பதார்த்த குண சிந்தாமணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பதார்த்த குண சிந்தாமணி தேரையர் என்னும் சித்தரால் இயற்றப்பட்ட ஒரு மருத்துவ நூலாகும். தமிழ் மருத்துவ நூலான பதார்த்த குண சிந்தாமணியில் ஒவ்வொரு பொருளிலும் அடங்கியுள்ள மருத்துவக் குணங்கள் எடுத்துரைக்கப்பட்டுள்ளது[1][2]. ‘பதார்த்தம்’ என்பது தாவரங்களின் உறுப்புகளான வேர், பட்டை, பிசின், சாறு, இலை, பூ, காய், விதை ஆகிய எட்டுப் பொருள்களையும் குறிப்பதாகும். இப்பொருள்கள் கசப்பு, உவர்ப்பு, இனிப்பு, கார்ப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய அறுவகைச் சுவைகளைக் குணமாகக் கொண்டிருக்கும். இவ்வகைப் பதார்த்தங்களைச் சிந்தாமணியாய்த் தொகுத்து உரைப்பதே பதார்த்த குண சிந்தாமணியாகும்[3].

மேற்கோள்கள்[தொகு]

 1. "தமிழ் மருத்துவத்தின் வரலாறு". பார்த்த நாள் 2012-12-09.
 2. "சித்தர்கள் இராச்சியம்". பார்த்த நாள் 2012-12-09.
 3. "தமிழில் மருத்துவ நூல்கள்". பார்த்த நாள் 2012-12-09.

பதார்த்த குண சிந்தாமணி - காலத்தின் வாடா மலர் பதார்த்த குண சிந்தாமணி பற்றிக் கேள்விப்பட்டதுண்டா? சரஸ்வதி மகால் காப்பாற்றிய தமிழின் சொத்து இது. நாம் உட்கொள்ளும், பயன்படுத்தும் அத்தனைக்கும் அதற்கான பயன்பாடு, நன்மை, தீமைகள் பற்றிப் புட்டுப்புட்டு வைத்த ஒரு ஆதி நூல்.

நீரின் வகை, பாலின் வகை, நிழலின் வகை, உறக்கத்தின் வகை, காயின் வகை, கனியின் வகை, இன்பத்தின் வகை, சாதத்தின் வகை, பழங்களின் வகை, உலோகங்களின் வகை என்று நீளும் இந்த சிந்தாமணியின் விறுவிறுப்பும், அதன் ஆராய்ச்சியும் ஒரு போதும் அலுத்ததில்லை.

                     ****************************************

தனக்கு ஒரு சீடனைத் தேடிக்கொண்டிருந்த அகஸ்தியரிடம், ஔவை ஒரு வாய் பேசாத ராமதேவன் என்ற பெயர் கொண்ட ஒரு சிறுவனைச் சீடனாக அளித்தார். ஒரு சமயம் கூன்பாண்டியன் என்றறியப் பட்ட பாண்டிய மன்னன் ஒருவனுக்குக் கூனை நிமிர்த்தும் பொருட்டு அபூர்வ மூலிகைகளைக் குறிப்பிட்டு அவற்றைத் தேடிக் கொண்டுவரச் சொன்னார் அகஸ்தியர். ராமதேவர் கொண்டுவந்த மூலிகைகளை அரைத்து தைலமாகக் காய்ச்ச அடுப்பில் ஏற்றினார்.

வேறொரு வேலையின் நிமித்தம் வெளியே சென்ற அகஸ்தியர், ராமதேவனிடம் கவனித்துக்கொள்ளும்படிச் சொல்லிவிட்டுச் சென்றார். கொதிக்கும் சாறு நிரம்பிய பாண்டத்தின் மேலே, கூரையில் வேயப்பட்டிருந்த வளைந்த மூங்கில் ஒன்று கொதிக்கும் சாற்றின் ஆவியால் நிமிர்ந்ததைக் கண்ட ராமதேவன், அடுப்பிலிருந்த சாறு தைலமாகப் பதமாகிவிட்டதென யூகித்து இறக்கி வைத்தார்.

திரும்பிய அகஸ்தியரிடம் நடந்ததைச் சைகையால் விளக்க, அவரைப் பாராட்டி மன்னனின் கூன் முதுகில் தைலத்தைத் தடவி சிகிச்சை செய்யக் கூன் நிமிர்ந்தது.

                        *****************************************

மற்றொரு முறை மன்னன் காசிவர்மனுக்கு பொறுக்க முடியாத தலைவலி. அகஸ்தியரிடம் சிகிச்சை பெற வந்த மன்னனைப் பரிசோதித்து, மன்னன் உறங்குகையில் மூக்கின் வழியாக தலைக்குள் சென்ற சின்னஞ்சிறு தேரைதான் காரணம் என்று கண்டுபிடித்தார். மன்னனுக்கு அதிர்ச்சி. அகஸ்தியர் அதற்கு சிகிச்சையளித்துக் குணப்படுத்துவதாக வாக்களித்தார்.

மன்னனுக்கு ஆழ்ந்த மயக்கம் அளிக்கப்பட்டு, மன்னனின் கபாலம் திறக்கப்பட்டது. மூளையின் மேற்பகுதியில் உட்கார்ந்திருந்த தேரையை வெளியேற்ற முயன்ற அகஸ்தியரின் முயற்சி எளிதில் பலிக்கவில்லை. சட்டென்று ராமதேவர், நீர் நிரம்பிய பாத்திரம் ஒன்றை மன்னனின் தலைக்கருகில் தேரையின் பார்வை படும் வகையில் வைத்தார். நீரைக் கண்ட தேரை பாத்திரத்திற்குத் தாவியது.

மன்னனின் கபாலத்தை சந்தானகரணி என்னும் மூலிகையால் இணைத்து மூடினார் அகஸ்தியர். மயக்கம் தெளிந்து எழுந்த மன்னனின் தலைவலி மறைந்து போயிருந்தது. பாராட்ட வார்த்தைகளின்றி அகஸ்தியருக்கும், தேரையருக்கும் ஏராளமான வெகுமதிகள் வழங்கினான் மன்னன்.

ராமதேவரின் சமயோஜிதத்தால் மகிழ்ந்த அகஸ்தியர், அவரின் பேசும் திறனை சிகிச்சையால் மீட்டார். தனக்குத் தெரிந்த அத்தனை வைத்திய முறைகளையும் அவருக்குக் கற்றுக்கொடுத்தார். ராமதேவரின் பெயரையும் தேரையர் என்று மாற்றி, அவரின் புகழ் எங்கும் பரவச் செய்தார்.

இடுகையின் நீளம் அனுமன் வாலாகி விடுமோ என்ற அச்சத்தில் இத்தோடு தேரையரின் சாகசங்களை நிறுத்திக் கொள்கிறேன். சந்தர்ப்பம் அமைகையில், இன்னொரு இடுகையில்.

                         *************************************

பதார்த்த குண சிந்தாமணியில் தேரையரின் கீழேயுள்ள பாடல்கள் மிக மிக முக்கியமானவை. ஒவ்வொரு பொருளின் நல்லது, கெட்டது பற்றிச் சொல்லிவந்த தேரையர் இறுதியில் மொத்தமாக சிகரம் வைத்தது போல, Do's and Dont's என்று வரையறுக்கும் இந்தப் பாடலை அறிமுகப் படுத்தலாம் என நினைக்கிறேன்.

பாலுண்போ மெண்ணெய்பெறின் வெந்நீரிற் குளிப்போம் பகற்புணரோம் பகற்றுயிலோம்பயோ தரமுமூத்த ஏலஞ்சேர் குழலியரோடிளவெயி லும்விரும்போம் இரண்டளக்கோ மொன்றைவிடோமிட துகையிற் படுப்போம்

மூலஞ்சேர்கறி நுகரோமூத்த தயிருண்போம் முதனாளிற் சமைத்தகறிய முதெனினு மருந்தோம் ஞாலத்தான் வந்திடினும் பசித்தொழிய வுண்ணோம் நமனார்க்கிங்கேது கவை நாமிருக்கு மிடத்தே. (1506)

உண்பதிருபொழுதொழிய மூன்று பொழுதுண்ணோம் உறங்குவதிராவொழியப் பகலுறக்கஞ் செய்யோம் பெண்கடமைத்திங்களுக்கோர் காலன்றி மருவோம் பெருந்தாகமெடுத்திடினும் பெயர்ந்து நீரருந்தோம்

மண்பரவுகிழங்குகளிற் கருணையன்றிப் புசியோம் வாழையிளம்பஞ்சொழியக் கனியருந்தல் செய்யோம் நன்புபெறவுண்டபின் புகுறு நடையிங்கொள்ளோம் நமனார்க்கிங்கேது கவைநாமிருக்கு மிடத்தே. (1507)

ஆறுதிங்கட்கொரு தடவை மனமருந் தயில்வோம் அடர்நான்கு மதிக்கொருக்காற் பேதியுறை நுகர்வோந் தேறுமதியொன்றரைக்கோர் தரநசியம் பெறுவோந் திங்களரைக்கிரண்டு தரஞ்சவளவிருப்புறுவோம்

வீறுசதுர்நாட்கொருக்கானெய் முழுக்கை தவிரோம் விழிகளுக்கஞ்சன மூன்று நாட்களுக்கொருக்காலிடுவோம் நாறுகந்தம் புட்பமிவை நடுநிசியின் முகரோம் நமனார்க்கிங்கேது கவை நாமிருக்கு மிடத்தே (1508)

பகத்தொழுக்குமாத சரசங் கரந்துடைப்பமிவைத்தூட் படநெருங்கோந்தீபமைந்தர் மரநிழலில் வசியோஞ் சுகப்புணர்ச்சியசன வசனத்தருணஞ் செய்யோந் துஞ்சலுணவிருமலஞ்சையோக மழுக்காடை

வகுப்பெடுக்கிற் சிந்துகசமிவை மாலைவிடுப்போம் வற்சலந்தெய்வம்பிதுர் சற்குருவைவிடமாட்டோம் நகச்சலமுமுளைச்சலழுந் தெறிக்குமிடமணுகோம் நமனார்க்கிங்கேது கவைநாமிருக்கு மிடத்தே (1509)

ஒரு முறை பதம் பிரித்து வாசித்தால் - சில அரிய வார்த்தைகள் தவிர்த்து - எளிமையாய்ப் புரிந்துகொள்ளலாம். முடியாதவர்களுக்காக இதன் பொருள்:

பாலும், பால் சேர்ந்த உணவும் உண்போம். எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது வெந்நீரில் குளிப்போம். பகல்நேரத்தில் போகத்தில் ஈடுபட மாட்டோம். தன்னைவிட வயதில் மூத்த பெண்களோடும், பொதுமகளிரோடும் கூடமாட்டோம்.

காலை நேரத்து இளம்வெயிலில் திரிய மாட்டோம். மலத்தையும், சிறுநீரையும் அடக்க மாட்டோம். சுக்கிலத்தை அடுத்தடுத்து விட மாட்டோம். இடது கைப்புறமாக ஒருக்களித்துப் படுப்போம்.

மூலவியாதியை உண்டாக்கும் பதார்த்த வகைகளை உண்ண மாட்டோம். புளித்த தயிரை உண்போம். முதல்நாள் சமைத்த கறி அமிர்தத்துக்குச் சமமானாலும் புசிக்கமாட்டோம். பசித்தால் ஒழியச் சாப்பிட மாட்டோம்.

ஒரு நாளைக்கு இருமுறை மட்டுமே உண்போம். இரவில் மட்டுமே உறக்கம் கொள்வோம். மாதம் ஒருமுறை மட்டுமே மனைவியுடன் கூடுவோம். பெரும் தாகமெடுத்தாலும், உணவுக்கு நடுவில் நீர் அருந்த மாட்டோம்.

கருணைக்கிழங்கைத் தவிர வேறு கிழங்குகளை உண்ணமாட்டோம். பிஞ்சு வாழைக்காயை உண்போமன்றி முற்றியவற்றை உண்ணமாட்டோம். நல்ல உணவுக்குப் பின்பு சிறிது நடை நடப்போம். ஆறு மாதங்களுக்கு ஒரு தடவை வாந்தி மருந்து உண்போம்.

நான்கு மாதங்களுக்கு ஒருமுறை பேதி மருந்து உண்போம். ஒன்றரை மாதத்துக்கு ஒரு தடவை மூக்கிற்கு மருந்திட்டுக்கொள்வோம். வாரம் ஒரு தடவை முகச் சவரம் செய்துகொள்வோம். நான்கு நாட்களுக்கு ஒரு முறை எண்ணெய் தேய்த்துக் குளிப்போம்.

மூன்று தினங்களுக்கு ஒருதடவை கண்களுக்கு மையிட்டுக் கொள்வோம். நறுமணப் பொருட்களையும், மணம் மிகுந்த மலர்களையும் நடுநிசியில் முகர மாட்டோம். மாதவிடாய் நேரத்துப் பெண்டிராலும், ஆடு, கழுதை, பெருக்கும் துடைப்பம் இவற்றாலும் எழும் புழுதி உடல் மேல்படுமாறு நெருங்கி இருக்கமாட்டோம்.

இரவில் தீபத்தின் நிழல், மனிதர் நிழல், மர நிழல் இவற்றில் நிற்க மாட்டோம். பசியுடனும், உண்ட உணவு ஜீரணிக்கும் போதும் போகம் செய்ய மாட்டோம். உறங்குதல், உணவு புசித்தல், மலஜலம் கழித்தல், போகத்தில் ஈடுபடல், தலை வாருதலால் மயிர் உதிர்தல், அழுக்குடை அணிதல் இவைகளை அந்தி நேரத்தில் நீக்குவோம்.

பசுவையும், தெய்வத்தையும், பித்ருக்களையும், குருவையும் அந்தியில் பூஜிப்போம். நகத்திலிருந்தும், சிகையிலிருந்தும் நீர் தெளிக்குமிடத்தில் நெருங்கோம். ஆனபடியால், நோயை முன்வைத்து நம்மிடத்தில் நெருங்க எமனுக்கு என்ன அவசியம் இருக்கிறது?