படகோட்டல்
படகோட்டல் (Boating) என்பது ஓய்வாகப் படகில் பயணம் செய்வதாகும். இது பரவலான மக்கள் பொழுதுபோக்காகும். உலகெங்கும் பல மில்லியன் கணக்கான படகோட்டிகள் உள்ளனர். படகுகள் விசைப்படகாகவோ கைத்துடுப்புப் படகாகவோ திறனூட்டிய சிறுகலங்களாகவோ அமையலாம். படகில் மீன்பிடிக்கலாம் அல்லது படகில் இருந்து குதித்து விளையாடலாம்.
ஏரி, ஆறு போன்ற உள்நாட்டு நீர் நிலைகளிலும், ஆழம் குறைந்த அண்மைக் கடல் பகுதிகளிலும் ஓட்டுவதற்கென்றே பாய்மரம் பொருத்திய 20 மீட்டருக்கும் குறைவான கலங்களையே படகுகள் எனலாம். மகிழுலாப் படகோட்டுதலுக்குரிய படகுகள் பொதுவாகக் கண்ணாடி இழை, மரம், அலுமினியம் போன்றவற்றால் உருவாக்கப்படுகின்றன. அலுமினியப் படகுகள் உறுதியாக இருப்பினும் விலை மிகுதி காரணமாக இவற்றின் பயன் மிகக் குறைவே. கண்ணாடி இழைப் படகுகள் சுமை குறைவாகவும், உறுதியாகவும் உள்ளமையால் இவற்றின் பேணல்பணி மிகவும் எளிதாகும். இவை தற்போது மிகவும் புகழ் பெற்றுள்ளன.
படகு வகைகள்
[தொகு]படகின் அடிப்பகுதி தட்டையாகவோ, ஏறக்குறைய அரை வட்டமாகவோ இருக்கலாம். ஆழமற்ற பகுதிகளில் ஓட்ட ஏற்றதும், துடுப்பின் உதவி கொண்டு தள்ளக் கூடியதுமான சிறிய படகுகள் மட்டுமே தட்டையான அடிப்பகுதியைக் கொண்டுள்ளன. இப்படகுகள் அலை மிகுந்த கடல் பகுதிகளுக்கு ஏற்றவையல்ல. அரை வட்டவடிவப் படகுகள் பழமையானவை.ஆழமான கடல் பகுதிகளுக்கு ஏற்றவை.[1]
எந்திரப் படகுகள்
[தொகு]உள்ளே எந்திரம் பொருத்தப்பட்ட படகுகள், வெளியே எந்திரம் பொருத்தப்பட்ட படகுகள், உள், வெளி ஆகிய இருவகை எந்திரங்களும் பொருத்தப்பட்ட படகுகள் என மூவகை எந்திரப் படகுகள் உள்ளன.[2] உள் எந்திரப் படகுகளில் எந்திரம் நிலையாகப் பொருத்தப்பட்டிருக்கும். 50 - 500 குதிரைத் திறனுள்ள எந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. தற்போது நடைமுறையில் உள்ளன. வெளி எந்திரம் தற்காலிகமாக பொருத்தப்பட்டுள்ளதால், தேவைப்படும்போது பொருத்தியும் தேவையில்லாதபோது கழற்றியும் வெளியே எடுக்க முடியும். 1 - 100 குதிரைத் திறனுள்ள எந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ள வெளி எந்திரப்படகுகள் தற்போது மிகுதியாய் பயன்படுகின்றன.[3] பேருந்துகளுக்குப் பயன்படக்கூடிய டீசல் எண்ணையே பயன்படுகிறது. பொதுவாக 4-5 மீ நீளத்தைக் கொண்டுள்ள இப்படகு 2-3 மனிதர்களால் ஒட்டப்படுகின்றன. பொதுவாக பாய்மரத்தால் இவை கட்டப்பட்டாலும், அவ்வவ்போது விசை எந்திரங்கள் பொருத்தப்பட்டும் ஒட்டப்படுகின்றன.[4]
மகிழுலா படகோட்டல்
[தொகு]பாய்மரம் மட்டுமே பொருத்தப்பட்ட கலங்களை மகிழுலாவுக்காகவோ, விளையாட்டு போட்டிக்காகவோ கடலில் செலுத்துவதே மகிழுலாப் படகோட்டல் (Yachting) எனப்படுகிறது. இவ்வகைப் படகோட்டல் முதன்முதலாக 16-17ஆம் நூற்றாண்டுகளில் ஆலந்தில் நடந்ததாகக் கூறப்படுகிறது. எனினும் விளையாட்டுப் போட்டிக்காக படகோட்டல் 19ஆம் நூற்றாண்டில் தொடங்கியது.
படகோட்டும் முறைகள்
[தொகு]படகோட்டல் தொன்றுதொட்டு பொழுதுபோக்கிற்காக விளங்கி வந்தபோதிலும் 20ஆம் நூற்றாண்டில் தென் அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா, ஆத்திரேலியா போன்ற நாடுகளில் மிகவும் புகழ் பெற்றுள்ளது. இந்நாடுகளில் இது ஒரு விளையாட்டுப் போட்டியாகவும் நடைபெற்று வருகிறது. படகோட்டலில் பல முறைகள் உள்ளன. ஒரே ஒரு துடுப்புக் கொண்டு ஒரே மனிதர் ஒரு படகை ஓட்டிச் செல்வதை ஓட்டுதல் (Rowing) என்றும், ஒரே மனிதர் முன்பகுதி தட்டையாகவும், ஓரங்கள் கூர்மையாகவும் உள்ள இரு துடுப்புகளை இருகைகளாலும் ஒரு படகை இயக்கிச் செல்வதை துழாவுதல் (Sculling) என்றும் கூறுவர்.
பாதுகாப்பான படகோட்டுதலுக்குரிய விதிமுறைகள்
[தொகு]மிகச் சிறிய படகுகளில் பயணம் செய்ய கூடாது. ஆழ்கடலுக்குச் செல்லும் படகுகளில் பயணம் செய்யும்போது ஒவ்வொருவருக்கும் ஓர் உயிர்காக்கும் மிதவை (Life Jacket) இருக்க வேண்டும். ரப்பர் பாத அணிகளை அணிந்து படகில் பயணம் செய்ய வேண்டும். படகுகளில் தேவைக்குமேல் மனிதர்களை ஏற்றிச் செல்ல கூடாது. படகு நல்ல நிலையிலும், நீர்க் கசிவு இல்லாமலும் இருக்கிறதா என அறிதல் வேண்டும். படகை ஓட்டுபவர்கள் விதிமுறைகளையும் படகுகளைச் செலுத்தும் முறைகளையும் அறிந்திருக்க வேண்டும். படகினுள் நல்ல நிலையில் வேலை செய்யக்கூடிய தீயணைப்பான் ஆயத்த நிலையில் இருக்க வேண்டும். படகில் புகைபிடிக்கக் கூடாது. [5] [6] [7] [8] [9]
படகோட்டும் போட்டிகள்
[தொகு]வெனிசில் 1300ஆம் ஆண்டிலேயே படகுப்போட்டி நடைபெற்றதாகக் கூறுவர். 1529ஆம் ஆண்டில் வெனிசில் பெண்களுக்கான முதல் படகுப்போட்டி நடைபெற்றது. ஆக்சுபோர்டுக்கும் கேம்பிரிட்ஜ்க்கும் இடையே நடைபெற்ற உலகப் புகழ் பெற்ற தனி நபர் போட்டி 1829இல் நடந்தது. 1856ஆம் ஆண்டிலிருந்து இப்போட்டி ஆண்டுதோறும் நடைபெற்று வந்தாலும் முதலாம், இரண்டாம் உலகப் போர்களின் போது இப்போட்டி நடைபெறவில்லை.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Abhishek, Amit (2019-07-05). "20 Different Boat Types | An Easy Guide On Types Of Boats" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-11-30.
- ↑ Abhishek, Amit (2019-07-05). "20 Different Boat Types | An Easy Guide On Types Of Boats" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-11-30.
- ↑ Abhishek, Amit (2019-07-05). "20 Different Boat Types | An Easy Guide On Types Of Boats" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-11-30.
- ↑ Abhishek, Amit (2019-07-05). "20 Different Boat Types | An Easy Guide On Types Of Boats" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-11-30.
- ↑ அறிவியல் களஞ்சியம் தொகுதி 14
- ↑ Kimball, John (2009). Physics of Sailing. CRC Press. p. 296. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1466502665.
- ↑ Batchelor, G.K. (1967), An Introduction to Fluid Dynamics, Cambridge University Press, pp. 14–15, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-66396-2
- ↑ Free Dictionary: definition and derivation of "yacht"
- ↑ "US Sailing.".
- Doane, Charles J. (2009). The Modern Cruising Sailboat: A Complete Guide to Its Design, Construction and Outfitting. McGraw-Hill. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-07-147810-6.
வெளி இணைப்புகள்
[தொகு]- Salt Water-Small Boating: 1700 miles up the coast by canoe, Long Island, N.Y. to Gooseberry, Labrador Manuscript at Dartmouth College Library