பண்ணத்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பண்ணத்தி என்பது தொல்காப்பியம் பகுத்துக் காட்டும் ஏழு வகையான செய்யுள் பாங்குகளில் ஒன்று. [1][2] இது செய்யுளுக்குள் இருக்கும் விடுகதை போன்ற பொருள் குறிப்பு என விளக்கப்பட்டுள்ளது. இது பொருளை உய்த்துணர வைக்கும் பாட்டாக வரும்.

கொன்றை வேய்ந்த செல்வன் அடியினை
என்றும் ஏத்தித் தொழுவோம் நாமே [3]

என்னும் பாடலைத் தொல்காப்பிய உரையாசிரியர் இளம்பூரணர் பண்ணத்தி வகைக்கு எடுத்துக்காட்டாகத் தருகிறார். இதில் ‘கொன்றை வேய்ந்த செல்வன்’ என்னும் தொடர் பாட்டிடை வைத்த குறிப்பு. இந்தத் தொடர் கொன்றைப் பூவைத் தலையில் சூடிக்கொண்டிருக்கும் சிவபெருமானைக் குறிக்கும். [4] இது பிசி என்னும் விடுகதை போல இருக்கும் என்று தொல்காப்பியம் விளக்குகிறது. [5]

பிசி, பண்ணத்தி ஆகியவற்றுக்கு இடையே உள்ள வேறுபாடு

பிசி (விடுகதை) பண்ணத்தி
வினாப்பாடலுக்கு விடை என்னும் பாங்கில் இருக்கும் பாட்டில் குறிப்பால் உணர்த்தும் ஒரு தொடராக இருக்கும்
பேச்சு வழக்கில் வரும். (செய்தி இதழ்களில் புதிர் போட்டு விடுவிக்கும் உரைநடைத் தொடர்களாக இக்காலத்தில் பதிவேறியுள்ளன) செய்யுள் வழக்கில் வரும்

இந்தப் பண்ணத்திப் பொருட்குறிப்பபு பன்னிரண்டு அடிக்கு மிகாத அடிகள் கொண்ட பாட்டில் வரும். அதற்கு மேற்பட்ட அடிகள் கொண்ட பாட்டில் வரினும் கடிந்து நீக்கப்படாது என்கிறது தொல்காப்பியம். [6]

அடிக்குறிப்புகள்[தொகு]

  1. 'எழு நிலத்து எழுந்த செய்யுள் தெரியின்,
    அடி வரை இல்லன ஆறு' என மொழிப 3-466 தொல்காப்பியம், செய்யுளியல்

  2. அவைதாம்,
    நூலினான, உரையினான,
    நொடியொடு புணர்ந்த பிசியினான,
    ஏது நுதலிய முதுமொழியான,
    மறை மொழி கிளந்த மந்திரத்தான,
    கூற்று இடை வைத்த குறிப்பினான 3-467 தொல்காப்பியம், செய்யுளியல்

  3. கொன்றைவேந்தன்
  4. பாட்டிடைக் கலந்த பொருள ஆகி,
    பாட்டின் இயல-பண்ணத்திய்யே 3-482 தொல்காப்பியம், செய்யுளியல்

  5. அதுவேதானும் பிசியொடு மானும் 3-483 தொல்காப்பியம், செய்யுளியல்

  6. அடி நிமிர் கிளவி ஈர்-ஆறு ஆகும்;
    அடி இகந்து வரினும் கடி வரை இன்றே 3-484 தொல்காப்பியம், செய்யுளியல்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பண்ணத்தி&oldid=3278530" இலிருந்து மீள்விக்கப்பட்டது