பசுபதி பாண்டியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சி. பசுபதி பாண்டியன்
பிறப்புஅலங்காரத்தட்டு, தூத்துக்குடி மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா
இறப்புஜனவரி 10, 2012
திண்டுக்கல்தமிழ்நாடு, இந்தியா
தேசியம்இந்தியன்
பணிஅரசியல்வாதி
சமயம்இந்து, தேவேந்திர குல வேளாளர்
வாழ்க்கைத்
துணை
ஜெசிந்தா பாண்டியன்
பிள்ளைகள்ப. சந்தோஷ் மகன்
ப. பிரியா மகள்

சி. பசுபதி பாண்டியன் (Pasupathy Pandian) ஒரு தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் தூத்துக்குடி மாவட்டத்தில் அலங்காரத்தட்டு என்னும் கிராமத்தில் பிறந்தார். பாட்டாளி மக்கள் கட்சி, தமிழ் பாட்டாளி மக்கள் கட்சி, தமிழர் அரசு போன்ற கட்சிகளின் முக்கியப் தலைமை பொறுப்புகளை கொண்டு இருந்த இவர் பின்னர், தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு என்ற கட்சியை உருவாக்கி அதன் நிறுவனத் தலைவராக இருந்தார்.

அரசியல் வாழ்க்கை[தொகு]

இவர் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநிலப் பொருளாளராக இருந்தார். இக்கட்சியை சேர்ந்த பேராசிரியர் தீரன் இக்கட்சியை விட்டு வெளியேறி தமிழ் பாட்டாளி மக்கள் கட்சியைத் தொடங்கிய போது, இவரும் பாட்டாளி மக்கள் கட்சியிலிருந்து வெளியேறி தமிழ் பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுச்செயலராக இருந்தார். இதன் பின்னர் கடந்த 2005 ஆம் ஆண்டு பா.ம.க.வில் இருந்து விலகிய முருகவேல் ராஜன் என்பவருடன் சேர்ந்து, தமிழர் அரசு என்ற தனிக் கட்சியைத் தொடங்கினார். அக்கட்சிக்குத் தலைவராக சி. பசுபதிபாண்டியன் இருந்து வந்தார். எனினும் இக்கட்சி தீவிரமாகச் செயல்படவில்லை. இந்நிலையில், கடந்த 2011இல் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதியில் தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் சார்பில் இவர் போட்டியிட்டு வெறும் 4000 வாக்குகளை பெற்று அரசியலில் இருந்து ஒதுங்கினார்.[1]

குற்ற வழக்குப் பதிவு[தொகு]

1990 ஆம் ஆண்டில் தூத்துக்குடி பகுதியில் இரு பிரிவினரிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இது தொடர்பாக ஆகத்து 31, 1990இல் சிலுவைபட்டி மைக்கேல் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் பசுபதி பாண்டியன் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார். இதற்குப் பின்பு டிசம்பர் 25, 1990இல் தூத்துக்குடி அருகே கிருஷ்ணராஜபுரத்தைச் சேர்ந்த அந்தோணிசாமி என்ற இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கிலும் பசுபதி பாண்டியன் சேர்க்கப்பட்டார்.

கொலை[தொகு]

2006 ஆம் ஆண்டு ஏப்ரல் 6 ஆம் தேதி அன்று இவர் மனைவியுடன் தூத்துக்குடிக்கு வந்து கொண்டு இருந்த போது, எப்போதும் வென்றான் அருகே ஒரு பாலத்தில் வந்து கொண்டிருக்கும்போது வெடிகுண்டு வீசப்பட்டு, அரிவாளால் வெட்டப்பட்டதில் மனைவி ஜெசிந்தா பாண்டியன் உயிர் இழந்தார். இந்த நிலையில் ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர் ஜனவரி 10, 2012 அன்று திண்டுக்கல் மாவட்டம் நந்தவனப்பட்டியில் அவருக்கு சொந்தமான வீட்டின் முன்பு பசுபதி பாண்டியன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.[2]

கொலைக்கான காரணங்கள்[தொகு]

1990 ஆம் ஆண்டு பழைய காயல் அருகே புல்லாவெளி கிராமத்தை சேர்ந்தவர்களுக்கும், மூலக்கரை பண்ணையார் சிவசுப்பிரமணிய நாடார் என்பவருக்கும் உப்பளத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக தகராறு நடந்து வந்தது. இதில் பசுபதிபாண்டியன் புல்லாவெளி கிராமத்தை சேர்ந்தவர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டார். இதனால், பசுபதி பாண்டியன் மற்றும் அவரது கூட்டாளிகள் சனவரி 24, 1993 ஆம் ஆண்டு சிவசுப்பிரமணிய நாடாரின் மகன் அசுபதி பண்ணையாரைக் கொலை செய்தனர். அசுபதி பண்ணையார், சுபாஷ் பண்ணையாரின் தந்தையும், வெங்கடேஷ் பண்ணையாரின் சித்தப்பாவும் ஆவார். பின்பு சூலை 8, 1993இல் சிவசுப்பிரமணிய நாடாரையும் பசுபதிபாண்டியன் மற்றும் அவரது கூட்டாளிகள் கொலை செய்ததாக, மீண்டும் இரு தரப்பினருக்கும் இடையே அடுத்தடுத்து மோதல்கள் ஏற்பட்டன. இதில் இரு தரப்பிலும் பலர் உயிரிழந்தனர். பசுபதி பாண்டியனுக்கும், மறைந்த வெங்கடேஷ் பண்ணையாருக்கும் விரோதம் இருந்த நிலையில், வெங்கடேஷ் பண்ணையார் காவல் துறையால் சுடப்பட்டு மரணம் அடைந்தார். இதற்குப் பிறகும்[3] அவரது தம்பி சுபாஷ் பண்ணையாருக்கும், பசுபதி பாண்டியனுக்கும் விரோதம் தொடர்ந்து இருந்து வந்தது.[4]

தொடரும் பகை[தொகு]

சி. பசுபதி பாண்டியன் கொலை செய்யப்பட்டதை அடுத்து இந்த வழக்கில் தொடர்புடையவராக கருதப்பட்ட ஒன்றியக் கவுன்சிலர் முத்துப்பாண்டி என்பவரும், ராஜபாளையம் அருகில் உள்ள சேத்தூர் என்னும் ஊரைச்சேர்ந்த புறா மாடசாமி என்பவரும் சில மாதங்களுக்கு முன்னர் கொலை செய்யப்பட்டனர். அதன் பின்னர் சூன் மாதம் 15 ஆம் தேதி 2014 ஆம் ஆண்டு சுபாஸ் பண்ணையாரின் கூட்டாளிகள் மீது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டது. இதில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.[5]

ஆதாரங்கள்[தொகு]

  1. "Devendra kula vellalar community". India Retailing. பார்க்கப்பட்ட நாள் 2012-07-27.
  2. http://www.thoothuonline.com/archives/17312
  3. "வெங்கடேஷ் பண்ணையார் காவல் துறையினரால் சுடப்படுதல்". India Retailing.
  4. "பசுபதி பாண்டியன் கொலைக்கானக் காரணம்". India Retailing. பார்க்கப்பட்ட நாள் 2012-01-10.
  5. சுபாஷ் பண்ணையார் கூட்டாளிகளை குறிவைத்து வெடிகுண்டு வீச்சு: யாருக்கும் காயமில்லை; 3 பேர் சிக்கினர்

வெளியிணைப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பசுபதி_பாண்டியன்&oldid=3865982" இலிருந்து மீள்விக்கப்பட்டது