உள்ளடக்கத்துக்குச் செல்

பகுலா கோட்டை

ஆள்கூறுகள்: 22°58′N 57°18′E / 22.967°N 57.300°E / 22.967; 57.300
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
பகுலா கோட்டை
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்
வகைCultural
ஒப்பளவுiv
உசாத்துணை433
UNESCO regionஅரபு நாடுகள்
பொறிப்பு வரலாறு
பொறிப்பு1987 (11 ஆவது தொடர்)
ஆபத்தான நிலை1988-2004

பகுலா கோட்டை (அரபு மொழி: قلعة بهلاء‎; ஒலிபெயர்ப்பு: கல்ஆ பஹ்லா) என்பது ஓமான் நாட்டின் பசும் மலை எனப்படும் மலையடிவாரத்தில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க நான்கு கோட்டைகளுள் ஒன்றாகும். 13 ஆம், 14 ஆம் நூற்றாண்டு காலப்பகுதியிற் பகுலா பாலைவனச் சோலைப் பகுதி பனூ நப்ஃகான் மரபினரின் ஆட்சியிற் செழித்திருந்த போதே இக்கோட்டை கட்டப்பட்டது. சிதைவடைந்த நிலையிற் காணப்படும் இக்கோட்டையின் சுவர்கள் அடித்தளத்திலிருந்து 165 அடி உயரம் கொண்டவையாகும். கோட்டையின் தென்மேற்குப் புறமாக 14 ஆம் நூற்றாண்டிற் கட்டப்பட்ட ஜுமுஆப் பள்ளிவாசல் ஒன்று அதன் செதுக்கப்பட்ட மிஃகுராபுடன் காணப்படுகிறது. 1987 ஆம் ஆண்டு வரையிலும் இக்கோட்டை மீளமைக்கப்படவோ அல்லது பாதுகாக்கப்படவோ இல்லை. அதன் காரணமாக, இது கைவிடப்பட்ட நிலையில் இருந்ததுடன் இக்கோட்டையின் சுவர்கள் மழைக்காலங்களில் இடிந்து விழுந்து கொண்டிருந்தது.[1][2][3]

1987 ஆம் ஆண்டு இக்கோட்டை உலக பாரம்பரியக் களமொன்றாக யுனெசுக்கோ நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டது. பின்னர், 1988 இல் அழிவாய்ப்புள்ள உலக பாரம்பரியக் களங்கள் என்ற பட்டியலில் உள்ளடக்கப்பட்டது. இக்கோட்டையை மீளமைத்தல் நடவடிக்கைகள் 1990 களிற் தொடங்கப்பட்டன. 1993 முதல் 1999 வரையான காலப்பகுதியில் நடைபெற்ற இக்கோட்டையின் மீளமைத்தலுக்காக ஓமான் அரசாங்கம் கிட்டத்தட்ட ஒன்பது மில்லியன் அமெரிக்க டொலர் செலவிட்டிருக்கிறது. இக்கோட்டையைச் சுற்றிவரப் பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டு, சுற்றுப் பயணிகள் அணுக முடியாதவாறு பல ஆண்டுகள் வரையிலும் மூடப்பட்டிருந்தது. 2004 இல் இக்கோட்டை அழிவாய்ப்புள்ள உலக பாரம்பரியக் களங்கள் என்ற பட்டியலிலிருந்து நீக்கப்பட்டது.

பகுலாவில் அமைந்துள்ள இக்கோட்டையானது, இதன் அருகாமையில் இஃசுகி, நிஃசுவா கோட்டைகள் மற்றும் சற்று வடக்காக அமைந்துள்ள ருசுதாக்கு கோட்டை என்பவற்றுடன் சேர்த்து கலீபா ஹாரூன் அல்-ரசீதுடைய சமப்படுத்தல் நடவடிக்கைகளை எதிர்த்த கவாரிஜுகளின் மையத் தளங்களாகச் செயற்பட்டன. பகுலா நகரமும் அதனைச் சூழவுள்ள பாலைவனச் சோலை, கடைத்தெரு, பேரீச்சந் தோப்பு என்பனவும் 12 கிமீ நீளமான கோட்டைச் சுவர்களாற் பாதுகாக்கப்பட்டுள்ளன. பகுலா நகரம் அதன் மட்பாண்ட உற்பத்திப் பொருட்களுக்கு மிகப் பெயர் போனதாகும்.

வெளித் தொடுப்புகள்

[தொகு]


மேற்கோள்கள்

[தொகு]
  1. Angkor Among the three Properties Removed from Unesco’s List of World Heritage in Danger at UNESCO website
  2. "Visiting Bahla Fort, Oman's only UNESCO fort". 11 January 2018.
  3. Centre, UNESCO World Heritage. "Bahla Fort". whc.unesco.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-11-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பகுலா_கோட்டை&oldid=4100291" இலிருந்து மீள்விக்கப்பட்டது