உள்ளடக்கத்துக்குச் செல்

பட்டலந்தை வதை முகாம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பட்டலந்தை தடுப்பு மையம் (Batalanda detention centre) அல்லது பட்டலந்தை வதை முகாம் என்பது இலங்கை, கம்பகா மாவட்டம், பியகமையில் உள்ள புட்டலந்தா என்ற ஊரில் உள்ள அரச உரக் கூட்டுத்தாபனத்தின் பட்டலந்தை வீட்டுவசதித் திட்டத்திற்குள் அமைந்துள்ளதாகக் கூறப்படும் ஒரு தடுப்பு முகாம் ஆகும்[1] இது 1987–89 ஜேவிபி கிளர்ச்சியின் போது, அன்ரைய அரசுத்தலைவர் ரணசிங்க பிரேமதாசா தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி (ஐதேக) அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட கிளர்ச்சி எதிர்ப்புப் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மக்கள் விடுதலை முன்னணியுடன் (ஜேவிபி) தொடர்புடைய அல்லது தொடர்புடையதாக சந்தேகிக்கப்பட்டோரைத் தடுத்து வைக்க இலங்கை காவல்துறையின் எதிர் நாசவேலைப் பிரிவால் பயன்படுத்தப்பட்டது.

பின்னணி

[தொகு]

முந்தைய 1971 கிளர்ச்சியைப் போலல்லாமல், மக்கள் விடுதலை முன்னணி முக்கியமான மத, அரசியல் பிரமுகர்களைப் படுகொலை செய்தல், நாசவேலை செய்தல், தீவிரவாதத் தாக்குதல்கள் ஆகியவற்றில் பெரிதும் நம்பியிருந்தது. அரசாங்கமும் அதே பாணியிலேயே பதிலளித்தது; ஜே.வி.பி. கிளர்ச்சியை அடக்குவதற்காக பட்டலந்தா உட்படப் பல இடங்களில் தடுப்பு முகாம்களைப் பயன்படுத்தியதாக அரசாங்கம் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கிளர்ச்சியாளர்களை அழிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையின் நாசவேலை எதிர்ப்புப் பிரிவுகளால் இந்த முகாம்கள் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.[2][1][3][4][5][6][7]

பட்டலந்தை ஆணைக்குழு

[தொகு]

1994 நாடாளுமன்றத் தேர்தல் காலத்தில், மக்கள் கூட்டணியின் அரசுத்தலைவர் வேட்பாளர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, தடுப்பு மையத்தின் பின்னணியில் முக்கிய அரசியல் அதிகாரியாக இருந்தவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க என்று குற்றம் சாட்டினார், பியகமை சந்திரிக்காவின் தேர்தல் தொகுதியில் அமைந்திருந்தது. 1994 பொதுத் தேர்தலிலும், 1994 அரசுத்தலைவர் தேர்தலிலும் மக்கள் கூட்டணி பெரு வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, 17 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த ஐக்கிய தேசியக் கட்சி தோல்வியடைந்தது, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுத்தலைவர் குமாரதுங்க, 1987-89 கிளர்ச்சியின் போது மனித உரிமை மீறல்கள் குறித்த குற்றச்சாட்டுகளை விசாரிக்க சனாதிபதி விசாரணை ஆணைக்குழுக்களை நியமித்தார். லெப்டினன்ட் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ, அமைச்சர் லலித் அத்துலத்முதலி ஆகியோரின் கொலைகள் தொடர்பான விசாரணை ஆணைக்குழுக்களும் இதில் அடங்கும். இருப்பினும், குமாரதுங்க, 1948 ஆம் ஆண்டு விசாரணை ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ், பட்டலந்தை வீட்டுவசதித் திட்டத்தில் சட்டவிரோத தடுப்புக்காவல், சித்திரவதை அறைகளை நிறுவுதல், பராமரித்தல் தொடர்பான விசாரணை ஆணையத்தை, சாட்சிகளை வரவழைத்து முறையான விசாரணையை மேற்கொள்வதற்காகவும், பட்டலந்தையில் உள்ளதாகக் கூறப்படும் தடுப்புக்காவல் மையம் குறித்து அறிக்கை சமர்ப்பிக்கவும் ஒரு விசாரணை ஆணைக்குழுவை நியமித்தார். இது பொதுவாக பட்டலந்தை ஆணைக்குழு என்று அழைக்கப்பட்டது.[8]

பட்டலந்தை ஆணிக்குழு, மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி தர்மசிறி ஜெயவிக்கிரம, கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி நிமல் திசாநாயக்க ஆகியோரைக் கொண்டதாக இருந்தது. சனாதிபதி வழக்கறிஞர் ஆர். ஐ. ஒபயசேகரா, உதவியாளர் அரசு வழக்கறிஞர் யசந்த கோடகொட ஆகியோர் ஆணைக்குழுவின் அறிக்கையை 1998 மார்ச் 27 அன்று அரசுத்தலைவர் குமாரதுங்கவிடம் ஒப்படைத்தது. பட்டலந்தை வீட்டுவசதித் திட்டத்தில் சந்தேக நபர்களைத் தடுத்து வைத்து சித்திரவதை செய்த காவல்துறையின் நாசவேலைத் தடுப்புப் பிரிவிற்கு பொறுப்பானதாகக் கூறப்படும் காவல்துறை அதிகாரிகள், ஜே.வி.பி.யின் கிளர்ச்சி நடவடிக்கைக்கு எதிர்வினையாக சித்திரவதையைப் பயன்படுத்துவது குறித்து விக்கிரமசிங்கவுக்குத் தெரியும் என்று கூறினர். சனாதிபதி விசாரணை ஆணைக்குழுக்களைப் போலல்லாமல், அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் குடியுரிமைகளைப் பறிக்க பரிந்துரைக்கும் ஆணை பட்டலந்தா ஆணையத்திற்கு இருக்கவில்லை.[8] 2000 ஆம் ஆண்டு அரசாங்கத்தால் ஓர் அமர்வு ஆய்வறிக்கையாக வெளியிடப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கை, அதன் கண்டுபிடிப்புகளை நாடாளுமன்றத்தில் விவாதிக்கவும், மீறப்பட்டதாகக் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது குற்றஞ்சாட்டுதலுக்கும், ஒழுங்கு நடவடிக்கைக்கும் வழிவகுக்கும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான நடத்தை விதிகளை உருவாக்கவும் அரசாங்கத்திற்கு பரிந்துரைத்தது.[9]

தேவையான குற்றவியல் நடவடிக்கைகளை ஆராய்வதற்கென, தனது கண்டுபிடிப்புகளை சட்டமா அதிபருக்கு அனுப்புமாறு ஆணையம் அரசுத்தலைவருக்குப் பரிந்துரைத்த போதிலும்; இன்றுவரை எந்த அரசாங்கமும் எவருக்கு எதிராகவும் எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை, மேலும் கொலைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் கைதுசெய்யப்பட்ட பலர், 1984 ஆம் ஆண்டு குமாரதுங்க மற்றும் 1988 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட அவரது கணவர் விஜய குமாரணதுங்க ஆகியோரால் நிறுவப்பட்ட அரசியல் கட்சியான இலங்கை மக்கள் கட்சி போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.[10][11]

நாடாளுமன்றத்தில் ஆணைக்குழு அறிக்கை

[தொகு]

2025 மார்ச் தொடக்கத்தில் முன்னாள் அரசுத்தலைவர் ரணில் விக்கிரமசிங்க அல் ஜசீரா தொலைக்காட்சிக்கு அளித்த சர்ச்சைக்குரிய நேர்காணலுக்குப் பிறகு,[12] மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புக்கூறல் குறித்தும், பட்டலந்தை வதை முகாம் குறித்தும் கடுமையான கேள்விகளை எதிர்கொண்டார். இதன் பின்னர் பட்டலந்தை ஆணைக்குழுவின் முழுமையான அறிக்கை ஜேவிபி அரசாங்கத்தினால் நாடாளுமன்ற அவைத் தலைவர் பிமல் இரத்திநாயக்கவினால் 2025 மார்ச் 14 அன்று சமர்ப்பிக்கப்பட்டது. அத்துடன், சட்ட நடவடிக்கைக்காக சட்டமா அதிபருக்கு அனுப்பப்படும் என்றும் அவர் அறிவித்தார்.[13]

ரணில் விக்கிரமசிங்க, பட்டலந்தை ஆணைக்குழுவின் அறிக்கையின் முடிவுகளைக் கடுமையாக நிராகரித்து, அது தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் அரசியல் ரீதியான முயற்சி என்று கூறினார். ஆணைக்குழு உருவாக்கப்பட்டது தன்னை இழிவுபடுத்தும் நோக்கத்தால் தூண்டப்பட்டது என்றும், ஆனால் இறுதியில் அந்த இலக்கை அடைய முடியவில்லை என்றும் வலியுறுத்தினார். 1988-1990 கிளர்ச்சியின் போது காவல்துறை அதிகாரிகளுக்கு வீட்டுவசதி வசதி செய்வதில் தனது பங்கை மட்டுமே அறிக்கை குறிப்பிடுவதாக விக்கிரமசிங்க சுட்டிக்காட்டினார், இந்த செயல்பாடு நிறுவப்பட்ட விதிமுறைகளின்படி நடத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.[14]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1 2 Commissions of inquiry in Sri Lanka
  2. "Sri Lankan government exploits allegations of murder and torture against opposition - World Socialist Web Site". wsws.org. 26 August 2000. Retrieved 11 November 2016.
  3. "Atrocities of Janatha Vimukthi Peramuna (JVP) or". www.tchr.net. Retrieved 28 September 2016.
  4. "Anura Kumara apologises in London for JVP's 1988-89 terror". www.sundayobserver.lk. Archived from the original on 1 October 2016. Retrieved 28 September 2016.
  5. "JVP says Matale mass grave has remains of 200 torture victims ::. Latest Sri Lanka News" (in அமெரிக்க ஆங்கிலம்). 6 February 2013. Retrieved 28 September 2016.
  6. "Batalanda Commission Report EN copy" (PDF). itjpsl.com.
  7. Report of the Commission of Inquiry into the Establishment and Maintenance of Places of Unlawful Detention and Torture Chambers at the Batalanda Housing Scheme (PDF). Colombo. February 19, 2000. p. 22.{{cite book}}: CS1 maint: location missing publisher (link)
  8. 1 2 "Batalanda: yes, there was torture Commission says authorities and Police knew about it but no action taken". Sunday Times. https://www.sundaytimes.lk/980412/mudli.html.
  9. "Batalanda Commission - English" (PDF). itjpsl.com.
  10. "Vijaya assassination: Politics kills police professionalism".
  11. "Lalith Athulathmudali's Assassination –Fact or Fiction?". Archived from the original on 23 August 2017. Retrieved 23 August 2017.
  12. Former Sri Lankan President Ranil Wickremesinghe on recent election loss, Easter bombing investigations, and prosecution of the Rajapaksa family, Al Jazeera, 6 March 2025
  13. Sri Lankan government tables Batalanda commission report, Wickremesinghe to respond, Tamil Guardian, March 14, 2025 பிழை காட்டு: Invalid parameter "name"tg"" in <ref> tag. The supported parameters are: details, dir, follow, group, name.
  14. Ex-President Ranil Wickremesinghe dismisses ‘Batalanda’ Commission Report as politically biased, lankanewsweb.net, March 16, 2025

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பட்டலந்தை_வதை_முகாம்&oldid=4509263" இலிருந்து மீள்விக்கப்பட்டது