உள்ளடக்கத்துக்குச் செல்

பண்டிட் தாரநாத் ராம் ராவ் ஹட்டியங்கடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பண்டிட் தாரநாத் ராம் ராவ் ஹட்டியங்கடி(Pandit Taranath Ram Rao Hattiangadi) (1915 – 1991) இந்திய பாரம்பரிய தாள வாத்தியக் கலைஞராகவும் ஆசிரியராகவும் திகழ்ந்தவர். இவர் அரிய தாள வகைகள் மற்றும் பழமையான இசை அமைப்புகள் குறித்த ஆழ்ந்த அறிவைக் கொண்டிருந்தார். கைம்முரசு இணை இசையில் பருக்காபாத், தில்லி மற்றும் அஜ்ராடா ஆகிய 'கரானா' (இசைப் பள்ளிகள்) மரபுகளையும், பக்கவாத்தியத்தில் நானா பான்சே மரபையும் பிரதிநிதித்துவப்படுத்தினார். இந்திய குரு-சீடர் பாரம்பரியத்தில் கூட அரிதாகக் கருதப்படும் வகையில், இவர் 47 ஆண்டுகள் முறைப்படி இசை பயின்றார்; குறிப்பாக சம்சுதீன் கானிடம் நீண்ட காலம் பயிற்சி பெற்றார். இவரிடம் ஏராளமான சீடர்களும் சிறப்புப் பயிற்சி பெற்ற மாணவர்களும் இருந்தனர்.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் பின்னணி

[தொகு]

தாரநாத் பெற்ற மிக முக்கியமான இசைப் பயிற்சி, சம்சுதீன் கானிடமிருந்து அமைந்தது. சம்சுதீன் கான் என்பவர் அகமது ஜான் திரக்வாவின் 'குருபாய்' (ஒரே குருவிடம் பயின்றவர்) . கிரானா கரானா பாடகர் அப்துல் கரீம் கானின் முக்கிய இசைத் துணையாகத் திகழ்ந்தவர் ஆவார். மேலும், சுப்பாராவ் அங்கோலேகர், விஷ்ணு கோகர், கோவாவைச் சேர்ந்த 'லய பிரம்மா பாஸ்கர்' கப்ருமாமா, கான்பூரைச் சேர்ந்த ஃபயாஸ் கான், சங்கராவ் அல்குட்கர், பாபுராவ் கோக்லே, கல்லு கான் போன்ற புகழ்பெற்ற தாள வாத்தியக் கலைஞர்களிடமிருந்தும் இவர் இசை பயின்றார்.

இசைப் பயணமும் கலைப்பணியும்

[தொகு]

தாரநாத் 1932-ல் தனது சொந்த ஊரான மங்களூரிலிருந்து மும்பைக்கு குடிபெயர்ந்தார். பல தசாப்தங்களாக அந்நகரின் இசை உலகில் முக்கியப் பங்காற்றினார். முதலில் கலைஞராகவும் இசை நிகழ்ச்சி அமைப்பாளராகவும் செயல்பட்ட இவர், பிற்காலத்தில் உடல்நலம் குன்றிய நிலையில், இசை வழிகாட்டியாகவும் ஒரு முக்கிய அதிகார மையமாகவும் திகழ்ந்தார். அகில இந்திய வானொலியில், வட மற்றும் தென் இந்திய பாரம்பரிய இசை குறித்த தனி இசை நிகழ்ச்சிகள், விரிவுரை-விளக்கங்களை வழங்கினார். குறிப்பாக மேம்பட்ட, வரலாற்றுச் சிறப்புமிக்க அல்லது வழக்கத்திற்கு மாறான தாள அமைப்புகள் மற்றும் இசை அமைப்புகள் குறித்து அதிகம் விளக்கினார். நிகில் கோஷின் 'இந்தியாவில் இசை மற்றும் நடனம் குறித்த கலைக்களஞ்சியம்' போன்ற ஆய்வுக் கட்டுரைகள் சார்ந்த திட்டங்களில் ஈடுபட்டார். மேலும் மைசூர், கோலாப்பூர், பரோடா, சாவந்த்வாடி ஆகிய சமஸ்தானங்களின் மகாராஜாக்களால் அரச மரபுப்படி கௌரவிக்கப்பட்டார்.

தாரநாத் ராவ், அலாவுதீன் கான் (இவரது மும்பையில் ஆரம்பகால இசை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வதில் இவர் முக்கிய பங்காற்றினார்), ரவி சங்கர் (இவருக்கு ஆரம்பகால இசைத் துணையாக இருந்தார்) , புரட்சிகரமான புல்லாங்குழல் கலைஞர் பன்னாலால் கோசு போன்ற செல்வாக்கு மிக்க கலைஞர்களுடன் நெருக்கமாக இணைந்து பணியாற்றினார். அமீர் உசேன் கான், பந்தரிநாத் நாகேஷ்வர், நிகில் கோஷ், நிஜாமுதீன் கான் உள்ளிட்ட மும்பை இசை உலகின் முக்கியக் கலைஞர்கள் இவருடைய அறிவையும் நட்பையும் நாடினர்; மேலும் இவர் அகமது ஜான் திரக்வாவின் நெருங்கிய நண்பராகவும் நம்பிக்கைக்குரியவராகவும் திகழ்ந்தார். ராவ், ஏற்கனவே புகழ்பெற்றிருந்த பல கலைஞர்களுக்கும் சிறப்புப் பயிற்சி அளித்தார். அவர்களில் பலர், தாள வித்தகர் ரவிசங்கருக்குத் துணையாக வாசிக்கத் தயாராகிக் கொண்டிருந்தனர்; அவர்களில்சதுர் லாலும் ஒருவர்.

ஒரு தனி இசைக்கலைஞராக, ராவ் தனது இசை நிகழ்ச்சிகளின் கட்டமைப்பு , உள்ளடக்கத்திற்காக அறியப்பட்டார். இவை பொதுவாக, அவரது சொந்தப் படைப்புகளுடன் பிரத்யேகமான, காப்பகப் படைப்புகளின் தொடர்களை ஒன்றாக இணைத்துப் பின்னப்பட்டிருந்தன. தபலா மற்றும் பக்வாஜ் ஆகியவற்றில் உள்ள பல்வேறு தாக்கங்களைக் கொண்டிருந்ததால், இத்தகைய படைப்புகளை வாசிப்பது கடினமாக இருந்தது. தனது பிற்கால வாழ்க்கையில், தரநாத் தனது பாணியையும் இசைத் தொகுப்பையும் தனது மாணவர்கள் மூலம் வெளிப்படுத்தினார். இவர் ஏற்பாடு செய்த ஊடாடும் பொது இசை நிகழ்ச்சிகளின் போது, கலைஞர்களை ஆர்மோனியத்தில் வழிநடத்தி, தன்னிச்சையான அறிவுறுத்தல்கள் மற்றும் இசைப் படைப்புகளை வாசித்துக் காட்டி அவர்களைத் தூண்டுவார். இளம் வயதினராக இருந்தபோதே, இந்தச் சீடர்களில் பலர் அகில இந்திய வானொலிப் போட்டித் தலைவர் விருது போன்ற பாராட்டுகளைப் பெற்றனர், மேலும் பலர் பிற்காலத்தில் மாஸ்டர் மற்றும் நிபுணர் நிலை கச்சேரி கலைஞர்களாக உயர்ந்தனர்.

கற்பித்தல் பணி

[தொகு]

தாரநாத் ராவ் இந்தியத் தாள வாத்தியக் கலையில் ஒரு சிறந்த நிபுணராகத் திகழ்ந்தவர். எனினும், பாரம்பரிய இசையில் நவீனப் பார்வை, தாள வாத்தியம் வாசிப்பதில் புதுமையான அணுகுமுறை , முற்போக்கான, முறையான கற்பித்தல் பாணி ஆகியவற்றிற்காகவும் அவர் நினைவுகூரப்படுகிறார். கொல்கத்தாவைச் சேர்ந்த ஞான பிரகாஷ் கோசுடன் இணைந்து, தனி கைம்முரசு இணை வாசிப்பில் ஜுகல்பந்தி போன்ற பல சமகால அம்சங்களை அறிமுகப்படுத்துவதில் அவர் முன்னோடியாகத் திகழ்ந்தார். இந்த 'ஜுகல்பந்தி' முறையை 1950 மற்றும் 60-களில் பிரபல கைம்முரசு இணைக் கலைஞர்களான ரவி மற்றும் சஷி பெல்லாரே (ராவின் சீடர்கள்) ஆகியோரும், பின்னர் அல்லா ரக்கா , அவரது மகன் சாகீர் உசைன் ஆகியோரும் பெருமளவில் பிரபலப்படுத்தினர்.

எண்ணிக்கை அடிப்படையில் பார்த்தால், பாரம்பரிய 'கரானா' (இசைப் பள்ளிகள்) இசைக்கலைஞர்களின் படைப்புகள் மற்றும் நுட்பங்களை சுமார் 2,000 மாணவர்களுக்கு ராவ் அறிமுகப்படுத்தினார். மும்பையில் உள்ள தனது இல்லத்தில் தனிப்பட்ட வகுப்புகளை நடத்தியதுடன், ரவி சங்கரின் 'கினாரா பள்ளி', பாரதிய வித்யா பவன், பட்கண்டே பல்கலைக்கழகம் (மும்பை மற்றும் இலக்னோ), மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகம் மற்றும் கோவாவில் உள்ள கலா அகாடமி போன்ற நிறுவனங்களிலும் இவர் கற்பித்தல், விரிவுரை மற்றும் தேர்வு நடத்துதல் போன்ற பணிகளை மேற்கொண்டார்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "Archive News - The Hindu". Hinduonnet.com. Retrieved 2017-03-21. {{cite web}}: |archive-date= requires |archive-url= (help); Text "20130125081105/http://www.hinduonnet.com/thehindu/mp/2007/02/24/stories/2007022400480100.htm" ignored (help)CS1 maint: url-status (link)