பட்டா (நில உரிமை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பட்டா என்பது ஒரு குறிப்பிட்ட நிலத்தின் உரிமை தொடர்பாக மாநில வருவாய்த் துறையால் நில உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் ஆவணம் ஆகும். பட்டா விவரங்கள் குறித்து கிராமக் கணக்குப் பதிவேடுகளில் பதியப்பட்டிருக்கும். பட்டா ஆவணத்தில் மாவட்டம், வருவாய் வட்டம், கிராமம், நிலத்தின் சர்வே எண் மற்றும் பரப்பளவு, நிலத்தின் தன்மை, வரித்தொகை, உரிமையாளர் பெயர் மற்றும் அவரின் தந்தை/கணவர் பெயர் இருக்கும். கூடுதலாக நிலத்தை பற்றிய ஏதேனும் குறிப்பு தேவைப்படின் இருக்கும். வருவாய்த் துறையினர் பொதுமக்களுக்கு வழங்கும் பட்டா ஆவணங்கள் பின்வருமாறு:

யு டி ஆர் பட்டா ( UDR – Updating Data Registry )[தொகு]

நில ஆவணங்கள் கணினி மயமாவதற்கு முன்னர், 1979 முதல் 1989ம் ஆண்டு வரை தமிழக நில அளவைத்துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் இணைந்து, தமிழகம் முழுவதும் (நத்தம் நிலங்களைத் தவிர) அனைத்து நிலங்களையும் கள விசாரணை மூலம் மறுபடியும் அளந்து, (Updating Data Registry)[1] அப்பதிவுகளை கணினியில் சேர்த்தனர்.

கையேடு பட்டா (Manuel Patta)[தொகு]

தற்போது நடைபெறும் நில உடைமைச் சொத்து பரிவர்த்தனைகளுக்கான பட்டா பெயர் மாற்றங்கள் புல எண், உட்பிரிவுகள் பெரும்பாலும் கையேடு (Manual) பட்டா மூலம் நடைபெறுகிறது. பெயரை சேர்த்தல், பெயரை மாற்றுதல், பட்டாவில் புல எண், உட் பிரிவு செய்தல் போன்ற வேலைகள் வருவாய் வட்ட அலுவலகத்தின் நில அளவைப் பிரிவில் மூலம் நடைபெறுகிறது.

தோராயப் பட்டா[தொகு]

பொதுவாக நத்தம் நிலத்திற்கு மட்டும் தோராய பட்டா மற்றும் தூய பட்டாக்கள் வருவாய்த் துறையால் வழங்கப்பட்டது. தோராய பட்டா என்பது நத்தம் நிலத்தில் உள்ள ஏரி, குளம், வீடு, தெரு என பிரித்து வரைபடம் உருவாக்கி, புதிய சர்வே எண்களை கொடுத்து நத்தம் நில வரித் திட்ட பட்டாக்களை அதில் குடியிருந்தவர்களுக்கு வழங்கப்பட்டது. இது ஒரு தற்காலிகமானது மற்றும் தோராயப் பட்டா என்றும் அழைக்கப்படுகிறது.

தூய பட்டா[தொகு]

தோராயப் பட்டாவில் உள்ள தவறுகளை முழுமையாகக் களைந்து வழங்கப்படும் பட்டா தூய பட்டா ஆகும். தூய பட்டா ஆவணத்தின் பின்பக்கத்தில் நிலத்தின் வரைபடம் அளவுகளுடன் இருக்கும். நத்தம் நிலத்தை பொதுமக்களுக்கு பட்டா வழங்கும் காரணம், வரி விதிக்கப்படாமல் பொதுமக்கள் அனுபவிக்கும் நிலத்தை வரிவிதிப்புக்குள் கொண்டு வரவும், சாலை, குளம் ,பாதை இடங்களை ஆவணப்படுத்தி ஆக்கிரமிப்புகளுக்கு இடம் கொடா வண்ணம் தடுக்கவும், நத்தம் நிலவரி திட்டத்தினை செயல்படுத்தபடும்போது துணை செயல்களுக்காக பொதுமக்களுக்கு தூய பட்டா வழங்கபடுகிறது.

நிபந்தனை பட்டா[தொகு]

ஆதி திராவிடர் நிபந்தனை பட்டா (A D Condition Patta)[தொகு]

வீட்டு மனை இல்லாத பட்டியல் சமூகத்தினர்களுக்கு, ஆதி திராவிடர் நல வட்டாட்சியரால் கிராமத்தில் உபரியாக இருக்கும் புறம்போக்கு நிலத்தை அல்லது தனியார் நிலங்களை அரசு விலை கொடுத்து வாங்கி, மனைகளாக பிரித்து நிபந்தனைகளுடன் வழங்கப்படும் இலவச வீட்டு மனை பட்டா ஆகும். நிபந்தனை பட்டாஇப்பட்டாக்கள் பெண்கள் பெயரில் மட்டும் வழங்கப்படுவது மரபாக உள்ளது. ஆதி திராவிடர் நிபந்தனைப் பட்டா ஆவணத்தில் பட்டா பெறுபவரின் புகைப்படத்தில் ஆதி திராவிட நலன் தனி வட்டாட்சியர் கையெழுத்து இட்டு இருப்பார். இப்பட்டா பல நிபந்தனைகள் கொண்டது. முக்கியமாக பட்டாவில் குறிப்பிட்ட மனையை குறிப்பிட்ட காலம் வரை வேறு யாருக்கும் விற்க கூடாது. குறிப்பிட்ட காலத்திற்கு விற்பதாயின் பழங்குடியினர் அல்லது ஆதிதிராவிடருக்கு மட்டுமே விற்க வேண்டும். இதே நிபந்தனை பேரில் பயிர் செய்ய நிலமில்லாத ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுகு 50 செண்டு முதல் ஒரு ஏக்கர் வரை வேளாண்மை நிலங்களுக்கான பட்டா வழங்கப்படும்.

நில ஒப்படை பட்டா[தொகு]

நிலமற்ற பிற்படுத்தப்பட்ட ஏழை மக்கள், முன்னாள் இராணுவ வீரர்கள், அரவாணிகள் போன்றோருக்கு வீட்டு மனை அல்லது வேளாண்மை நிலங்களை அரசு இலவசமாக வழங்குவது நில ஒப்படை பட்டா ஆகும். இவ்வாறு வழங்கப்படும் பட்டா நிலத்தை குறிப்பிட்ட ஆண்டுகள் வரை பிறருக்கு விற்க கூடாது என்ற நிபந்தனை உண்டு.

நகர அளவை நில ஆவணப் பட்டா (டி.எஸ்.எல்.ஆர் பட்டா)[தொகு]

மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் உள்ளாட்சி அமைப்புகளின் நில அளவையர்களால் வார்டு வாரியாக வீட்டு மனைகள் மற்றும் காலி மனைகளை அளந்து நில உரிமையாளரின் பெயர், தகப்பனார் பெயர், சர்வே எண், உட் சர்வே எண் மற்றும் நான்கு மால்களுடன் வரைபடம் தயாரிப்பர். பொது மக்கள் தங்களது மனைக்கான (வீட்டிற்கான) ஆவணம் கேட்டால், இதிலிருந்து ஒரு அவர்களுக்கான வீட்டுமனை குறித்த வரைபடம், நீள அகலத்துடன் வரைந்து தருவர். இந்த சேவைக்கு உள்ளாட்சி அமைப்பிற்கு தனியாக கட்டணம் செலுத்த வேண்டும். இந்த நகர அளவை நில ஆவணப் பட்டா (TSLR EXTRACT) என்பது வருவாய்த் துறை வழங்கும் பட்டாவுக்கு இணையான ஆவணம் ஆகும் . கிராமக் கணக்கு பதிவேடுகள்

2சி பட்டா[தொகு]

கிராமக் கணக்கில் 2ம் நம்பர் புத்தகம், “C” பதிவேட்டிலிருந்து வழங்கப்படும் பட்டா 2C பட்டா ஆகும். அரசு நிலத்தில் இருக்கும் பழம் தரும் மரங்களை அனுபவித்து, பராமரித்து கொள்ள, மேற்படி மரங்களுக்கு உரிமையளித்து கொடுக்கப்படும் பட்டா 2C பட்டா அல்லது மரப்பட்டா ஆகும்.

தனி பட்டா மற்றும் கூட்டு பட்டா[தொகு]

தனி பட்டா[தொகு]

தனி பட்டா என்பது தனி நபர் ஒருவர் பெயரில் இருக்கும். தனி பட்டாவில் நிலத்தின் சர்வே எண், சர்வே உட்பிரிவு செய்யப்பட்டிருக்கும். புல எண் வரைபடத்திலும் இவருடைய நிலத்துக்கு உட்பிரிவு வரைபடம் வரையப் பட்டு இருக்கும். தனிபட்டாவில் பெயர், நில அளவு, புல எண் உட்பிரிவு, நில அளவை புத்தகத்தில் (Field Measurement Book (FMB)[2] உட்பிரிவு கொண்டிருக்கும்.

கூட்டுப் பட்டா[தொகு]

கூட்டுப் பட்டாவில் நிலத்தின் அளவு, சர்வே எண், சர்வே உட்பிரிவு எண் மட்டும் இருக்கும் ஆனால் நில அளவை புத்தகத்தில் (Field Measurement Book (FMB) – உட்பிரிவு (சப்டிவிசன்) இருக்காது. மேலும் தனித் தனியாக யார் யாருக்கு எவ்வளவு நிலம் உள்ளது என்று குறிப்பிட்டு இருக்காது. நிலத்தில் நான்கு பேரோ, இரண்டு பேரோ அல்லது பல பேரோ ஒவ்வொரு பக்கத்திலும் அனுபவிப்பர். அவர்கள் பெயர்கள் எல்லாம் கூட்டுப் பட்டாவில் இருக்கும். கூட்டு பட்டாவில் உடமையாளர்களின் தனித்தனி மனை, நில அளவை புத்தகத்தில் (FMB)உட்பிரிவு செய்யப்பட்டு இருக்காது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பட்டா_(நில_உரிமை)&oldid=3880053" இலிருந்து மீள்விக்கப்பட்டது