பசுபதிகோவில் வீரபத்திரத் தவில்காரர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பசுபதிகோவில் வீரபத்திரத் தவில்காரர் (1867-1935) என்பவர் மைசூர் சமஸ்தானத்தில் தொண்டாற்றிய ஒரு இசைக் கலைஞர்.

பிறப்பு[தொகு]

தஞ்சையிலிருந்து, கும்பகோணம் செல்லும் சாலையில், தஞ்சையிலிருந்து பதினைந்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பசுபதிகோவில் என்னும் ஊரில் 1867 இல் வீரபத்திரப்பிள்ளை பிறந்தார்.

குடும்பம்[தொகு]

இவரின் தாயார் பெயர் அங்கம்மாள் ஆகும். லட்சுமணப்பிள்ளை, ராமசாமிப்பிள்ளை, சாமிநாதப்பிள்ளை, லோகம்பாள் ஆகியோர் இவரின் உடன்பிறப்புகள் ஆவர். இதில் சாமிநாதப்பிள்ளை என்பவர் திருவெண்காடு ராமகிருஷ்ண நட்டுவனாரின் மருமகன் ஆவர். திருவிடைமருதூர் மீனாம்பளை மணந்தார். வீரப்பத்திரப்பிள்ளைக்கு நாகம்மாள், ராசம்மாள் என இரு மகள்கள் பிறந்து வாழ்ந்தனர்.

தவில்கல்வியும் பணியும்[தொகு]

இவரின் குருவின் பெயர் அறியமுடியவில்லை. என்றாலும் தியாகராஜசுவாமிகளின் சீடரான திருவையாறு சாமிநாத நாகஸ்வரக்காரரிடம் தவில் வாசிக்கத் தொடங்கி, உறையூர் முத்துவீருசாமி நாகஸ்வரக்காரரிடம் சேர்ந்து பின்பு, அவருடைய மகனான கோபாலசாமிப்பிள்ளையிடமும், திருமருகல் நடேசப் பிள்ளைக்கும் அவ்வப்போது தவில் வாசித்துவந்தார்.

படைப்பு[தொகு]

நூற்றெட்டுத் தாளங்களுக்குத் தத்தக்காரம், ஜதிகள் முதலியவற்றை வீரப்பத்திரப்பிள்ளை தயாரித்து வைத்தவராவார்.

திறமை[தொகு]

வையச்சேரி மகா வைத்தியநாதசிவன் என்பவர் மேளகர்த்தாக்களை உருவாக்கியவர். இவர் மைசூரு அரண்மனைக்கு வந்திருந்தபோது, சிம்மந்தன தாளத்தில் பல்லவியைப் பாடும்படி மன்னர் வேண்டினார். வழக்கத்தில் இல்லாத தாளத்தை வைத்தியநாத சிவன் பாடும்பொழுது, அதற்கு இணையாக வாசிக்க எந்த தவில்காரரும் இசையவில்லை. மன்னரோ வீரப்பத்திரப்பிள்ளையை நோக்கினார். தன்னுடைய தவிலுக்கு இணையாக மகா வைத்தியநாதசிவன் பாடுவாரா? என்று அடக்கத்துடன் வீரப்பத்திரப்பிள்ளை கேட்டார். வைத்தியநாதசிவன் பாட, வீரப்பத்திரப்பிள்ளை தவில் இசைக்க, வீரப்பத்திரப் பிள்ளை பதிலுக்குத் தவில் இசைக்க, அதற்கு இணையாக மகா வைத்தியநாதசிவன் பல்லவியைப் பாடினார்.

பரிசு[தொகு]

இவருடைய தவில் திறமையை அறிந்த மைசூரு மன்னர் சிங்கமுகச்சீலை, தங்கத் தவிற்கம்பு, சாதரா அளித்தார்.

கோவில் உரிமை[தொகு]

பசுபதிகோவில் அருகில் உள்ள அய்யம்பேட்டை ராமர்கோவிலில் மேள கைங்கரியம் செய்யும் உரிமை வீரபத்திரப்பிள்ளைக்கு உண்டு. அதனாலேயே தினமும் அங்கு சென்று சிறிதுநேரம் அமர்ந்து வாசிக்கும் பழக்கம் அவருக்குண்டு. இவ்வுரிமையை தஞ்சாவூர் மராத்திய அரச குடும்பத்தைச் சேர்ந்த ஸோஹராபாய் அம்மணி அளித்திருந்தார்.

நட்பு[தொகு]

மந்திர சாத்திரத்தில் மிகுந்த தேர்ச்சி கொண்ட இவருக்கு, மகா வைத்தியநாதசாமியின் தமையனான ராமசாமியுடன் நட்பு சிறந்திருந்தது. இவரும் மந்திர தந்திரங்களில் வல்லவராகத் திகழ்ந்தவர். இருவரும் இசைக்கலை, மந்திரக்கலை குறித்து அவ்வப்போது விவாதிப்பவர்களாக விளங்கினர்.

சிறப்பு[தொகு]

வெளியூர்க்கச்சேரிகளில் அதிகத் தொகையைப் பெற்று வாசித்தவர் இவர் ஒருவரே. அதிலும் தமிழகத்தில் முதன்முதலாக வருமானவரி விதிக்கப்பட்ட தவிற்கலைஞர் இவர். தமிழ், வடமொழி, தெலுங்கு ஆகியவற்றில் புலமை கொண்டவராக இருந்தவர்.

மறைவு[தொகு]

நன்றாகப் பாடும் புலமையும் பெற்றிருந்த வீரபத்திரப்பிள்ளை, பக்கவாத நோயால் பீடிக்கப்பட்டு, சுமார் இரண்டாண்டுகள் அவதியுற்றார். 1935 ஆம் ஆண்டில் அவர் மறைவுற்றார்.

சான்று ஆதாரம்[தொகு]

  • மங்கல இசை மன்னர்கள், பி.எம். சுந்தரம், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், மு.ப.சூன் 2001.

வெளியிணைப்புகள்[தொகு]