உள்ளடக்கத்துக்குச் செல்

பசவராஜ் ராஜ்குரு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பண்டிட் பசவ்ராஜ் ராஜ்குரு (Basavaraj Rajguru) (24 ஆகத்து 1920 - 1991) கிரானா கரானாவில் (பாடும் பாணி) ஒரு முன்னணி இந்துஸ்தானிப் பாடகராவார்.

ஆரம்பகால வாழ்க்கையும் பயிற்சியும்

[தொகு]

வடக்கு கர்நாடக மாவட்டத்தில் உள்ள பாரம்பரிய இசையின் சிறந்த மையமான தார்வாட்டின் யாலிவால் என்ற கிராமத்தில் அறிஞர்கள், சோதிடர்கள் மற்றும் இசைக்கலைஞர்கள் அடங்கிய குடும்பத்தில் பசவராஜ் பிறந்தார். இவர் சிறு வயதிலேயே பாரம்பரிய இசையில் தனது இசை வாழ்க்கையைத் தொடங்கினார். இவர் தஞ்சாவூரில் பயிற்சி பெற்ற புகழ்பெற்ற கர்நாடக இசைக்கலைஞராக இருந்தார்.

பசவராஜ் சிறு வயதிலிருந்தே இசையை விரும்பினார். நாடக தயாரிப்பாளர்களையும் நடிகர்களையும் அவர்களின் நாடகங்களில் பாட அனுமதிக்கும்படி இவர் வற்புறுத்துவார். மேலும் நாடக ஆசிரியர் வாமன்ராவ் என்பவரின் பயண நாடக நிறுவனத்திற்காக பாடும்போது முதலில் அறியப்பட்டார். இவருக்கு 13 வயதாக இருந்தபோது, தனது தந்தையை இழந்தார். இவரது மாமா நாடகத்தில் இவரது எதிர்காலம் குறித்து கவலைப்பட்டார். இந்த நேரத்தில் பஞ்சாக்சரி கவாய் என்பவர் பசவராஜைக் கண்டுபிடித்து தன்னிடம் பயிற்சியில் சேர்த்துக் கொண்டார்

1936 ஆம் ஆண்டில் அம்பியில் விஜயநகர பேரரசின் 600 வது ஆண்டு விழாவில், இவர் தனது குரு கவாயுடன் தனது முதல் இசை நிகழ்ச்சியை வழங்கினார்.

1944 இல் கவாய் காலமான பிறகு, இவர் மும்பைக்குச் சென்றார். கிரானா இசைக்கலைஞரும் ஆசிரியருமான சவாய் காந்தர்வனிடமிருந்து கற்றுக்கொள்ள வாய்ப்பு கிடைத்தது. ஆனால் சவாய் காந்தர்வன் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு மும்பையை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. எனவே கவாய் மற்றொரு இசைக்கலைஞரான சுரேஷ்பாபு மானேவிடம் பசவராஜுக்கு கற்பிக்கச் சொன்னார். அவரிடமிருந்து கற்றுக்கொண்ட பிறகு, இவரது தேடலானது இவரை பாக்கித்தானின் வடமேற்குக்கு அழைத்துச் சென்றது. அங்கு கவாயின் குருவான வாகீத் கானிடமிருந்து கற்றுக்கொண்டார். கராச்சியில் இவர் லத்தீப் கான் என்பவரிடமிருந்தும் ஆறு மாதங்கள் கற்றுக்கொண்டார்.

தொழில்

[தொகு]

பசவராஜின் திறமை தூய பாரம்பரியம், கியால் முதல் வசன சாகித்தியம், சங்கீத நாடகம், தும்ரி மற்றும் கசல் (இந்திய இசையின் வெவ்வேறு பாணிகள்) வரை எட்டு மொழிகளில் பரவியுள்ளது.

விருதுகள்

[தொகு]

இந்திய அரசு, 1975இல் பத்மசிறீ விருது வழங்கியும் 1991இல் பத்ம பூசண் விருது வழங்கியும் இவரை கௌரவித்தது. [1]

மத்திய மற்றும் மாநில அரசுகளிடமிருந்து சங்கீத நாடக அதமி விருதுகளையும் பெற்றுள்ளார். இவருக்கு தர்வாட் கர்நாடக பல்கலைக்கழகம் கௌரவ முனைவர் பட்டம் வழங்கியது.

இறப்பு

[தொகு]

தனது காலத்திலிருந்த மூன்று புகழ்பெற்ற தார்வாட் இசைக்கலைஞர்களில் ஒருவரான பசவராஜ் 1991 சூலையில் இறந்தார் ( குமார் கந்தர்வன் 1992 சனவரியில் இறந்தார். மல்லிகாச்சுன் மன்சூர் 1992 செப்டம்பரில் இறந்தார்).

பண்டிட் பசவராஜ் ராஜ்குரு நினைவு தேசிய விருது

[தொகு]

பண்டிட் பசவராஜ் ராஜ்குருவின் 91 வது பிறந்தநாளின் போது முதல் பண்டிட். பசவராஜ் ராஜ்குரு நினைவு தேசிய விருது கொல்கத்தாவைச் சேர்ந்த பாடகர் பண்டிட். உல்லாஸ் கசல்கர் என்பவருக்கு 2011 ஆகத்து 23 அன்று வழங்கப்பட்டது.

குறிப்புகள்

[தொகு]
  1. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 15 October 2015. பார்க்கப்பட்ட நாள் July 21, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பசவராஜ்_ராஜ்குரு&oldid=3075342" இலிருந்து மீள்விக்கப்பட்டது