பதடி வைகலார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பதடிவைகலார் சங்ககால நல்லிசைப் புலவர்களுள் ஒருவர். இவரின் இயற்பெயர் தெரிந்திலது. தலைவியுடன் பழகாத நாள் வீணான நாள் பகடி வைகல் எனும் பொருள் படி இவர் பாடிய குறுந்தொகை 323 ஆம் பாடலே இவருக்கு இப் பெயரைப் பெற்றத் தந்தது. பதடி என்றால் உமி வீணானது என்றும் வைகல் என்றால் நாள் என்றும் பொருள்.[1]

பதடிவைகலார் சங்ககாலப் புலவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது குறுந்தொகை 323. இவர் பாடல் தொடரால் பெயர் பெற்ற புலவர். தம் பாடலில் "பதடி வைகல்" என்னும் தொடரைப் பயன்படுத்தியுள்ளார். இவரது இயற்பெயர் தெரியாத நிலையில் எட்டுத்தொகை தொகுப்பு குறுந்தொகை நூலைத் தொகுத்த ஆசிரியர் இவருக்குப் பதடிவைகலார் எனப் பெயர் சூட்டியுள்ளார்.

பாடல் சொல்லும் செய்தி[தொகு]

போர்வினை முடிந்தபின் இல்லம் மீளும் தலைவன் தன் நெஞ்சுக்குச் சொல்கிறான்.

எல்லாம் செல்லி என்ன பயன்? இங்கு இருந்த ஒவ்வொரு நாளும் பதர்போல் சாவியாகிவிட்டது. இங்கு ஒவ்வொரு நாட்காலையிலும் பாணர் தம் எழால் பறையை முழக்கிப் படுமலைப்பண் பாடுகின்றனர்.

மழை பொழிந்து பூத்த முல்லைமணம் அவள் நெற்றியில் கமழ, அவள் கூந்தல் மெத்தையில் வாழாத நாட்கள் தானே இவை. (எனவே இவை பதடி வைகல்)
* எழால் = போர் முரசம்
* படுமலை = வெற்றி முழக்கப் பண்

பதடி[தொகு]

பதடி என்பது அரிசி இல்லாத நெல், இது நெல் தூற்றும்போது காற்றில் பறக்கும். எதற்கும் பயன்படாது. எருவாகக்கூடப் பயன்படுத்த முடியாது. ஆண்டுக்கணக்கில் மக்காது. கொல்லர் இதனைத் தம் உலைக்களத்தில் இரும்பைக் காய்ச்ச எரிப்பொருளாகப் பயன்படுத்துவர்.

ஒப்புநோக்கம்[தொகு]

"பயனில்சொல் பாராட்டுவானை மகன் எனல், மக்கட்பதடி எனல்" - திருக்குறள்.

மேற்கோள்கள்[தொகு]

  1. எல்லாம் எவனோ பதடி வைகல்
    பாணர் படுமலை பண்ணிய எழாலின்
    வானத் தெழுஞ்சுவர் நல்லிசை வீழப்
    பெய்த புலத்துப் பூத்த முல்லைப்
    பசுமுகைத் தாது நாறும் நறுநுதல்
    அரிவை தோளிணைத் துஞ்சிக்
    கழிந்த நாளிவண் வாழு நாளே (குறுந் 323)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பதடி_வைகலார்&oldid=3415280" இலிருந்து மீள்விக்கப்பட்டது