பங்காரு அடிகளார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பங்காரு அடிகளார்
Bangaru Adigalar
பிறப்பு(1941-03-03)மார்ச்சு 3, 1941
மேல்மருவத்தூர், தமிழ்நாடு, இந்தியா
இறப்பு19 அக்டோபர் 2023(2023-10-19) (அகவை 82)
மேல்மருவத்தூர்
இயற்பெயர்சுப்பிரமணி
சமயம்இந்து சமயம்

பங்காரு அடிகளார் (Bangaru Adigalar, 3 மார்ச்சு 1941 – 19 அக்டோபர் 2023) என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓர் ஆன்மீக குரு ஆவார். ஆதிபராசக்தி தொண்டு மருத்துவ, கல்வி மற்றும் கலாச்சார அறக்கட்டளையின் தலைவராக இருந்தார். இவரைப் பின்பற்றுபவர்களாலும், ஆதிபராசக்தி கோவிலின் பக்தர்களாலும் பங்காரு அடிகளார் 'அம்மா' என்று அழைக்கப்படுகிறார்.[1] உச்ச சக்தியின் அவதாரமே - ஆதிபராசக்தி என்று இவரைப் பின்பற்றுபவர்களால் நம்பப்படுகிறது. இவருக்கு ஏராளமான பக்தியுள்ள விசுவாசிகள் உள்ளனர். பங்காரு அடிகளார் கோவில் மற்றும் ஆன்மிகத்திலும் சீர்திருத்தங்களைச் செயல்படுத்தியுள்ளார்.[2]

இந்திய அரசு பங்காரு அடிகளாருக்கு 2019 ஆம் ஆண்டு பத்மசிறீ விருது [3] வழங்கி சிறப்பித்தது.

வாழக்கைக் குறிப்பு[தொகு]

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்திற்கு அருகில் மேல்மருவத்தூரில் 1941 மார்ச் 3 இல் கோபால நாயக்கர், மீனாம்பாள் ஆகியோருக்கு மகனாக பங்காரு அடிகளார் பிறந்தார். இவரது இயற்பெயர் சுப்பிரமணி. இவரது தந்தை-வழிப் பாட்டனார் துரைசாமி நாயக்கர் ஒரு நிலக்கிழார் ஆவார். சோத்துப்பாக்கம் தொடக்கப்பள்ளியிலும், அச்சிறுபாக்கம் உயர்நிலைப்பள்ளியிலும் கல்விக் கற்றார். பின்னர் செங்கல்பட்டு, அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் படித்தார். தொடக்கத்தில் மின்சாரப் பணியாளர், பேருந்து நடத்துநர் போன்ற சிறு பணிகளை ஆற்றி வந்தவர், பின்னர் அச்சிறுபாக்கத்தில் ஆசிரியராகச் சேர்ந்தார். 1968-இல் லட்சுமி என்பாரைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அன்பழகன், செந்தில் குமார், ஸ்ரீதேவி, உமாதேவி என நான்கு பிள்ளைகள் உள்ளனர்.

1966-இல் பங்காரு அடிகளாரின் குடும்பத்தில் நடந்த விழா ஒன்றில் இவரை ஆதிபராசக்தி ஆட்கொண்டதாகவும், மேல்மருவத்தூரில் அற்புதம் நடக்க போவதாகவும், தான் அங்கு கோயில் கொள்ளப்போவதாகவும் ஆதிபராசக்தி அம்மன் கூறியதாகவும் கூறப்பட்டது. இவரது வீட்டில் இருந்த வேப்ப மரத்தில் பால் வடிவதாக தகவல் பரவவே ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு செல்ல ஆரம்பித்தனர். அந்த இடத்தில்தான் தற்போது மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் அமைந்துள்ளது. [4]

வருமான வரித்துறை சோதனை[தொகு]

பங்காரு அடிகளாரின் ஆதிபராசக்தி கல்வி நிறுவனங்கள், [5] மற்றும் மேல்மருவத்தூரில் உள்ள அவரது நான்கு வீடுகள் மற்றும் அறக்கட்டளை அலுவலகங்கள், முதலானவை 2010 ஆம் ஆண்டு சூலை மாதம் 2 அன்று பதினாறு வருமான வரி அதிகாரிகள் குழுக்களால் சோதனை செய்யப்பட்டன. காலை 11.30 மணிக்கு தொடங்கிய தேடுதல் பணி மறுநாள் அதிகாலை 4 மணி வரை நீடித்தது. அடிகளார் வீட்டில் மட்டும் 9 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அறக்கட்டளை அலுவலகங்களில் நடத்திய சோதனையில் கூடுதலாக ₹ 3 கோடியும், அவரது மகன் அன்பழகனின் வீட்டில் சோதனை நடத்தி ₹ 40 லட்சம் ரூபாயும் கைப்பற்றப்பட்டது. மேலும், வீட்டில் தங்க நகைகளும் சிக்கியது. [6]

மறைவு[தொகு]

தனது 82 ஆம் வயதில் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் 19 அக்டோபர் 2023 அன்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். ஆதி பராசக்தி தொண்டு நிறுவன மருத்துவக் கல்வி மற்றும் கலாசார அறக்கட்டளையின் தலைவராக இருந்த பங்காரு அடிகளாரின் ஆன்மீக சேவையைப் பாராட்டி 2019 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி மத்திய அரசு சிறப்பித்துள்ளது.[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Her Merciful Majesty" இம் மூலத்தில் இருந்து 2018-07-06 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180706190910/http://www.newindianexpress.com/lifestyle/spirituality/2014/feb/16/Her-Merciful-Majesty-576181.html. 
  2. "Sri Bangaru Adigalar is a spiritual guru focussed on breaking social barriers, say devotees" இம் மூலத்தில் இருந்து 2019-02-09 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190209232043/http://www.newindianexpress.com/states/tamil-nadu/2019/jan/27/amma-is-a-spiritual-guru-focussed-on-breaking-social-barriers-say-devotees-1930524.html. 
  3. "Leaders differ over Padmaaward for Bangaru Adigalar". https://www.thehindu.com/news/national/tamil-nadu/leaders-differ-over-padmaaward-for-bangaru-adigalar/article26101960.ece. 
  4. "Bangaru Adigalar: ஆசிரியர் TO ஆன்மீகவாதி! யார் இந்த பங்காரு அடிகளார்!". ஹிந்துஸ்தான் டைம்ஸ். 19 அக்டோபர் 2023. https://tamil.hindustantimes.com/astrology/who-are-these-top-earners-bangaru-adigalar-full-history-of-bangaru-adigalar-131697721180281.html. பார்த்த நாள்: 20 அக்டோபர் 2023. 
  5. "Rs.20 cr. recovered in Income Tax raids on 2 colleges". https://www.thehindu.com/news/cities/chennai/Rs.20-cr.-recovered-in-Income-Tax-raids-on-2-colleges/article16182402.ece. 
  6. "IT raid seizes Rs 9 crore in godman’s bedroom". https://www.newindianexpress.com/cities/chennai/2010/jul/04/it-raid-seizes-rs-9-crore-in-godmans-bedroom-166914.html. 
  7. "பங்காரு அடிகளார் காலமானார்". https://www.dinamani.com/latest-news/2023/oct/19/bangaru-adukalar-passed-away-4092658.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பங்காரு_அடிகளார்&oldid=3814446" இருந்து மீள்விக்கப்பட்டது