பகு அதேசகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பகு அதேசகம்
Atəşgah (அசர்பைஜான் மொழி)
Map
பொதுவான தகவல்கள்
வகைஇந்து, சௌராட்டிரியனிய கலைகள் இணணந்தது.[1]
இடம்பகு, அசர்பைஜான்
தற்போதைய குடியிருப்பாளர்அருங்காட்சியகம்

பகு அதேசகம் ( அசர்பைஜான்: Atəşgah) Ateshga of Baku பகு அதேஷ்கா) அல்லது பகு தீக்கோயில் என்பது அசர்பைஜான் நாட்டின் பகு பிராந்தியத்தின் "சுராகனி"யில் அமைந்துள்ள இந்து - சௌராட்டிரியனிய ஆலயம் ஆகும்.[2] "அதேஷ்" என்பது தீயைக் குறிக்கப் பயன்படும் பாரசீக மொழிச்சொல்லாகும்.[3] 17ஆம் 18ஆம் நூற்றாண்டுக்கிடையில் கட்டப்பட்ட ஐங்கோண வடிவான மையக்கட்டடமும் அதைச் சூழ்ந்த துறவிகளுக்கான சிறுகுடில்களும் 1880களின் பின் அப்பகுதியில் எண்ணெய் மற்றும் வாயுக்குதங்களின் உருவாக்கத்துடன் கைவிடப்பட்டது. 1975இல் இது ஒரு அருங்காட்சியகமாக மாற்றப்பட்டதுடன், ஆண்டொன்றுக்கு 15,000 சுற்றுலாப்பயணிகள் வருகை தரும் இடமாகவும் இருக்கின்றது.

சொற்பிறப்பியல்[தொகு]

சிவனடியார் சூழ ஏழு நாவுடன் சுழன்றாடும் அழலி கோயில் - ஒரு பழஞ்சித்திரம்.

"அதேஷ்கா" எனும் பாரசீகச் சொல், "தீயின் இல்லம்" எனப் பொருள்படும். இங்கிருந்த ஏழு இயற்கைத் துவாரங்கள் வழியாக எப்போதும் இயற்கை எரிவளி வெளியேறிக் கொண்டிருந்த காரணத்தால் இங்கு எப்போதும் தீ எரிந்துகொண்டிருந்தது. தற்போது, அவை குழாய்கள் மூலம் அடைக்கப்பட்டிருப்பதுடன், சுற்றுலாப் பயணிகள் வரும்போது மட்டும் திறந்து காட்டப்படுகின்றது.

வரலாறு[தொகு]

உச்சியில் அரன் சூலம், அதேசகத்து அழலோன் ஆலயம்.

அதேசகம் அமைந்திருக்கும் "சுராகானி" நகரம், கனிம நெய் நிலத்தடியிலிருந்து பீறிட்டு தானாகவே தீப்பற்றி எரியும் புவியியல் தனித்துவம் வாய்ந்த இடமாக இயற்கையிலேயே காணப்படுகின்றது.[4]

பொ.பி 7ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆர்மேனிய புவியியல் நூலொன்று குறிப்பிடும் ஏழு வழிபாட்டுக்குரிய தீயூறுதுளைகள் அதேசகமாக இருக்கலாம் என நம்பப்படுகின்றது.[5] "அத்சி பகுவான்" எனும் இடம் மீது பொ.பி 730இல் காசர் இனத்தவரின் படையெடுப்பு சொல்லப்படுவதால், அக்காலத்திலேயே அது புகழ்பெற்ற தீவழிபாட்டு இடமாக இருந்திருக்கவேண்டுமென நம்பப்படுகின்றது. "பக" என்ற சொல் பழம்பாரசீகத்திலும், "பகவான்" என்ற சொல் சங்கதத்திலும் இறைவனையே குறிப்பதால், "அத்சி பகுவான்" "அக்கினி பகவான்" அல்லது "கடவுளின் தீ" வழிபடப்பட்ட இடமாகலாம்.[6] பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த எசுதக்கிரி எனும் ஈரானியப் பயணி, பகுவிற்கு மிக அருகே, தீயை வழிபடுவோர் வாழ்வதாகச் சொல்கின்றார்.[7]

1683இல் சுராகானிக்கு வருகை தந்த எங்கல்பேர்டு கெயிம்பர் (Engelbert Kaempfer) எனும் யேர்மனி நாட்டினர் என்றுமழியா ஏழு எரிகுளங்கள் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.[8]

18ஆம் நூற்றாண்டில் அதேசகத்துக்கு சௌராட்டிரியனியர்கள் யாத்திரை வந்திருக்கிறார்கள் என்பதற்கு 1745இல் பொறிக்கப்பட்ட அங்குள்ள பாரசீகமொழிக் கல்வெட்டு சான்றாகின்றது.[9]

அமைப்பு[தொகு]

அதேசகம் - இயற்கை எரிகுளங்களின் கோயில்

பாரசீகம் இசுலாமியர்களின் படையெடுப்புக்கு ஆளானபோது அழிக்கப்பட்ட பழம்பெரும் சௌரரட்டிரியனிய வணக்கத்தலமே அதேசகம் என்பது ஆய்வாளர் முடிபு.[10] இந்துக் கலையமைப்பில் இக்கோயில் திருத்திக்கட்டபட முன்பு, உள்ளூர் மக்களும் இவ்விடத்தில் வழிபாடு மேற்கொண்டிருக்கின்றறர்கள்.[11]

தீ, இந்துக்கள், சௌராட்டிரியனியர் இருவரிடமுமே முக்கிய தெய்வமாக இருக்கையில், இது எந்நெறிக்குரியதாக ஆரம்பத்தில் இருந்தது என்று கூறுவது கடினம். எனினும் இதன் கூரையில் பொருத்தப்பட்டுள்ள "திரிசூலம்" ஓர் சிவ அடையாளம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.[12][13] எனினும், சௌராட்டிரியனியம் வலியுறுத்தும் சொல், செயல், உளத் தூய்மை எனும் மூன்றையும் இது குறிப்பதாகவும் சொல்லப்படுகின்றது.[14] நெற்றித்திலகம், புலாலுண்ணாமை, பசுவைத் தொழல் போன்ற இயல்புகளுடன் அசேதகத்தைச் சூழ வாழ்ந்த மக்கள், பண்டுதொட்டு இந்துக்களே என்பதே உண்மை."[15][16]

இந்திய யாத்திரிகர்கள்[தொகு]

மத்திய ஆசியாவில், இடைக்காலத்தில் பெருமளவு இந்தியர்கள் வாழ்ந்திருக்கின்றனர்.[17][18]பஞ்சாப் பகுதி்யைச் சேர்ந்த பெருமளவு இந்து வணிகர்கள், பகுவில் வசித்திருக்கிறார்கள்.[19]அதேசகம் கோயிலும் அதைச்சுற்றி மடங்களும் அமைத்து அப்பகுதி மறுமலர்ச்சியடைய இந்த வணிகர்கள் காரணமாயிருந்திருக்கலாமென்பதே பொதுவான கருத்து.[18][19] இந்தியாவிலிருந்து கால்நடையாக அசேதகம் வரை யாத்திரை வந்த இந்துக்கள் பற்றி, நிறைய ஐரோப்பியர்கள் வியப்புடன் எழுதியிருக்கிறார்கள்.[20][21][22]

சௌராட்டிரியனிய யாத்திரிகர்கள்[தொகு]

அதேசகத்தின் நினைவாக அசர்பைஜான் அரசு வெளியிட்ட தபால்தலை.

இந்துக்கள் மட்டுமன்றி, சொராட்டிரிய நெறியை கடைபிடிக்கும் பார்சி மக்களும் இங்கு பெருமளவில் வழிபாட்டில் ஈடுபட்டதற்குச் சான்றுகள் உண்டு.[23][24][25] 1864இல் இங்கிருந்த பார்சி பூசகர் இறந்ததும், இக்கோயில் சோபையிழந்துபோனதாகவும், பம்பாயிலிருந்து இன்னொரு பூச்கர் அனுப்பப்பட்டும், 1880 முதல் இந்தியரோ பாரசீகரோ யாரும் வராமல், இக்கோயில் பாழடைந்து கிடந்ததாகவும் சொல்லப்படுகின்றது.[26]

கல்வெட்டுக்கள்[தொகு]

அதேசகக் கல்வெட்டுக்கள்
பகு அதேசகத்திலுள்ள கல்வெட்டின் முதல்வரி பிள்ளையாரைப் போற்றுவதுடன், இரண்டாம் வரி தீச்"சுவாலை"யைப் (जवालाजी, ஜ்வாலாஜி) போற்றுகின்றது. விக்கிரம ஆண்டு 1802இல் (பொ.பி1745-46) பொறிக்கப்பட்ட இக்கல்வெட்டில்) அதன்கீழுள்ள பாரசீக மொழிச்செய்யுள் (இலக்கணப்பிழைகளுடன் தீயைப் போற்றுகிறது.[27][10]
சங்கதத்தில் ஈசனைப் போற்றும் அதேசகக் கல்வெட்டு.

பஞ்சாபி மொழி, சங்கதம் ஆகிய மொழிகளில் அமைந்த பல கல்வெட்டுகளும், பாரசீக மொழியிலமைந்த ஒரு கல்வெட்டும் இங்குண்டு.[16] பாரசீகக் கல்வெட்டில் பல இலக்கணப் பிழைகள் காணப்பாட்டாலும், அதிலுள்ள ஆண்டு, சங்கதக் கல்வெட்டு குறிப்பிடும் ஆண்டுடன் ஒத்துப்போகின்றது. [16] கடந்த நூற்றாண்டில் பகுவிற்கு வருகை தந்து அசேதகத்தில் ஆய்வுகள் செய்த பார்சி மற்றும் சௌராட்டிரியனிய அறிஞர்கள் இது தமது வழிபாட்டிடம் அல்லவென்றும், இது இந்துக்களின் கோயிலே எனவும் உறுதிகூறியுள்ளனர்.[10]

இயற்கை எரிவளியின் முடிவு[தொகு]

கோயிலின் அடிப்புறமிருந்து பெறப்பட்ட இயற்கை எரிவளியானது சோவியத் ஆட்சிக்காலத்தில் பெருமளவு சுரண்டப்பட்டத்தை அடுத்து, 1969இல் முற்றாக இல்லாமல் போனது. இன்று, பகு நகரிலிருந்து வருகின்ற குழாயொன்றின் மூலமே, கோயிலுக்கு எரிவளி வழங்கப்படுகின்றது.[28][29]

உசாத்துணைகள்[தொகு]

 1. Jas Singh, PhD (18 February 2014). Jas: Chronicles of intrigue, folly, and laughter in the global workplace. Two Harbors Press. pp. 227–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-62652-551-1.
 2. "Ateshgahs and Zoroastrians in Azerbaijan: Good thoughts, good words, good deeds". பார்க்கப்பட்ட நாள் 20 July 2012.
 3. ĀTAŠ, M. Boyce, Encyclopædia Iranica
 4. Marshall Cavendish (2007), Peoples of Western Asia, Marshall Cavendish Corporation, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7614-7677-6
 5. «Армянская География VII века по Р.Х (приписывавшаяся Моисею Хоренскому)» / Перевод и подготовка издания К. П. Патканова. — СПб., 1877
 6. С. Ашурбейли. «История города Баку: период средневековья». Изд. Абилов, Зейналов и братья, 2006.
 7. Abu Ishaq Ibrahim ibn Muhammad al-Farisi al Istakhri. Ketāb al-masālek wa’l-mamālek
 8. Amoenitatum exoticarum politico-physico-medicarum fasciculi v, quibus continentur variae relationes, observationes & descriptiones rerum Persicarum & ulterioris Asiae, multâ attentione, in peregrinationibus per universum Orientum, collecta, ab auctore Engelberto Kaempfero. Lemgoviae, Typis & impensis H.W. Meyeri, 1712.
 9. Нейматова М. С.Корпус эпиграфических памятников Азербайджана, т. I, Баку, Елм, 1991
 10. 10.0 10.1 10.2 Ervad Shams-Ul-Ulama Dr. Sir Jivanji Jamshedji Modi, Translated by Soli Dastur (1926), My Travels Outside Bombay: Iran, Azerbaijan, Baku
 11. Alakbarov, Farid (2003), "Observations from the Ancients", Azerbaijan International, 11 (2).
 12. Leza Lowitz, Reema Datta (2004), Sacred Sanskrit Words: For Yoga, Chant, And Meditation, Stone Bridge Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-880656-87-6
 13. Hormusji Dhunjishaw Darukhanawala (1939), Parsi Lustre on Indian Soil, G. Claridge
 14. Baku - Chapters of History - Azerbaijan - Part I, 2008
 15. Jonas Hanway (1753), An Historical Account of the British Trade Over the Caspian Sea, Sold by Mr. Dodsley
 16. 16.0 16.1 16.2 Abraham Valentine Williams Jackson (1911), From Constantinople to the home of Omar Khayyam: travels in Transcaucasia and northern Persia for historic and literary research, The Macmillan company
 17. Stephen Frederic Dale (2002), Indian Merchants and Eurasian Trade, 1600-1750, Cambridge University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-52597-7
 18. 18.0 18.1 Scott Cameron Levi (2002), The Indian diaspora in Central Asia and its trade, 1550-1900, BRILL, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 90-04-12320-2, archived from the original on 2011-09-10, பார்க்கப்பட்ட நாள் 2016-02-02
 19. 19.0 19.1 George Forster (1798), A journey from Bengal to England: through the northern part of India, Kashmire, Afghanistan, and Persia, and into Russia, by the Caspian-Sea, R. Faulder
 20. James Justinian Morier (1818), A Second Journey through Persia, Armenia, and Asia Minor, to Constantinople, between the Years 1810 and 1816, A. Strahan[தொடர்பிழந்த இணைப்பு]
 21. United States Bureau of Foreign Commerce (1887), Reports from the consuls of the United States, 1887, United States Government
 22. "The Ateshgyakh Temple". Baku: Sputnik Tourism (in-baku.com). 7 March 2006. Archived from the original on 7 மே 2006. பார்க்கப்பட்ட நாள் 2 பிப்ரவரி 2016. {{cite web}}: Check date values in: |access-date= (help).
 23. Chardin J. Voyages en Perse et autres lieux de 1’Orient. Vol. II. Amsterdam, 1735. p. 311
 24. "E. Kämpfer. Amoenitatum exoticarum politico-physico-medicarum fasciculi V , 1712, p. 253—262". Archived from the original on 2007-12-09. பார்க்கப்பட்ட நாள் 2016-02-02.
 25. J. Villotte, Voyage d’un missionnaire de la Compagnie de Jésus en Turquie, en Perse, en Arménie, en Arabie et en Barbarie, Paris, 1730
 26. E. Orsolle. Le Caucase et la Perse. Ouvrage accompagné d’une carte et d’un plan. Paris, E. Plon, Nourrit et cie, 1885, pp. 130—142
 27. Jackson, Abraham Valentine Williams (1911), "The Oil Fields and Fire Temple Baku", From Constantinople to the home of Omar Khayyam, London: McMillan
 28. Elliot, Mark (2004), Azerbaijan with Excursions to Georgia (3rd ed.), Hindhead, UK: Trailblazer Publications, p. 153.
 29. Byrne, Ciar (February 2, 2005), Man-made wonders of the world under threat from war, want and tourism, The Independent.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பகு_அதேசகம்&oldid=3877927" இலிருந்து மீள்விக்கப்பட்டது