பஞ்சாபி நாட்டார் சமயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பஞ்சாப் பகுதி வரைபடம்
பகத் பாபா காலு ஜீ பஞ்சத் ஆலயம்
பாபா புல்லே ஷா கல்லறை, கசூர், பாக்கித்தான்
குருதுவாரா சாகிப் & பாபா பாலா ஜி சுமாத் குரியானா

பஞ்சாபி நாட்டார் சமயம் என்பது பஞ்சாப் பகுதி மக்களுக்கே உரித்தான நீத்தார் வழிபாடு, உள்ளூர் சிறுதெய்வ வழிபாடு, உள்ளூர் பண்டிகைகள் உள்ளிட்டவைக் குறித்த நம்பிக்கைகளையும் வழக்கங்களையும் குறிக்கும். ஒழுங்கு பெற்ற சமயங்கள் பலவற்றின் கலந்துரையாடலாகத் திகழும் பஞ்சாபி நாட்டார் சமயங்களின் அடையாளமாகப் பஞ்சாபி நாட்டார் சமய ஆலயங்கள் பஞ்சாப் பகுதியில் பல உள்ளன.[1] இவ்வாலயங்கள் பல்வேறு சமயங்களுக்கிடையேயான உரையாடல்களையும், புனிதர்களைப் போற்றி வணங்கும் தனித்துவமான பண்பாட்டு வழக்கத்தையும் எடுத்துக் காட்டுவதாய் விளங்குகிறது.[2]

பஞ்சாபி நாட்டுப்புறப் பிறப்பியல்[தொகு]

தாபா சிங் ஷஹீத்

பஞ்சாபிகள் தாம் பின்பற்றும் ஒழுங்குபெற்றச் சமயம் எதுவாயினும் அவர்களது நாட்டார் சமயத்தையும் தொடர்ந்து பின்பற்றுவர். சிலபோது இச்சமயங்களின் நம்பிக்கைகளும் வழக்கங்களும் அவர்கள் பின்பற்றும் பெருஞ்சமயத்திற்கு எவ்வித தொடர்பு அற்றும் அமையும். சிலபோது அவற்றிலிருந்து பெறப்பட்ட நம்பிக்கைகளைக் கொண்டும் அமையும்.

பஞ்சாபி நாட்டார் பிறப்பியலில் அண்டம் மூன்று பகுதிகளாகப் பகுக்கப்பட்டுள்ளது:[3]

தமிழ் பஞ்சாபி உறைவோர்
வானம் ஆகாஷ் தேவ் லோக் (தேவர்கள்)
பூமி தர்த்தி மத்லோக் (மனிதர்கள்)
கீழுலகம் நாகா நாக்லோக் (நாகங்கள்)

தேவ்லோக் என்பது ஆகாஷ் என்று வழங்கப்படும் வானில் அமைந்த கடவுள், புனிதர்கள் மற்றும் முன்னோர்களின் உறைவிடப் பகுதி. முன்னோர்/நீத்தோர் கடவுளாகவோ புனிதராகவோ ஆகலாம்.[3]

பஞ்சாபி முன்னோர் வழிபாடு[தொகு]

அகமது ஸிர்ஹிந்தி கல்லறை, ரௌசா ஷரீப் வளாகம், ஸிர்ஹிந்த்
உஸ்தாத் கல்லறை, நகோதர், பஞ்சாப்
உஸ்தாத்களின் கல்லறை, நகோத
08IN2130 prayer flags Hindu shrine and red flag

ஜாதேரா—நீத்தோர் ஆலயங்கள்[தொகு]

ஜாதேரா என்பது ஒரு குடும்பப் பெயரை நிறுவிய பொது மூதாதையரையும் மற்றும் தொடர்புடைய அனைத்துக் குல மூதாதைகளையும் போற்றி நினைவுகூற அமைக்கப்படும் ஆலயங்கள் ஆகும்.[3]

ஒரு கிராமத்தைத் தோற்றுவித்தவர் காலமாகையில், அவருக்கு அக்கிராம எல்லையில் ஓரு சன்னதி எழுப்பப்பட்டு அங்கு ஒரு ஜண்டி மரம் நடப்படும். இது போன்ற பல சன்னதிகளை ஒவ்வொரு கிராமத்திலும் காணலாம்.

ஒரு குலத்தையோ கிராமத்தையோ நிறுவியவரின் பெயரில் ஜாதேரா அமையலாம். எனினும் பல கிராமங்களில் பெயரற்ற ஜாதெராக்களும் காணப்படுகின்றன. சில குடும்பங்களில் ஜாதேராவை நிறுவியவர் ஒரு புனிதராகவும் இருக்கலாம். பாபா ஜோகி பீர் போன்ற இத்தகைய புனிதர்கள், அந்தந்த ஜாதேராவிற்குத் தலைமை ஏற்று, அதன் வழி வருவோரால் வணங்கப்படுவதோடு, பொதுவான பலராலும் போற்றி வணங்கப்படுவர்.[3]

பஞ்சாபி குலப்பெயர் மரபு[தொகு]

ஒரு குலப்பெயர் கொண்ட பஞ்சாபிகள் அனைவரும் ஒரே மூதாதையின் வழியில் தோன்றியதாக அவர்கள் நம்புகின்றனர். பஞ்சாபியில் குலப்பெயர் கௌத் அல்லது கோத்ரா என்று வழங்கப்படுகிறது.[3]

குலப்பெயர் குழுக்கள் ஒரே பூர்வீகத்தைக் கொண்ட சிற்சிறு குடும்பக் குழுக்களாக மேலும் பகுக்கப்படுகின்றது. வழக்கமாக குறைந்தது ஏழு தலைமுறைகளுக்கு அடையாளம் காணக்கூடிய உறவுகள் ஒரு குடும்பக் குழுவாக அறியப்படும்.[4]

பண்டைக் காலங்களில், ஒரு கிராமவாசிகள் அனைவரும் ஒரே குலப்பெயர் கொண்டிருப்பதைப் பரவலாகக் காணலாம். வேறு புது கிராமத்திற்கு பெயர்ந்து செல்லுகையிலும் தங்களின் மூல ஜாதேராவிற்கும் தொடர்ந்து மரியாதை செலுத்துவர். பிராமணர், சாஹலர் மற்றும் சந்துக்கள் தத்தம் ஊரில் புதிய ஜாதேராக்களைக் கொண்டுள்ளபோதும், இன்றளவும் தங்கள் ஒட்டுமொத்த குலப்பெயருக்குக் காரணமான மூதாதைக்குத் தொடர்ந்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.[3]

காலப்போக்கில் பஞ்சாபி கிராமங்களில் வெவேறு குலப்பெயர் குடும்பங்கள் கலந்து வாழத் துவங்கினர். இதனால் ஒரு கிராமம் ஒரே ஜாதேராவை மட்டும் கொண்டிருந்தபோதும் அதனை வெவ்வேறு குலப்பெயர் குழுக்களும் பொதுவாகப் பயன்படுத்தத் துவங்கின. எனினும், ஜாதேரா, கிராமத்தை நிறுவிய மூதாதையின் பெயரிலேயே வழங்கப்படும். சிலபோது குறிப்பிட்ட பொதுக் குலங்களின் மூதாதைகளின் பெயரில் பல ஜாதேராக்கள் ஒரே கிராமத்தில் நிறுவப்படுவதும் உண்டு.[5]

ஒரே குலதோர், ஒரு கிராமத்தைப் புதிதாகத் தோற்றுவிக்கையிலும் அவர்கள் தம் மூதாதையின் கிராம ஜாதேராவிற்குத் தொடர்ந்து சென்றுவருவர். அது இயலாத போது பழைய ஜாதேராவில் இருந்து ஒரு தொடர்பு பெறப்பட்டு புதிய ஜாதேரா ஒன்று புது கிராமத்தில் தோற்றுவிக்கப்படும்.[3]

தளச் சேவை[தொகு]

திருமணம், இந்திய மாதத்தின் 15-ம் தேதி, இந்திய மாதத்தின் முதல் ஞாயிற்றுக் கிழமை போன்ற தருணங்களில் குலத்தோர் ஜாதேராவிற்குச் சென்று பற்றுச் சேவை புரிவர். அருகிலுள்ள குளத்தில் மண்ணெடுத்து சிவலிங்கம் செய்து ஜாதேரா மேட்டில் வைத்து பசும் நெய்யும் மலர்களும் ஜாதேராவிற்குக் காணிக்கை அளிக்கப்படும். சில கிராமங்களில் ரொட்டி மாவு காணிக்கையளிக்கப்படுவதும் வழக்கம்.[3]

வழிபாடு[தொகு]

19-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பஞ்சாபி சன்னதி

ஜாதேரா வழிபாடு முறையான சமத்தின் பகுதியல்லாது, நாட்டார் சமயத்தின் பகுதியாக வழங்கப்படும். இவ்வழிபாடு முறையான சமயத்தில் வழக்கிலிருக்கும் வழிபாட்டு முறை போலல்லாமல் மூத்தோருக்கு மரியாதை தரும் விதம் அமைவது.

சாஹல் ஜாட்கள், அத்வால், சீமாக்கள் மற்றும் தூலிக்கள் ஆகியோரது புராணங்கள் ஜாதேராக்களின் தோற்றம் பற்றிக் கூறும் புகழ்பெற்ற புராணங்களுள் சில.

ஜாதேராக்களின் பட்டியல்[தொகு]

குரு பாக் சிங், கர்தார்பூர், பஞ்சாப், இந்தியா (வட்)
ஜாதேரா குலப்பெயர்
பீர் பாபா கலா மெகர் சந்து
தாதி சிகோ ஜீ, பங்கா
பார்மர்
பாபா ஜோகி பீர்
சாஹல்
பாபா கால்லு நாத்
உரோமனா
பாபா சித் கலிஞ்சர்
புல்லார்
லக்கான் பீர்
சீமா
பீர் பத்தோன் கே
சீமா
சித்சான் ராந்தவா
திகாரா சித்து
சித் சூரத் ராம்
கில்
துல்லா பஸ்ஸி
ஃபல்லா மகரம்பூர் தில்லோன் வகையரா
கபிலா சாம்ராய்(சாம்ரமா)
கோர்பல் ஹக்கீம் பூர்
ஆதி கர்ச்சா
தக்னி கிராம ஜாதேரா, ஹோஷியார்பூர் குக்கி
பாபா மானா ஜி
ஷெர்கில்
பாபா கர்தார் சிங், ஜமால்பூர் ஔலாக்
பாபா சிரியா ஜி (தல்வான்டி குர்த் கிராமம், முல்லன்பூர் மாவட்டம்) தப்

விழாக்கள்[தொகு]

சுவாமி சர்வானந்த் கிரி
பகத் பாபா காலு ஜி பஞ்சத்
கழுதையில் வீற்றிருக்கும் சீத்தலா

பஞ்சாப்பில் பின்வருவது போன்ற பல திருவிழாக்கள் கொண்டாடப்படும்.

பாபா கால்லு நாத் விழா[தொகு]

உரோமனா குலத்தின் பாபா கால்லு நாத்தின் நினைவாக பதிண்டா மாவட்டத்தில் புச்சோ மாண்டியின் அருகிலுள்ள நாதனா கிராமத்தில், ஆண்டுதோறும் பிப்ரவரி-மார்ச்சு மாதத்தில் திருவிழா கொண்டாடப்படும். இத்திருவிழா நான்கு நாட்கள் நீடிக்கும். முதல் நாள் உரோமனாக்களுக்கு மட்டும் உரித்தானது. மற்ற மூன்று நாட்களில் அனைவரும் பங்கு பெறலாம்.

பாபா காலா மெகர் விழா[தொகு]

பாபா காலா மெகரைப் போற்றி 'சந்து' குலத்தார் ஆண்டுதோறும் அம்ரித்சர் மாவட்டத்தில் விழா எடுப்பர்.

ஆண்டுதோறும் ஏப்ரல் மாதத்தை ஒட்டி நடத்தப்படும் இத்திருவிழாவில் சந்துக்கள் தவிற பஞ்சாப் மற்றும் இராசத்தானைச் சேர்ந்த மற்ற இனங்களும் குலங்களும் பங்கு பெறும்.

சந்துக்களின் பழங்கதை ஒன்றின்படி, பாபா காலா மெகர் ஒரு நாள், கால்நடைகளை மேய்த்துக் கொண்டிருக்கையில் பாபா கோரக்நாத்தைச் சந்திக்க நேர்ந்தது. அப்போது பாபா கோரக்நாத் அவரிடம் சிறிது பால் வேண்டியுள்ளார். கால்நடைகள் அனைத்தும் காளைகளாக இருந்த போதும் பாபா காலா மெகர் அவற்றைத் தன் பிரம்பால் தட்டி அதிசயிக்கத்தக்க வகையில் பாலைக் கரந்து தந்ததாகக் கதை அமைகிறது.

பாபா ஜோகி பீர் விழா[தொகு]

பட்டிண்டா மாவட்டத்தின் மாண்ஸா வட்டத்திலுள்ள போபால் கிராமத்தில் இவ்விழா கொண்டாடப்படும்.

சாஹல் ஜாட்களின் குருவென அறியப்படும் பாபா ஜோகி பீரைப் போற்றி இவ்விழா எடுக்கப்படுகிறது.[6] முகலாய ஆட்சிக் காலத்தில், முகலாய அரசர்களோடு பாபா ஜோகி பீர் போரிட்டதாகக் கூறப்படுகிறது.

சண்டையின்போது அவரது தலை துண்டிக்கப்பட்டும், அவரது உடல் மட்டுமே உயிர் முற்றும் வடியும் வரை தொடர்ந்து போரிட்டுக் கொண்டே இருந்ததாகக் கூறப்படுகிறது. ஜோகி பீரின் வீரத்தையும் தியாகத்தையும் போற்றி அவருக்கு ஒரு சன்னதி அமைத்து விழா எடுக்கத் துவங்கினர்.[6]

பாதோன் கிராமத்தில் ஆகத்து - செப்டம்பரிலும் சேட்டி கிராமத்தில், மார்ச் - ஏப்ரலிலுமென ஆண்டுக்கு இருமுறை மூன்று நாட்களாக கிராமத்தின் ஜோகி பீர் சன்னதியில் இவ்விழா கொண்டாடப்படும். இந்துக்களும் சீக்கியர்களும் இவ்விழாவில் பங்குபெறுவர். குறிப்பாகச் சாஹல் ஜாட்கள் பெருமளவில் பங்குபெறுவர். [6]

சன்னதிகள்[தொகு]

பாபா புட்டா ஜி நகோதர் சன்னதி

புனிதர்களின் நினைவில் ஏற்படுத்தப்பட்ட சன்னதிகள் பஞ்சாப் பகுதியெங்கும் பரவலாகக் காணப்படும். இவை ஷகீத் சன்னதிகள் என்றழைக்கப்படும். [7] முஸ்லிம் சன்னதிகள் தர்கா என்றும் இந்து சன்னதிகள் சமாத் என்றும் வழங்கப்படும்.

குவாஜா கிதுர்[தொகு]

கிதுர்

பஞ்சாப் பகுதியில், குவாஜா கிதுர் என்பது கிணறு ஓடைகள் போன்ற நீர்நிலைகளுக்குப் பொறுப்புடைய ஆன்மாவாகக் கருதப்படுகிறது.[8] சிக்கந்தர் நாமாவில் இவரை அமரத்துவக் கிணற்றின் பொறுப்பாளரெனக் குறிப்பிடப்பட்டுள்ளது.[8] பலச் சமயத்தாராலும் போற்றி வணங்கப்படுகிறார். பச்சை வண்ண ஆடை அணிந்து, ஒரு மீன் மேலேறி பயணிப்பதாக உருவப் படுத்தப்படுவார்.[8] இவரது முதன்மை சன்னதி, பாகிஸ்தானிலுள்ள பஞ்சாப்பின் பஃக்கார் அருகில் உள்ள சிந்து ஆற்றுத் தீவில் உள்ளது.[8]

சஞ்சி[தொகு]

சஞ்சி என்பது அன்னை தெய்வத்திற்குப் படைக்கப்படும் பண்டிகை ஆகும்.

குஃக்கா பீர்[தொகு]

வீர் கோகாஜி

குஃக்கா பீர், பாம்புகளிடமிருந்து தங்களைக் காத்துக் கொள்ளும் பொருட்டு வணங்கப்படுகிறார். சாப்பர் மேளா எனும் திருவிழா ஆண்டுதோறும் குஃக்கா பீரின் பெயரில் கொண்டாடப்படுகிறது.

கேத்ரி - கோர்ஜாஸ் தேவி பண்ணை[தொகு]

தொன்றுதொட்டு பஞ்சாபி மக்கள், நவராத்திரியின் முதல் நாளில் ஒரு மட்பாண்டத்துள் பருப்பு, தானியங்கள் மற்றும் பிற விதைகளையும் விதைத்து ஒன்பது நாட்களுக்கும் நீர்விட்டுப் பேண, இறுதி நாளில் முளை விட்டிருக்கும். "கேத்ரி" என்றழைக்கப்படும் இவ்வழக்கம், வளச் செழுமையைக் குறிக்கும். பார்லி தானியங்களை பட்பாண்டத்தில் விதைப்பது மிக முக்கியம். பத்தாவது நாளில் தளிர்கள் 3-5 அங்குல நீளம் வளர்ந்திருக்கும். தசரா அன்று, தளிகளின் வடிவிலிருக்கும் கோர்ஜா தேவி (பார்வதி அம்மன்)[9] உள்ளம் குளிர வேண்டிச் சிவப்புத் துணியால் போர்த்தப்பட்டு வணங்குவர். அன்றைக்கே தேவியைத் தொழுத பின்னர் "கேத்ரி" தளிர்கள் நீரில் முழுக்கப்படும். இச்சடங்குகள் அறுவடையோடு நெருங்கிய தொடர்புடையவை. கேத்ரியில் நிகழும் பார்லீ பயிர் அறுவடை முதல் விளைப் பயனாகக் கருதப்படும்.[10][11]

பஞ்சாபி விவசாயிகள் தொன்றுதொட்டு தசராவிற்குப் பிறகே நெற்பயிரை அறுவடை செய்வர், கோதுமையைத் தீபாவளிக்குப் பிறகுப் பயிரிடுவர்.

சாஃகி சர்வார்[தொகு]

லஃக்கா தாதா (சாஃகி சர்வார்) சன்னதி - ஜலந்தர் மாவட்டம்

லஃக்கா தாதா பீர் என்று பரவலாக அறியப்படும் சாஃக்கி சர்வாரின் சன்னதிகள் இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் இரண்டின் பஞ்சாப் பகுதியின் பல கிராமங்களில் காணப்படும். பாக்கிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் தேரா காஸி கான் மாவாட்டத்தில் பீர் சாஃக்கி சர்வாரின் சன்னதி ஒன்றுள்ளது. ஆண்டு தோறும் மார்ச் மாதம் இச்சன்னதியில் பெரும் விழா கொண்டாடப்படும். தேரா காஸி கானிலிருந்து 34 கி.மீ தொலைவிலுள்ள இக்கிராமத்தின் பெயரும் சாஃக்கி சர்வாரம் ஆகும். இவரது பெயரில் இந்திய பஞ்சாபிலுள்ள முகந்த்த்பூரில் ஆண்டுதோறும் ஒரு 9 நாள் திருவிழா கொண்டாடப்படும்.

சீத்தலா மாதா[தொகு]

குழந்தைகளை நோய்நொடியிலிருந்து காக்கும் பொருட்டு சீத்தலா மாதா வணங்கப்படுகிறார். புகழ்பெற்ற ஜாரக் திருவிழா ஆண்டுதோறும் லூதியானா மாவட்டத்தில் சீத்தலா மாதாவின் பொருட்டு நிகழ்த்தப்படும்.[12]

கோரக்நாத்[தொகு]

தில்லா ஜோகியனில் உள்ள இந்துக் கோவில்

கோரக்நாத் 11-12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த[13] சைவ சமயத்தோடு தொடர்புடைய நாத் யோகி ஆவார். மத்சயேந்தரநாத்தின் முக்கிய இரு சீடர்களுள் ஒருவர்; மற்றொரு சீடர் சௌரங்கி. இவர் புராண் பகத்திற்குப் போதனை அளித்தார்.

புராண் பகத்[தொகு]

புராண் பகத் பஞ்சாப் பகுதி மற்றும் துணைக்கண்டத்தின் பிற பகுதிகளிலும் போற்றி வணங்கப்படும் புனிதராவார். அவர் சியால்கோட்டின் இளவரசரும் ராஜா சால்பானின் மகனும் ஆவார்.[14] பாபா சகாய் நாத் ஜி என்று வணங்கப்படுகிறார். இவர் கோரக்நாத்திடம் ஆன்மீகப் பயிற்சி பெற்றார். சிறுவயதில் இவரது தந்தையின் ஆணையின் பெயரில், கிணறு ஒன்றில் சில நால் காலம் களித்தார்.

சியால்கோட்டில் உள்ள புராணின் கிணற்றிற்குப் பலதரப்பட்ட மக்கள் வந்து வணங்குகின்றனர். குறிப்பாக மக்கட்பேறு அடையாத பெண்கள் குவெட்டா[15] கராச்சி போன்ற தொலைவிடங்களில் இருந்தும் வருகை தருகின்றனர்.

நோன்புகள்[தொகு]

தல்ஹான் ஜலந்தர் மசானி சன்னதி

நோன்புகள் பஞ்சாபி நாட்டார் சமய வழக்கங்களில் பெரும் பங்கு வகிக்கின்றன.

பருவக்கால பண்டிகைகள்[தொகு]

பஞ்சாப் பகுதி மக்கள் விவசாயத்தில் பெரும் ஈடுபாடு உடையவர். இதனால் லோரி, பஸந்த் பஞ்சமி என்று வழங்கப்படும் வசந்தப் பட்டத் திருவிழா, வைசாக்கி மற்றும் ஊஞ்சலாட்டுப் பண்டிகையான தீயான் போன்ற விவசாயத் தொடர்புடைய பருவக் கால பண்டிகைகள் இன்றளவும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. காலப்போக்கில் இவை சமயப் பண்டிகைகளோடு ஒருங்கமைந்த போதிலும், இப்பண்டிகைகளின் மெய் பொருள்கள் மறையவில்லை.

சான்றாதாரங்கள்[தொகு]

 1. Replicating Memory, Creating Images: Pirs and Dargahs in Popular Art and Media of Contemporary East Punjab Yogesh Snehi [1] பரணிடப்பட்டது 2015-01-09 at the வந்தவழி இயந்திரம்
 2. Historicity, Orality and ‘Lesser Shrines’: Popular Culture and Change at the Dargah of Panj Pirs at Abohar,” in Sufism in Punjab: Mystics, Literature and Shrines, ed.
 3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 3.6 3.7 "Centre for Sikh Studies, University of California". Archived from the original on 2016-03-03. பார்க்கப்பட்ட நாள் 2016-07-16.
 4. This is not definitive
 5. A Glossary of the tribes & castes of Punjab by H. A Rose
 6. 6.0 6.1 6.2 "Gazetteer of Bathinda 1992 Edition". Archived from the original on 2016-06-01. பார்க்கப்பட்ட நாள் 2016-07-16.
 7. Sandip Singh Chohan, Thesis for the University of Wolverhampton: The Phenomenon of possession and exorcism in North India and amongst the Punjabi Diaspora in Wolverhampton [2]
 8. 8.0 8.1 8.2 8.3 Longworth Dames, M. "Khwadja Khidr". Encyclopedia of Islam, Second Edition. பார்க்கப்பட்ட நாள் 21 April 2012.
 9. http://www.nameandfame.org/g.html
 10. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2001-03-03. பார்க்கப்பட்ட நாள் 2016-07-16.
 11. http://www.webindia123.com/punjab/festivals/festivals1.htm
 12. http://www.discoveredindia.com/punjab/fairs-and-festivals-in-punjab/fairs/ludhiana-jarag-mela-martyr-fair.htm
 13. Briggs (1938), p. 249
 14. Ram, Laddhu. Kissa Puran Bhagat. Lahore: Munshi Chiragdeen.
 15. Dawn 8 October 2012
"https://ta.wikipedia.org/w/index.php?title=பஞ்சாபி_நாட்டார்_சமயம்&oldid=3589395" இலிருந்து மீள்விக்கப்பட்டது