராமநாதன் கூறினார்.

இவ்வேளையில், பூசகர் இராமநாதன் அவர்கள் தனது  தந்தையார் கோவிலில், வெள்ளிக்கிழமைகளில் தயிர்ச்சாத நைவேத்தியம் வைத்துப் பூசை செய்வது வழக்கம். அவ்வாறு செய்யும்பொழுது அவருக்கு நாகசர்ப்பம் காட்சி கொடுப்பதும் வழக்கமாகக் காணப்பட்டுள்ளது. தனது தந்தையாருக்குக் கிடைக்கும் அற்புதக் காட்சி தனக்கும் கிடைக்க வேண்டும் என மனமுருகி வேண்டி வந்துள்ளார். ஒருநாள் பூசகர் இராமநாதன் பூசை செய்யும் பொழுது அன்னையின் முன் மனமுருகித் தனக்கு காட்சியளிக்குமாறு வேண்டியபொழுது, நாகசர்ப்பம் காட்சியளித்துள்ளது. அப்பொழுது, "நான் உன்னை நம்பினேன், தாயே நம்பினேன் " எனக் கூறியவாறு தீபம் காட்ட, நாகசர்ப்பம் சோமுகை வழியாகச் சென்று, அருகேயுள்ள புளியமரத்தில் குடிகொண்டது எனக் கூறினார்.

இவ்வாறான அன்னையின் அற்புதங்கள் இன்று நேற்றல்ல, காலங்காலமாக நம்பிய அடியவர்க்கு நடந்துள்ளதை அபிராமிபட்டரின் வாழ்க்கை வரலாறு சுட்டிக் காட்டுகின்றது. ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சர் காளி மீது கொண்ட தீராத பக்தியால் அவர் பெற்ற அற்புதங்கள் சொல்லில் அடங்காதவை.

ஆதிகாலத்தில் அம்பிகை ஆலயங்களில் பலியிடும் வழமை காணப்பட்டது . இவ்வாலயத்திலும் அம்மரபு காணப்பட்டுள்ளது. காலப்போக்கில் பலியிடும் வழக்கம் நிறுத்தப்பட்டது . ஆலயந்தோன்றிய காலந்தொட்டு வீரபத்திரர் மண்டபத்தடியில் பொங்கிப் படைத்தல், உயிர்ப்பலி கொடுத்தல் போன்ற நிகழ்வுகள் நடைபெற்று வந்துள்ளது.

திருப்பணி செய்தவர்கள்[தொகு]

இந்து வாலிபர் சங்கம்

சங்கரத்தை பிட்டியம்பதி பத்திரகாளி அம்மன் கோவில் திருப்பணிக்கும், வளர்ச்சிக்கும் பலர் முன்னின்று உழைத்துள்ளனர். இவர்களுள் தவத்திரு சிவயோக சுவாமிகளின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவரும், சங்கரத்தை வாசியும் சிவநெறிச் செல்வருமான அமரர் திரு அம்பலவாணர் தில்லையம்பலம் அவர்கள் குறிப்பிடத்தக்கவர். இவர் தலைமையில் 1947ஆம் ஆண்டு, இந்து வாலிபர் சங்க உறுப்பினர்களின் ஆதரவுடன் ஆலயத்தில் நடைபெறும் உயிர்ப்பலியை நிறுத்த பிரச்சாரம் செய்யப்பட்டது. இதன் விளைவாக உயிர்பலி நிறுத்தப்பட்டது.

ஆலய அமைப்பு[தொகு]

நிழல் மடம்

சங்கரத்தை பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் முதன்மையினார் பரம்பரையைச் சேர்ந்த வேளாள சமூகத்தினரே பூசகர்களாய் கடைமையாற்றுகின்றனர். நிழல் மடமாயிருந்த இவ்வாலயம் காலத்திற்கு  காலம் புனருத்தாரணம் செய்யப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் புளியமரத்தடியில் நாற்காலி ஒன்றினை வைத்து, அதனை வீரபத்திரக் கடவுளுக்குரிய பீடமாக மனதிருத்தி வழிபட்டுள்ளனர். ஆனால் தற்போது வீரபத்திரரின் பாதமும், இடபமும் பொறிக்கப்பட்ட பீடம் அமைக்கப்பட்டு அதற்கு மண்டபம் அமைத்து வழிபாடு நடைபெற்று வருகின்றது. ஆலய மூலஸ்தானத்தில் வெள்ளியால் செய்யப்படட நாகாசனத்தில், ஐம்பொன்னாலான விக்கிரகங்களாக பத்திரகாளி அம்பாள் சமேத வீரபத்திரர் திருவுருவம் காணப்படுகின்றது.

தீர்த்தக்கேணி


புளியமரத்தடியில் ஆரம்பமான சங்கரத்தை பிட்டியம்பதி பத்திரகாளி அம்மன் வழிபாடு, அடியார்களின் பரோபகார சிந்தனையால், இன்று வளர்ச்சி பெற்ற ஆலயமாகக் காணப்படுகின்றது. இவ்வாலயத்திலே பரிவார மூர்த்தங்களாக விநாயகர், நவக்கிரகம், பைரவர், சண்டிகேஸ்வரி ஆகியனவும் நிறுவப்பட்டுள்ளன. ஆலயத்தின் முன்வாசலில்  பெரிய தீர்த்தக் கேணி காணப்படுகின்றது. தீர்த்தக் கேணிக்கு அண்மையில் அழகான பூந்தோட்டம் காணப்படுகின்றது. 1955 ஆம் ஆண்டு ஆலயம் புனரமைக்கப்பட்டு ஆலயத்திற்கு உள்வீதியும் அமைக்கப்பட்டது.

உற்சவ தினங்கள்[தொகு]

ஈழத்திருநாட்டில் வருடத்தில் இரு முறைகள் உற்சவம் நடைபெறும் ஆலயங்கள் சிலவாகவே காணப்படுகின்றன. சங்கரத்தை, பிட்டியம்பதி பத்திரகாளி அம்மன் ஆலயம் வருடத்தில் இரு திருவிழாக்களைக் கொண்டாடும் சிறப்புப் பெற்றது. பங்குனி உத்தரம், ஆனி உத்தரம் ஆகிய இரு நட்சத்திரங்களை மையமாகக் கொண்டு திருவிழா நடைபெறும். பங்குனி உத்தரத் திருவிழா பத்திரகாளி அம்பாளுக்கும், ஆனி உத்தரத் திருவிழா வீரபத்திர சுவாமிக்கும் சிறப்பாக நடைபெறும். பங்குனி உத்தரத் திருவிழாவிலே ரதோற்சவம், தீர்த்தோற்சவம் என்பன நடைபெறும். உற்சவ காலங்களிலே மடைபோடல், மகாபேரிகை (பறை அடித்தல்) போன்றவை தற்காலத்திலும் இடம் பெறுகின்றன.

கோபுரம்

ஈழத் தமிழருக்கெதிராகக் கடந்த நான்கு தசாப்தங்களுக்கு மேலாக இடம் பெற்ற யுத்தம் ஓய்ந்து, அமைதியான சூழ்நிலை ஏற்பட்டுள்ள வேளையில் பல ஆலயங்கள் புனருத்தாரணப் பணியிலே ஈடுபட்டுள்ளன. சங்கரத்தை பத்திரகாளி அம்மன் ஆலயத்திலும் 2003 ஆம் ஆண்டு ஆலயத்திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தெற்கு வாசலிலே கோபுரம் அமைக்கப்பட்டு, ஆலயம் பிரம்மாண்டமானதொரு தோற்றத்துடன் விளங்குகின்றது. 2003 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஆலயத்தின் முன்வாசலில் ஐந்தடுக்குக் கொண்ட கோபுரம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டு வைபவம் நடைபெற்றது.


இவ்வாலயத்திற்கு குடா நாட்டின் பல பகுதிகளிலிருந்து பக்தர்கள் வருவதோடு, தமது மனக்குறை தீர அம்பாளின் அருளை வேண்டி நேர்த்திகள் செய்வதும், பொங்கலிட்டு வணங்குவதும் வழக்கமாகக் காணப்படுகின்றது. உலகம் முழுமையாக இயங்க ஆதாரமாக உள்ளவள் பராசக்தி அன்னையே. அன்னையை எந்த வடிவில் வணங்கினாலும், தாய்மைக்கே உரிய கருணையோடு அருள் புரிவாள் என்பதற்குச் சங்கரத்தை பத்திரகாளி அம்மன் சமேத வீரபத்திரர் ஆலயம் சான்றாகக் காணப்படுகின்றது.

உசாத்துணைகள்[தொகு]

[1]

  1. ஈழத்து திருக்கோயில்கள்- வரலாறும் மரபும்-வசந்தா நடராசன் B.A.