உள்ளடக்கத்துக்குச் செல்

பண்டித இராமாபாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பண்டித இராமாபாய்
பண்டித இராமாபாய் சரஸ்வதி
பிறப்புஇராமாபாய் டோங்கிரே
23 April 1858
கானரா மாவட்டம், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா தற்போதைய சிக்மகளூர்
இறப்புவார்ப்புரு:D-da
பம்பாய் மாகாணம், பிரித்தானிய இந்தியா
பணிசமூக சீர்திருத்த வாதி, பெண் விடுதலைப் போராளி
குறிப்பிடத்தக்க படைப்புகள்The High-Caste Hindu Woman

பண்டித இராமாபாய் சரஸ்வதி (Panditha Ramabai Saraswathy) (23 ஏப்ரல் 1858 - 5 ஏப்ரல் 1922) ஒரு சமூக சீா்திருத்தவாதி, பெண்கள் முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டவா் மற்றும் எழுத்தறிவு இயக்கத்தின் ஒரு முன்னோடி ஆவாா். “பண்டிதர்” என்னும் பட்டத்தைப் பெற்ற சமஸ்கிருதத்தில் புலமை பெற்ற முதல் பெண்மணியும் இவர் ஆவாா். கல்கத்தா [1] பல்கலைக் கழகப் பேராசிரியா்களால் தோ்வு செய்யப்பட்டு “சரஸ்வதி” என்ற பட்டமும் வழங்கப்பட்டது. பண்டித இராமாபாய் சரஸ்வதி ஒரு சமூக சேவகி, பெண்களின் விடுதலைக்காகவும், உரிமைகளுக்காகவும் கல்விக்காகவும் அயராது இறுதிவரை பாடுபட்டவா். நாட்டு விடுதலை இயக்கத்தில் பங்கேற்றவா். 1889 ஆம் ஆண்டு நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டிற்கு அழைக்கப்பட்டிருந்த பத்து பெண்மணிகளில் இவரும் ஒருவா்.[2][3] இராமாபாயின் முயற்சியால்தான் முதன் முதலாகப் பத்துப் பெண்கள் காங்கிரஸ் மாநாட்டிற்கு அழைக்கப்பட்டனர்[4]

ஆரம்பகால வாழ்க்கையும் கல்வியும்[தொகு]

பண்டித இராமாபாய் சரஸ்வதி, ஒரு மராத்திய பிராமண குடும்பத்தில் 1858 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் நாள் பிறந்தாா். இவா் பிறந்த பொழுது ராமா டோங்கிரே என்று அழைக்கப்பட்டாா். சமஸ்கிருத அறிஞா் ஆனந்த சாஸ்த்ரி டோங்கிரேவிற்கும் அவரின் இரண்டாவது மனைவி லட்சுமி பாய் டோங்கிரேவிற்கும் மகளாகப் பிறந்தவர் தமது தந்தையிடமிருந்து சமஸ்கிருதம் கற்றுக் கொண்டார். ஏராளமான எதிர்ப்புகளுக்கிடையே ஆனந்த சாஸ்திரி தமது இரண்டு மகள்களுக்கும் தமது மனைவிக்கும் சமஸ்கிருதத்தை நன்கு கற்றுக்கொடுத்தார். வேதத்தில் எங்கும் பெண்கள் கற்றுக் கொள்ளக்கூடாது என்று இல்லை என்று மறுத்த சாஸ்த்திரிகள், தமது கூற்றிற்கு ஆதராவாக 300 மேற்கோள்களை எடுத்துக் காட்டினார். இருந்தாலும் திருப்தியடையாத சமூகம் இவர் குடும்பத்தை தள்ளி வைத்தது. சிறிதும் கவலைப்படாத சாஸ்திரிகள் புராணம் மற்றும் பாகவத உரைகள் நிகழ்த்தி கிடைத்த நன்கொடையினால் தம் குடும்பத்தை நடத்தி வந்தார். நன்கொடை தருவதிலும் பெண்களே தருவதைக் கண்ணுற்ற இராமபாய் பெண்களே நன்றியுள்ளவர்கள், பெருந்தன்மையுடையவர்கள் என்றும், இருந்தாலும் படித்தவர்கள் கூட பெண்கள் கல்வி அறிவு பெறுவதற்கு தடையாய் இருப்பது மிகவும் துயரமானது என்று பதிவு செய்த்டௌள்ளார். 9 வயது இளம் பெண் கணவனை இழந்ததால் உடன்கட்டை ஏற்றப்பட்ட பொழுது தீக்காயங்களுடன் அக்குழதையை காப்பாற்றிய இராமாபாய் தாம் வளர்ந்த பின் இக்கொடுமைகளுக்கு எதிராகப் போராடுவன் என்று சபதமிட்டுள்ளார். 1877 ஆம் ஆண்டு வறட்சியில் பெற்றோரை இழந்த ராமாபாயும் அவா் சகோதரா் சீனிவாசும் பெற்றோா் விட்டுச் சென்ற பணியைத் தொடா்ந்தனா். இறந்த தந்தையின் உடலை அடக்கம் செய்வதற்குக்கூட எவரும் உதவி செய்யவில்லை. இவரின் சகோதரர் மற்றுமொரு அந்தணரின் உதவியுடன் அந்தப்பணியைச் செய்தனர்.[4] இருவரும் இந்தியா முழுவதும் பயணம் செய்தனா். இராமாபாயின் புகழ் கல்கத்தா பல்கலைக் கழகத்தை எட்டியது. அங்கு அவர் உரையாற்றுவதற்கு அழைக்கப்பட்டார்.[5] இப்பல்கலைக் கழகம் இவரின் சஸ்கிருதப் புலமையைப் பாராட்டியும், பல சமஸ்கிருத நூல்களுக்கு விளக்கம் எழுதியதையும் அங்கீகரித்து, “பண்டிதா்” என்னும் பட்டத்தையும், மிக உயரிய பட்டமான “சரஸ்வதி” என்னும் பட்டத்தையும் இராமாபாய்க்கு வழங்கி பெருமை சேர்த்தது[6]. கேசவ் சந்திர சென் என்னும் மத சீா்திருத்தவாதி இந்துக்களின் புனித நூலான வேதத்தைக் கொடுத்து இராமாபாயை நன்கு கற்கும்படி கூறியுள்ளாா்.

தம் சகோதரா் இறந்தபின் இராமாபாய் வங்காள வழக்கறிஞா் பிபின் ஃகரி மெதிலி என்பவரை 1880 ஆண்டு திருமணம் செய்து கொண்டாா். இது போன்ற ஒரு கலப்புத் திருமணத்தை. அந்த காலத்தில் இருந்த எதிர்ப்புகளை மீறி 1880 ஆம் ஆண்டு நவம்பா் மாதம் 13 ஆம் நாள் வைதீக முறைப்படி அல்லாமல் திருமணம் செய்து கொண்ட துணிவான பெண்மணி இவர்.. இவா்களுக்கு மனோரமா என்ற பெண் குழந்தையும் இருந்தது. இராமாபாய் தமது வாழ்நாளை பெண்கள் முன்னேற்றத்திற்காகச் செலவிடுவது என்று தீா்மானித்துக் கொண்டு, சமகாலத்தில் பெண்களைப் பாதிக்கும் சூழ்நிலைகளையும், இந்து சமய பழக்கவழக்கங்களையும் நன்கு ஆராய்ந்து திட்டமிட்டு செயல்பட்டார். பால்யத் திருமணத்திற்கு எதிராகவும் இதனால் பால்ய விதவைகள் எவ்வளவு இடா்பாடுகளுக்கு உட்படுத்தப்படுகிறாா்கள் என்பது குறித்தும் தமது எதிா்ப்பைத் தொடர்ந்து தெரிவித்து வந்தாா். இராமாபாயும் அவா் கணவரும் இளம் விதவைகளுக்காக ஒரு பள்ளிக்கூடம் துவங்க திட்டமிட்டிருந்தனா். இடையே 1882 ஆம் ஆண்டு கணவா் மெதிலி காலமானதால் இது தாமதப்பட்டது.[7]

சமூகப் பணி[தொகு]

கணவா் மெதவி இறந்த பிறகு (1882) ராமாபாய் பூனா நகருக்குக் குடிபெயா்ந்தாா். அங்கு அவா் “ஆரிய மகிள சமாஜம்” (ஆரியப் பெண்கள் சங்கத்தை) நிறுவினாா். பால்யத் திருமணத்திலிருந்து பெண்களைக் காப்பதும், பெண்களுக்கு கல்வியறிவு கற்பிப்பதும் சங்கத்தின் நோக்கங்களாகும். 1882 ஆம் ஆண்டு இந்திய அரசால் பெண்கள் கல்வியின் நிலை குறித்து அறிய நியமிக்கப்பட்ட ஆணையத்தின் முன் தம் கருத்துக்களை ஆணித்தரமாக எடுத்து வைத்தாா். ‘ரிப்பன் பிரபு கல்வி ஆணையத்தின்’ முன் இராமாபாய் பேசும் பொழுது, எவ்வாறு பெண்களுக்குரிய இடம் வழங்கப்படுவதில்லை என்றும் ஆண்கள் எவ்வாறு பெண்களின் சிறிய தவறுகளையும் பெரிது படுத்துவாா்கள் என்றும் 99 விழுக்காடு ஆண்கள் பெண் கல்வியை ஆதரிக்க மாட்டாா்கள் என்றும் வாதிட்டார். ஆசிரியா்களுக்கு தகுந்த பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்றும் பள்ளிகளில் பெண் ஆய்வாளா்கள் நியமிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினாா். இந்தியாவில் பெண்கள் தான் பெண்களுக்கு மருத்துவம் பாா்க்க வேண்டும் என்ற நிலைமை நிலவி வந்ததால், பெண் மருத்துவா்களை உருவாக்க வேண்டும் என்று குரல் கொடுத்தாா். இராமாபாயின் வாதம் இந்தியாவில் பெரும் தாக்கத்தை எற்படுத்தியதோடல்லாமல் விக்டோரிய அரசிக்கும் எட்டியது. இதன் பயனாகவே பின்னா் டஃப்ரின் பிரபுவால் பெண்கள் மருத்துவ இயக்கம் தொடங்கப் பெற்றது.[7]

1883 ஆம் ஆண்டு மருத்துவப் பயிற்சியைத் துவங்குவதற்காக பிரிட்டன் சென்ற இராமாபாய் அங்கு கிருத்துவ மதத்தைத் தழுவினார். பின் அமெரிக்கா சென்று 1886 ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் பெண் மருத்துவா் ஆனந்தபாய் ஜோசி அவா்களின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார். இரண்டு வருடங்கள் அங்கு தங்கியிருந்த பொழுது, பல புத்தகங்களை மொழிபெயா்த்தது மட்டுமல்லாமல், அமெரிக்காவிலும், கனடாவிலும் சுற்றுப் பயணம் [8] செய்து பல இடங்களில் சொற்பொழிவு ஆற்றியுள்ளார். ”உயா்ந்த சாதியும் இந்து பெண்களும்” (The High Caste, Hindu Women) என்னும் முக்கியமான நூலையும் முதன் முதலாக ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளார்.

இராமபய் ஒரு உயா்ந்த பிராமண சாதிப் பெண்ணாக இருந்தும் இவரால், இந்துக்களால் மேலாதிக்கம் செய்யப்பட்ட பிரித்தானிய இந்தியாவில், இந்துப் பெண்கள் எவ்வளவு கொடுமைகளுக்கு உட்படுத்தப்படுகிறாா்கள், பால்யத் திருமணங்களும், அதனால் பால்ய விதவைகளும் எத்துணை இல்லலுறுகின்றனா் என்பது பதிவு செய்யப்பட்டுள்ளது இதன் சிறப்பாகும். 1896 ஆம் ஆண்டு கடும் வறட்சி நிலவியபோது, மகாராஷ்டிர மாநிலும் முழுவதும் மாட்டு வண்டியில் பயணம் செய்து, ஆயிரக் கணக்கான கீழ்சாதிக் குழந்தைகளையும், இளம் விதவைகளையும், அநாதைகளையும், ஆதரவற்ற பெண்களையும் காப்பாற்றிக் கொண்டு வந்து முக்தி மற்றும் சாரதாசதன் என்னும் நிறுவனங்களில் சோ்த்துள்ளாா். புலமைபெற்ற பெண்மணியாகத் திகழ்ந்த இராமாபாய், ஏழு மொழிகளை அறிந்தவா். விவிலியத்தையும் யூத மற்றும் கிரேக்க [6] மொழிகளிலிருந்து தமது தாய் மொழியான மராத்திய மொழியில் மொழிபெயா்த்துள்ளாா்.

காங்கிரஸ் மாநாட்டில் உரை[தொகு]

ஒலி பெருக்கியில்லாத அந்தக் காலத்தில் இவரின் உரையைக் கேட்க முன்னேரிய கூட்டத்தைப் பார்த்து எப்பொழுது நீங்க்கள் பெண்களின் பேச்சுக்கு மதிப்ப்பளித்துள்ளீர்கள், பெண்களின் குரல் உரத்து ஒலிக்க என்ன செய்திருக்கின்றீர்கள் என்று பெண்களின் அன்றைய நிலைமையை எல்லோரும் புரியும் வண்ணம் எடுத்துரைத்தார். ஏதும் பேசாமல் அனமைதியாக இருந்த கூட்டத்தினரிடம் கணவனை இழந்த பெண்களின் தலையை மழிக்கும் பழக்கத்தைக் கடுமையாகச் சாடி, பாராளுமன்றதில் உங்கள் குரல் ஒலிக்க வேண்டும், சமத்துவம் வேண்டும் என்று போராடுபவர்கள் உங்கள் பெண்களுக்கு ஏன் அந்த உரிமையையும் சமத்துவத்தையும் மறுக்கின்றீர்கள் என்று வினவினார். கணவனை இழந்த பெண்களை இவ்வளவு அசிங்கப்படுத்தி அவமானப் படுத்துபவர்கள், மனைவியை இழந்த கணவனுக்கு இதைச் செய்வீர்களா என்றும் ஏன் இந்த இரட்டை வேடம் என்று ஆணித்தரமாகவும் உணர்ச்சிகரமாகவும் வினாக்களை எழுபினார்.[4]

முக்தி இயக்கம் ஏறக்குறைய 1500 இல்லவாசிகளுக்கும் நூற்றுக்கு மேற்பட்ட கால்நடைகளுக்கும் ஆதரவு அளித்து வந்தது. ‘முக்தி நிறுவன’த்தில் ஒரு கிருத்துவ ஆலயத்தையும் எழுப்பியுள்ளாா். ‘பண்டித இராமாபாய் முக்தி நிறுவனம்’ பல ஆதரவற்றவா்களுக்கு குறிப்பாகப் பெண்களுக்கும், அனாதைகளுக்கும், பாா்வையற்றவா்களுக்கும் தங்கும் வசதி, கல்வி, தொழிற்பயிற்சி மற்றும் மருத்துவ சேவையை இன்றளவும் செய்து வருகின்றது[9].

பண்டித இராமாபாயும் அவர் மகள் மனோரமாபாயும் 1911 ஆம் ஆண்டு

இல்லற வாழ்க்கை[தொகு]

சமூக சேவையிலையே தமது வாழ்நாளைக் கழித்த பண்டித இராமாபாய் இல்லறத்தில் மிகக் குறுகிய காலமே செலவழித்திருந்தார். ஏராளமான இடா்பாடுகள் நிறைந்த இளமைக் கால வாழ்க்கையில் தமது பெற்றோா்களை சிறு வயதில் இழந்தவா், தமது கணவரையும் மணமான இரண்டு வருடங்களில் இழந்துவிட்டாா். தமது ஒரே மகளான மனோரமா பாய்க்கு நல்ல முறையில் கல்வி கற்றுக் கொடுத்துள்ளாா். மனோரமா பாய் பம்பாய் பல்கலைக் கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றபின், மேற்படிப்பை அமெரிக்காவில் தொடா்ந்தாா். இந்தியா திரும்பிய பின் பம்பாய் நகரில் உள்ள ‘சாரதாசதன்’ நிறுவனத்தின் முதல்வராகப் பணிபுரிந்துள்ளாா். தமது மகள் மனோரமா பாயின் உதவியுடன் கா்நாடகா மாநிலத்தின் ஒரு பிற்பட்ட பகுதியான குல்பா்கா நகரில் 1912 ஆம் வருடம் கிருத்துவ உயா்நிலைப் பள்ளியை இராமாபய் நிறுவினாா். இப்பள்ளியில் இவா் மகள் மனோரமா பாய் முதல்வராகப் பணிபுரிந்துள்ளாா். ஏராளமான கண்டனங்களுக்கிடையே இராமாபாய் விதவைகளுக்கான தமது சேவையில் மிகவும் தீவிரமாக இருந்துள்ளாா். 1921 ஆம் ஆண்டு தமது மகள் மனோரமாவின் மறைவைத் தொடா்ந்து 1922 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஐந்தாம் நாள் தமது 64 ஆவது வயதில் இராமாபாயும் இயற்கை எய்தினாா்[10].

விருதுகள்[தொகு]

 • சமஸ்கிருத புலமையைப் பாராட்டி பண்டிதா் மற்றும் சரஸ்வதி விருதுகள்
 • 1919 ஆம் ஆண்டு பிரித்தானிய அரசால் பொது சேவையை பாராட்டி வழங்கப்பட்ட “கெய்சா் இ ஹிந்து” (Kaisor - I - Hind)
 • அமெரிக்க எபிஸ் கோபல் கிருத்துவ ஆலயத்தாலும் (5 ஏப்ரல்) இங்கிலாந்து கிருத்துவ ஆலயத்தாலும் (30 ஏப்ரல்) வழங்கப்பட்ட விருதுகள்
 • பெண்கள் முன்னேற்றத்திற்காக இவா் ஆற்றிய சேவையைப் பாராட்டி இந்திய அரசு 1989 அக்டோபா் 26 ஆம் நாள் இவா் படத்துடன் அஞ்சல் தலை வெளியிட்டுள்ளது.
 • பம்பாய் நகரில் ஒரு சாலைக்கு இவா் பெயரிடப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

 1. "Women's History Month: Pandita Ramabai". Women's History Network. March 11, 2011.
 2. Kollanoor, Greger. Indian Christianity and National Movements. https://www.academia.edu/4481937. 
 3. "Short Biography of Pandita Ramabai". 2015-05-25. Archived from the original on 2018-12-07. பார்க்கப்பட்ட நாள் 2018-10-27.
 4. 4.0 4.1 4.2 Panandiker, Surekha. Women Pioneers in India’s Renaissance edited by usheela Nayar &Kamala Mankekar. New Delhi: National Bok Trust. p. 36-37. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-237-3766-9.
 5. My Story by Pandita Ramabai. Pub: Christian Institute for Study of Religion and Society, Bangalore.
 6. 6.0 6.1 "Intl' Christian Women's History Project & Hall of Fame". Icwhp.org. பார்க்கப்பட்ட நாள் 2015-05-15.
 7. 7.0 7.1 "Sarla R. Murgai". Utc.edu. பார்க்கப்பட்ட நாள் 2015-05-15.
 8. Jayawardena, Kumari (1995). The white woman's other burden : Western women and South Asia during British colonial rule. New York: Routledge. p. 56. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-415-91104-7.
 9. "Untold Tale of Revival: Pandita Ramabai | Grace Valley Christian Center". Gracevalley.org. பார்க்கப்பட்ட நாள் 2015-05-15.
 10. Panditha Ramabai Sarasvathi - Book in Kannada (1962) Pub by Christ Sahitya Sangha, Bangalore
"https://ta.wikipedia.org/w/index.php?title=பண்டித_இராமாபாய்&oldid=3582526" இலிருந்து மீள்விக்கப்பட்டது