பட்டீச்சரம் துர்க்கையம்மன் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
துர்க்கையம்மன் சன்னதி அமைந்துள்ள பட்டீஸ்வரர் கோயில் வடக்கு ராஜகோபுரம்
பட்டீஸ்வரர் கோயில் வளாகத்தில் துர்க்கையம்மன் கோயில்

பட்டீச்சரம் துர்க்கையம்மன் கோயில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள பட்டீச்சரம் பட்டீஸ்வரர் கோயில் வளாகத்தில் ஒரு சன்னதியாக அமைந்துள்ளது.

அமைவிடம்[தொகு]

பட்டீஸ்வரர் கோயிலின் வடக்கு வாயிலின் வழியே ராஜகோபுரத்தைக் கடந்து உள்ளே வந்தால் துர்க்கையம்மன் சன்னதியைக் காணமுடியும்.

துர்க்கையம்மன்[தொகு]

மற்ற இடங்களைப் போலல்லாமல் துர்க்கையம்மன் ஸ்வரூபணியாக காட்சி தருகிறாள். தன்னைச் சரண் அடையும் பக்தர்களுக்கு உடனே அருள்புரிய காலைஎடுத்து வைத்துப் புறப்படுகிற தோற்றத்தில் துர்க்கை நிற்பது இன்னொரு சிறப்பு. எட்டு கரங்களில் ஒரு கரத்தில் கிளியை வைத்துள்ளார். மகிஷாசுரன் தலை மேல் பாதங்களை வைத்து, சிம்ம வாகனத்தில் எட்டுக் கரங்களுடன் மகர குண்டலங்களுடன் திரிபங்க ரூபியாய் மூன்று நேத்திரங்களுடன் கம்பீரமாக காட்சி தருகிறாள்.[1]

ஆறடி உயரத்தில், அழகாக புடவை கட்டி, எலுமிச்சை மற்றும் ரோஜா மாலை அணிந்துள்ளார். எருமை முகமுடைய மகிஷாசுரனைக் காலில் மிதித்து, நிமிர்ந்து நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார். பிற ஆறு கரங்களில் சங்கு, சக்கரம், வில், அம்பு, வாள், கேடயம் ஆகிய ஆயுதங்களைக் கொண்டு சாந்தமாக போர் முடித்த கோலத்தில் காணக் கிடைக்கிறாள். இடப்பக்கம் நோக்கியுள்ள வாகன சிம்மத்தின் ரூபிணியாக விளங்குகிறாள். துர்க்கை இங்கு சாந்த சொரூபிணியாக இருப்பதை அவளது புன்னகை தவழும் முகமும், வலப்புறம் திரும்பியுள்ள சிம்ம வாகன முகமும் நிரூபிக்கிறது. பக்தர்களை வரவேற்கும் கோலத்தில் வெற்றி வாகை சூடிய நிலையில் இருக்கிறாள். [2]

துர்க்கையம்மனின் எட்டு கரங்களில் காணப்படும் முத்திரைகள் கீழ்க்கண்ட பொருளைத் தருகின்றன.[1]

வரிசை முத்திரை பொருள்
1 அபயம் காக்கும்
2 சங்கு வழிகாட்டும்
3 சக்ராயுதம் எதிரிகளை அழிக்கும்
4 தனுர், பானம் வில் அம்பு போல சரியான திசையில் முயற்சி செய்யும்
5 கடகம், கேடம் வாள் கேடயமாக விளங்கி வீரத்தைக் காட்டும்
6 சுகர் (கிளி இருக்கும் கரம்) நடப்பதைக் கூறும்

வரலாற்றுத் தொடர்பு[தொகு]

பாண்டிய மன்னர்களுக்கு மீனாட்சி எப்படி குலதெய்வமாக விளங்கினாளோ அவ்வாறே சோழ மன்னர் பரம்பரை முழுவதற்கும் பட்டீஸ்வர துர்க்கை குலதெய்வமாக விளங்கிவந்தாள். பாண்டியனை மணந்த சோழ அரசியான மங்கையர்க்கரசி தேவியாரும், ராஜராஜ சோழனுக்கு மதியூகி ஆலோசகராக விளங்கிய குந்தவைப் பிராட்டியாரும் பட்டீஸ்வர துர்க்கை மீது அபார பக்தி செலுத்தியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. [1]

தங்க ரதம்[தொகு]

இக்கோயிலுக்கு இரண்டு கோடி ரூபாயில் புதிய தங்கரதம் வடிவமைக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது. தங்கரதம் வடிவமைக்க பக்தர்களிடம் ஏழு லட்சம் மதிப்பீட்டில் மர ரதம், அதன்மீது 1.75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பத்து கிலோ எடையில் தங்க ரேக்கும் பதிக்கப்பட உள்ள நிலையில், 12 அடி உயரம், எட்டு அடி அகலத்தில், நான்கு சக்கரம் பொருத்தும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. [3]

குடமுழுக்கு[தொகு]

பட்டீச்சரம் பட்டீஸ்வரர் கோயில் மற்றும் துர்க்கையம்மன் கோயிலின் குடமுழுக்கு மன்மத வருடம் தை மாதம் 15ஆம் நாள் 29 ஜனவரி 2016 [4] அன்று நடைபெற்றது.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 வி.ஆர்.கோபாலன், பட்டீஸ்வரம் ஸ்ரீதுர்க்காம்பிகை, பட்டீஸ்வரம் ஸ்ரீஞானாம்பிகை சமேத ஸ்ரீதேனுபுரீஸ்வரசுவாமி மற்றும் ஸ்ரீதுர்க்காம்பிகை திருக்கோயில் கும்பாபிஷேக மலர், 1999
  2. துன்பம் நீக்குவாள் துர்க்கை, தி இந்து, 18.9.2014
  3. பட்டீஸ்வரம் துர்க்கையம்மன் கோவிலுக்கு ரூ.2 கோடியில் தங்கரதம் பணி தீவிரம், தினமலர், 9.10.2010
  4. "பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோயில் கும்பாபிேஷகம் 29ம் தேதி நடக்கிறது, தினகரன், 20.1.2016". Archived from the original on 2020-11-27. பார்க்கப்பட்ட நாள் 2016-01-24.
  5. குடந்தையில் 10 கோயில்களில் மகா கும்பாபிஷேகம், திரளான மக்கள் பங்கேற்பு, தினமணி, 30 ஜனவரி 2016

வெளி இணைப்புகள்[தொகு]

29 ஜனவரி 2016 குடமுழுக்கு நாளில் துர்க்கையம்மன் சன்னதி[தொகு]