உள்ளடக்கத்துக்குச் செல்

பட்டை ஒன்று பாதை ஒன்று

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பட்டுச் சாலை பொருளாதாரப் பட்டையும், 21 ஆம் நூற்றாண்டு கடல்வழிப் பட்டுப் பாதையும் (சீனம்: 丝绸之路经济带和21世纪海上丝绸之路) என்பது சீன மக்கள் குடியரசு முன்வைத்துள்ள ஒரு மேம்பாட்டுச் செயல்நெறியும், சட்டகமும் ஆகும். இது பட்டையும் பாதையும் அல்லது பட்டை ஒன்று, பாதை ஒன்று (சீனம்: 一带一路பின்யின்: Yídài yílù) அல்லது பட்டை மற்றும் பாதை முன்னெடுப்பு என்றும் வழங்கப்படுகிறது. முதன்மையாக யூரேசிய நாடுகளுக்கிடையே இணைப்புகளையும், ஒத்துழைப்பையும் வலுப்படுத்துவதைக் குவிமையமாகக் கொண்ட இந்த உத்தியில் நிலவழி பட்டுச் சாலைப் பொருளாதாரப் பட்டை, கடல்வழி பட்டுப் பெரும்பாதை ஆகிய இரண்டு முக்கியப் பகுதிகள் உள்ளன. சீனா உலக நடப்புகளில் தமது பங்களிப்பைக் கூடுதலாக்க முயற்சிப்பதன் ஒரு பகுதியாகவும், தாம் மிகை உற்பத்தி செய்யும் எஃகு போன்ற பொருட்களின் ஏற்றுமதி கருதியும் இந்த செயல்திட்டத்தை முன்னெடுப்பதாகக் கருதப்படுகிறது.[1]

சீனக் குடியரசின் தலைவர் சீ சின்பிங் செப்டம்பர் 2013 இல் பட்டுச் சாலை பொருளாதாரப் பட்டையையும், அக்டோபர் 2013 இல் பட்டு கடற்பெருவழியையும் அறிவித்தார்.

உள்கட்டமைப்பு வலையமைவு[தொகு]

இந்த முன்னெடுப்பின் முதன்மையான உள்ளடக்கப் பரப்பாக ஆசியாவும், ஐரோப்பாவும் இருந்தபோதும், கிழக்கு ஆப்பிரிக்காவும், ஓசியானியாவும் கூட சேர்க்கப்பட்டுள்ளன.

செப்டெம்பர், அக்டோபர் 2013 இல் ஜி ஜிங்பின் மத்திய, தென்கிழக்கு ஆசியப் பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்தபோது இப்பாதையையும், பட்டையையும் நாடுகள் சேர்ந்து கட்டமைக்கவேண்டியதன் தேவையை முன்வைத்தார்.

பட்டுச் சாலை பொருளாதாரப் பட்டை[தொகு]

மத்திய ஆசியா, மேற்காசியா, மத்தியகிழக்கு ஐரோப்பாவில் அமைந்த பழைய பட்டுச் சாலையில் உள்ள நாடுகளே இப்பட்டையில் இடம்பெற்றுள்ளன. உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், பண்பாட்டுப் பரிமாற்றங்களை அதிகரித்தல், வணிகத்தை விரிவாக்குதல் ஆகியவற்றின் வழியே இப்பகுதியை ஒரு ஒருங்கிணைந்த பொருளாதார மண்டலமாக மாற்றுவதை இத்திட்டம் முன்வைக்கிறது. தொன்மையான பட்டுச் சாலையில் அமைந்த இப்பகுதியைத் தவிர தெற்கு, தென்கிழக்காசியாவும் இப்பட்டையின் விரிவாக்கமாக உள்ளடக்கப்பட்டுள்ளன என்று கூறப்படுகிறது. இப்பட்டை மற்றும் பாதையில் அமைந்துள்ள நாடுகள் பலவும் சீனா தலைமையிலான ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் உறுப்பு நாடுகளாகும்.

கடல்வழி பட்டுச் சாலை[தொகு]

21 ஆம் நூற்றாண்டு கடல்வழி பட்டுப் பெரும்பாதை (சீனம்: 21世纪海上丝绸之路)என்பது நிலவழிப் பட்டுச் சாலை திட்டத்தோடு தொடர்புடைய மற்றொரு முன்னெடுப்பாகும். தொடர்ச்சியுற அமைந்த நீர்நிலைகளான தென்சீனக்கடல், தென் பசிபிக் பெருங்கடல், அகன்ற இந்தியப் பெருங்கடல் பகுதி வழியே தென்கிழக்காசியா, ஓசியானியா, வட ஆப்பிரிக்காவில் முதலீடு செய்வதும், கூட்டுச் செயல்பாட்டை ஊக்குவிப்பதும் இத்திட்டத்தின் நோக்கங்களாகும்.[2][3][4]

கடல்வழி பட்டுச் சாலையை இந்தோனேசிய நாடாளுமன்றத்தில் அக்டோபர் 2013 இல் ஆற்றிய உரையின்போது சீ சின்பிங் முதலில் முன்வைத்தார்.[5]

கிழக்கு ஆப்பிரிக்கா[தொகு]

நைரோபிக்கும் மொம்பாசாவுக்கும் இடையே நவீனமான, செந்தர அகலமுடைய ஒரு தொடர்வண்டிப் பாதையைக் கட்டிமுடிப்பது, உள்நாட்டுத் துறைமுகங்களை மேம்படுத்துவது ஆகிய பணிகள் முடியும்பொழுது கிழக்கு ஆப்பிரிக்கா, குறிப்பாக கென்யா, கடல்வழி பட்டுச் சாலையின் ஒரு பகுதியாகிவிடும்.[6]

தொடர்புடைய பிற வலையமைவுகள்[தொகு]

சீன பாகிஸ்தான் பொருளாதாரப் பாட்டையும், வங்காளதேசம் - சீனா - இந்தியா - மியான்மர் பொருளாதாரப் பாட்டையும் அதிகாரப்பூர்வமாக பாதையும் பட்டையும் திட்டத்தோடு "நெருக்கமான தொடர்புடையவையாக" வகைப்படுத்தப்பட்டுள்ளன.[7] இருந்தாலும் ஊடக தகவல்கள்படி இப்பாட்டைகள் நெருக்கமான தொடர்புடையவை என்பதைவிட "பாதையொன்று, பட்டையொன்று" திட்டத்தில் உள்ளடங்கிய பகுதிகளாகவே கருதப்படுகின்றன.

நிதி நிறுவனங்கள்[தொகு]

ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி[தொகு]

சீனாவும், இன்னும் 56 நாடுகளும் இணைந்து இச்செயல்நெறியோடு தொடர்புடைய திட்டங்களுக்கு கடன்வழங்குவதற்காகவே ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி என்ற வளர்ச்சி வங்கியினை 2014 இல் ஏற்படுத்தியுள்ளன.

29 ஜூன் 2015 அன்று இவ்வங்கியின் சட்டமுறைக் கட்டமைப்பு பெய்ஜிங்கில் கையெழுத்தானது. இந்த பலதரப்பு வங்கியின் ஏற்பளிக்கப்பட்ட முதலீட்டுத் தொகையான $100 பில்லியனில் 75% ஆசிய நாடுகளிலிருந்தே வரும். 26% வாக்களிப்பு உரிமையுடன் சீனாவே இவ்வங்கியின் தனிப்பெரும் பங்குதாரராக உள்ளது. இவ்வாண்டின் இறுதியில் இவ்வங்கி செயல்பாட்டினைத் தொடங்கும்.[8]

பட்டுச் சாலை நிதி[தொகு]

இத்திட்டத்திற்காக உருவாக்கப்பட்ட வங்கிகள் தவிர்த்து $40 பில்லியன் வளர்ச்சி நிதி ஒன்றினையும் உருவாக்குகிற திட்டத்தை சீ சின்பிங் நவம்பர் 2014 இல் அறிவித்தார். இந்நிதியானது செயல்திட்டங்களுக்கு கடன்வழங்குவது என்றில்லாமல் தொழில்வணிகத்தில் முதலீடு செய்வதற்குப் பயன்படுத்தப்படும். சீனா பாகிஸ்தான் பொருளாதாரப் பாட்டை முதலீடுகளில் உள்ளடங்காத, பாகிஸ்தானிலுள்ள கரோத் நீர்மின் நிலையத் திட்டம் பட்டுச்சாலை நிதியின் முதலாவது முதலீட்டுத் திட்டமாகும்.[9]

மேற்கோள்கள்[தொகு]

  1. "One Belt, One Road". Archived from the original on 2016-09-12. பார்க்கப்பட்ட நாள் 2015-11-08.
  2. "Sri Lanka Supports China's Initiative of a 21st Century Maritime Silk Route". Archived from the original on 2015-05-11. பார்க்கப்பட்ட நாள் 2015-11-08.
  3. Shannon Tiezzi, The Diplomat. "China Pushes 'Maritime Silk Road' in South, Southeast Asia – The Diplomat". The Diplomat.
  4. "Reflections on Maritime Partnership: Building the 21st Century Maritime Silk Road". Archived from the original on 2015-04-03. பார்க்கப்பட்ட நாள் 2015-11-08.
  5. "Xi in call for building of new 'maritime silk road'[1]-chinadaily.com.cn".
  6. Jeremy Page (8 November 2014). "China to Contribute $40 Billion to Silk Road Fund". WSJ.
  7. "Vision and Actions on Jointly Building Belt and Road". Xinhua. March 29, 2015 இம் மூலத்தில் இருந்து மார்ச் 4, 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304085441/http://english.cri.cn/12394/2015/03/29/2941s872030_1.htm. 
  8. "One Belt, and One Road". Xin Hua Finance. Archived from the original on 2016-03-29. பார்க்கப்பட்ட நாள் 2015-11-08.
  9. "Commentary: Silk Road Fund's 1st investment makes China's words into practice". english.gov.cn. பார்க்கப்பட்ட நாள் 2015-07-15.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பட்டை_ஒன்று_பாதை_ஒன்று&oldid=3798160" இலிருந்து மீள்விக்கப்பட்டது