உள்ளடக்கத்துக்குச் செல்

பதிற்றுப்பத்து பழைய உரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பதிற்றுப்பத்து பழைய உரை [1] என்னும் உரைநூல் 13 ஆம் நூற்றாண்டில் தோன்றியது. பதிற்றுப்பத்து சங்க இலக்கியங்களில் ஒன்று. அரசனுக்குப் பத்துப் பாடல் என்று 10 சேர அரசர்கள்மீது பாடப்பட்ட நூல் பதிற்றுப்பத்து.[2]

பதிற்றுப்பத்து பழைய உரை என்னும் நூல் உ. வே. சாமிநாதையர் பதிப்பாக ஐந்து முறை பதிப்பிக்கப்பட்டுள்ளது. முதல் பதிப்பு 1904-இலும், ஐந்தாம் பதிப்பு அவர் பரம்பரையினராலும் பதிப்பிக்கப்பட்டு வெளிவந்துள்ளது.

இந்த நூலின் 76 ஆம் பாடல் உரையில் 'சில்லேராளர்' என்னும் தொடருக்கு 'சிறிய ஏராளர்' என்று உரை எழுதிய பின்னர் "சின்னமையால் சின்னூல் என்பது போலச் சிறுமையாகக் கொள்க" என்று குறிப்பிடுகிறார். சின்னூல் என்பது நேமிநாதம். இதன் காலம் 1195. எனவே சின்னூலைக் குறிப்பிடும் இந்த உரை அதற்குப் பின்னர் தோன்றியது என்றாகிறது. இது 13 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி.

இந்த உரை பற்றிய சில குறிப்புகள்

[தொகு]
  • பதிற்றுப்பத்து நூலிலுள்ள ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு தலைப்பு அதன் இறுதியில் உள்ள பதிகத்தில் தரப்பட்டுள்ளது. அந்தத் தலைப்புகளுக்கு இந்த உரையில் சிறந்த விளக்கம் தரப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டு - சான்றோர் மெய்ம்மறை [3] எனபதற்கு இவ்வுரை தருப் விளக்கம் இது. "ஈணுச் சான்றோர் என்பது போரில் அமைதி உடைய வீரரை. மெய்ம்மறை - மெய்புகு கருவி. மெய்ம்மறை என்பது அச் சான்றோர்க்கு மெய்புகு கருவி போல போரில் புக்கார் வலியாய் முன் நிற்றலின் இச் சிறப்பு நோக்கி இதற்குச் சான்றோர் மெய்ம்மறை என்று பெயராயிற்று".
  • ஒவ்வொரு பாட்டுக்கும் சொல்லப்பட்டிருக்கும் துறை, வண்ணம் என்னும் இசைக் குறிப்புகளுக்கு இந்த உரையில் சிறந்த விளக்கங்கள் தரப்பட்டுள்ளன.
  • ஒவ்வொரு பாடலுக்கும் தொகுப்புரை கூறப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டு - இதனால் கூறியது அவன் வெற்றிச்செல்வச் சிறப்புக் கூறியவாறாயிற்று.[4]
  • சிறப்பான விளக்கங்கள் ஆங்காங்கே கூறப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டு - "'களங்காய்க் கண்ணி நார்முடி' என்றது களங்காயால் செய்த கண்ணியும், நாரால் செய்த முடியும். தான் சூடுகின்ற காலத்து ஒரு காரணத்ததால் முடித்தற்குத் தக்க கண்ணியும் முடியும் உதவாமையால் களங்காயால் கண்ணியும் நாரால் முடியும் செய்து கொள்ளப்பட்டன என்றவாறு" [5]

அடிக்குறிப்பு

[தொகு]
  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1970, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதின்மூன்றாம் நூற்றாண்டு,. சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. p. 85. {{cite book}}: Check date values in: |year= (help)
  2. பதிற்றுப்பத்து அந்தாதி என்னும் நூல் 'திருச்சதகம்' என்னும் பெயருடன் மாணிக்க வாசகர் பாடிய திருவாசகத்தில் உள்ளது
  3. பதிற்றுப்பத்து பாடல் எண் 14
  4. 11 ஆம் பாடலுக்குத் தரப்பட்டுள்ள தொகுப்புரை
  5. பாடல் 38 உரை
"https://ta.wikipedia.org/w/index.php?title=பதிற்றுப்பத்து_பழைய_உரை&oldid=2416559" இலிருந்து மீள்விக்கப்பட்டது