பசுபதேசுவரர் குடைவரைக் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பசுபதேசுவரர் குடைவரைக் கோயில் அல்லது திருமலைக்கோயில் என்பது தமிழ்நாட்டின், தென்காசி மாவட்டம், சங்கரன் கோவில் - சேர்ந்தமரம் சாலையில், திருமலாபுரம் என்னும் சிற்றூரில் அமைந்த சர்வேசுவரன் மலை என்ற மலையில் அமைந்துள்ள ஒரு குடைவரைக் கோயில் ஆகும். இக்கோயிலின் தலமரமாக பனை மரம் உள்ளது.

குடவரைக் கோயில் அமைந்துள்ள இம்மலையானது தற்காலத்தில் சர்வேசுவரன் மலை என்று அழைக்கப்படுகிறது. இந்த மலையானது கிழக்கு மேற்காக தொடராக நீண்டு அமைந்துள்ளது. இந்த மலையின் அடியில் குடவரைக் கோயிலும், மலையின் மேலே கிறிம்துவ தேவாலயம் அமைந்துள்ளது.[1] இம்மலையின் தெற்கு வடக்கு என இரு குடவரை கோயில்கள் உள்ளன. தெற்கு பகுதியில் உள்ள கோயில் சிற்பப் பணிகள் முழுமையடையாமல், எந்த தெய்வச் சிலையும் இன்றி வெறுமையாக உள்ளது. அது முருகனுக்காக குடையப்பட்டது எனப்படுகிறது.[2]

அமைப்பு[தொகு]

வடபகுதியில் உள்ள குடவரைக் கோயில் வழிபாட்டில் உள்ளது. இந்த குகையானது தரையில் இருந்து நான்கு அடி உயரத்தில் குடையப்பட்டுள்ளது. குடைவரை வடக்கு திரைபார்த்தவாறு இருந்தாலும், கருவறை கிழக்கு பார்த்ததாக அமைந்துள்ளது. இக்கோயிலின் அர்த்த மண்டபத்தில் விநாயகர், பிரம்மன், திருமாள், நடராசர், பூதகணங்கள், துவாரபாலகர்கள் ஆகியோரின் புடைப்புச் சிற்பங்கள் உள்ளன. நடராசரின் புடைப்புச் சிற்பமானது காலை தூக்காமல், சடாமுடி முடிய நிலையில், காலடியில் முயலகன் இல்லாத நிலையிலும் உள்ளார். இது தாண்டவமாடுவதற்கு முந்தைய நிலையாகும். இவரை சதுர தாண்டவ நடராசர் என்று அழைக்கின்றனர். கருவறையில் சிவலிங்கமும், எதிரே நந்தியும் காணப்படுகின்றன.[2]

கல்வெட்டு[தொகு]

பதினோராம் நூற்றாண்டில் சிறீவல்லபதேவன் என்னும் பாண்டியமன்னன் இக்கோயிலுக்கு இந்த மலைப்பகுதியையும், அதனைச் சுற்றியுள்ள குளங்களையும், தானமாக வழங்கிய செய்தியை இங்குள்ள தூணில் பொறிக்கப்பட்டுள்ளது.[2]

குறிப்புகள்[தொகு]

  1. "சேர்ந்தமரம் அருகே தேவாலய பிரச்னை :சங்கரன்கோயிலில் சமாதானக் கூட்டம்" (ta) (2012-09-20).
  2. 2.0 2.1 2.2 "சங்கரன்கோவில் அருகே ஒரு காசி" (ta).